கிளிநொச்சி – ஒரு மீள நினைவூட்டல்

கிளிநொச்சி – ஒரு மீள நினைவூட்டல்

 — கருணாகரன் — 

என்ன செய்வது, நம்முடைய சூழலின் அபத்தம், நாட்டின் நிலை, அரசியல்வாதிகளின் பொறுப்பின்மை அல்லது புரிதலின்மை, அதிகாரிகளின் திறனற்ற போக்கு, உறுதியும் அறிவும் அற்ற நிலை போன்ற காரணங்களால் பல விசயங்களையும் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியே உள்ளது. 

முன்பு ஏதாவது ஒரு சில விசயங்களில்தான் இப்படித் திரும்பத்திரும்ப அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். அல்லது மீள் நினைவூட்டலைச் செய்யக் கூடியதாக இருந்தது. இப்பொழுதோ அநேகமான விசயங்களிலும் திரும்பத் திரும்பத்திரும்ப என்ற அலுப்பூட்டக் கூடிய நினைவூட்டலையும் அழுத்தத்தையும் கொடுக்க வேண்டியுள்ளது. இது நல்லதொரு சமூகத்துக்கான, நாட்டுக்கான நற்சகுனமில்லை. 

கிளிநொச்சியில் இந்தத் திரும்பத்திரும்பச் சொல்லியே தீர வேண்டிய விசயங்கள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன.  

பாருங்கள், கிளிநொச்சி நகரத்தில் உள்ள விளையாட்டு மைதானம் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டு  வருகிறது. இதைப்பற்றி பல செய்திகளும் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதப்பட்டாயிற்று. மூன்று தடவைக்கு மேல் ஒப்பந்தத்தைப் புதுப்பித்திருக்கிறார்கள். மூன்று ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன, மூன்று அரசாங்கங்கள் மாறியுள்ளன. 

ஆனால் விளையாட்டு மைதானம் தேறவேயில்லை. விசாரித்தால் இடையில் வந்த ஒப்பந்தக்காரர்கள் ஆட்டையைப் போட்டு விட்டார்கள் என்று உதட்டைப் பிதுக்கி காதோடு கிசுகிசுக்கிறார்கள். 

“பேசாமல் விட்டிருந்தால் இந்த மைதானத்தில் உள்ளுர் மட்டத்திலாவது இளைஞர்கள் விளையாடியிருப்பார்கள். அல்லது, மாடுகளாவது புல் மேய்ந்திருக்கும் என்று கவலையோடு கூறுகிறார்” ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவர். 

இதைப்பற்றி யாரிடம் முறையிடுவது? 

இதேநிலைதான், கிளிநொச்சி நகரத்தில் உள்ள பேருந்து நிலையத்தின் கதியும் கதையும். இதைப்பற்றி சில மாதங்களுக்கு முன்பு இதே பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதனையடுத்து உடனடியாக சில வேலைகள் அதிரடியாகச் செய்யப்பட்டன. (வெள்ளையடிக்கப்பட்டது). பிறகு மீண்டும் எல்லாமே உறைநிலைக்குப் போய் விட்டன. இப்பொழுது மீள அதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. நடந்தால்தான் உண்மை. 

ஆனாலும் அது பயனற்ற ஒன்று. ஏனென்றால் முதலில் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடமே தவறானது. பொருத்தமற்றது. இட வசதியும் போதாது. இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் – ஒரு பகுதியில் பொலிஸ் தரப்பு உரிமை கோரிக் குடியிருக்கிறது. தவிர, நகரப் போக்குவரத்தின் மையப்பகுதியில்  -பிரதான வீதிக்கு அருகில் இதை அமைப்பதற்குத் தேர்வு செய்தது திட்டமிடலின் குறைபாடே. நிச்சயமாக இது அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் வேறு இடத்துக்கு இடமாற்றம் பெற்றே தீரும். அப்படியொரு இக்கட்டான நிலை ஏற்பட்டே தீரும். 

கிளிநொச்சியின் விதியோ என்னவோ தெரியவில்லை. அதனுடைய பேருந்து நிலையம் இதுவரையில் ஆறு இடங்களுக்கு மாறிவிட்டது. தொடக்கத்தில் கந்தசாமி கோயிலடியில். பிறகு பழைய சந்தையடியில். (இப்போது பிரதேச செயலக வளாகம்) 1990க்குப் பின் தற்போதைய பொலிஸ் நிலையத்தில்.  பின்பு தற்போதைய பொதுச் சந்தையில். அதன்பின் கனகபுரம் பாடசாலைக்கு முன்பாக. இறுதியில் இப்போது டிப்போச் சந்தியில். 

