தமிழில் வெளிவரும் மருத்துவத்துறை சார்ந்த முதற் கவிதைத் தொகுப்பு

தமிழில் வெளிவரும் மருத்துவத்துறை சார்ந்த முதற் கவிதைத் தொகுப்பு

— பேராசிரியர் செ.யோகராசா —


(அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழத்தின் விருது ஒன்று இலங்கை மருத்துவர் ஒருவரின் கவிதை நூலுக்கு கிடைத்துள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இராசரத்தினம் முரளீஸ்வரன் எழுதிய“ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்” என்ற கவிதைத் தொகுப்புக்கே இந்த விருது கிடைத்திருக்கிறது. அந்த நூலுக்கு பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் வழங்கிய அணிந்துரையை இங்கு தருகின்றோம். முரளீஸ்வரனுக்கு அரங்கத்தின் வாழ்த்துகள்)          

இலங்கைத் தமிழ்ச்சூழலில் கல்வி, மருத்துவம், சட்டம், பொறியியல், ஊடகம் முதலான தொழிற்துறை சார்ந்த ஆக்க இலக்கியப் படைப்பாளர்கள் பலரிருப்பினும் தத்தமது தொழில்சார் அனுபவங்களை தமது கவிதை, சிறுகதை, நாவல் ஊடாக வெளிப்படுத்தி நூல்வடிவில் வெளியிடுபவர்கள் அரிதாகவே காணப்படுகின்றனர். அவ்வாறு எழுதுவதன் முக்கியத்துவத்தை உணராமை. முன்னோடிப்படைப்புகளின்மை, உலக இலக்கிய வாசிப்பின்மை, வேலைப்பளு முதலானவை அதற்குக் காரணமாதல்கூடும். மருத்துவத்துறைக்கும் இது பொருந்துவதே. கதை வடிவத்தில் (சிறுகதை வடிவத்திலன்று) மருத்துவக் கலாநிதிகள் எம்.கே.முருகனாந்தன், நடேசன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். 

கவிதைத் துறையைப் பொறுத்தவரையில் ‘நவீன’/ பாரம்பரிய மருத்துவம் சார்ந்த மருத்துவர்கள்; சிவதாசன் ‘ஆகர்ஷியர்’, ‘மலரா’, தாஸிம் அகமட், ஆஷாத் ஹனீபா, வாமதேவன், நஸிபுடீன், காலித், ஜின்னா முதலான பலர் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்ட கவிஞர்களாகவிருப்பினும் தமது துறைசார் அனுபவங்களை மட்டும் கொண்ட தனிக்கவிதைத் தொகுப்புக்கள் எவற்றையும் இன்றுவரை வெளியிட்டாரல்லர்.   

இத்தகைய ஆரோக்கியமற்ற இலக்கியச் சூழலில் விதிவிலக்காக, புதிய தலைமுறை சார்ந்த மருத்துவக் கலாநிதி இரா முரளீஸ்வரன் முன்னோடி முயற்சியாக இக்கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு இலங்கை நவீன கவிதைத்துறை வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பைச் செய்திருப்பது முக்கிய கவனிப்பிற்குரியது; பாராட்டிற்குரியது! 

பட்டறிவு சார்ந்தும் கேள்வி ஞானத்தினூடாகவும் இக்கவிஞர் தான் பெற்ற அனுபவங்களை சமூக நோக்கு, உளவியல் நோக்கு, யதார்த்தப்பாங்கு, விமர்சனப் பார்வை, கற்பனைத்திறன் என்பன இழையோடிவர, பன்முகப்பார்வைகளோடு வெளிப்படுத்தியிருப்பது இத்தொகுப்புக் கவிதைகளின் சிறப்பியல்புகளுடள் முதலில் எடுத்துரைக்கப்படவேண்டியதாகின்றது. 

முதலில் நோயாளிகள் இக்கவிஞருக்கு தருகின்ற அனுபவங்கள் பற்றி நோக்குவோம். இவ்வாறான நோயாளிகளுள் சிலர் மறக்க முடியாதவர்கள். அத்தகையவர்களுளொருவன் சுண்டு, அவன் எமக்கு வழங்கும் செய்தி முக்கியமானது. 

‘குருதி ஏற்றி  

விடுவிக்கும் நாள்வரை 

அவன் 

நோயாளியாய் இருப்பது குறைவு. 

ஊழியனாய் மாறி 

உதவுதல் அதிகம். 

கிடைத்த வாழ்வில் 

கிடைக்காதவற்றுக்கு பலர் ஏங்க, 

அவன் 

கிடைத்த வாழ்வில் 

கிடைத்த சந்தோசங்களை 

அனுபவிக்கப்பழகினான்.   

நோயின் தீர்வுக்கு 

காத்து கிடக்காமல் 

வாழ்ந்து கடக்கலாம் 

என்று  

புரிந்தவன் அவன்’ 

புதிதாக அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள் எத்தகைய மனநிலையில் வருகின்றார்கள்? 

எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்? 

எத்தகைய மனநிலையோடு வெளியேறுகிறார்கள்? 

வெளியேறிய பின்னர் அவர்களது வாழ்க்கை எவ்வாறு கழிகின்றது என்பன பற்றி வெளிப்படுத்துகின்ற கவிதைகளும் பலவுள்ளன. இவ்விதத்தில் ‘விடுதி நாட்கள் ஒன்று…. நான்கு’ மீள் பிறப்பின் ஆனந்தம் ‘சத்திரசிகிச்சை தழும்பு’ ஒரு நோயுற்றவரின் கடிதம்  என்பன கவனத்திற்குரியனவாகும். 

மருத்துவமனையுடன் – மருத்துவத்துடன் – தொடர்புபட்ட விடயங்கள் சிலவும் பேசுபொருள்களாகியுள்ளன. இவற்றுள் முக்கியமானதொன்று, மருத்துவமனைபற்றிய சமூகத்தின் பார்வை பற்றியது. இவ்விதத்திலான ‘மரண வீடுகளில் கொல்லப்படும் மருத்துவமனைகள்’ என்ற கவிதை பின்வருகிறது: 

– – – – – – – – – 

‘அழுகை முடிந்த பின்னர் 

சில உறவுகள் 

அடுத்தது பற்றி ஆராயும். 

சில உறவுகள் 

நடந்தது பற்றி ஆராயும்  

மரணத்தின் காரணம் கேட்கும் 

மருத்துவமனை தரத்தை கேட்கும் 

மருத்துவர் திறமை கேட்கும் 

தாதியர் கவனிப்பு கேட்கும் 

உண்மை பாதியும் பொய்மை பாதியும் 

உறவுகள் கதைகளில் ஒன்றாய் வளரும். 

பாக்கு வெற்றிலை போட்டு 

சிவந்த உதடுகளில் 

சிகிச்சை முறைகளை 

மென்று துப்பும். 

மருத்துவமனைக்கே பிரேதப் பரிசோதனை 

மரணவீட்டில் நடந்து முடியும். 

கடைசி வரைக்கும் உயிரை மீட்க 

போரிட்ட உண்மைகள் 

மூச்சின்றி மடியும்’ 

இவ்வாறே மருத்துவமனை மருத்துவர் சார்ந்த விடயங்களும் கவனத்திற்குரியனவாம்.  எ-டு:  ‘அம்புலன்ஸ்’, ‘ஸ்டெதஸ்கோப்’ ‘யாரொடும் பகைகொளாது’: ‘கடவுளாய் மாறுதல்’, ‘நோயுற்றவரின் கடிதம்’) 

மருத்துவ உலகம் எதிர்நோக்கும் சவால்களுள் பலவும் எங்களால் அறிய முடியாதனவாகும். இவ்விதத்தில் ‘மருத்துவமனை யுத்தங்கள்’, மந்திர கோல் தேடும் மருத்துவம் என்பன குறிப்பிடத்தக்கவை! 

இறுதியாகக் குறிப்பிட்ட கவிதையின் சில பகுதிகள் : 

‘இடை நடுவில்;, 

மனம் நடுங்கும் நோய்க்காடுகளில்  

முடிந்தளவு போராடும் மருத்துவம். 

