— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்—
இலங்கையின் மாகாணசபைகளுக்கான தேர்தல் அடுத்த வருடம் (2021) மார்ச் மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடையில் இடம்பெறலாமென எதிர்வு கூறப்படுகிறது. இக்கட்டத்தில் இப்பத்தியின் கவனக் குவிப்பு கிழக்கு மாகாணத்தின் மீது அமைவது தவிர்க்க முடியாததாகிறது.
இத்தேர்தல், பெரும்பாலும் பழைய முறைமையிலேயே அதாவது விகிதாசாரத் தேர்தலாக மட்டுமே நடைபெறும் சாத்தியமே உள்ளது.
அதற்கான சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் அடுத்த வருட ஆரம்பத்தில் நிறைவேற்றப்படலாம். கிழக்கு மாகாணசபை மொத்தம் 37 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் 35 உறுப்பினர்கள் தேர்தல் மாவட்டங்களின் பெறுபேறுகளின் படியும் இரண்டு உறுப்பினர்கள் போனஸ் முறையிலும் தெரிவுசெய்யப்படுவர். முழுக்கிழக்கு மாகாணத்திலும் எந்தக் கட்சி அதிகூடுதலாக வாக்குகளைப் பெறுகிறதோ, அந்தக்கட்சிக்கே இந்த போனஸ் ஆசனங்கள் இரண்டும் ஒதுக்கப்படும்.
கிழக்கு மாகாணசபையில் தனியொரு கட்சி ஆட்சி அமைப்பதாயின் அதிகுறைந்தது போனஸ் ஆசனங்கள் இரண்டும் உட்பட 19 ஆசனங்களைப் பெற்றாகவேண்டும். கிழக்கின் களநிலையைப் பொறுத்தவரை எந்தத் தனிக் கட்சிக்கும் அது சாத்தியமில்லை. அதாவது ஆட்சியமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மையை எந்தத் தனிக் கட்சியும் எய்த முடியாது. எந்தத் தனிக் கட்சி அதி கூடுதலான ஆசனங்களைப் பெறுகிறதோ அந்தக் கட்சிக்கே ஆட்சியமைக்கும் தகுதி முதலில் செல்லும்.
இந்த நிலையில், தமிழர் தரப்பு கிழக்கு மாகாண ஆட்சியதிகாரத்தைத் தம்வசப்படுத்த வேண்டுமானால் தனியொரு தமிழ்க்கட்சி சாதாரண பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் போது மட்டுமே ஏனைய கட்சியொன்றுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கலாம்.
தனியான தமிழ்க்கட்சியொன்று அல்லது தமிழர்தரப்பு சாதாரண பெரும்பான்மை ஆசனங்களைப் பெறவேண்டுமானால் கிழக்கில் செயற்படுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு கூட்டு அரசியல் பொறிமுறையின் கீழ் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே இது சாத்தியம்.
அப்படியென்றால்தான், போனஸ் ஆசனங்கள் இரண்டும் உட்பட அதி உச்சமாக 14 அல்லது 15ஆசனங்களையாவது தமிழர்தரப்பு வென்றெடுத்து ஆட்சியமைப்பதற்கான தகுதியைப் பெற்று பேரம் பேசும் வலுவைத் தம் வசப்படுத்தலாம்.
தமிழ் அரசியல்கட்சிகளைக் கிழக்குமாகாணத்தில் குறைந்தபட்சம் தமிழர்கள் மிகப் பலவீனமாகவுடைய அம்பாறை மாவட்டத்திலாவது முதலில் ஒன்றிணைக்கும் முயற்சியை 1994 பாராளுமன்றத் தேர்தலின்போது ஆரம்பித்துக் கால் நூற்றாண்டுகால அனுபவங்களைப் இப்பத்தி எழுத்தாளர் கொண்டிருக்கிறார். அதில் பல தோல்விகளையும், சவால்களையும், வசவுகளையும், இழப்புகளையும் சந்தித்தபோதிலும் மனம் தளராத ‘விக்கிரமாதித்தன்’ போல அம்முயற்சியை இப்போதும் தொடர்ந்தவண்ணமே உள்ளார்.
அதன் ஒரு கட்டமாகத்தான் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் ஓர் அரசியல் கூட்டமைப்பை உருவாக்கித் தமிழ்க் கட்சிகளையெல்லாம் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் அல்லது ஒரே சின்னத்தின் கீழ் ஒன்றிணைக்கும் பகீரதப்பிரயத்தனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டுக் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு இப்போது ‘சூடுகண்ட பூனை’யாக உள்ளது. எனினும் இம்முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.