கிளிநொச்சியின் வரலாறே 100 ஆண்டுகளுக்குள்தான். அதற்குள் ஆறு இடங்களில் பிரதான பேருந்து நிலையம் என்றால் எப்படியிருக்கும்? இதுவும் அடுத்த பத்தாண்டுகளில் வேறு இடத்துக்கு நகர்ந்து விடும். 

வளர்ந்து வரும் நகரமொன்றுக்கான திட்டமிடல்கள் எப்போதும் எதிர்காலத்தை மனதில் கொண்டதாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக அந்த நகரத்தின் எதிர்கால வளர்ச்சியையும் அமைவையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றினதும் அமைவிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

கிளிநொச்சி நகரம் ஏ9 என்ற யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை மையமாகக் கொண்டு அமைந்தது. இந்தச் சாலையின் வழியாகத்தான் நாட்டின் பிற பாகங்களுக்குச் செல்ல முடியும். அப்படியான ஒரு பிரதான நெடுஞ்சாலையும் நகரத்தின் அதிகூடிய சனப்போக்குவரத்தும் உள்ள நெரிசலான பகுதியில் பேருந்து நிலையத்தை எப்படி அமைக்க முடியும்? 

சரி, அப்படி (தற்காலிகமாக) அமைக்கப்பட்டாலும் அதற்கு மூன்று ஒப்பந்த காலம் தேவையா?ஐந்தாண்டுக்கும் அதிக காலம் வேண்டுமா? 

உண்மையில் இந்தப் பேருந்து நிலையம் தற்போது இலங்கைப் போக்குவரத்துச் சபை உள்ள இடத்தில் அமைவதே பொருத்தமானது. அருகில் புகையிரத நிலையமும் இருப்பதால், இரண்டும் அண்மித்து இருப்பது பல வகையிலும் வசதியாகும். சன நெருக்கடியும் குறையும். எதிர்ப்பக்கத்தில் இடைஞ்சல் இல்லாதவாறு பொதுச் சந்தையும் உள்ளது இன்னும் சிறப்பு. 

போக்குவரத்துச் சபைக்கான இடத்தை வேறு இடத்தில் ஒதுக்கிக் கொள்ளலாம். போக்குவரத்துச் சபையின் இடம் என்பது அரைவாசியும் திருத்த வேலைகளைச் செய்யும் கராஜ் பகுதியே. அதை எதற்காக நகரத்தின் மத்தியில் வைத்திருக்க வேண்டும். எந்த நகரிலும் அப்படி ஒன்றில்லை. 

இவைதான் இப்படியென்றால் நகரைச் சூழவும் அமைக்கப்படுகின்ற பிரதான வீதிகளின் கதையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. முறிகண்டி – அக்கராயன் வீதியிலிருந்து கிளிநொச்சி நகரை நோக்கி பல்கலைக்கழகத்தின் முன்பாக வரும் பாரதிபுரம் வீதி (Dupilication Road) ஒரு சிறிய நரம்பைப்போல அமைக்கப்படுகிறது. இதைப்போலத்தான் கரடிப்போக்குச் சந்தியிலிருந்து உருத்திரபுரம் வழியாக பூனகரி செல்லும் வீதியும் மிகச் சிறியதாக – குறைந்த அகலத்தில் போடப்படுகிறது. இதைப்பற்றி இந்த வீதியால் பயணிக்கும் ஒரு மருத்துவர் தன்னுடைய முகப்புத்தகத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார் – 

“நவீன உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கும்போது சில மாற்றங்களையாவது உள்வாங்கி வினையாற்றும் திறனை மேம்படுத்த யாரும் முன் வருவதாக இல்லை. பல கிராமங்களை இணைக்கும் பிரதான வீதிகளை அமைக்கும்போது அவற்றின் அகலம், தரம் மற்றும் வீதியின் கரையோரப் பாதுகாப்பு, பாலங்கள், வீதியின் அமைப்பு முறை, அடையாளக்குறிகள், சமிக்ஞைகள் என எந்தவொரு விடயத்திலும் உரியவர்கள் கவனமெடுப்பதாகத் தெரியவில்லை. வீதி அமைக்கும் தரமான கட்டுமான நிறுவனங்களிடம் இதற்கான பொறுப்பை ஒப்படைப்பதே சிறப்பு. கரடிப்போக்கு, உருத்திரபுரம் வீதியில் இரண்டு வாகனங்கள் விலத்திக் கொள்ள முடியாத அளவுக்குத்தான் புதிய புனரமைப்பு என்றால் இதனுடைய திட்டமிடலைப் பற்றி என்ன சொல்ல முடியும்? 

அத்துடன் இந்த வீதி ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு அளவு அகலத்தில் போடப்பட்டுள்ளது. குறிப்பாக பல வளைவுகளில் கொஞ்சம் அகலமாகவும் சாய்வாகவும் வீதியை அமைப்பது வழமை. இங்கோ அதெல்லாம் கவனத்திற் கொள்ளப்படவேயில்லை. இதனால் இந்த வீதியில் செல்லும்போது அபாய உணர்வே ஏற்படுகிறது. அருகில் எப்போதும் நீரோடும் வாய்க்கால் வேறுண்டு. மரங்கள் வேறு மிக அருகில் நிற்கின்றன. அதற்காக மரங்களை வெட்டி எறிய வேண்டும் என்றில்லை. 

இந்த வீதிகளை அமைக்கும்போது என்னென்ன விடயங்களைக் கவனத்திற் கொண்டார்கள் என்று தெரியவில்லை. யார் இவற்றுக்கு ஆலோசனை வழங்கியிருப்பார்கள்? இதை விட 10 அல்லது 12 அடி அகலமுடைய கொங்கிரீட் வீதிகளில் எப்படி இயல்பான போக்குவரத்தைச் செய்ய முடியும்? 

இதேவேளை நகரில் உள்ள இன்னொரு வீதியின் கதையையும் நிலையையும் சொல்ல வேண்டும். 

கிளிநொச்சி நகரத்திலிருந்து திருநகர் வழியாக ஜெயந்திநகர் செல்லும் வீதி மிக நவீன முறையில் உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் புனரமைக்கப்படுகிறது. புனரமைப்புப் பணிகள் நடக்கும்போது பொதுவாக வழிமறிப்புச் செய்யப்படும் வீதித் தடை கூட உச்சமாக புதிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இதையெல்லாம் மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு போகிறார்கள். (சிரித்து விடாதீர்கள்). 1950களில் எப்படி வீதி நிர்மாணப் பணிகள் நடந்தனவோ அதைப்போல தெருவில் குந்தியிருந்து கொண்டே கல்லை அடுக்கி, வீதியோரத்தில் தாரை உருக்கி வார்க்கிறார்கள். வீதி நிர்மாணம் என்பது இலங்கையில் மிக வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் இவர்களோ சின்னப் பிள்ளைகள் விளையாட்டுக்குச் செய்வதைப்போல இதைச் செய்கிறார்கள். இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒன்பது மில்லியன். 

கிளிநொச்சியில் அதிகளவான மக்கள் பயன்படுத்துகின்ற பிரதான வீதிகளில் இதுவும் ஒன்று என்பதால் அடிக்கடி இந்த வீதி தேய்ந்து பழுதடைந்து விடுகிறது. 

என்ன செய்வது, அதனால் வேறு வழியின்றி ஆண்டு தோறும் இதைப் புனரமைக்க வேண்டியுள்ளது. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முதல்நாள் கூட இதைப் புனரமைப்புச் செய்தார்கள். 

அதற்கிடையில் இந்தச் சனங்கள் பொறுப்பேயில்லாமல் வீதியைத் தேய்த்துப் பாழாக்கி விட்டார்களாம். 

பாழாக்கப்பட்ட வீதியை அப்படியே விட்டு விட முடியுமா?  

மக்களாட்சிக்கு அது இழுக்காகி விடுமல்லவா! 

இதனால் பல இடங்களிலும் மேற்கொள்கின்ற வீதி அபிவிருத்தியின் உச்ச தொழில் நுட்பத்தை எடுத்து வந்து இங்கே பிரயோகிக்கிறார்கள். 

பெரு மழையின் போதெல்லாம் இந்த வீதியை மேவிப்பாயும் (அடித்துப் பாயும்) நீரின் அளவையெல்லாம் கணக்கெடுத்து, அந்த வெள்ளம் ஒழுங்காகப் பாய்வதற்குச் சிறப்பு ஏற்பாடுகள், வழிப்படுத்தல்கள் எல்லாம் செய்தே வீதியைப் புனரமைக்கிறார்கள் என்று எண்ணி விடாதீர்கள். 

ஆனால் இதற்காக விசேட பொறியாளர் குழுசிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. (இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.)

கால்வாய்கள் வெட்டப்பட்டு, கால் நூற்றாண்டாக திருத்தப்படாமல் நிலத்தோடு அமுங்கிப் படுத்திருக்கும் பழைய பாலத்தை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு, எல்லாவற்றையும் முழுதாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள். அதைப் பற்றி யாருக்குத்தான் கவலை? 

ஆனால் சனங்களுக்கு நல்லதொரு வீதியைக் கொடுக்கவேண்டும் என்ற சிரத்தைதான் இந்த அவசரத்திற்குக் காரணமாம். 

கடந்த 30 ஆண்டுகளுக்குள் இந்த வீதிக்கு அண்மையில் இருந்த குளத்தை மிக நுட்பமாக எல்லோருமாக இணைந்து மூடிவிட்டார்கள் அல்லவா. 

அப்படி மிகக் கஸ்ரப்பட்டு மூடப்பட்ட குளத்தைத் தேடி இன்னும் எதற்காக வெள்ளம் பெருக்கெடுத்து வர வேண்டும்? 

வேறு வழியைப் பார்த்துக் கொண்டு போக வேண்டியதுதானே! என வீதி அமைப்புக்குப் பொறுப்பான பிரதிநிதி ஒருவர் கேட்கிறார். 

இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குப் புரியவில்லை. பெருக்கெடுத்து வரும் வெள்ளம் இதற்கு என்ன சொல்லப் போகிறதோ! 

ஆனால் நிச்சயமாக அடுத்த ஆண்டும் ஒரு பெரிய நிதி ஒதுக்கீட்டில் மறுபடியும் வீதியைப் புனரமைப்பார்கள் என்பது உண்மை. 

வெள்ளமும் சனங்களும் பொறுப்பில்லாமல் அடிக்கடி வீதியைப் பாழாக்கினால் அவர்களால் (பிரதேச சபையும் வீதி அபிவிருத்தித் திணைக்களமும்) என்னதான் செய்ய முடியும்? 

(இதையெல்லாம் பேசாமல் கடந்து போய் விடலாம் என்றாலும் கால் தடக்கிக் கீழே விழ வேண்டியதாயிருக்கே. “கல் தடக்கி…” என்றும் இதைப் படித்துக் கொள்ளலாம். அதனால் சில வார்த்தைகள் – ) 

இதைப்போலத்தான் குளங்களையும் வாய்க்கால்களையும் மூட அனுமதித்து விட்டு வெள்ள நிவாரணம் வழங்குகின்றன மாவட்டச் செயலகமும் பிரதேச செயலகங்களும். நீர்ப்பாசன வசதியுள்ள வயற்காணிகளை குறைந்த விலையில் வாங்கி அதற்கு மண் நிரப்பி மேடாக்கி விட்டு உயர்ந்த விலையில் விற்கிறார்கள் சிலர். இந்தக் கொடுமையையும் அவதானித்துக் கொண்டேயிருக்கிறோம். 

இன்னொரு பக்கமாக அரச காணிகளை ஆட்டையைப் போடும் வேலையும் பக்காவாக நடக்கின்றன. காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் கண்டபாட்டுக்கு விநியோகிக்கப்படுகிறது. எந்த விதமான நிர்வாக ஒழுங்கோ அறமோ சட்ட நியமங்களோ இதற்குக் கிடையது. செல்வாக்கு மட்டுமே செல்வாக்குச் செலுத்துகிறது என்று சொல்கிறார்கள் மக்கள். 

கூட்டுறவுத்துறை அநேகமாகப் படுத்து விட்டது. அதனிடமிருந்த பெரிய பெரிய மில்களில் கரள் ஏறுகிறது. 

இப்படி ஏராளம் குறைபாடுகளும் முறைகேடுகளும் உண்டு. இதைக் கேட்பதற்கு யாரிருக்கிறார்கள்?அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் எல்லோரும் இருக்கிறார்கள்தான். ஆனால் பயனே இல்லை. காப்பரும் இல்லை. மீட்பரும் இல்லை என்ற நிலையில்தான் இன்றைய கிளிநொச்சி. 

இதற்குள்ளும் ஒரு சிறிய மகிழ்ச்சி. அறிவியல் நகரிலிலுள்ள பல்கலைக்கழகமும் மாவட்ட மருத்துவனையும் ஓரளவு திருப்திகரமாக இங்குகின்றன. இவற்றைப்போல ஏனையவையும் அமைந்தால் சிறப்பு. இல்லையெனில் வீண்.