சில போர்களில் உயிர்கள் பிரிய 

ஏங்கித் தவிப்போருக்கு 

எப்படிச் சொல்வது? 

மருத்துவர்களிடம்  

மருத்துவம் உண்டு. 

மந்திரக் கோல் 

இல்லை என்பதை!’ 

மரணம் சார்ந்த விடயங்கள் பற்றிய கவிதைகள் கவலையையும் சிந்தனைத் தூண்டலையும் ஏற்படுத்துவனவாகவுள்ளன. இவற்றுள் ‘இறப்பு உறுதியான மருத்துவமனைக் கணங்களில்’ ‘மரண அறிவித்தலில் வந்தவர்கள்’.  ‘கடல், நிலா, மலர் பிணவறை’ ‘இங்கே தீ எரிகிறது’ என்பன ஒரு வகையின. இவ்வகைக் கவிதைகள் கற்பனை சார்ந்தவை என்றாலும் ஆக்கபூர்வமான கற்பனையாக வெளிப்பட்டு எமது சிந்தனையைத் தூண்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பிலுள்ளவற்றுள் அவசியமாக வாசிக்கப்படவேண்டிய கவிதைகளுள் இவை முதன்மை இடத்தைப் பெறுகின்றன என்றுகூடக் கூறலாம். இவற்றுள் எனக்கு நன்கு பிடித்த – உங்களுக்கும் பிடிக்கக்கூடிய – இங்கே தீ எரிகின்றது என்ற கவிதையை மட்டும் முழுமையாக இவ்விடத்தில் தருகின்றேன்.: 

‘இங்கே நோயுற்ற என் மனத்தீ எரிகிறது 

உன் வீட்டில் நீ 

யோசித்துக் கொண்டிருக்கின்றாய். 

என் வாசல்படி வரை 

வந்து பார்த்திருந்தால் 

நீ மனிதனாயிருப்பாய். 

நீ இதை அணைக்கவந்திருந்தால் 

மகாத்மாவாகியிருப்பாய். 

அணைத்துவிட்டு 

என்னை ஆறுதல்ப்படுத்தியிருந்தால் 

என் 

கடவுளாகியிருப்பாய். 

ஆனாலும் 

இங்கே தீ எரிகையிலும்  

நீ சிந்தித்துக் கொண்டிருக்கின்றாய். 

வருவதைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றாய். 

நானும் சிந்திக்கத் தொடங்கினேன் 

நான் விட்ட பிழைகள் பற்றி, 

அத்தோடு 

நீ  

நண்பனா என்பது பற்றி’ 

மேலுள்ள கவிதை மனிதம் என்ற வார்த்தையை இழந்துவிட்ட இன்றைய யுகத்து மனிதர்களுக்கு ‘மரண அடி’ தருவதாகக் காணப்படுகின்றது என்று கூறத்தோன்றுகிறது! 

இந்த இளம் மருத்துவக் கவிஞனின் நேரடி அனுபவ வெளிப்பாடுகளாக இடம்பெற்றுள்ள கவிதைகளும் முக்கியமான கவனிப்பிற்குரியனவாகின்றன என்பதில் ஐயமில்லை. இவ்வகைக் கவிதைகளுள் முதலில் குறிப்பிடத்தக்கது கவிஞர் தனது மன ஆதங்கத்தினை வெளிப்படுத்தும் பின்வரும் கவிதை: 

வார்த்தைகளும் நேரங்களும் போதாமல்…! 

‘ ஒரு நோயின் தீவிரம் சொல்ல 

ஒரு வலிக்கு ஆறுதல் சொல்ல 

பல தருணங்களில் 

வார்த்தைகள் கிடைப்பதில்லை. 

பல தருணங்களில் 

நேரங்களும் கிடைப்பதில்லை. 

சில வார்த்தைகள் 

சொல்லப்படாமல் வாழ்க்கை முடிந்துவிடுகின்றன. 

சில வார்த்தைகள் 

கேட்கப்படாமல் வாழ்க்கை முடிந்துவிடுகின்றன. 

இன்னும் அதிகளவு வார்த்தைகளால் 

ஆறுதல் கூறியிருக்கலாம் 

இன்னும் அதிகளவு நேரம்  

ஆராய்ந்திருக்கலாம்  

என்று ஆசைப்படும் மனம்  

நிராசையாக்கும் காலம்.’  

‘மரணங்கள் பழகிய மருத்துவம்’ என்ற மற்றொரு கவிதையூடாக கவிஞர் முக்கியமானதொரு செய்தியையும் எமக்குத் தருகின்றார்: 

– – – – – – – – – – 

சுனாமிக்கு பழகிவிடுகிறது ஜப்பான் 

சூறாவளிக்கு பழகிவிடுகிறது அமெரிக்கா 

பட்டினிக்கு பழகிவிடுகிறது சோமாலியா 

மரணத்திற்கு பழகிவிடுகின்றன 

மருத்துவமனைகள்.    

பழகிப்போகாமலிருக்கட்டும் 

தவிர்க்க வேண்டிய 

தாமதங்களும், 

தவிக்க வைத்துவிட்ட 

தவறுகளும். 

இக்கவிஞர் எழுதிய மறக்க முடியாத நோயாளிகள், மரணங்கள் பற்றிய வேறு சில கவிதைகளும் இத்தொகுப்பினைக் கனதியாக்குகின்றன. 

கவிஞர் தனக்குவரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக எழுதப்பட்ட கவிதையும் குறிப்பிடத்தக்கதே. கவிஞர் வெளிப்படுத்தும் தனது உள்ளகப் பயிற்சி அனுபவங்களும் எமக்கும் புதிய அனுபவமாகின்றன! 

அவ்வாறே, கவிஞரது பார்வையூடாக வெளிப்படும் ‘பார்வையாளர் நேரங்கள்’ ‘காத்திருப்போர் கதைகள்’ என்பனவும் புதிய சுவை பயக்கின்றன! 

மருத்துவமனை நோயாளிகள் கவிஞருக்குப் புகட்டிய போதனைகளும் சில கவிதைகளில் வெளிப்படுகின்றன. இவ்விதத்தில் அன்பின் மகத்துவம் அவசியம் வேண்டப்படுவதாக கவிஞர் கருதுகின்றார்; அதுபற்றி இரு கவிதைகள் எழுதியுள்ளார். தற்கொலைத் தடுப்பு முயற்சியிலும் கவிஞர் அக்கறை கொண்டுள்ளார். இக் கவிதை ஆர்வத்தைத் தூண்டும் முறையில், வெளிப்பட்டுள்ளது: 

‘மனம் 

சஞ்சலப்பட்டுக்கொண்டிருக்கிறாய். 

விநாடிகளின் சப்த இடைவெளி 

கேட்கிற அளவு 

நிசப்தமாய்  

கவலைகளை மீட்டிக்கொண்டிருக்கிறாய். 

என்றாலும் அந்த அறையை 

எட்டிப்பார்க்காதே!’ 

என்று ஆரம்பித்து 

‘இது உன்முறை 

உனது முடிவு ஏதென்று 

எனக்குத்தெரியாது. 

ஏனெனில் 

கவிதைகள் மட்டும் என் வசம் 

முடிவுகள் அல்ல.’ 

என்று வித்தியாசமாக முடிவடைந்துள்ளது! 

மேலே கூறப்பட்டவாறான, பேசாப்பொருள்கள் பேசப்பட்ட முறைமை சார்ந்தும் சில கூற வேண்டும். இவ்விதத்தில் பின்வரும் சில எடுத்துரைப்பு முறைகள் கவனிப்பிற்குரியன : 

அணிப்பிரயோகம் : 

•        மகளின் கிழிந்த சட்டையை  

மிகக்கவனமாய் தைக்கும்  

ஏழைத்தாயைப்போல்,  

காயமுற்றோரின் உடல் கிழிசல்களை  

மிகக்கவனமாக  

தைத்து முடிக்கின்றனர் 

சில மருத்துவர்கள். 

•        தூரிகை,  

வண்ணச்சித்திரங்களை  

சுவர்களில் வரைந்து விட்டுச் செல்வது போல்  

நல்ல மருத்துவமனை ஊழியர்கள்  

நோயுற்றோரின் உள்ளங்களில்  

நம்பிக்கை ஓவியத்தை 

வரைந்துவிட்டுச் செல்கின்றார்கள். 

•        ‘நுரை பொங்கும் நதியாய்  

மனம்பொங்கும் சில கணங்கள். 

புயல் கண்ட நிலமாய் 

மனம் உடையும் சில கணங்கள். 

•        ‘மரணத்தின் காரணங்கள்  

காட்டாற்று வெள்ளம் போல்.  

சில காரணங்கள் மட்டுமே   

மருத்துவ அணைக்குக் 

கட்டுப்படும். 

பல காரணங்கள் 

அணைக்கட்டுகள் மீறி  

அடித்துக்கொண்டு போய்விடுகின்றன  

மனித உயிர்களை’ 

•        ‘நுரையீரல் தேசத்தில்  

காற்றின் சின்னஞ்சிறு அசைவுகளும்  

கண்ணில் தெரியா நுண்ணுயிர்களின் ஊடுருவலும்  

ஒற்றுக்கேட்டு உளவறிவதால்  

சிறந்த புலனாய்வாளனாய்  

ஸ்டெதஸ்கோப்’ 

மொழிப் பயன்பாடு : 

•        ‘ஒவ்வொரு மரணமும் 

அது பிரசவிக்கும்  

அழுகை ஒலிகளும் 

•        ‘அவர்  

வைத்திய சாலையை விட்டு  

வெளியே வர  

வைத்தியசாலை  

அவர் மனதுக்குள்  

நுழைந்து கொண்டது. 

•        அன்று 

எனக்குப்பதிலாய்,   

அவரின் தேநீர் உரையாடலில் 

துரதிர்ஸ்டவசமாய் மரணம் 

கலந்து கொண்டிருந்தது’ 

•        அவரின் பெருமூச்சுகளை 

‘காற்று  

பெருந்தன்மையாய்  

ஏற்றுக்கொண்டது’ 

கற்பனைத்திறன் வெளிப்படும் கவிதைகள் 

•        ‘கடல், நிலா, மலர் கல்லறைத் தோட்டம்’ 

•        ‘யாரொடும் பகைகொளாது’ 

•        ‘மரண அறிவித்தல்களில் வந்தவர்கள்’ 

•        ‘இங்கே தீ எரிகிறது…’ 

இறுதியாக ஒன்று : மேற்கூறிய அழகியல் அம்சங்கள் இத்தொகுப்புக் கவிதைகள் பலவற்றில் வெளிப்பட்டாலும் ஒரிரு கவிதைகளில் ‘பட்டியல்’ படுத்தும் தன்மைகள் காணப்படுகின்றன. இதனால் உணர்ச்சி வெளிப்பாடானது தொற்று நோய்க்குள்ளாகும் நிலையை அடையும் வாய்ப்புள்ளது. 

இனிவருங்காலத்தில் இவைபோன்ற நோயக்கிருமிகள் இனங்காணப்பட்டு, ஏற்ற தடுப்பூசி ஏற்றப்படுவது இலக்கிய உலகம் மேன்மேலும் ஆரோக்கியம் பெற வழிவகுக்கும் என்று கருதுகின்றேன். மேலும், மிருக வைத்தியராக அவுஸ்திரேலியாவில் கடமையாற்றும் டாக்டர் நடேசன் தனது அனுபவங்களை வித்தியாசமானதொரு நாவலாக (அசோகனின் வைத்தியசாலை) தந்திருப்பது போன்று இக்கவிஞரும் எதிர்காலத்தில் சிறந்த நாவல்களையும் (சிறுகதைகளையும்) தரவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றேன். அதற்கான ஆற்றல் கவிஞரிடம் நிரம்பவே உண்டு என்றும் நம்புகின்றேன், வீடு செல்லக்காத்திருக்கும் நோயாளி போன்று!