ஜயந்திமாலா அழகு குணசீலன் அவர்கள் ஜயந்திமாலா அருள் செல்வநாயகம் என்ற பெயரில் செய்தி வாசிக்கும்பொழுதே நாங்கள் ரூபவாஹினி பார்க்கத்தொடங்கியிருந்தோம்.
ரூபவாஹினிக்கு வரும்போது அவரைச் சந்திக்கிறேன். அப்போதும் அவர் ஜயந்திமாலா அருள்செல்வநாயகம். ரூபவாஹினி செய்திப்பிரிவில் மாலை நேரத்தில் செய்தி வாசிப்பதற்காக அவர் வருவார்.
அப்போது ரூபவாஹினி தமிழ்ப்பிரிவில் பணியாற்றிய பாலசிங்கம் பிரபாகரன் என்னைச் செய்திப்பிரிவுக்கு அழைத்துச் சென்று அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். செய்தி வாசிப்பது போலவே அவர் பேசினார்.
“நீங்கள் செய்தி வாசிப்பது போலவே கதைக்கிறீர்கள் ” என்றேன்.
“கதை சொல்வது போலத்தானே டிவி யில் செய்தி வாசிக்கவேணும், ரேடியோவில் ‘வாசிப்பது’ மட்டும் தானே?”என்று சொன்னது ஞாபகம்.
“அவன் போகப்போகப் படிப்பான்” என்று பிரபாகரன் சொன்னார்.
பிற்காலத்தில் தொலைக்காட்சி, வானொலி இரண்டினதும் செய்திகளுக்குமிடையிலுள்ள வித்தியாசத்தைக் கற்றுக்கொண்டபோது ஜயந்திமாலா அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.
அவர் ஒரு சிறந்த செய்தி வாசிப்பாளராக, அரங்க அறிவிப்பாளராக, தயாரிப்பாளராக திகழ்ந்தார். ஒரு தொழிலாக மட்டும் அவற்றைச் செய்வதுடன் நின்றுவிடவில்லை, அவற்றின் அர்த்தங்களையும் தம் மனதில் அவர் ஆழப்பதிந்து வைத்திருந்தமையை உணரமுடிந்தது. கல்விச்சேவையில் பணியாற்றியவர் அல்லவா?
அவரது வாழ்வின் பயணத்திசை மாறியமையால், இலங்கை வானொலி மட்டுமல்ல ரூபவாஹினியும் சிறந்த ஆற்றல் மிக்க ஒலி -ஒளிபரப்பாளர் ஒருவரை இழந்துவிட்டது என்பேன்.
இலங்கை வானொலியில் அதன் கல்விச்சேவையில் அவர் பகுதி நேரத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய வேளையில் ரூபவாஹினியின் செய்திப்பிரிவில் அறிவிப்பாளராக இணைந்திருந்தார். அவருடன் விமலேஸ்வரி இந்திரன் என்பவரும் இணைந்திருந்ததாக, ரூபவாஹினியின் முன்னாள் இயக்குனர் பி விக்னேஸ்வரன் தமது “நினைவு நல்லது” நூலில் குறிப்பிடுகின்றார்.
விமலேஸ்வரியும், ஜயந்திமாலாவும் செய்தி வாசிப்புப் பயிற்சியைப் பெற்றபோதிலும், விமலேஸ்வரி பயிற்சிக்கு சென்றுவிட்டு நிறுத்திக்கொண்டுவிட்டார்.
ஜயந்திமாலா வானொலியில் அறிவிப்பாளராக இல்லாதபோதிலும் வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். ரூபவாஹினிக்கு செய்தி வாசிப்பாளராக வந்த பின்னர் அவருக்கு செய்தி வாசிக்கின்ற அப்பயிற்சி இலங்கைத் தொலைக்காட்சிப் பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப நாட்களில் செய்தி வாசிப்பாளர்களுக்கு பொதுவாக இலங்கைத் தொலைக்காட்சிப் பயிற்சி நிலையத்திலேயே பயிற்சி வழங்கப்படுவது வழக்கமாயிருந்தது.
ஜயந்திமாலா செய்தி வாசித்த காலத்தில் ரூபவாஹினியில் வீ.என் மதியழகன், எஸ்.விஸ்வநாதன், ரஷீத் எம் ஹபீல், பி .விக்னேஸ்வரன் ஆகியோர் மட்டுமே செய்தி வாசித்துக்கொண்டிருந்தனர். இவர்கள் ரூபவாஹினி ஆரம்பமான காலத்திலிருந்து வாசித்தவர்களாவர். பின்னர் சண்முகரட்ணம், நடேசசர்மா ஆகியோர் வாசித்தனர்.
1990 க்குப் பின்னர் பலர் வாசிக்கத் தொடங்கினர். அப்போது ஜயந்திமாலா நாட்டில் இல்லை.
மிகவும் எளிமையான என்றும் புன்னகை மலர்ந்த முகத்துடன் பழகும் பண்பு மிக்க ஒருவர் அவர்.
அண்மையில் அவரைப்பற்றிப் பேசும்போது, திரு விஸ்வநாதன் “இருவர் இணைந்து செய்தி வாசிக்கும் நாட்களில்” தாம் அவருடன் செய்தி வாசித்தமையை நினைவு கூர்ந்தார்.
திரு விக்னேஸ்வரன் அவர்கள் கூறுகையில், “ரூபவாஹினியில் என்னைக் கண்டால் புன்சிரிப்புடன் போவார், அதிகம் கதைக்கமாட்டார், ஆனால் அண்மையில் எனது நூல் தொடர்பாக அவரிடம் பேசியபோது நிறையக் கதைத்தார்” என்றார்.
இலங்கை ரூபவாஹினியில் பெண் செய்தி வாசிப்பாளர்களில் கமலா தம்பிராஜா, மனோகரி சதாசிவம், ஆயிஷா பைரூஸ் ஆகியோர் வரிசையில் இடம்பெறுபவர் ஜயந்திமாலா.
நான் அவருடன் பழகும்போதுதான் முதன்முதலில் மட்டக்களப்பு பிரதேச பேச்சுவாசனையை உணர்ந்துகொண்டேன். படிப்படியாக அவருடன் பழகும்போது மண்வாசனை மொழிநடையுடன் கதைக்கத் தொடங்கினார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் நண்பர்கள் எனது ஊரான கரவெட்டியில் தனியார் கல்வி நிலையங்களில் எண்பதுகளில் கல்வி கற்க வந்துள்ளனர். அவர்களுடன் நன்கு பழகியுள்ளேன். ஆயினும் ஜயந்திமாலா அவர்களின் பேச்சு வித்தியாசமானதாயும் ரசனை மிக்கதாகவுமிருந்தது. அதனை நான் அவருக்கே சொல்லிருக்கிறேன்.
ரூபவாஹினியில் அறிவிப்பாளராக வந்த பின்னர் அவர் அரச நிகழ்ச்சிகள் பலவற்றில் மேடை அறிவிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
ரூபவாஹினியின் கல்வி நிகழ்ச்சிகள் பிரிவின் பணிப்பாளராயிருந்து பின்னர் பொது நிகழ்ச்சிப்பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றிய பியதாச ரட்ணசிங்க அங்கு வந்திணைவதற்கு முன்னர் இலங்கை வானொலிக் கல்விச்சேவையில் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். ரூபவாஹினியின் கல்வி நிகழ்ச்சிப் பிரிவிலும் பணியாற்றியவர். செய்திப்பிரிவுக்கு பெண் செய்தி வாசிப்பாளர் அவசியமான வேளையில் அவர் ஜயந்திமாலாவை விண்ணப்பிக்குமாறு ஊக்குவித்து, அதன் பின்னர் அதற்காக இடம்பெற்ற நேர்முகத்தேர்வில் இவர் தெரிவுசெய்யப்பட்டார்.
அமரர் பியதாச ரட்ணசிங்க அவர்களால் ரூபவாஹினியில் தொடராகத் தயாரிக்கப்பெற்ற “அத்வெல” என்ற தமிழ்-சிங்கள மொழிக் கல்வித் தொடர் நிகழ்ச்சியிலும் அவர் பங்குபற்றினர்.
அவர் ரூபவாஹினியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் நான் அதன் கல்வி நிகழ்ச்சிப்பிரிவிற் பணியாற்றினேன். ரூபவாஹினியின் கல்வி நிகழ்ச்சிகளுக்கும் அவர் குரல் வழங்கியுள்ளார்.
பல்கலைக்கழகப் பட்டதாரியான அவரிடம் நல்ல தமிழறிவும் தமிழ் உணர்வும் இருந்ததை அவருடன் பழகும்போது அறியக்கூடியதாயிருந்தது.
ரூபவாஹினி, இலங்கை வானொலியில் பணியாற்றுபவர்களுக்கு தமிழ் மீதான உணர்வும் தேர்ச்சியும் அனுபவ ரீதியாக வருவது வழக்கம். ஆனால் அவரிடம் தமிழறிவும் தமிழ்ப்பற்றும் பிறப்புடன் இணைந்திருந்தது.
செய்திப்பிரிவில் மூத்த தயாரிப்பாளராகப் பணியாற்றிய மூத்த ஒலிபரப்பாளர் அமரர் சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம், அவர் ஐரிஎன் இல் செய்தித்தயாரிப்பாளராகப் பணியாற்றிய காலத்திலும், ஜயந்திமாலாவின் செய்தி வாசிப்புப் பற்றி விதந்து சொல்லியுள்ளதைக் கேட்டுள்ளேன். ஐ .ரி.என்னிற்குப் புதிதாக வந்த பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு தமது ரூபவாஹினி செய்தித் தயாரிப்பு அனுபவங்களை அவர் பகிர்வது வழக்கம். அப்போதே ஜயந்திமாலாவின் மொழியாற்றல் பற்றிய கதை அவரிடமிருந்து வரும்.
“ரூபவாஹினியில் செய்தி தொடங்கப்பெற்றபொழுது அதில் செய்தி வாசிப்பவர்கள் தேர்வில், தொலைக்காட்சி நாட்டுக்குப் புதியதும் கண்களால் மக்கள் பார்ப்பதுமான ஊடகமாக இருந்ததால் அழகுக்கும் முகவெட்டுக்கும் இடம் கொடுக்கப்பட்டதென்றும் செய்தி அறிவு பற்றிய கவனம் இருந்திருக்கவில்லை என்றும் ஒரு கருத்து இருந்தது. ஆயினும், ஜயந்திமாலா தமிழ் மொழி இலக்கண விடயத்தில் மிகுந்த கவனமுள்ளவராகவிருந்தார்” என்றும் சில்வஸ்டர் பாலசுப்பிரமணியம் சொல்வார்.
ரூபவாஹினியிலோ அல்லது இலங்கை வானொலியிலோ ஜயந்திமாலாவின் தமிழ்ப்பணி தொடர்ந்து கிடைக்காதபோதிலும் புலம்பெயர் தேசத்துத் தமிழ் மக்களுக்கு அவரது பணிகள் நிறையக் கிடைத்ததை அறியமுடிந்தது.
ஜயந்திமாலாவின் தமிழ் அறிவு என்பது வேரோடு முளைத்த விழுதாக அவரது தந்தையாரிடம் இருந்து வந்த ஒன்றாக இருந்தது என்றால் மிகையல்ல.
அவர் தமது தந்தையார் பற்றி பெருமிதமாகக்கூறாவிட்டாலும், கதையோடு கதையாகச் சொல்லியுள்ளார்.
அவரது தந்தையார் அமரர் அருள்.செல்வநாயகம் ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் இலக்கிய ஆய்வாளருமாவார்.
மட்டக்களப்பில் முதன்முதலாகச் சிறுகதைத் தொகுதி நூலொன்றை வெளியிட்ட பெருமை அவருக்கே உரியது. இவரது ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள் இலங்கை, இந்திய, மலேசிய வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
“சீர்பாத குல வரலாறு” என்னும் இவரது ஆராய்ச்சிக் கட்டுரை 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்டு அறிஞர்களால் பாராட்டப்பெற்றது.
சென்னை சாகித்திய அகடமி வெளியிட்ட கலைக்களஞ்சியத்திலும் இவரது கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளதாகத் தகவல் உண்டு.
சுவாமி விபுலாநந்தரால் எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகளை அருள் செல்வநாயகம் “விபுலாநந்த அடிகள்” என்னும் நூலாக 1953 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
அத்துடன், விபுலாநந்தரின் ஆக்கங்களைத் தொகுத்து விபுலாநந்தத்தேன், விபுலாநந்த வெள்ளம், விபுலாநந்த செல்வம், விபுலாநந்த ஆய்வு, விபுலாநந்தர் கவிதைகள், விபுலாநந்தக் கவிமலர், விபுலாநந்த அமுதம், விபுலாநந்தச் சொல்வளம், விபுலாநந்த அடிகள் என்னும் பத்து நூல்களாக வெளியிட்டார். விபுலாநந்த ஆய்வு என்னும் நூல் க.பொ.த (சா.த) வகுப்பிற்கு இலக்கிய பாடப் புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. விபுலாநந்த வெள்ளம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பாடநூலாகவும், விபுலாநந்த இன்பம் க.பொ.த. உயர்தர வகுப்புக்குக்கும் பாட நூலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
புதல்வியின் நினைவுகளைப் பேசும்போது தந்தையாரின் பெருமைகளையும் பேசும் வரத்தை ஜயந்திமாலா பெற்றிருக்கிறார் என்றால் அது அவரும் அவரது தந்தையாரும் பெற்ற பிறவிப்பயனே.
அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது கணவர் அழகு குணசீலன் அவர்களுக்கும் பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக.
—மரியாம்பிள்ளை வரதராஜன்