இது ஒருபுறமிருக்க, 05.08.2020 அன்று நடைபெற்ற கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத் தமிழ்களுக்குரிய ஒரேயொரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் இரண்டாம் தடவை பறிபோன பட்டறிவுக்குப் பின்னர், அம்பாறை மாவட்டத் தமிழர்களிடையேயுள்ள சில சமூக ஆர்வலர்களும் அமைப்புகளும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் அம்பாறை மாவட்டத்தில் ஒன்றிணைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளிலுள்ள அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சில ஆர்வலர்களும் கூட்டாக இணைந்து இம்முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். இது பாராட்டவும் வரவேற்கவும்பட வேண்டியதே. அம்பாறை மாவட்டத் தமிழர்களுடையே இவ்வாறான பிரக்ஞை ஏற்பட்டிருப்பது காலத்தின் தேவையாகும்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்தரப்பு ஒன்றிணைந்து ஒரே சின்னத்தில் போட்டியிட்டுத் தமிழர்கள் அம்மாவட்டத்தில் பெறக்கூடிய அதிஉச்ச ஆசனங்கள் மூன்றையும் பெற்றுக் கொண்டாலும்கூட மாகாணசபை ஆட்சியைக் கைப்பற்றும் தகுதி வந்துவிடப்போவதில்லை. முழுக் கிழக்கு மாகாணமும் தழுவிய ஒற்றுமையே தமிழர் தரப்பிற்கு அத்தகுதியைப் பெற்றுத்தரும். தமிழ்க்கட்சிகளின் ஒரே சின்னத்தின் கீழான ஒன்றிணைவு ஏற்படுமாயின் மக்களும் உற்சாகமாக வாக்களிப்பில் கலந்துகொள்வார்கள். தமிழர்களின் வாக்களிப்பு வீதமும் அதிகரிக்கும். தமிழ்க்கட்சிகள் தனித்தனியே பிரிந்து நின்றால் மக்கள் விரத்தியும் சலிப்பும் வெறுப்புமுற்று வாக்களிப்பு வீதம் குறைந்து தமிழர்களுக்கு மேலும் பின்னடைவு ஏற்படும்.
ஆனால், உண்மையான களநிலை என்னவெனில் இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காமல் ஏதோ ஒருவகையில் உள்ளூராட்சிசபை உறுப்பினர்களாகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ அல்லது வேறுவகையிலோ பதவிகளைக் கொண்டிருக்கும் சகல தமிழ் அரசியல்கட்சிகளும் மக்கள் நலனைப் புறந்தள்ளித் தனிநபர்களின் நலன்களுக்கும் தத்தம் கட்சி நலன்களுக்குமே முன்னுரிமை கொடுத்துத் தன்னலத்தோடும் தன்முனைப்புடனும் கட்சி அரசியல் ‘சாக்கடை’க்குள் மூழ்கி மக்கள் மூக்கைப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு நாற்றமெடுக்கின்றன.
தமிழர்களின் இந்தப் பலவீனத்தை நன்கு புரிந்துகொண்ட பொதுஜனபெரமுன கட்சியினர் எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் தாங்கள் ‘மொட்டு’ச் சின்னத்தில் ஆட்சியைக் கைப்பற்றிப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்கும் எண்ணத்தில் காய்களை நகர்த்துவதாகச் செய்திகள் கசிந்துள்ளன. இந்த ஆபத்தைக்கூட கட்சி அரசியல் சாக்கடைக்குள் மூழ்கி நாற்றமெடுக்கும் தமிழ்க்கட்சிகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
சாதாரண மொழிநடையில் சாமான்யர்களும் புரிந்து கொள்ளும்வகையில் சொல்லப்போனால், கிழக்குமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் (தமிழரசுக் கட்சிக்குப்) பின்னால் கொஞ்சப்பேரும், பிள்ளையானுக்குப் பின்னால் கொஞ்சப்பேரும், வியாழேந்திரனுக்குப் பின்னால் கொஞ்சப்பேரும், கருணா அம்மானுக்குப் பின்னால் இன்னும் கொஞ்சப்பேரும் தேர்தல்காலங்களில் மட்டும் வந்து கிழக்கு மாகாணத்தில் ‘திருவிழாக்கடை’ வைக்கும் ‘தமிழ்த் தேசியக் கட்சி’யெனக் குறிசுடப்பட்ட வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்க்கட்சிகளின் பின்னால் மிகுதிப்பேரும் சென்று கட்சி அரசியல் நடத்துவதால் கிழக்குத்தமிழர்களின் இருப்பையோ அடையாளத்தையோ அவர்களது சமூகபொருளாதார அரிசியல் நலன்களையோ காப்பாற்றிப் பேணமுடியாது.
