செம்மணி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி நீதிமன்றத்தில் எவரும் விண்ணப்பிக்கவில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

செம்மணி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி நீதிமன்றத்தில் எவரும் விண்ணப்பிக்கவில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துமாறு வழக்கில் சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பினரும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை என்று இலங்கையின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சனிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த பல மாதங்களாக சர்வதேச விசாரணையைக் கோரி பகிரங்கமாகக் குரல் எழுப்பிவரும் நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை அமைப்பதற்கோ அல்லது அதற்கு அனுசரணை வழங்குவதற்கோ அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

அத்தகைய விசாரணையைக் கோரி எந்தவொரு தரப்பினரும் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், நீதிமன்றத்தின் தேவைகளுக்கு ஏற்ப சர்வதேச தொழில்நுட்ப மற்றும் தடயவியல் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக, டி.என்.ஏ. (DNA) பரிசோதனைகள், மனித எச்சங்களை அடையாளம் காணுதல் மற்றும் மேலதிக தடயவியல் ஆய்வுகளுக்காக சர்வதேச நிபுணத்துவ உதவிகளைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

நீதிமன்றத்துக்கு வெளியே தொடரும் சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள்:

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆர்ப்பாட்டங்கள், செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் செம்மணி புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு பேரணியாகச் சென்று, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமாகவே தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று வலியுறுத்தினர்.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் சர்வதேச அளவிலான டி.என்.ஏ. விசாரணையைக் கோரியிருந்தன.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளின்போது காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் வெளிநாட்டு தடயவியல் நிபுணத்துவ உதவிகளைப் பெறுவதற்காக வலியுறுத்தியுள்ளனர்.

குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் விசாரணையை ஆரம்பிக்குமாறு கோரியிருந்ததாகவும், டி.என்.ஏ. பரிசோதனைகளுக்காக வெளிநாட்டிலுள்ள பிரபலமான ஆய்வுகூடம் ஒன்றைத் தொடர்புகொள்ளுமாறு பரிந்துரைத்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

சர்ச்சைக்குள்ளான பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை:

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சைப் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே நீதி அமைச்சர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

செம்மணி அகழ்வுப் பணிகளுக்குத் தலைமை தாங்கும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு சட்ட மருத்துவ அறிக்கை ஒன்றை வழங்குவதற்கான தகுதிகள் உள்ளனவா என்று அர்ச்சுனா கேள்வி எழுப்பியிருந்தார்.

களனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ, அனுஷா வன்னிநாயக்கவுடன் இணைந்து தயாரித்த தனது அண்மைய இடைக்கால அறிக்கையை ஒக்டோபர் 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த அறிக்கையில் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், தொற்றுநோய் பரவல் அல்லது இயற்கை அனர்த்தம் ஒன்றின் விளைவாகப் புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கருத்து தமிழ் மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுத்ததுடன், அவர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை முன்வைத்தனர். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிக்கையைக் கேள்விக்குட்படுத்தினர்.

சட்ட மருத்துவ அறிக்கை வழங்க பேராசிரியருக்குத் தகுதி இல்லை:

பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு சட்ட மருத்துவ அறிக்கை வழங்குவதற்கான தகுதிகள் இல்லை என்பதை நீதி அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

ஆனால், பேராசிரியர் அத்தகைய அறிக்கை ஒன்றை வழங்கவே இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

“அவர் வழங்கியிருப்பது தொல்லியல் அறிக்கை ஒன்றாகும்” என்று அமைச்சர் கூறினார்.

மனித எச்சங்கள் எங்கு, எவ்வாறு, எந்தச் சூழ்நிலையில் புதைக்கப்பட்டன என்பதை ஆராயும் தடயவியல் தொல்லியல் அறிக்கையே அது என்றும் அவர் தெரிவித்தார்.

“மரணத்துக்கான காரணமும் மரணம் நிகழ்ந்த விதமும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைவாக உரிய காலத்தில் சட்ட மருத்துவ விசாரணைகள் மூலம் ஆராயப்படும்” என்றும் அமைச்சர் கூறினார்.

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை, நீதவான் பரிசீலிக்கவுள்ள பல அறிக்கைகளில் ஒன்று மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஒரேயொரு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீதவான் உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இனவாத நோக்கில் அறிக்கை தயாரிக்கப்படவில்லை – அமைச்சர்

தொல்லியல் ஆய்வின் முடிவுகள் தமிழ் சமூகத்தை இலக்குவைத்து முன்வைக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டுகளை நீதி அமைச்சர் நிராகரித்தார்.

நீதிமன்றத்துக்குத் தேவையான விஞ்ஞானபூர்வமான தகவல்களை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தொழில்முறை மதிப்பீடே இந்த அறிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் உண்மையைக் கண்டறிய விரும்புகிறோம். எங்களுக்கு நீதி வேண்டும்.

அது முறையான விஞ்ஞான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விசாரணையின் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இனம், மதம், சாதி என்பவற்றுக்கு இதில் இடமிருக்கக்கூடாது. அரசாங்கமும் அவ்வாறான அடிப்படையில் சிந்திக்கவில்லை” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விசாரணையை அரசியல் பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்றும் அவர் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

“அரசியல் இலாபத்துக்காக இன முரண்பாடுகளைப் பயன்படுத்துவது பழைய காலத்து அரசியல் முறையாகும்” என்று கூறிய அமைச்சர், “நீங்கள் அவ்வாறு செய்கிறீர்கள் என்று நான் கூறவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

பேராசிரியரின் அறிக்கையை நம்பியிருக்க வேண்டியதில்லை – நீதிமன்றம்

நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் இந்தக் கருத்துகளை வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அண்மைய இடைக்கால அறிக்கையை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருந்தது.

கடந்த வியாழக்கிழமை மேலதிக நீதவான் ஹுசைனுடன் இணைந்து வழக்கை விசாரித்த நீதவான் எஸ். லெனின்குமார், செம்மணி அகழ்வுப் பணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொள்ள வேண்டியதில்லை என்று உத்தரவிட்டார்.

பேராசிரியர் சோமதேவவின் முன்னைய அறிக்கைகளுக்கும் அண்மைய அறிக்கைக்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகளுக்கு நியாயமான விளக்கம் வழங்கப்படவில்லை என்றும் நீதவான் குறிப்பிட்டார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, அறிக்கையை வழக்குப் பதிவில் இணைக்குமாறும், அதைத் தனியாக அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் நீதவான் உத்தரவிட்டதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் குடும்பங்களின் சார்பில் சுமார் 20 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

அவர்களில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் அடங்குவர்.

செம்மணியில் 574 பேரின் மனித எச்சங்கள்:

செம்மணி மனிதப் புதைகுழியில் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது சுமார் 574 பேரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை பேராசிரியர் சோமதேவவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச எண்ணிக்கையுடன் ஒத்துப்போகிறது.

எனினும், அகழ்வுப் பணிகள் நடைபெற்ற இடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்ட எண்ணிக்கைகள் 580ஐத் தாண்டியிருந்தன.

யாழ்ப்பாண நீதவான், சம்பந்தப்பட்ட தரப்புகளின் சட்டத்தரணிகள், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், குற்றச்சம்பவ இட ஆய்வு அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பிரணவன் செல்லையா ஆகியோரின் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மனித எச்சங்கள் தொடர்பான சட்ட மருத்துவத் தடயவியல் அறிக்கையைத் தயாரிக்குமாறு வைத்தியர் பிரணவன் செல்லையாவுக்கும் அவரது குழுவினருக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காணாமற்போனோர் பற்றிய அலுவலகம், அதனை நிறுவிய சட்டத்தின் 12(ஈ) பிரிவின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானித்து வருகிறது.

தொல்லியல் அறிக்கை உண்மையில் கூறுவது என்ன?

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை, 16 மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாட்கள் அகழ்வுப் பணிகளை உள்ளடக்கியுள்ளது.

அதில் குறைந்தபட்சம் 574 பேரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் சுமார் 41 சதவீதமானவர்கள் சிறுவர்கள் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

இதுவரை மனித எச்சங்களின் காலத்தை விஞ்ஞானபூர்வமாக நிர்ணயிப்பதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் 1994ஆம் ஆண்டு வரையான நாணயங்களும் உள்ளன.

எனினும், நாணயம் ஒன்று வெளியிடப்பட்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டு மனித உடல் புதைக்கப்பட்ட காலத்தைத் தீர்மானிக்க முடியாது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மனித எச்சங்களின் காலத்தை நிர்ணயிப்பதற்காக கதிரியக்கக் கார்பன் பரிசோதனைக்கு மாதிரிகளை எடுக்க அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

செம்மணி புதைகுழியின் அமைப்பு, இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட புதைப்புகளைவிட முறையான அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் தன்மையை அதிகமாக ஒத்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புதைப்புகள் தொடர்பாக உறுதியான இறுதி முடிவுக்கு வர முடியாது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

மரணத்துக்கான காரணம் தொடர்பாக அந்த அறிக்கையில் எந்த முடிவும் முன்வைக்கப்படவில்லை.

தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தமா?

செம்மணி புதைகுழியில் இறுதிச்சடங்குகளுடன் தொடர்புடைய பொருட்கள் மிகக் குறைவாகக் கண்டெடுக்கப்பட்டதற்கான சாத்தியமான விளக்கமாகவே தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தம் தொடர்பான கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், இவ்வளவு பெரிய அளவிலான புதைப்புகளுக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடிய எந்தவொரு குறிப்பிட்ட தொற்றுநோயையோ இயற்கை அனர்த்தத்தையோ அந்த அறிக்கை அடையாளம் காட்டவில்லை.

அகழ்வுப் பணிகளின்போது குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், பொம்மைகள் மற்றும் மழைக்கால மேலங்கிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆதாரங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தம் தொடர்பான கருத்துக்கு முரணாக இருப்பதாக காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் சட்டத்தரணிகளும் வாதிடுகின்றனர்.

2025 செப்டெம்பரில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமான அல்லது நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்ட கொலைகளுக்குப் பலியானவர்கள் என்ற முடிவுக்கு வந்ததுடன், சர்வதேச நிபுணத்துவ உதவியையும் கோரியிருந்தது.

புதிய அறிக்கையில் செம்மணி புதைகுழி ஒரு பாரிய மனிதப் புதைகுழியாகக் குறிப்பிடப்படவில்லை என்பதற்கும் குடும்பங்களின் சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

2025 ஜூன் மாதம் அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில், தனது முன்னைய இடைக்கால அறிக்கையில் செம்மணி பகுதியை ஒரு பாரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காண முடியும் என்றும் மேலதிக விசாரணைகள் அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்ததாக பேராசிரியர் சோமதேவ தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் பாரிய எதிர்ப்புப் பேரணி:

கடந்த செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டைச் சந்தியிலிருந்து செம்மணி சிந்துபாத்தி இந்து மயானம் வரை பேரணியாகச் சென்றனர்.

அகழ்வுப் பணிகள் நடைபெறும் இடத்தை அடைந்த பின்னர், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேராசிரியர் சோமதேவவின் அறிக்கையின் பிரதியையும் அவரது உருவப்பொம்மையையும் தீயிட்டு எரித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

போராட்டக்காரர்கள் பேராசிரியர் சோமதேவவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்தனர்.

கடந்த மாதம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வன்னி மாவட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், செம்மணியில் முன்னர் அமைந்திருந்த இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலரும் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களில் அடங்கியிருக்கக்கூடும் என்று தெரிவித்திருந்தார்.

ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிக்கையைக் கேள்விக்குட்படுத்தியதுடன், சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தனர்.

செம்மணி புதைகுழியின் நீண்ட வரலாறு:

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் முதன்முதலாக 1998ஆம் ஆண்டு தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது.

1996ஆம் ஆண்டு 18 வயதான தமிழ் மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அவரது தாயார், சகோதரர், அயலவர் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது செம்மணி குறித்த தகவல்கள் வெளிவந்தன.

அந்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ வீரர்களில் ஒருவரான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, செம்மணியில் 300 முதல் 400 பேர் வரை கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டை இராணுவம் மீண்டும் கைப்பற்றிய பின்னர் காணாமற்போனவர்களையே அவர் குறிப்பிட்டிருந்தார்.

1999ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 15 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றில் 12 எலும்புக்கூடுகளில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்களுக்கான அடையாளங்கள் காணப்பட்டன.

சிலரின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்ததுடன், சிலரின் கண்களும் கட்டப்பட்டிருந்தன.

2025இல் மீண்டும் வெளிவந்த மனித எச்சங்கள்:

2025 பெப்ரவரி மாதம் சிந்துபாத்தி மயானத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது மீண்டும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

2025 ஜூன் மாதத்துக்குள் 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன. அவற்றில் மூன்று எலும்புக்கூடுகள் பச்சிளம் குழந்தைகளுடையவை.

அதே மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட்டார்.

விசாரணைகளில் சுயாதீனமான தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக செம்மணி:

2026ஆம் ஆண்டில் செம்மணி, இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியது.

2018ஆம் ஆண்டு மன்னார் சதொச வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 346 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

தற்போது செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்களின் எண்ணிக்கை அந்த எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

எனினும், செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்கள் எப்போது உயிரிழந்தனர், எவ்வாறு மரணமடைந்தனர், அவர்களின் மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் யார் போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு இன்னமும் உறுதியான பதில்கள் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி இதுவரை தனது தடயவியல் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கான நீதிமன்ற விசாரணைகள் தொடர்கின்றன.

(நன்றி: ஜஃப்னா மொனிட்டர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *