“நான் எதிர்கொண்ட அவதூறுகளும் மிரட்டல்களும் அளவிட முடியாதவை!” – புகையிலை நிறுவனங்கள் தமது விமர்சகர்களை மௌனமாக்க மிரட்டல் உத்திகளைப் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் குற்றச்சாட்டு!

“நான் எதிர்கொண்ட அவதூறுகளும் மிரட்டல்களும் அளவிட முடியாதவை!” – புகையிலை நிறுவனங்கள் தமது விமர்சகர்களை மௌனமாக்க மிரட்டல் உத்திகளைப் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் குற்றச்சாட்டு!

 ~மெலிசா டேவி – மருத்துவச் செய்திப் பிரிவு ஆசிரியர்

புகையிலை நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு உள்ளாகும் ஆய்வாளர்கள்:

டென்மார்க்கைச் சேர்ந்த மருத்துவரும் பொதுச் சுகாதார ஆய்வாளருமான பேராசிரியர் சார்லோட்டா பிசிங்கர் (Prof. Charlotta Pisinger), புகையிலைத் தொழில்துறையிடமிருந்து தான் எதிர்கொண்ட மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்திலேயே, அவருக்கு எதிராக அவரது மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட மற்றுமொரு முறைப்பாடு தொடர்பான மின்னஞ்சல் அவரது கணினிக்கு வந்தது.

சர்வதேச புகையிலை நிறுவனமான பிலிப் மோரிஸ் இன்டர்நேஷனலின் டென்மார்க் துணை நிறுவனமே இந்த முறைப்பாட்டைச் செய்திருந்தது.

சூடாக்கப்பட்ட புகையிலைப் பொருட்கள் (Heated Tobacco Products), மின்னணு சிகரெட்டுகள் (Vapes) ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்தும், பிலிப் மோரிஸ் நிறுவனம் உண்மையிலேயே மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளதா என்பது குறித்தும் பிசிங்கர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களே இந்த முறைப்பாட்டிற்குக் காரணமாக அமைந்திருந்தன.

அவரது கருத்துகள் தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தின் அறிவியல் ஆய்வுத் தகவல்களைப் பொதுமக்களிடம் பகிர்வதற்கான விதிமுறைகளை மீறுவதாக நிறுவனம் குற்றஞ்சாட்டியிருந்தது.

ஒரு நேர்காணலில் பிசிங்கர் கூறியதாவது:

“புகையிலை தொடர்பான முறையான சட்டக் கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறைக்கு வராத நாடுகளில், புகையிலை நிறுவனங்கள் தொடர்ந்து தீவிரமாகச் செயற்பட்டு, சிகரெட் விற்பனையை ஊக்குவிப்பதற்காகத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றன.”

இதற்குப் பதிலளித்த பிலிப் மோரிஸ் நிறுவனம், பிசிங்கர் தமது நிறுவனம் பொய்யான தகவல்களை வழங்குவதாகவும் மக்களை ஏமாற்றுவதாகவும் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியது.

“பிசிங்கரின் கருத்துகள் சட்டரீதியான உண்மைக் குற்றச்சாட்டுகளாக அல்லாமல், விவாத நோக்கில் முன்வைக்கப்பட்ட கருத்துகளாகவே இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்” என்று நிறுவனம் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தது.

மேலும், பிசிங்கர் தனது கருத்துகள் அறிவியல் நிபுணத்துவத்தின் அடிப்படையிலானவையா அல்லது தனிப்பட்ட அபிப்பிராயங்களா என்பதைத் தெளிவுபடுத்தத் தவறியதாகவும், ஆய்வு முடிவுகளை மிகைப்படுத்தியதாகவும், முக்கியமான பின்னணித் தகவல்களைத் தவிர்த்ததாகவும் நிறுவனம் குற்றஞ்சாட்டியது.

விமர்சகர்களை மௌனமாக்கத் திட்டமிட்ட நடவடிக்கைகள்:

வியாழக்கிழமை சர்வதேச அறிவியல் சஞ்சிகையான Tobacco Control இல் வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கை, புகையிலைத் தொழில்துறையின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளது.

அவுஸ்திரேலிய மருத்துவரும் தொற்றுநோயியல் நிபுணருமான பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புகையிலை கட்டுப்பாட்டிற்காகப் பணியாற்றும் ஆய்வாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அவர்களது முதலாளிகளிடம் முறைப்பாடுகள் செய்வது தனித்தனியான சம்பவங்கள் அல்ல என்றும், அவை ஒரு பரந்த, முறையான பிரச்சினையின் பகுதியாக உள்ளன என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

புகையிலை நிறுவனங்கள் தமது விமர்சகர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு எதிராக மிரட்டல்களையும் முறைப்பாடுகளையும் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது,

  • விமர்சகர்களை மௌனமாக்குதல்,
  • அறிவியல் ஆதாரங்களைத் திரித்துக் காட்டுதல்,
  • புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டங்களைப் பலவீனப்படுத்துதல்,
  • பொதுச் சுகாதாரக் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்துதல்,

ஆகிய நோக்கங்களைக் கொண்ட திட்டமிட்ட உத்தி என அறிக்கை விவரிக்கிறது.

எனினும், பதிவாகியுள்ள அனைத்து மிரட்டல் சம்பவங்களிலும் புகையிலைத் தொழில்துறையின் நேரடித் தொடர்பை உறுதியாக நிரூபிக்க முடியாது என்பதையும் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

இருப்பினும், புகையிலை கட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றுவோர் பல்வேறு வகையான மிரட்டல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகின்றனர் என்பது தெளிவாகத் தெரிவதாக அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, இத்தகைய மிரட்டல்களை அரசாங்கங்களும் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும் தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருத வேண்டும் என அறிக்கை வலியுறுத்துகிறது.

இணையத்தில் அவதூறு, சட்ட மிரட்டல்கள், தகவல் கோரிக்கைகள்!

புகையிலைத் தொழில்துறை பயன்படுத்துவதாகக் கூறப்படும் பல்வேறு அழுத்த உத்திகளையும் ஆய்வறிக்கை பட்டியலிடுகிறது.

புகையிலை கட்டுப்பாட்டு ஆய்வாளர்களை இணையத்திலும் பொதுவெளியிலும் இழிவுபடுத்துதல் அவற்றில் ஒன்றாகும்.

ஆய்வாளர்கள் “வெறித்தனமான செயற்பாட்டாளர்கள்”, “தீவிரவாதிகள்” போன்ற சொற்களால் வர்ணிக்கப்படுவதுடன், அவர்களது ஆய்வு முடிவுகளும் தவறாகச் சித்தரிக்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

மேலும், தகவல் அறியும் சுதந்திரச் சட்டத்தின் கீழ் கோரிக்கைகளை முன்வைப்பது, சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவது போன்ற உத்திகளும் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் கூறுகையில், தன்னை இணையத்தில் அவதூறாகத் தாக்கிய சந்தர்ப்பங்களிலும், தனது பணிமுறைகள் குறித்து கேள்வி எழுப்புவதற்காகத் தனது மேலதிகாரியையும் அவருக்கு மேலுள்ள அதிகாரிகளையும் தொடர்புகொண்ட சந்தர்ப்பங்களிலும் அச்சுறுத்தலை உணர்ந்ததாகத் தெரிவித்தார்.

“தகவல்களைப் பெறுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தகவல் அறியும் சுதந்திரச் சட்டத்தின் கீழான கோரிக்கைகளைக்கூட தொழில்துறை மிரட்டலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பதை எமது ஆய்வு கண்டறிந்துள்ளது” என்றார் அவர்.

மறைமுக அமைப்புகள் மூலம் செயற்படும் புகையிலைத் தொழில்துறை:

புகையிலை நிறுவனங்கள் தமது உண்மையான தொடர்புகளை மறைத்துக்கொண்டு, முன்னணி அமைப்புகள், மூன்றாம் தரப்பினர் மற்றும் தனிநபர்கள் ஊடாகச் செயற்படுவதாகவும் ஆய்வறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

சில சந்தர்ப்பங்களில் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள்கூட ஆய்வாளர்களுக்குக் கூடுதல் நிர்வாகச் சுமையை ஏற்படுத்தவும், அவர்களது நற்பெயரைக் கெடுக்கவும், அவர்களைத் தொடர்ந்து செயற்படவிடாமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

“ஒரே நாளில் நான் எதிர்கொண்ட அவதூறுகள் அதிர்ச்சியளித்தன!”

அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும் ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான ராக்லன் மடொக்ஸ், தான் எதிர்கொண்ட மிக மோசமான அனுபவமொன்றைப் பகிர்ந்துள்ளார்.

மின்னணு சிகரெட்டுகள் தொடர்பான நாடாளுமன்ற விசாரணையொன்றில், குழந்தைகளின் சுகாதாரம் என்பது ஓர் அடிப்படை மனித உரிமை என்று அவர் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

பல முக்கிய மின்னணு சிகரெட் வர்த்தகப் பெயர்கள் புகையிலை நிறுவனங்களுக்குச் சொந்தமானவையாகவோ அவற்றின் ஆதரவைப் பெற்றவையாகவோ உள்ளன.

நிக்கோட்டின் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் குறித்தும் அவர் பேசியிருந்தார்.

“சில குழந்தைகள் தலையணைக்கு அடியில் மின்னணு சிகரெட்டை வைத்திருக்காமல் தூங்க முடியாத அளவுக்கு நிக்கோட்டினுக்கு அடிமையாகியுள்ளனர். அந்த அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் மீள்வதற்கு எவ்வாறான உதவிகள் தேவை என்பதையே நான் விளக்கினேன்” என்றார்.

ஆனால், அதன் பின்னர் நடந்தது அவருக்கு அதிர்ச்சியளித்தது.

“அடுத்த 24 மணித்தியாலங்களில் நான் எதிர்கொண்ட அவதூறுகளும் தாக்குதல்களும் அளவிட முடியாதவை.”

“எனது தோற்றத்தையும் குணநலன்களையும் அவர்கள் ஏன் கேள்விக்குள்ளாக்க வேண்டும்? அவுஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு 66 உயிரிழப்புகளுக்கும், பழங்குடியின மற்றும் டோரஸ் நீரிணைத் தீவுவாசிகளின் மொத்த உயிரிழப்புகளில் 37 சதவீதத்திற்கும் காரணமாகத் தொடரும் தொழில்துறையை அவர்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

புகையிலை நிறுவனங்களுக்கு இரகசிய விசாரணை; சுகாதார நிபுணர்களுக்குப் பகிரங்க விசாரணை!

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத புகையிலை வர்த்தகம் தொடர்பாக நடைபெற்ற நாடாளுமன்ற விசாரணையின் நடைமுறைகளையும் மடொக்ஸ் விமர்சித்துள்ளார்.

அந்த விசாரணையில் பொதுச் சுகாதார நிபுணர்கள் பகிரங்கமாகச் சாட்சியமளிக்க வேண்டியிருந்தது.

ஆனால், புகையிலைத் தொழில்துறை பிரதிநிதிகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால், தமது அடையாளங்களை வெளிப்படுத்தாமல் சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“அவர்கள் எங்களுடன் அதே நாடாளுமன்றக் கட்டிடத்தின் நடைபாதைகளில் நின்றிருந்தாலும், பொதுமக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது.”

“அவர்கள் பொதுமக்களின் கண்காணிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனால் சுகாதார நிபுணர்களுக்கு அதே சலுகை கிடைப்பதில்லை” என்றார் அவர்.

உயிருக்கு அச்சுறுத்தல்களும் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு:

பல ஆய்வாளர்கள் தமது நற்பெயரைக் கெடுக்கும் முயற்சிகள், சட்டரீதியான அழுத்தங்கள் மற்றும் நிர்வாக ரீதியான தாக்குதல்களை எதிர்கொள்வதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

சில நாடுகளில், ஆய்வாளர்களுக்கும் பொதுச் சுகாதாரச் செயற்பாட்டாளர்களுக்கும் போதிய அரசாங்க அல்லது நிறுவன ஆதரவு இல்லாததால், இத்தகைய அழுத்தங்கள் உடல்ரீதியான வன்முறையாகவும் மாறியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

சிலர் கொலை மிரட்டல்களைக்கூட எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், இத்தகைய கடுமையான சம்பவங்கள் அரிதாகவே நிகழ்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

“ஒவ்வொரு முறைப்பாட்டிற்கும் பதிலளிப்பது நேரத்தையும் மனநிம்மதியையும் பறிக்கிறது!”

பேராசிரியர் சார்லோட்டா பிசிங்கர், புகையிலை நிறுவனங்களின் முறைப்பாடுகளுக்குப் பதிலளிப்பதால் ஏற்படும் சிரமங்களை விவரித்துள்ளார்.

2013ஆம் ஆண்டில், தான் பணியாற்றிய மருத்துவமனையிலிருந்து தன்னைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு புகையிலை நிறுவனம் கோரியதாக அவர் கூறுகிறார்.

“ஒவ்வொரு முறையும் எனது பணியிடத்திற்கு முறைப்பாடு வரும்போது, நான் விளக்கமளிக்க வேண்டும். ஆதார ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.”

“இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதுடன், பிரச்சினை தீர்க்கப்படும் வரை மிகவும் விரும்பத்தகாத அனுபவமாகவும் இருக்கிறது” என்றார்.

இதற்கிடையில், பிசிங்கரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கேட்கப்பட்டபோது, பிலிப் மோரிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டென்மார்க் நிறுவன விவகார முகாமையாளர் பதிலளித்தார்.

“எமது நிறுவனத்தை விமர்சிக்கும் கருத்துகள் உட்பட, கல்வியாளர்கள் தமது கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை நாங்கள் மதிக்கிறோம்.”

“அதேவேளை, அறிவியல் உண்மைகளாக முன்வைக்கப்படும் கூற்றுகள் ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.”

“பிசிங்கருக்கு எதிரான எமது முறைப்பாடு, அவர் கருத்து வெளியிடுவதையோ பொதுவிவாதங்களில் பங்கேற்பதையோ கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதல்ல” என்று நிறுவனம் தெரிவித்தது.

இளம் ஆய்வாளர்களின் எதிர்காலம் குறித்த கவலை:

டென்மார்க்கின் தேசிய பொதுச் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த லோட்டஸ் சோஃபி பாஸ்ட், இளைஞர்களிடையே புகையிலை மற்றும் நிக்கோட்டின் பயன்பாட்டைத் தடுப்பது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

புகையிலைத் தொழில்துறையின் அழுத்தங்கள், குறிப்பாக இளம் ஆய்வாளர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இத்தகைய அனுபவங்கள் புதிய ஆய்வாளர்களை இந்தத் துறைக்குள் நுழையத் தயங்கச் செய்யலாம் என அவர் கருதுகிறார்.

புதிய ஆய்வில் பங்கேற்காத பாஸ்ட், புகையிலைத் தொழில்துறையிடமிருந்து வரும் தகவல் அறியும் சுதந்திரச் சட்டக் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்காகத் தானும் தனது நிறுவனத்தின் சட்டப் பிரிவினரும் பல மணிநேரங்களைச் செலவிட வேண்டியிருப்பதாகக் கூறினார்.

மேலும், புகையிலைத் தொழில்துறையின் பிரதிநிதிகள் முனைவர் பட்ட ஆய்வாளர்களின் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு நிகழ்வுகளுக்கும் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் கட்டிடத்திற்குள்ளேயே கறுப்புக் கண்ணாடிகளை அணிந்துகொண்டு குறிப்புகள் எடுத்ததாகவும் அவர் கூறினார்.

இளைஞர்களின் நிக்கோட்டின் பயன்பாடு குறித்த நிகழ்விலும் அழுத்தம்!

இளைஞர்களிடையே நிக்கோட்டின் பயன்பாடு தொடர்பான புதிய தரவுகளை வெளியிடுவதற்காக பாஸ்ட்டின் நிறுவனம் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் கலந்துகொள்ள அனுமதி பெறுவதற்காகப் புகையிலைத் தொழில்துறை நிறுவனத்துடன் கடுமையாக வாதிட்டதாக அவர் தெரிவித்தார்.

இறுதியில் புகையிலை, நிக்கோட்டின் மற்றும் மின்னணு சிகரெட் தொழில்துறைகளைச் சேர்ந்த சுமார் 15 பிரதிநிதிகள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக அவர் கணக்கிட்டுள்ளார்.

“அந்த அறையில் ஒரு விசித்திரமான சூழ்நிலை நிலவியது. ஏனைய பங்கேற்பாளர்கள் கருத்துத் தெரிவிப்பதும் மிகவும் குறைவாகவே இருந்தது” என்று பாஸ்ட் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகள் என்ன கூறுகின்றன?

உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாட்டிற்கான கட்டமைப்பு உடன்படிக்கை (WHO Framework Convention on Tobacco Control), பொதுச் சுகாதாரக் கொள்கைகள் புகையிலைத் தொழில்துறையின் செல்வாக்கிற்கு உட்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பிசிங்கர் மற்றும் பாஸ்ட் உள்ளிட்ட ஆய்வாளர்களும் இந்தக் கொள்கையைப் பின்பற்றி வருகின்றனர்.

புகையிலைத் தொழில்துறையின் தலையீடுகளைத் தடுக்கும் விதிமுறைகளை அரசாங்கங்கள் மேலும் கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று புதிய ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

அதேவேளை, ஆய்வாளர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர்களது பணியிட நிறுவனங்கள் உரிய ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்றும் அறிக்கை கோருகிறது.

ஆய்வாளர்களைப் பாதுகாக்க முன்வைக்கப்படும் பரிந்துரைகள்:

புகையிலை கட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றுவோர் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கான பல நடைமுறைகளையும் ஆய்வறிக்கை முன்வைக்கிறது.

அவற்றில் முக்கியமானவை:

  • சாத்தியமான மிரட்டல்களை எதிர்கொள்வதற்கான இடர் முகாமைத்துவத் திட்டத்தை முன்கூட்டியே தயாரித்தல்.
  • இணைய மற்றும் தகவல் பாதுகாப்பை வலுப்படுத்துதல்.
  • பெறப்படும் மிரட்டல்கள், அவதூறுகள் மற்றும் அழுத்தங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்துதல்.
  • அத்தகைய சம்பவங்கள் குறித்து உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தல்.
  • ஆய்வாளர்களுக்கான நிறுவன ரீதியான பாதுகாப்பு மற்றும் ஆதரவை அதிகரித்தல்.
  • புகையிலைத் தொழில்துறையின் அரசியல் மற்றும் கொள்கை ரீதியான தலையீடுகளைத் தடுத்தல்.

“வரலாறு நினைவுகூரப்போவது மிரட்டல்களை அல்ல; அவர்கள் ஏற்படுத்திய முன்னேற்றத்தையே!”

ஆய்வறிக்கை இறுதியில் முக்கியமான கருத்தொன்றை வலியுறுத்துகிறது.

புகையிலை கட்டுப்பாட்டிற்காகப் போராடும் ஆய்வாளர்களின் பங்களிப்புகள், அவர்கள் எதிர்கொண்ட அவதூறுகளாலும் மிரட்டல்களாலும் மதிப்பிடப்பட மாட்டாது.

மாறாக, பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அவர்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்திய முன்னேற்றங்களே வரலாற்றில் நிலைத்திருக்கும்.

“புகையிலை கட்டுப்பாட்டிற்காகப் பணியாற்றுவோர் விட்டுச் செல்லும் மரபு, அவர்கள் தாங்கிக்கொண்ட தாக்குதல்கள் அல்ல; அவர்கள் ஒன்றிணைந்து பெற்றுத்தந்த முன்னேற்றங்களே.”

புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்காகப் பணியாற்றும் ஆய்வாளர்கள், தங்களது அறிவியல் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வறிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மூலம்: த கார்டியன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *