திருமதி. ஜயந்திமாலா குணசீலன்: மட்டக்களப்புத் தமிழகம் பெண் ஆளுமையொன்றை இழந்தது!

திருமதி. ஜயந்திமாலா குணசீலன்: மட்டக்களப்புத் தமிழகம் பெண் ஆளுமையொன்றை இழந்தது!

(15.06.1957 — 14.11.2026)

தமிழ் இலக்கியப் பரப்பில் பெரிதும் அறியப்பெற்ற எழுத்தாளுமையான மட்டக்களப்பு குறுமண்வெளியைச் சேர்ந்த அமரர். அருள்செல்வநாயகம் (தம்பாப்பிள்ளை செல்வநாயகம்) அவர்களின் மூத்த புதல்வியும் கிழக்கிலங்கையின் சமகால ஆளுமைகளுள் ஒருவரான எழுத்தாளர் – அரசியல் ஆய்வாளர் அழகு குணசீலன் அவர்களின் துணைவியாருமான திருமதி. ஜயந்திமாலா குணசீலன் அவர்கள் 14.11.2026 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் அமரத்துவமடைந்த செய்தி மட்டக்களப்புத் தமிழகமெங்கணும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தெளிந்த – வசீகரமான தனது குரல் வளத்தால் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியிலும் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியிலும் நேயர்களை ஈர்த்ததொரு அறிவிப்பாளராக மிளிர்ந்தவர் ஜயந்திமாலா குணசீலன் அவர்கள்.

மட்டக்களப்பு குருமண்வெளி ஊரில் செல்வநாயகம் – அருளம்மா தம்பதிகளுக்குத் தலைமகளாக 15.06.1957 இல் பிறந்த இவர் தனது கல்வியை ஐந்தாம் வகுப்பு வரை குருமண்வெளி சிவசக்தி வித்தியாலயத்தில் தொடங்கி மட்டக்களப்பு நகரிலுள்ள வின்சன்ட் மகளிர் கல்லூரியில் தொடர்ந்து பின் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புடன் நிறைவு செய்தார்.

பல்கலைக்கழகம் புகுமுன் சில மாதங்கள் வாழைச்சேனை காகித ஆலையில் கணக்கியல் எழுதுவினைஞராகக் கடமையாற்றிய அனுபவமும் இவருக்குண்டு.

கொழும்புப் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டியது.

இவரது கல்வி இளமாணிப்பட்டத் (B.Ed) தகுதி காரணமாக, பட்டப்படிப்பை நிறைவு செய்தபின் இலங்கை வானொலியில் கல்விச் சேவைப் பணிப்பாளராக நிரந்தர நியமனம் கிடைத்தது.

பாடசாலைக் காலத்திலேயே தனது வசீகரமான குரல்வளம் காரணமாகப் பேச்சுப்போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்ற இவர் பின்னர் இலங்கை வானொலியில் மட்டுமல்ல இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியிலும் அறிவிப்பாளராகத் தனது ஆற்றலை வெளிப்படுத்திப் பிரபல்யமானார். நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார்.

ஆசிரியராகவும் – அதிபராகவும் கல்வித் திணைக்களத்தில் பணிபுரிந்த இவரது தந்தையார் செல்வநாயகம் அவர்கள் தனது மனைவி அருளம்மாவின் பெயரைத் தனது பெயருடன் இணைத்ததாக ‘அருள்செல்வநாயகம்’ எனும் பெயரில் ஆக்க இலக்கியக்களைப் படைத்து இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் புகழ்பரவிய எழுத்தாளராகத் திகழ்ந்தவராவார்.

சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்களைத் தேடித் தொகுத்து

‘விபுலாநந்த அடிகள்’ (1954) – ‘விபுலாநந்த அமுதம்’ (1956)

‘விபுலாநந்தத் தேன்’ (1956) – ‘விபுலாநந்தக் கவிதைகள்’ (1958)

‘விபுலாநந்த வெள்ளம்’ (1961) – ‘விபுலாநந்தச் செல்வம்’ (1963)

‘விபுலாநந்த ஆராய்வு’ (1963) – ‘விபுலாநந்தக் கவிமலர்’ (1965)

‘விபுலாநந்த இன்பம்’ (1973) – ‘விபுலாநந்தச் சொல்வளம்’

ஆகிய பத்து நூல்களை இவரது தந்தையார் ஆக்கி அளித்தார். 06.06.1926 இல் பிறந்த இவரது தந்தையார் 02.09.1973 இல் இயற்கை எய்தினார்.

பின்னர் இந்த நூல்களையெல்லாம் ஒருசேரத்தொகுத்து ‘விபுலாநந்த இலக்கியம்’ எனும் தலைப்பில் 2008 இல் பெருநூலூக வெளிவந்தது. இப்பெருநூலை அமரத்துவமடைந்த தனது தந்தையின் பெயரில் பதிப்பித்து வெளியிடுவதிலும் அதன் வெளியீட்டு விழாவினை மட்டக்களப்பு மண்ணிலே நிகழ்த்துவதிலும் ஜயந்திமாலா அவர்களின் ஊக்கமும் உழைப்பும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பெற வேண்டியதொன்றாகும்.

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரிக் கலையரங்கில் 14.02.2010 அன்று நடைபெற்ற ‘விபுலாநந்த இலக்கியம்’ வெளியீட்டு நிகழ்வில் நூல் ஆய்வுரையை நான் ஆற்றியிருந்தேன் என்ற நினைவும் இத்தருணத்தில் எழுந்து நெஞ்சை நெருடுகிறது. சுவிஸ்சிலிருந்து தனியே வந்து மட்டக்களப்பு மண்ணில் இந்நிகழ்வை அவர் நடத்தி வைத்தார்.

இவரது தந்தையைப் போலவே இவருக்கு வாய்த்த கணவர் குணசீலன் அவர்களும் மட்டக்களப்புத் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமையாவார்.

எழுத்தாற்றலும் முற்போக்குச் சிந்தனைகளும் கொண்ட இவரது கணவர் 1989 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பெற்ற விகிதாசாரத்தேர்தல் முறைமையின் கீழ் நடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் ‘ஈரோஸ்’ சார்பிலான ‘சுயேச்சைக்குழு’ப் பட்டியலில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானவர். அதற்குமுன் ஆசிரியப்பணியில் அமர்ந்து பல பட்டதாரிகளை உருவாக்கியவர்.

அழகு குணசீலன் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாச் செய்துவிட்டுக் குடும்பத்துடன் 1990களின் பின்னர் சுவிஸ் நாட்டிற்குப் புலம்பெயர்ந்து அங்கு தனது வாழ்வியலுக்குத் தளம் அமைத்துக் கொண்டார். தனது மாமனாரைப்போலவே எழுத்துத்துறையிலும் பிரபல்யம் பெற்றுள்ளார். எனது அன்புகெழுமிய இலக்கிய மற்றும் அரசியல் நண்பரும்கூட உலகறிந்த எழுத்தாளராகவும் அரசியல் ஆய்வாளராகவும் விளங்குகிறார்.

சுமார் முப்பத்தைந்து வருடங்கள் தனது கணவருடனும் இரு பிள்ளைகளுடனும் சுவிற்சர்லாந்து நாட்டில் தாம்பத்திய வாழ்வைச் சுகித்த ஜயந்திமாலா குணசீலன் அவர்கள் தனது கணவருடன் இணைந்து சுவிஸ் மொழியைக்கற்று மொழிபெயர்ப்பாளராகக் கடமை புரிந்தார்.

லண்டன் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (TBC) ஊடாக, ஜயந்திமாலா குணசீலன் அவர்கள் வழங்கிய ‘பூகோளம்’ நிகழ்ச்சி, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், ஜனநாயகத்திற்கான குரலை உரத்துப் பதிவுசெய்வதிலும் முக்கிய பங்காற்றியது.

நண்பர் அழகுகுணசீலன் தன் வாழ்க்கைத் துணையை இழந்து தவிக்கும் இத்தருணத்தில் மட்டக்களப்புத் தமிழகம் தன்மீது வாஞ்சை கொண்ட பெண் ஆளுமையொன்றினை இழந்து துக்கித்து நிற்கிறது.

மரணம் இயற்கையென மனதைத் தேற்றிக்கொண்டு அமரர். திருமதி. ஜயந்திமாலா குணசீலன் அவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காய்ப் பிரார்த்தித்து அஞ்சலிப்போமாக.

  • செங்கதிரோன் த. கோபாகிருஸ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *