அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் — விவாத களம்: 6.

அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் — விவாத களம்: 6.

  —- வி.சிவலிங்கம் — 

வாசகர்களே! 

புதிய அரசியல் யாப்பினை வரையும் நோக்கில் மக்களின் யோசனைகளை அரசாங்கம் கோரியுள்ள நிலையில் அதற்கான முடிவுத் திகதிக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அவை பற்றிய சில சிந்தனைகளுடன் கட்டுரையை மேலும் தொடரலாம்.  

புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக தற்போதைய எதிர்க் கட்சியாகிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் தமது யோசனைகள் எதனையும் சமர்ப்பிக்கப் போவதில்லை எனவும், அதற்கான யோசனைகள் பல மைத்திரி – ரணில் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் பிரதான கட்சிகள் இணைந்து மாதிரி யாப்பு ஒன்றினை வரைந்துள்ள நிலையில் அதனை மாதிரியாக கொள்ள முடியும் என்ற யோசனைகளையும் தெரிவித்துள்ளது.  

ஆனால் தமிழர் தரப்பில் தெளிவற்ற நிலை தொடர்கின்ற போதிலும் வெளிவரும் ஊடக செய்திகளை அடிப்படையாக வைத்து நோக்கும்போது, சுமந்திரன் – கனக ஈஸ்வரன் என்போரின் தலைமையிலான குழுவினர் புதிய யாப்பிற்கான யோசனைகளைத் தயாரித்துள்ளதாகவும், அவை 1995ம் ஆண்டில் சந்திரிகா – ரணில் பேச்சுவாத்தைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளை அடிப்படைகளாகக் கொண்ட வரைபு எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த யோசனைகள் சந்திரிகா அவர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், மகிந்த ராஜபக்ஸ கட்சியின் பிரதான தலைவராகவும் இருந்த வேளையில் எடுக்கப்பட்ட முடிவுகளாகும். இந்த அரசியல் பொதி இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினை விட முன்னேற்றகரமானது என்ற அபிப்பிராயம் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் பொதுவாகக் காணப்படுவதால் அதன் அடிப்படைகளை வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இவ் வேளையில் மாவை புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கி அதனூடாக தாமும் புதிய யோசனைகளை வழங்கத் தயாராகி வருவதாக வெளிவந்துள்ள செய்திகளும், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் என்போர் தாமும் தனித்தனியாக யோசனைகளை வழங்கவுள்ளதாகவும் தெரிய வருகிறது.  

இவ்வாறு தமிழ் அரசியலில் காணப்படும் பிளவுகள் காரணமாக ஒன்றிணைந்து தேசிய இனப் பிரச்சனைக்குப் பொதுவான தீர்வுகளை முன்வைக்க முடியாத நிலமைகளும் தொடர்ந்து நிலவுவது ஆரோக்கியமான எதிர்காலத்தைத் தரப்போவதில்லை. தற்போது தமிழ் அரசியலில் காணப்படும் சந்தர்ப்பவாத, தனிநபர் வழிபாட்டு அரசியல் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் வாழ்வைப் பெரும் துன்பத்தில் தள்ளியிருக்கிறது. இந்த நிலை மேலும் தொடர அனுமதித்தால் இன்றைய சமூகம் மட்டுமல்ல எதிர்கால சந்ததியினரும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள். எனவே தமிழ் அரசியலில் பாரிய அடிப்படை மாற்றங்களை நோக்கி எமது பார்வையைச் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.  

புதிய அரசியல் அடிப்படைகளின் அவசியம்  

அவ்வாறாயின் எவ்வாறான அடிப்படைகளை நோக்கி எமது அரசியல் திரும்ப வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. இவை குறித்து இத் தொடர் கட்டுரையில் சில அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இலங்கை அரசு புதிய அரசியல் யாப்பை வரைய முயற்சித்துள்ள வேளையில் தமிழ் அரசியல் அடுத்த 25 ஆண்டுகளில் அரசியல், சமூக, பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் கவனத்திலெடுத்து விவாதிக்க வேண்டும். அத்துடன் அதற்கு ஏற்றவாறான விதத்தில் கட்சிகளின் கொள்கை கோட்பாடுகளிலும், அரசுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளிலும் ஒரே விதமான இணைந்த போக்கினை அடையாளப்படுத்தும் கோட்பாட்டு அடிப்படையிலான அரசியல் அணுகுமுறைகளை, கொள்கைகளை நோக்கித் திரும்ப வேண்டும்.  

