வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 04

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 04

—- கருணாகரன் —-

மலையால் வந்தவரை காடேறி மிதிக்கிது 

இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது.  — ஆசிரியர்   

(04) 

பிறத்தி என விலக்கி வைத்தல் நீதியின் எந்த முறையிலானது நண்பரே! சேர்ந்திருப்போம் என்பது உங்களின் கீழே அடங்கியிருத்தல்தானா?” 

புறம்போக்கு நிலத்தில் பிறத்தியாரை இருத்துவதைப்போலவே எரிந்த காட்டின் நடுவிலும் ஓரங்களிலும் குடிசைகளைப் போட்டுக் கொண்டிருந்த மக்களைப் பாம்புகளும் நுளம்பும் யானையும் உலைத்துக் கொண்டிருந்தன. 

ஏறக்குறைய காட்டுவாசிகளைப் போலவே இருந்தனர். 

கொழுத்தும் வெயிலும் கொட்டும் மழையும் பாடாய்படுத்தியது. 

“அப்பெல்லாம் புள்ளைங்கள எப்பிடிக் காப்பாத்றது எண்ணே புரியல்லப்பா. ஒரு மழைக்கே தாக்குப் பிடிக்க முடியாம இருக்கும். அந்த மழையில ஐஞ்சு பத்து எண்ணு பிஞ்சிப் புள்ளைங்கள்ளாம் செத்துத் தொலையும். வேற என்னதான் வழி?” என்று அந்த நாட்களைத் துயரத்தோடு நினைவு கூருகிறார் தருமபுரத்திலிருக்கும் மூதாட்டி கருப்பாயி முத்துச்சாமி. எண்பத்தி ஆறு வயதுடைய இந்த முதிய பெண்ணிடம் சொல்வதற்கு ஏராளம் கதைகள் உள்ளன. அத்தனை கதையும் நம் மனச்சாட்சியை உலுக்குவன. கேள்விகளை எழுப்புவன. 

பகல் முழுதும் எறிக்கும் வெயிலில் போய் வேலை செய்ய வேண்டும். அல்லது கொட்டும் மழையில் நின்று உழைக்க வேண்டும். தினக்கூலிகளின் விதி இதை விட வேறு எப்படி இருக்கும்? 

இரவு யானைக்கும் பாம்புக்கும் நுளம்புக்கும் அஞ்சிப் பாதித்தூக்கத்தில் விழித்திருக்க வேண்டும். நெருப்பை நாலு திக்கிலும் மூட்டிவிட்டு  வீட்டைச் சுற்றிக் காவலிருக்க வேண்டும். 

இதை விட நல்ல தண்ணியில்லை, நல்ல சாப்பாடில்லை, நல்ல சூழல் இல்லை என்ற காரணங்களினால் போசாக்கில்லாத நிலையில் நோய்த்தாக்கம் வேறு ஆட்டிப்படைத்தது. பனையால் விழுந்தவரை மாடு ஏறி மிதித்தது பழைய கதை என்றால் “மலையால் வந்தவரை காடேறி மிதிக்கிது” என்று புதிய கதை தொடர்ந்தது. 

அடுத்தது, போக்குவரத்துப் பிரச்சினை, பள்ளிக் கூடப் பிரச்சினை என்று எல்லாமே பிரச்சினையாகவே இருந்தன. ஏழைகளுக்கும் கூலிகளுக்கும் பிரச்சினையன்றி வேறு எதுதான் கிடைக்கும்? 

இந்த நிலையில் முதல் தலைமுறை எதுவுமே செய்ய முடியாமல் அப்படியே கூலிகளாக உக்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் எவரும் தொடர்ந்து படிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். 

இதைப்பற்றி அக்கறைப் படுவதற்கு அன்று யாரும் இருக்கவுமில்லை. அப்பொழுது இன்றுள்ளதைப்போல என்.ஜீ.ஓ (NGO) க்களும் பெரிதாக வளர்ச்சியடைந்திருக்கவில்லை. 

ஆகவே இப்போதையைப் போல வாழ்வாதாரம் வழங்குகிறோம். அகதிகளுக்கு உதவுகிறோம். வீடு கட்டித் தருகிறோம். இலவச மின்னிணைப்புக் கிடைக்கும். குறைந்த கட்டணத்தில் நீர் விநியோகம் கிடைக்கும் என்று  யாரும் வந்து எதிரே நிற்கவில்லை. இவர்களுக்காக எந்தக் கொடிகளும் அசையவுமில்லை. 

“காடோ மேடோ முள்ளோ கல்லோ நீயாகவே எழுந்து வா” என்று விதியுரைத்தது. 

மனித நேயம் அநேகமாகப் பொய்யுரைத்தது. 

ஆனால் மனித இயல்பென்பது எந்த நெருக்கடிச் சூழலிலும் தன்னைத் தக்க வைத்துக் கொண்டு முன்னகர எத்தனிப்பதல்லவா. ஏன், உயிர்களின் இயல்பே அப்படித்தானே. 

குளிர் அடர்த்தியாகும்போது துருவத்துப் பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் வலசைகளாகப் பறப்பது எதற்காக? 

தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்காத்தானே. யானைகளும் பன்றிகளும் மான்களும் கூட ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு எதற்காக நகர்ந்து செல்கின்றன? தமக்கான உணவுக்காவும் நீருக்காகவும் அல்லவா! 

சின்னஞ்சிறு எறும்புகள் கூட எப்படியோ தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்கின்றன. 

அப்படித்தான் இந்த மக்களும் அவ்வளவு அலைச்சல்கள், புறக்கணிப்புகள், ஒடுக்குதல்கள், துயரங்களின் மத்தியிலும் மெல்ல மெல்லத் தங்களை நிலைப்படுத்தத் தொடங்கினார்கள். 

ஆனால் அது எளியதாக இருக்கவில்லை. 

பாருங்கள் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று. 

“வெட்டித்துப்புரவு செய்த காட்டுக் காணிகளில் குடிசைகளை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். வீடு கட்டுகிற வேலையை எல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று அப்போது கிளிநொச்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீரசிங்கம் ஆனந்தசங்கரியே இந்த மக்களை எச்சரித்திருக்கிறார். இதை இன்னும் சிலர் துயரத்தோடு நினைவு கூருகிறார்கள். 

1970களில் கிளிநொச்சியில் தீவிரமான அரசியல் செயற்பாட்டில் இயங்கிய செல்லையா குமாரசூரியர் கூட இந்த மக்களுடைய நலன்களைக் குறித்து விசேட கவனமெடுக்கவில்லை. ஆனால் அவர் அப்போது ஏறக்குறைய மூவாயிரம் வரையான கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய மக்களுக்கு வேலை வாய்ப்புகள், காணி போன்றவற்றில் வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். குறைந்தபட்சம் இந்த மக்கள் வாழ்கின்ற இடங்களில் பொதுக்கிணறுகளைக் கூட அமைக்கவில்லை. 

இதெல்லாம் இன்று முன் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளல்ல. வரலாற்றுண்மைகளாகும். 

இப்படி வஞ்சிக்கப்பட்ட வரலாற்றிற்கூடாகவே இவர்கள் தங்களை மெல்ல மெல்லக் கட்டியெழுப்பத் தொடங்கினர். 

இதில் இடத்துக்கிடம் வேறுபாடுகள் காணப்பட்டன. வவுனியாவில் தங்கியிருந்த இந்த மக்களை காந்தியம் அமைப்பைச் சேர்ந்த டொக்ரர் ராஜசுந்தரம்டேவிட் ஐயா போன்றோர் கவனித்தனர். இவர்கள் செய்த வேலை இந்த மக்களை வவுனியாவின் எல்லைப் புறங்களில் கொண்டு சென்று குடியமர்த்தியதே. 

ஆனால் இந்தக் குடியேற்றங்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இந்த மக்களோடு இணைந்து வேலைகளைச் செய்தனர். 

ஒரு கட்டம் வரையில் இந்த மக்களுக்கு அது தேவையாகவும் ஆறுதலாகவும் இருந்தது. 

ஆனால் இவர்கள் இருவரும் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட கையோடு இவர்களுடைய நிலை நெருக்கடிக்குள்ளாகியது. 

எல்லைப் புறங்களில் குடியமர்த்தப்பட்டதால் இன வன்முறையும் அரச படைகளின் அத்துமீறல்களும் இவர்களை நேரடியாகப் பாதித்தன. ஏனென்றால் இவர்களே அடி வாங்கக் கூடிய முன்னரங்கினராக (Buffer) நிறுத்தப்பட்டிருந்தனர் அல்லவா! 

இதனால் மலையத்திலிருந்து அடிவாங்கி வந்தவர்கள் இங்கும் அடிவாங்க வேண்டியிருந்தது. 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்தோருக்கு இந்த அவலம் இல்லை என்றாலும் புறக்கணிப்பின் அரசியலால் நிறையக் கஸ்ரங்களை எதிர் கொண்டனர். 

கிளிநொச்சியில் ஒரு தொகுதியினர் ஒன்று சேர்ந்து ஒரு பிரதேசத்தைத் தெரிவு செய்து காடுகளை வெட்டி அங்கே குடியேறினர். அல்லது பின்னாளில் இந்த இடங்களில் விடுதலை இயக்கங்கள் குடியேற்றங்களைச் செய்தன. 

அந்தக் கிராமங்கள்தான் இன்றுள்ள பாரதிபுரம், தொண்டமான் நகர், மலையாளபுரம், செல்வா நகர், ஊற்றுப்புலம், ஜெயபுரம், ஆனைவிழுந்தான், மணியங்குளம், இந்திராபுரம், சதாபுரம், முறிப்பு, காந்தி கிராமம், பொன்னகர், அம்பாள்குளம் போன்றவை. 

நாற்பது ஆண்டுகளாகியும் இந்தக் கிராமங்கள் இன்னும் எப்படியுள்ளன என்று பார்த்தால் எல்லாமே புரியும். 

(தொடரும்)