இதனைத் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அல்லது வலம்வருபவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர்களிடம் தன்னலமும் தன்முனைப்பும் தலைக்கனமும் அதிகாரம் மற்றும் பதவி மோகமும் மேலோங்கியுள்ளன. தலைவர்கள் ஒன்றுபடாவிட்டால் அதற்கு மாற்றுவழியென்ன?
இராவணன் ஆண்டாலென்ன? இராமன் ஆண்டாலென்ன? அல்லது கூடவந்த குரங்குதான் ஆண்டாலென்ன? நடப்பது நடக்கட்டுமென ஏனோதானோ என்று வெறுமனே பார்வையாளர்களாக இருந்து புதினம் பார்த்துக் கொண்டிருப்பதுதான் மாற்றுவழியா? இல்லவேயில்லை.
மக்களுக்காகத் தலைவர்கள் ஒன்றுபடவில்லையாயின் அதாவது தமிழ் அரசியல்கட்சிகளின் தலைமைகள் ஒன்றுபடவில்லையாயின் அவர்களை அவர்களது போக்கிலேயே விட்டுவிட்டு மக்கள் தாமாகவே ஒரு பக்கத்தில் அதாவது ஒரு அணியில் ஒன்றுபடுவதுதான் இதற்கு மாற்றுவழியாகும்.
‘தமிழ்த் தேசிய அரசியல்’ என்ற பெயர்ப் பலகையைத் தூக்கிக்கொண்டு தங்களுக்குத் தாங்களே தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று குறியும் சுட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி) உட்பட எந்தத் ‘தமிழ்த் தேசியக் கட்சி’க்கும் பின்னால் கண்களை மூடிக்கொண்டு செல்வதோ அல்லது ‘அபிவிருத்தி அரசியல்’ என்று கூறி அதிகாரத்திற்கு வந்து ‘பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் ஏறத்தான் வேண்டும்’ என்ற நிலையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழர்களுக்குப் பாரபட்சமான நடவடிக்கைகளைக்கூடத் தடுத்துநிறுத்தும் வல்லமையற்றுத் தடுமாற்றமும் தர்மசங்கடமும் பட்டுக்கொண்டிருக்கும் கட்சிகளின் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு செல்வதோ இரண்டுமே அறிவுபூர்வமானதல்ல. இரண்டுமே ஆபத்தானவை. இரண்டுமே பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது. மக்களுடைய பிரச்சனைகள் எங்கோ இருக்க மேற்சொன்ன இருதரத்தாரும் அரசியல் பொதுவெளியில் அடிபிடிப்படுவதைப் பார்த்தால் (உள்ளூராட்சிச் சபைகள் இதற்கு நல்லதோர் உதாரணம்) இவர்களால் மக்களுக்கு ஏதும் ஆகப்போவதில்லை. சில தனிநபர்கள் பிழைத்துக் கொள்வார்கள். சில கட்சிளும் பிழைத்துக் கொள்ளும். இறுதியில் மக்கள் இருதரப்பாலுமே கைவிடப்படுவார்கள். அத்தகையதொரு களநிலைதான் இன்று கிழக்கில் நிலவுகிறது.
தற்போது தனிநபர் நலன்களைக் கடந்து – கட்சி அரசியல் நலன்களைக் கடந்து அர்ப்பணிப்புடன் மக்கள் நலன்களுக்காக மட்டுமே கிழக்கு மாகாணத்தில் செயற்படும் அரசியல் நிறுவனம் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ மட்டுமே. மக்கள் நலன்சார்ந்த முறையான தத்துவார்த்தத்தளமும் – தெளிவான அரசியல் நிகழ்ச்சி நிரலும் அதனை வினைத்திறனுடன் நிறைவேற்றக் கூடிய அறிவுபூர்வமான அரசியல் அணுகு முறையையும் அதற்கான ஆளுமைமிக்க ஆளணியையும் கொண்ட அமைப்பு இது ஒன்றே. ஆனால், அதன் கரங்களில் அரசியல் அதிகாரம் இல்லை.
எனவே, காலம் பொன்போன்றது. உள்ள கால அவகாசமும் சிறிதே. எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் அரசியல்கட்சிகள் ஒரே சின்னத்தின் கீழ் அல்லது ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணையும் என்று நம்பி (ஒன்றிணைக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னேடுப்பது தவறல்ல) இறுதியில் இலவுகாத்த கிளியாக ஏமாறாமல் கிழக்கு மாகாணசபை ஆட்சியதிகாரத்தைத் தமிழர்கள் எதிர்காலத்தில் தம்வசப்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய ஒரே மார்க்கம், மக்கள் தத்தம் கட்சி அரசியல் வேறுபாடுகளையெல்லாம் மறந்தும் துறந்தும் இப்போதிருந்தே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பின்னால் அணி திரள வேண்டும்.