கடந்த 2009ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் சிங்கள அரசியல் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மாற்றமடைந்து வருகிறது. போர்க் காலத்தில் மேற்கொண்ட அரசியலில் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது. 2002ம் ஆண்டளவில் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தை நடத்திய வேளையில் போரை வெல்ல முடியாது என்ற நிலை காணப்பட்டதால் தமது அணுகுமுறைகளை மாற்றித் தம்மை ஓர் ஜனநாயகவாதிகளாக காட்டிக் கொண்டார்கள்.  

தென்னிலங்கை அரசியல் கோட்பாட்டு மாற்றங்கள் 

போரில் வெற்றி பெற்றதும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் இரண்டாவது சுதந்திரப் போரின் வெற்றியாக அவர்கள் அவற்றை மாற்றிக் கொண்டார்கள். ஆரம்பத்தில் ஆசிரியர், உள்ளுர் வெத மாத்தையாக்கள் அல்லது வைத்தியர்கள், பிக்குகள், விவசாயிகள், தொழிலாளர்களே நாட்டின் பிரதான பஞ்ச மகா சக்திகள் என வர்ணித்தவர்கள் 2009ம் ஆண்டின் பின்னர் ராணுவத்தையும் ஆறாவது சக்தியாக இணைத்துக் கொண்டார்கள். இன்று இலங்கை என்பது பௌத்தர்களின் நாடு எனவும், ஏனையோர் பௌத்த தர்மத்தின் அடிப்படையில் அமைதியுடன் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என வர்ணிக்கும் கோட்பாடுகள் எழுந்துள்ளன.  

தமிழ் அரசியலின் அவல நிலை 

ஆனால் இந்த மாற்றங்களைத் தமிழ் – குறும் தேசியவாதம் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அது தமிழ் மக்களை ஏதோ ஒரு வகையில் ஏமாற்றிப் பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பும் அரசியலை மேற்கொண்டனர். இதனால் தமிழ் அரசியல் தனது இலட்சிய அரசியலைத் தொலைத்துச் சென்றது. ஐக்கிய இலங்கைக்குள் சகல தேசிய இனங்களும் சகவாழ்வு நடத்தினால் மட்டுமே அமைதியான வாழ்வு கிட்டும் என்ற உண்மையை சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகளும், தமிழ் – குறும் தேசியவாத சக்திகளும் மறைத்துச் சென்றனர். ஒரு புறத்தில் நாட்டில் தேசிய இனப் பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்பதாகவும், மறு பக்கத்தில் சிங்கள மக்களுடன் இணைந்து சகவாழ்வு நடத்த முடியாது என்ற போலி வாதங்களை முன்வைத்தார்கள். இவ்வாறான ஏமாற்று அரசியலிலிருந்து நாட்டு மக்கள் தப்ப வேண்டுமெனில் சில யதார்த்தங்களை ஏற்றுச் செல்ல வேண்டும்.  

மாறிவரும் அரசியல் சூழல்கள் 

இன்றைய அரசியல் யதார்த்தம் என்பது புதிய அரசியல் யாப்பின் சாராம்சங்களாக அல்லது கட்சிகளின் கொள்கைகளாக மாற்றம் பெற வேண்டும். உதாரணமாக நாட்டின் அரசியல் தன்மை என்பது மிகவும் அடிப்படை மாற்றங்களுக்குள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஏற்கனவே இத் தொடர் கட்டுரைகளில் குறிப்பிட்டவாறு இன்றைய இலங்கை சில குடும்பங்களின், குழுக்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது. நாட்டின் பிரதான அதிகார மையங்கள், பொருளாதாரத் துறைகள் என்பன சிங்கள பௌத்த தேசிய வளர்ச்சிக்கு ஆபத்து எற்பட்டுள்ளது என்ற போலித் தேசியவாதங்களின் அடிப்படையில் சில குறிப்பிட்ட பிரிவினர்களின் கைகளில் அதிகாரம் மேலும் குவிக்கப்பட்டுள்ளது.  

தேசியவாத அரசியல் 

கடந்த 40 ஆண்டுகளாகத் தொடரும் திறந்த தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள், அதனுடன் இணைந்து பயணிக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அரசியல் கோட்பாடுகள், ராணுவம், பணம் படைத்த சிங்கள பௌத்த பெருந்தேசியவாத பிக்குகளின் கூட்டுக் கலவை நாட்டின் அதிகாரத்தைப் படிப்படியாகக் கட்டுப்படுத்தி வருகிறது. இவ் வளர்ச்சிக்கு உறுதுணையாக தமிழ் -குறும் தேசியவாதம் பாரிய அளவில் உதவி வருகிறது. நாட்டின் பிரதான தேசிய இனங்களிடையே மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்த உதவி வருகிறது. இப் பிரச்சனையில் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதமும், தமிழ் – குறும் தேசியவாதமும் இணைந்தே பயணிக்கின்றன.  

சுயநிர்ணய உரிமை அரசியல் 

இன்றைய அரசியல் பின்னணியில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார பலம் ஓர் சிறிய குழுவிடம் சிக்கி சிங்கள மக்களும் தமது சுயநிர்ணய உரிமையை இழந்தே உள்ளனர். பெரும்பான்மைச் சிங்கள மக்கள் தமது ஜனநாயக உரிமையின் அடிப்படைக் கூறான சுயநிர்ணய உரிமையை இழந்துள்ளதை நாம் ஏற்றாக வேண்டும். இல்லையேல் நாட்டின் அரசியல் யதார்த்தத்தினை நாம் புரிந்துகொள்ள முடியாதவர்களாவோம்.  

நாட்டின் பெரும்பான்மைச் சிங்கள மக்களும் இச் சிங்கள பௌத்த பெருந் தேசியவாத்திற்குள் சிக்குண்டுள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டால் நாட்டு மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது வெறுமனே சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சனையாக மட்டும் அது தற்போது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  

எனவே இலங்கையில் அமையும் அரசின் தன்மை என்பது பன்மைத்துவ ஜனநாயக அரசியலாக அமைந்தால் மாத்திரமே சகல சமூகங்களினதும் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்க முடியும். தமிழ் அரசியல் தலைமைகள் சுயநிர்ணய உரிமையை தமக்கு மட்டுமே உள்ள பிரச்சனையாக காட்டுவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றன. இதன் பிரகாரம் ஏனைய சமூகங்கள் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதாகக் கூற முற்படுகின்றன. இம் முயற்சி என்பது நாட்டின் தேசிய இனங்களிடையே சகவாழ்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுப்பதாகவே அமைகிறது. இன்று நாட்டின் சகல சமூகங்களும் தமது அடிப்படை உரிமைகளுக்காக போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இவை அரசியல் உரிமை, அடிப்படை மனித உரிமை முதல் பொருளாதார உரிமைகள் வரை விஸ்தரித்துச் செல்கிறது. இவ்வாறான நிலையில் எந்த மக்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாப்பாக உள்ளன?  

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மிக்க சக்திகள் மற்றும் பணம்படைத்த பௌத்த பிக்குகளினதும், ராணுவத்தினதும் உதவியுடன் நாட்டின் அரசியல் கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். எனவே முதலில் நாட்டு மக்களின் ஜனநாயக அடிப்படையிலான சுயநிர்ணய உரிமை அதிகாரம் காப்பாற்றப்படுவது அவசியமாகியுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்தமான சுயநிர்ணய உரிமை விடுவிக்கப்படும் வரை ஏனைய சமூகங்களின் அடிப்படை உரிமைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே அரசின் தன்மை என்பது பல்லினங்கள் சகவாழ்வுடன் வாழும் பன்மைத்துவ ஜனநாயகத்தை நாம் வலியுறுத்துவதும், அதன் அடிப்படையில் எமது அரசியல் பயணத்தை மாற்றி அமைப்பதும் பிரதான தேவையாகிறது. 

பன்மைத்துவ ஜனநாயகம் 

எமது தேசத்தின் அரசியல் தன்மை என்பது பன்மைத்துவ ஜனநாயகத்தை நோக்கித் திரும்பினால் மட்டுமே தாயகத்தில் வாழும் சகல தேசிய இனங்களினதும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும். தற்போது ஜனநாயகம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலானதாக வியாக்கியானம் செய்யப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துவிட்டால் எண்ணியதெல்லாம் ஏற்படுத்த முடியும் என்ற எண்ணம் பரப்பப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை அடிப்படையிலான வியாக்கியானங்கள் கட்சிகள் மட்டத்திலும் பலமாகக் காணப்படுகிறது. உட் கட்சிகள் மத்தியில் ஜனநாயகம் இல்லாத நிலையில் எண்ணிக்கை மட்டும் எவ்வாறு ஜனநாயகமாக அமைய முடியும்?அரசியல் கட்சிகள் யாவும் ஊழல் மையங்களாக மாறியுள்ளன. தேர்தல் முறையும் அதற்கு ஏற்றவாறான விதத்தில் மாற்றப்பட்டுள்ளதோடு ஆதிக்கத்திலுள்ள அரசியல் கட்சிகள் அல்லது தனி நபர்கள் தமக்கு ஏற்றவாறு தேர்தல் விதிகளையும், எல்லை நிர்ணயங்களையும் மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. எனவே தேர்தல் அரசியல் என்பது ஜனநாயகமற்றுச் செல்கையில் கட்சிகளின் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அவை சாதகமாக அமைந்து விடுகின்றன. உட் கட்சி ஜனநாயகம் சீரழிந்தாலும் எண்ணிக்கை என்பதை ஜனநாயகமாகக் கொள்வது இன்று வாய்ப்பான அரசியலாக உள்ளது.  

எனவே சுயநிர்ணய உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தமானது. ஜனநாயக அடிப்படைகளிலமைந்த சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய வகையில் தேசத்தின் அரசியல் யாப்பு அவசியமானது. தனி மனிதனதும், கூட்டுச் சமூகத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அடிப்படை உரிமைகள் வரையறுக்கப்படுதல் வேண்டும்.  

சுயநிர்ணய உரிமைக்கான புதிய விளக்கம் 

தமிழ் அரசியல் என்பது சுயநிர்ணய உரிமை என்பதை தனது சந்தர்ப்பவாத அரசிலிற்குப் பயன்படுத்துகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் உட் கட்சி ஜனநாயகம் மறுக்கப்பட்ட நிலையில், ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்காக சுயநிர்ணய உரிமையைக் கோருவது வேடிக்கையானது. அது மட்டுமல்ல ஏனைய மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தாமல் தமது சுயநிர்ணய உரிமையை எவ்வாறு கோர முடியும்? ஒட்டு மொத்த இலங்கையில் வாழும் மக்கள் தமது அடிப்படை உரிமைகளை இழந்த நிலையில் அல்லது அந்த மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்த பார்வை இல்லாமல் தமது சுயநிர்ணய உரிமையை எவ்வாறு பாதுகாக்க முடியும்? நாட்டில் வாழும் சகல மக்களினதும் சுயநிர்ணய உரிமை பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையும் அர்த்தமுள்ளதாக அமையும்.  

இந்திய -இலங்கை ஒப்பந்த அடிப்படைகள் 

இங்கு நாம் சுயநிர்ணய உரிமை என்பது குறித்துப் பேசுகையில் அது வெறுமனே அரசியல் அம்சங்களை மட்டும் குறிப்பனவாக இல்லை. உதாரணமாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் காணப்படும் சில அடிப்படை ஜனநாயக அம்சங்களைத் தருகிறேன். இங்கு சுயநிர்ணய உரிமை என்பது இரண்டு அணுகுமுறைகளால் வரையறுக்கப்படுகிறது. அதாவது அரசியல் யாப்பு வழிமுறையில் எழுத்து மூலம் வரையறுக்கப்படுவதாகும். அடுத்த வழிமுறை என்பது சுயநிர்ணய உரிமையை அடையாளப்படுத்தும் வகையில் அதற்கான கட்டுமானங்களை நிறுவுதலாகும். இந்த இரண்டாவது வகையே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தரப்பட்டதாகும். இதனைக் குறைந்தபட்ச அளவிலாவது விடுதலைப்புலிகள் அமைப்பும் புரிந்து கொள்ளவில்லை. அதேபோலவே 13வது திருத்தத்தினை ஆரம்பமாகக் கொள்ளலாம் எனக் கூறியே அதன் அமுல்படுத்தலைத் தடுத்துச் செல்லும் இன்றைய தமிழ் அரசியலாகும். 13வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் தமிழ் பிரதேசங்களில் வாழும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அடையாளப்படுத்தும் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன.  

இனி இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்குச் செல்வோம்.  

–        இலங்கையின் ஐக்கியத்தையும், இறைமையையும், தேசிய எல்லைகளின் பாதுகாப்பையும் கொண்ட எண்ணங்களின் அடிப்படையிலும்

–        இலங்கை என்பது பல்லினங்கள்,பன் மொழிகள் மற்றும் பன்மைத்துவ சமூகத்தை அதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் (சோனகர்); மற்றும் பறங்கியர்  என்போரை கொண்டது என ஏற்றுக்கொண்டு, 

–        ஒவ்வொரு இனக் குழுமங்களும் தனித்துவமான கலாச்சாரத்தையும், மொழி அடையாளங்களையும் உடையவர்கள் என்பதால் அவை கவனமாக வளர்த்தெடுக்கப்படுதல் அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டு,  

–        அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் என்பதை அங்கீகரித்து அம்மக்கள் பல காலமாக இவ் எல்லைக்குள் ஏனைய இனங்களுடன் இணைந்தே வாழ்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு,  

–        இந்த ஐக்கியத்தையும், இறைமையையும் எல்லைப் பாதுகாப்பையும் உளமார எண்ணி பலப்படுத்தவும், பல்லின, பன்மொழி, பல்மத பன்மைத்துவ சமூக குணாம்சங்களைப் பாதுகாக்கவுமான பிரஜைகள் சமத்துவத்துடனும், பாதுகாப்புடனும், அமைதியுடனும் செழித்து தமது அபிலாஷைகளைப் பூரணப்படுத்தி வாழ மனதார எண்ணும் சக்திகளை பலப்படுத்தல் வேண்டும் என்ற நோக்கில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

வாசகர்களே! 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மேற்குறித்த வாசகங்கள் இரண்டு முக்கிய அம்சங்களை வலியுறுத்துகின்றன. அதாவது ஐக்கிய இலங்கையின் அவசியமும், அதன் எல்லைப் பாதுகாப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்தான் அந்தத் தேச எல்லைக்குள் வாழும் இனக்குழுமங்களின் (சிங்கள மக்கள் உட்பட) பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இங்கு தேசத்தின் சுயநிர்ணய உரிமை முதலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

அத்துடன் மேற்குறித்த அடிப்படைகளை உறுதி செய்யும் விதத்தில்தான் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணைந்து தனியான ஒரு நிர்வாகத்தின் கீழ் செயற்பட ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில்தான் தனித்துவமான இனங்களின் சுயநிர்ணய உரிமை கூறப்படுகிறது.   

ஏற்கனவே குறிப்பிட்டது போல தேச அரச கட்டுமானத்தின் நோக்கங்கள் தெளிவுபடுத்தப்பட்ட நிலையின் பின்னரே அதனை அடைவதற்கான கட்டுமானத்தின் அமைப்பு வடிவம் தெரிவிக்கப்பட்டது. இதில் நோக்கங்கள் என்பது நீண்ட கால அடிப்படையிலானது என்பதையும், அதனை அடைவதற்கான நிர்வாகம் என்பது அதற்கான ஆரம்பமாகவே அமைய முடியும். நிர்வாக இயக்கத்தின் மூலமே ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட இலக்குகளை எட்ட முடியும். ஆனால் தமிழ் அரசியல் ஒரே இரவில் சகலமும் எட்டப்படுதல் வேண்டும் என எண்ணிச் செயற்படுவது, இத் தீர்மானங்களும், இலக்குகளும் மிகவும் நெருக்கடியான பின்னணியில் எழுந்தவை என்பதையும் கருத்தில் கொள்ளாது பாராளுமன்றக் கதிரைகளை நோக்கியதாக மாற்றப்பட்டது மிகத் துர்அதிர்ஸ்டமாகும்.  

இந்திய – இலங்கை ஒப்பந்தம், 13வது திருத்தம், மாகாணசபைகளின் தோற்றங்களும் நடைமுறைகளும் போன்றவற்றின் வரலாற்றினை நாம் அணுகும்போது இரு சாராருமே மிகவும் திட்டமிட்டே அதன் செயற்பாட்டைத் தடுத்திருப்பது தெளிவாகிறது. ஒரு புறத்தில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் அதன் செயற்பாட்டின் தோல்வியை உறுதிப்படுத்துவதில் ஊக்கமாகச் செயற்பட்ட அதே வேளையில் மாகாண சபைகளின் செயற்பாட்டில் தோல்வியை ஏற்படுத்தி அதனை மீளவும் தொடர்ந்த அரசியல் பிரச்சனையாக மாற்றுவதில் தமிழ் அரசியல் வெற்றி கண்டுள்ளது. இதனையே விக்னேஸ்வரன் அவர்களின் பாராளுமன்றத் தெரிவு உணர்த்துகிறது. 

மேற்குறித்த வரலாற்றின் அடிப்படைகளை நோக்கும்போது தமிழ் அரசியல் இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது அவசியமாகிறது. அதாவது ஐக்கிய இலங்கைக்குள் சகவாழ்வு என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமை என்ற ஜனநாயக நெறிகளின் பின்னணியில் தேசிய இனப் பிரச்சனை அணுகப்படுதல் அவசியமாகிறது. அதே போலவே சிங்கள ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம் தீர்வை நோக்கிச் செல்வதும், பின்னர் அதிலிருந்து விலகுவதும் என நடத்திச் செல்லும் அரசியலிற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் பிரதான தேவையாகும். எனவே தமிழ் அரசியல் தலைமையை எவர் பெற்றுக் கொண்டாலும் ஒட்டுமொத்த தேசத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மையமாகக்கொண்டு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை வரையப்படுதல் அவசியம் என்கிறோம். இதுவே புதிய அரசியல் யாப்பிற்கான அடிப்படை விதிகளாக அமைய முடியும். 

மாறிச் செல்லும் கோட்பாட்டு அரசியல் 

போர் நடைபெற்ற காலத்தில் சிங்கள அரசியலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் தற்போது அதன் வெற்றிக்குப் பின்னர் புதிய வேதமாக மாற்றப்பட்டு வருகிறது. அவை இலங்கையின் ஒட்டு மொத்த சரித்திர வரலாறு முதல் இன்றைய ஆட்சிக் கட்டுமானத்தின் வியாக்கியானம் வரை பரவியுள்ளது. ஜனாதிபதி அநுராதபுரத்தில் எல்லாளனைப் போரில் வென்ற துட்ட கெமுனுவின் ருவான் வெலிசாயாவில் அமைந்துள்ள சமாதியில் சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளவரை மிக முக்கியமான செய்தியை சகல இலங்கைப் பிரஜைகளுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் உணர்த்தியுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் பரவி வரும் புதிய சிந்தனைகள் வெறும் அரசியலாக மட்டுமல்ல, மாணவர்களின் பாடப் புத்தகங்கள் வரை பரவி வருகிறது. இவற்றின் தாக்கங்களை தமிழ் அரசியல் தலைமைகளால் உணர முடியவில்லை. புரிந்து கொள்ளப்படவில்லை. தமது பாராளுமன்ற ஆசனங்களை நோக்கித் தமிழ் அரசியலை அவர்கள் மாற்றி வருவதால் சிங்கள அரசியலில் ஏற்பட்டு வரும் அடிப்படை மாற்றங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அவற்றிற்கான தீர்வுகளோ அல்லது புரிதலோ அவர்களிடம் இல்லை.  

சிங்கள அரசியல் மிகவும் கோட்பாட்டு அடிப்படையில் மாற்றமடைந்து செல்கையில் தமிழ் அரசியல் அல்லது இதர தேசிய சிறுபான்மை இனங்களின் கூட்டு அரசியல் மிகவும் காத்திரமான மாற்றத்திற்குள் செல்வது அவசியமானது. இந்த அரசியல் என்பது 21ம் நூற்றாண்டின் உலக மாற்றங்களுக்கு ஏற்றவகையிலான கோட்பாட்டு அம்சங்களை அல்லது விளக்கங்களை உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும். உதாரணமாக, முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமையான ஜனாசாவைப் புதைத்தல் என்பது மிகவும் மோசமான வகையில் உலக அறிவுறுத்தல்களைப் புறக்கணித்துச் செல்வது என்பது ஆட்சியாளருக்கும், சிங்கள பௌத்த பெருந்தேசியவாதிகளுக்கும் ஏற்புடைத்தாக இருக்கலாம். ஆனால் எதிர் காலத்தில் சர்வதேச அளவில் இவை பதிலளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.  

ஜெனீவா விவகாரம் 

இலங்கையில் தேசிய அரசியலின் போக்கைத் திருப்புவதற்கான முயற்சிகள் புதிய அரசியல் யாப்பு என்ற பெயரில் ஆரம்பமாகியுள்ள இத் தருணத்தில் இலங்கை அரசின் போர்க் குற்றம் தொடர்பான பிரச்சினைகளில் எவ்வாறு நடந்து கொள்வது? என்பது சிக்கலாக மாறி வருகிறது.  

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற அரசுகள் தமிழ் அரசியல் தலைமைகளைச் சந்தித்து வருவதும், இச் சந்திப்புகளைத் தமிழ் ஊடகங்களும், சில அரசியல் தலைவர்களும் இலங்கை அரசுக்குப் பாடம் புகட்டும் தருணமாக வர்ணிப்பதும் மிக மோசமான அரசியல் சூழலை நோக்கித் தள்ளுவதாகவே அமைகிறது. வெளிநாடுகள் குறிப்பாக பூகோள அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் இப் பிரச்சினையில் தமிழ் அரசியல் தலைமைகளைத் தூண்டில் புழுக்களாக அடிக்கடி மாற்றி வருகின்றன. தமிழ் மக்களின் செல்வாக்கினை இழந்து வரும் இக் கட்சிகள் வெளிநாடுகளைக் காட்டியே தமது அரசியல் பிழைப்பை நடத்துகின்றன.  

சீனாவின் ஆதிக்கத்திற்குள் அகப்பட்டுள்ள இலங்கை அரசை மறு பக்கம் தள்ளுவதற்கான முயற்சிகளில் தமிழ் அரசியல் தலைமைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கைத் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எந்த முயற்சியிலும் தமிழ் அரசியல் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். அதேவேளை நாட்டின் தேசிய இனங்களை பௌத்த சிங்கள பேரினவாத அடக்குமுறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கும் ஒவ்வொரு தருணமும் இத் தேசிய இனங்கள் தமது பாதுகாப்பைத் தேடுவதற்கான தவிர்க்க முடியாத தருணங்களாகவே அமையும். அவ்வாறான சூழலில் இம் மக்கள் தவிர்க்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படும்போது ஏற்படும் வெளிநாட்டுத் தலையீட்டிற்கான முழுப் பொறுப்பும் சிங்கள பௌத்த ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும். தற்போதைய அரசியல் சூழல் அவ்வாறான தவிர்க்கமுடியாத சூழலை நோக்கித் தேசத்தின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக நாம் எச்சரிக்கிறோம்.  

தமிழ் அரசியல் தலைமைகளின் கையறு நிலை 

உள்ளுர் அரசியலில் அதாவது தமிழ் மக்களின் நம்பிக்கையை மிகவும் வேகமாக இழந்துவரும் தமிழ் தலைமைகள் ஜெனீவா மூலமாக தீர்வு கிடைத்துவிடும் என்ற போலி நம்பிக்கைகளை ஊட்டி அதிகார நாற்காலிகளை நோக்கிய அரசியலை நடத்துவது தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்க உதவப் போவதில்லை. ஏனெனில் ஒற்றுமையுடன்கூடிய தெளிவான அரசியல் அணுகுமுறை இதுவரை வெளிப்படவில்லை என்பதேயாகும்.    

தற்போதுள்ள பூகோள அரசியல் போட்டியில் இலங்கை மிகவும் வகையாக மாட்டிக் கொண்டுள்ளது. அமெரிக்க மிலேனியம் நிதியைப் பெறும் வாய்ப்பை இலங்கை அரசு இழந்துள்ளது. இதன் பின்னணியில் சீனா மிக நெருக்கமாக இயங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறாயின் அமெரிக்காவைப் புறக்கணித்துச் செல்லும் துணிவை இலங்கை பெற்றிருப்பதாகவே நாம் கொள்ள வேண்டும். அவ்வாறாயின் ஜெனீவா பிரச்சனையில் இலங்கை கவலைப்படுமா?   

தமிழ் அரசியல் தலைமைகள் ஒருமித்துத் தீர்மானம் எடுக்க வேண்டிய முக்கிய தருணம் இதுவாகும். வெளிநாட்டுத் தலையீடுகளை இன்றைய அரசே உருவாக்கி வருகிறது. ஒரு புறத்தில் தமிழ் மக்களையும், புலம்பெயர் தமிழர்களையும் குற்றம் சாட்டியபடி பூகோள அரசியல் போட்டியை இலங்கையே ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல சக்திகள் இதனுள் தவிர்க்கமுடியாமல் சிக்குண்டுள்ளன. இதில் தமிழ் அரசியல் தலைமைகளும் உள்ளடக்கம். இதன் விளைவுகளே சுமந்திரன் அவர்கள் அமெரிக்க தூதுவரைச் சந்தித்த விவகாரமாகும். இதன் விளைவுகளை உணர்ந்தே சுமந்திரன்  இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சித்துள்ளார். ஆனால் தமிழ் – குறும் தேசியவாத அரசியலை நடத்தும் இச் சந்தர்ப்பவாத தலைமைகள் சுமந்திரன் அவசரப்பட்டு நிலமைகளைச் சீரழித்துள்ளதாக குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளன. இப் பிரச்சினையில் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாத இந்தச் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் தமிழர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாக புதிய கட்டுக் கதைகளை அவிழ்த்துள்ளன.  

சர்வதேச நீதிமன்ற அணுகுமுறை 

சர்வதேச நீதிமன்றத்திற்கு எமது பிரச்சனைகளை எடுத்துச் செல்வதாயின் பலம் பொருந்திய நாடுகளின் பலமான ஆதரவு அவசியம். குறிப்பாக பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளின் ஆதரவு அவசியம். இப் பிரச்சனையில் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் இந்த நாடுகள் இப் பிரச்சனைகளைச் சீனாவுடன் சம்பந்தப்படுத்தி அணுகுகிறார்களே தவிர, இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ள பிரச்சனையாக அணுகவில்லை. எனவே இப் பிரச்சனையில் சிங்கள பௌத்த ஆட்சியாளர்களை மிகவும் தீவிர நிலைக்குத் தள்ளுவது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாகவே மாற்றமடையும். சமீப காலமாக பௌத்த விகாரைகளை அல்லது பௌத்த வரலாற்று இடங்களைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மிகவும் அப்பட்டமாகவே நடைபெறுகின்றன. இவை அரசியல் யாப்பிற்குப் புறம்பாகவே இடம்பெறுகின்றன. சுமந்திரனின் சில நீதிமன்ற தலையீடுகள் சாதகமாக அமைந்திருக்கலாம். ஆனால் ஒருவரால் அரசின் ஒட்டுமொத்த ஜனநாயக விரோத செயற்பாடுகளைத் தடுக்க முடியாது. இங்கு தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியிலே ஒற்றுமைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ள நிலையில் எந்த வெளிநாடும் இதில் தலையிட வாய்ப்பு இல்லை.  

இப் பிரச்சினையை ராஜதந்திர வழிகளிலும், அரசியல் வழிகளிலும் அணுகுவது அவசியமாகும். வெறுமனே வெளிநாடுகளைக் காட்டி தொடர்ந்து சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்கு தீனி போடுவது என்பது ஏற்கனவே பல துன்பங்களுக்குள் சிக்கியுள்ள மக்களைக் கடலில் தள்ளுவதற்கு ஒப்பானது. 

இன்றைய அரசியல் சூழலில் தற்போதைய பிரச்சனைகள் நீண்டகால நோக்கிலும், குறுகியகால நோக்கிலும் அணுகப்படுதல் வேண்டும். குறுகியகால அடிப்படையில் தற்போது காணப்படும் குறும்தேசியவாத ஜனரஞ்சக, சந்தர்ப்பவாத கபட அரசியல் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் முறியடிக்கப்பட வேண்டும். மாற்று அரசியல் யோசனைகள் பலமான விவாதங்களை நோக்கித் தள்ளப்பட வேண்டும். அதே வேளை நீண்டகால நோக்கில் ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் ஜனநாயக சூழ்நிலையை உருவாக்கும் அரசியலுக்கான அடிப்படைகள் நாடு முழுவதிலும் குறிப்பாக தமிழ் அரசியலில் வேருன்ற முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.  

அடுத்த அத்தியாயத்தில் ஜனாதிபதி ஆட்சிமுறையும், சிங்கள பௌத்த தேசிய சிந்தனையும் பற்றிய கருத்துக்கள் இடம்பெறும். 

(தொடரும்)