~ வீரகத்தி தனபாலசிங்கம்
இலங்கையில் எதிரணி அரசியல் கட்சிகள் குறிப்பாக, பாரம்பரிய கட்சிகள் மாறிவரும் நிலைவரங்களுக்கு மத்தியில் தங்களுக்கு அரசியலில் பொருத்தப்பாட்டைத் தேடிக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து இரு வருடங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், தேசிய தேர்தல்களில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், அரசாங்கத்துக்கு எதிராக உருப்படியான முறையில் அணி திரட்டல்களைச் செய்ய முடியாதவையாக எதிரணிக் கட்சிகள் இருக்கின்றன.
கடந்த இரண்டு வருடங்களில் இந்த கட்சிகளின் தலைவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக பரந்த கூட்டணியை அமைப்பது குறித்து செய்தியாளர்கள் மகாநாடுகளில் பல தடவைகள் பிரகடனங்களைச் செய்துவந்திருக்கின்ற போதிலும், நடைமுறையில் அதைச் சாதிக்க இயலாதவையாகவே இருக்கின்றன.
முக்கியமான எதிரணிக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதை நோக்கிய முயற்சிகள் ஒருபுறமிருக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியையும் அதிலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அமைத்த ஐக்கிய மக்கள் சக்தியையும் (சமகி ஜன பலவேகய ) ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளும் மறுபுறத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதில் இதுவரையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அண்மையில் ரணில் விக்கிரமசிங்க, அரசியல் கட்சிகள் தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துக்களை இந்த பின்புலத்திலேயே நோக்க வேண்டியிருக்கிறது.
தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அரசியல் கட்சிகளினால் இனிமேல் பாரம்பரிய வாக்காளர் தளங்களையோ அல்லது கூட்டணிகளையோ நம்பியிருக்க முடியாது என்றும் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கூட்டணியை அமைத்துக் கொண்டாலும் கூட தேர்தல் வெற்றியை உறுதி செய்ய முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கட்சிக்குள் இளம் வாக்காளர்களைக் கொண்டுவர வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய விக்கிரமசிங்க, நிலைமை முற்றாக மாறிவிட்டதால் இந்த புதிய வாக்காளர்கள் இல்லாமல் எந்தவொரு கட்சியும் முன்னோக்கிச் செல்லமுடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பழைய பாரம்பரிய அரசியல் முறைகள் இனிமேல் செல்லுபடியாகாது என்பதும் சுமார் எண்பது இலட்சம் சனத்தொகையைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்படும் இளைய தலைமுறையினரை ( Generation Y & Generation Z) ஒன்றிணைக்காமல் அரசியல் அதிகாரத்தைப் பெறவோ அல்லது தக்கவைக்கவோ முடியாது என்பதும் விக்கிரமசிங்கவின் புரிதலாக இருக்கிறது.
இந்த இரு தலைமுறைகளையும் சேர்ந்தவர்கள் இந்த வருடம் முறையே 30 முதல் 45 வரையான வயதையும் 14 முதல் 29 வரையான வயதையும் கொண்டவர்கள்.
உலகம் முழுவதும் அரசியல் நிகழ்வுப் போக்குகளில் இளம் தலைமுறையினர் செல்வாக்குச் செலுத்தி வருவதைச் சுட்டிக் காட்டும் முன்னாள் ஜனாதிபதி, பாரம்பரிய முறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் இந்த இளைய தலைமுறையினரால் புறக்கணிக்கப்படும் அபாயத்தை அரசியல் கட்சிகள் சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனால், அதே இளைய தலைமுறையினரைக் கவருவதற்கு அவரின் ஐக்கிய தேசிய கட்சியிடம் எத்தகைய புதிய கொள்கைகளும் அணுகுமுறைகளும் இருக்கின்றன?
இந்த கேள்விக்கு பதிலைத் தேடுவதற்கு முன்னதாக விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழான மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலப் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சியை ஒருகணம் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய பரிதாப நிலைக்கு முற்றுமுழுதான பொறுப்பையும் ஏற்கவேண்டியவர் விக்கிரமசிங்கவே. தொடர்ச்சியான தோல்விகள், உட்கட்சிப் பூசல்கள் மற்றும் மாற்றுத் தலைமைகளை உருவாகவிடாமல் தடுத்தமை போன்ற காரணிகளினால் இலங்கையின் மிகப் பழமையான அரசியல் கட்சி பாராளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் பூச்சிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
விக்கிரமசிங்க தற்போது தலைமைத்துவத்தில் இருந்து விலகினாலும் விலக நினைத்தாலும் அவரது கட்சியை பொறுப்பேற்று வழிநடத்தக்கூடிய வலிமையான, மக்கள் செல்வாக்குமிக்க இரண்டாம் கட்ட இளந்தலைவர்கள் எவரும் அங்கு இல்லை என்பது நிதர்சனமாகும்.
2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இடைக்கால ஜனாதிபதியாக நாட்டை மீட்டெடுப்பதற்கு விக்கிரமசிங்க ஆற்றிய பணி ஓரளவுக்கு புகழ்ந்து பேசப்பட்டாலும், பாரம்பரிய அரசியல் அதிகாரக் கட்டமைப்பைப் பாதூகாக்கும் அவரது அணுகுமுறை, மாற்றத்தை விரும்பும் புதிய தலைமுறை வாக்காளர்களினால் நிராகரிக்கப்பட்டது.
அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் உறுதியான தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தத் தவறிவிட்டார். இரண்டு ஜனாதிபதி தேர்தல்களில் களமிறங்கி தோல்வியடைந்த பிரேமதாச நாட்டின் பிரதான மாற்றுத் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளமுடியாமல் இருக்கிறார்.
முக்கியமான தேசியப் பிரச்சினைகளில் தெளிவான கொள்கை நிலைப்பாட்டை எடுக்காமல் தயக்கம் காட்டுவதும் இன்றைய இணைய யுகத்துக்கு பொருத்தமில்லாத வகையில் நீண்ட – சலிப்புத்தரும் உரைகளை நிகழ்த்துவதில் பிரேமதாச ஆர்வம் காட்டுவதும் நவீன வாக்காளர்களை அவரினால் கவர முடியாமல் இருப்பதற்கான முக்கியமான காரணங்களாகும்.
நாட்டில் ஏற்பட்ட பாரிய மக்கள் எழுச்சியையும் அதைத் தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்களையும் தனது கட்சிக்கு அனுகூலமான முறையில் மாற்றத் தவறியமை இவரது தலைமைத்துவத்தின் பலவீனத்தையே காட்டியது. முன்னைய பாராளுமன்றத்தில் பிரேமதாசவின் கட்சிக்கு 54 உறுப்பினர்கள் இருந்த போதிலும், வெறுமனே மூன்று ஆசனங்களைக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசநாயக்க மக்கள் கிளர்ச்சியின் விளைவான அரசியல் நிலைவர மாற்றங்களை மிகுந்த விவேகத்துடன் கையாண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதுடன் தனது கட்சியை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு கொண்டுவந்தார்.
இது இவ்வாறிருக்க, இளைய தலைமுறையினரைக் கவரவேண்டியதன் அவசியம் குறித்துப் பேசுகின்ற விக்கிரமசிங்க அண்மையில் பௌத்த பிக்குவான ஞானசார தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இனவாத – மதவாதப் பின்னணி கொண்ட சர்ச்சைகளின்போது எவ்வாறு நடந்து கொண்டார்?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இனவாத – மதவாத உணர்வுகளையும் பழைய தீவிரவாதப் போக்குகளையும் மறைமுகமாக அல்ல வெளிப்படையாகவே பயன்படுத்தி அரசியல் செய்ய விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் முற்பட்டமை அவர்கள் இன்னமும் பழைய காலத்து அரசியலிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
இலங்கையின் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் இடம்பெற்ற 2022 மக்கள் கிளர்ச்சி அடிப்படையில் பொருளாதாரப் பிரச்சினையை மையப்படுத்தியதாக இருந்தாலும், அது முற்றுமுழுதாக இனவாத அடிப்படையில் ஆட்சிசெய்வதில் நாட்டம் காட்டிய ஒரு ஜனாதிபதியையே நாட்டைவிட்டு தப்பியோட வைத்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழலற்ற நிர்வாக முறையை விரும்பும் இளைய தலைமுறை இன – மத நல்லிணக்கத்திலும் அக்கறையுடையதாக இருக்கிறது என்பதற்கான தெளிவான சமிக்ஞைகளை அந்த மக்கள் கிளர்ச்சியின்போது காணக்கூடியதாக இருந்தது. ஞானசாரவை மையப்படுத்தி அண்மைக்காலமாக பிக்குமாரில் ஒரு பிரிவினர் முன்னெடுத்துவரும் அடாவடித்தனமான போராட்டங்களுக்கு பொதுவில் தென்னிலங்கை மக்களினதும் குறிப்பாக, இளம் தலைமுறையினரதும் ஆதரவு கிடைக்கவில்லை.
ஆனால், ஞானசார விவகாரம் போன்ற உணர்ச்சிவசமான சூழல்களைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடநினைக்கும் அணுகுமுறை விக்கிரமசிங்க, பிரேமதாச போன்ற தலைவர்களிடம் இன்றைய இளைய தலைமுறையை வழிநடத்தக்கூடிய முற்போக்கான பண்புகளோ அல்லது கொள்கைகளோ இல்லை என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் பெயரளவில் இணைவதாலோ அல்லது பழைய தலைமைகளை வைத்துக்கொண்டு தேர்தல் கூட்டணிகளை அமைப்பதாலோ இனிமேல் இலங்கையில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. புதிய தலைமுறை வாக்காளர்கள் முற்றிலும் புதிய அரசியல் கலாசாரத்தையும் வெளிப்படையான நிருவாகத்தையும் சட்டத்தின் ஆட்சியையுமே எதிர்பார்க்கிறார்கள்.
தங்களது பழைய இனவாத – மதவாத உத்திகளையும் சுயநல தலைமைத்துவத்தையும் கைவிட்டு உட்கட்சி சீர்திருத்தங்களையும் முற்போக்கான இளம் தலைமைகளையும் முன்னிறுத்தாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மாத்திரமல்ல, ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட மற்றைய எதிரணி கட்சிகளும் வரலாற்றில் ஓரங்கட்டப்பட்டு, நிரந்தர வீழ்ச்சியைச் சந்திப்பது தவிர்க்க முடியாததாகும்.
