2070ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்களின் விகிதம் 76 சதவீதமாகக் குறையும்; முஸ்லிம்களின் விகிதம் 20 சதவீதமாக அதிகரிக்கும்!
இந்தியா இன்னும் பல தசாப்தங்களுக்கு இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாகவே தொடரும். இருப்பினும், நாட்டின் மத ரீதியான மக்கள் தொகை அமைப்பில் படிப்படியான மாற்றங்கள் ஏற்படும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உலகின் மத ரீதியான மக்கள் தொகை 2070ஆம் ஆண்டு வரை எவ்வாறு மாறும் என்பதை ஆராய்ந்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த Pew Research Center நிறுவனம், இந்தியாவில் இந்துக்களின் விகிதம் 2020ஆம் ஆண்டில் இருந்த 79 சதவீதத்திலிருந்து 2070ஆம் ஆண்டில் 76 சதவீதமாகக் குறையும் என்று மதிப்பிட்டுள்ளது.
அதேவேளை, முஸ்லிம்களின் விகிதம் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள் வயது அமைப்பிலும் குழந்தைப் பிறப்பு விகிதத்திலும் காணப்படும் வேறுபாடுகளாகும்.
இந்திய முஸ்லிம்களின் சராசரி வயது இந்துக்களைவிடக் குறைவாக உள்ளது. அத்துடன், முஸ்லிம் பெண்கள் சராசரியாக இந்துப் பெண்களைவிட அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
தெற்காசியா முழுவதும் நிகழவிருக்கும் பரந்த மக்கள் தொகை மாற்றங்களின் மையத்தில் இந்தியா இருப்பதாக Pew நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தோனேசியாவைப் பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்.
பங்களாதேஷிலும் முஸ்லிம் மக்கள் தொகை கணிசமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
201 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு:
உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ அனைவரையும் உள்ளடக்கும் வகையில், 201 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2020 முதல் 2070 வரையான 50 ஆண்டுகளில் ஏழு மதப் பிரிவுகளின் மக்கள் தொகை எவ்வாறு மாறும் என்பதை இந்த ஆய்வு ஆராய்கிறது.
தற்போது காணப்படும் மக்கள் தொகைப் போக்குகள் எதிர்காலத்திலும் தொடரும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் மற்றும் ஆய்வுத் தரவுகளைப் பயன்படுத்தி, 2020ஆம் ஆண்டில் ஒவ்வொரு மதக் குழுவின் மக்கள் தொகை அளவும் வயது அமைப்பும் கணக்கிடப்பட்டுள்ளன.
அத்துடன், குழந்தைப் பிறப்பு விகிதங்களில் உள்ள வேறுபாடுகள் மற்றும் மதமாற்றங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் முடிவுகள், உலகளவில் மாறிவரும் மத ரீதியான மக்கள் தொகை அமைப்பில் இந்தியா முக்கிய இடத்தை வகிப்பதைக் காட்டுகின்றன.
2070ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 33 கோடியே 40 இலட்சம் முஸ்லிம்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் உலகிலேயே இரண்டாவது அதிக முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா மாறும்.
அதேவேளை, பாகிஸ்தானில் முஸ்லிம் மக்கள் தொகை 46 கோடியே 10 இலட்சமாக அதிகரித்து, உலகில் முதலிடத்தைப் பிடிக்கும்.
இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்!
இந்தியாவின் மத ரீதியான மக்கள் தொகை மாற்றம் குறித்து சில தரப்புகள் முன்வைக்கும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களுக்கு இந்த ஆய்வு ஆதரவளிக்கவில்லை.
தற்போதைய மக்கள் தொகைப் போக்குகள் தொடர்ந்தால், 2020 முதல் 2070 வரையான காலப்பகுதியில் இந்தியாவின் இந்து மக்கள் தொகை மேலும் 17 கோடியே 60 இலட்சத்தால் அதிகரிக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
இதன்படி, 2070ஆம் ஆண்டிலும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானவர்கள் இந்துக்களாகவே இருப்பார்கள்.
இந்தியாவில் ஒட்டுமொத்த குழந்தைப் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளபோதிலும், முஸ்லிம் பெண்கள் சராசரியாக இந்துப் பெண்களைவிட அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் மக்கள் தொகையின் வயது அமைப்பால் உருவாகும் வளர்ச்சி வேகம் என்று Pew நிறுவனம் விளக்குகிறது.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வயது வேறுபாடு:
2020ஆம் ஆண்டில் இந்திய முஸ்லிம்களின் இடைநிலை வயது 24 ஆக இருந்தது.
அதேவேளை, இந்துக்களின் இடைநிலை வயது 29 ஆக இருந்தது.
அதாவது, இந்திய முஸ்லிம் மக்கள் தொகை ஒப்பீட்டளவில் இளமையானதாக உள்ளது.
2025 முதல் 2030 வரையான காலப்பகுதியில், இந்திய முஸ்லிம் பெண்கள் சராசரியாக 2.3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்று Pew மதிப்பிட்டுள்ளது.
இந்துப் பெண்களுக்கான இந்த எண்ணிக்கை 1.8 ஆக இருக்கும்.
Pew Research Center நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டெபனி கிரேமர் பிபிசியிடம் கூறுகையில்,
“இந்தியாவில் மத ரீதியான மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்கள், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நீண்டகாலமாகக் காணப்படும் மக்கள் தொகை வேறுபாடுகளாலேயே பெரும்பாலும் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
“முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் இளமையான மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர். அவர்களுடைய குழந்தைப் பிறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது” என்றார்.
குழந்தைப் பிறப்பு விகித வேறுபாடு குறைந்து வருகிறது:
இருப்பினும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான குழந்தைப் பிறப்பு விகித வேறுபாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக ஸ்டெபனி கிரேமர் சுட்டிக்காட்டுகிறார்.
1992ஆம் ஆண்டில் இந்த இரு சமூகங்களுக்கும் இடையிலான வேறுபாடு ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தைக்கும் அதிகமாக இருந்தது.
ஆனால் அண்மைய ஆண்டுகளில் இந்த வேறுபாடு சுமார் அரைக் குழந்தையாகக் குறைந்துள்ளது.
எதிர்காலத்தில் இந்த இடைவெளி மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்துக்களின் குழந்தைப் பிறப்பு விகிதம் ஏற்கெனவே மக்கள் தொகையை நிலையாகப் பேணுவதற்குத் தேவையான மாற்றீட்டு மட்டத்திற்குக் கீழே சென்றுவிட்டது.
“ஆனால் முஸ்லிம்களின் குழந்தைப் பிறப்பு விகிதம் இன்னும் இரண்டு தசாப்தங்களுக்கு அந்த மட்டத்திற்கு மேலேயே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மாற்றீட்டு மட்டம் என்பது ஒரு மக்கள் தொகை நீண்டகாலத்தில் நிலையாகத் தொடர்வதற்குத் தேவையான பிறப்பு விகிதத்தைக் குறிக்கிறது.
இந்துக்களை முஸ்லிம்கள் மிஞ்சுவார்களா?
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மக்கள் தொகையியல் நிபுணர் கே.எஸ். ஜேம்ஸ், இந்தக் கணிப்புகள் ஆச்சரியமளிப்பதாக இல்லை என்று கூறுகிறார்.
“இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான குழந்தைப் பிறப்பு விகித வேறுபாடு ஏற்கெனவே நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
“இதனால் அடுத்த சில தசாப்தங்களில் முஸ்லிம் மக்கள் தொகை இந்து மக்கள் தொகையைவிட வேகமாக அதிகரிக்கக்கூடும்.
“ஆனால் அனைத்து மத சமூகங்களிலும் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இந்த வேறுபாடு எதிர்காலத்தில் மேலும் குறையும்” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“இறுதியில் இரு சமூகங்களின் குழந்தைப் பிறப்பு விகிதங்களும் ஒன்றுக்கொன்று நெருங்கிவிடும்” என்றும் அவர் கூறினார்.
இந்தக் கணிப்புகள் இந்தியாவின் மக்கள் தொகைப் போக்கில் எதிர்பாராத அல்லது மிகப்பெரிய மாற்றம் ஒன்றைச் சுட்டிக்காட்டவில்லை என்பதே அவரது கருத்தாகும்.
இந்தியாவில் ஒருநாள் முஸ்லிம்கள் இந்துக்களின் எண்ணிக்கையை மிஞ்சிவிடுவார்கள் என்ற கருத்தை, சில இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் அடிக்கடி முன்வைத்து வருகின்றன.
ஆனால் மக்கள் தொகையியல் நிபுணர்கள் இந்தக் கருத்தை நிராகரிக்கின்றனர்.
இந்தியாவின் மக்கள் தொகை மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு குறிப்பிடத்தக்க மதமாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், முஸ்லிம்கள் இந்துக்களை எண்ணிக்கையில் மிஞ்சிவிடுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் கணிப்புகளுக்கும் இந்த ஆய்வில் ஆதாரம் இல்லை.
தெற்காசியாவில் முஸ்லிம் மக்கள் தொகை பெருமளவில் அதிகரிக்கும்:
இந்த ஆய்வு தெற்காசியாவின் எதிர்கால மக்கள் தொகை மாற்றங்கள் குறித்தும் முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
2070ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் முஸ்லிம் மக்கள் தொகை இரு மடங்கிற்கும் அதிகமாகி 46 கோடியே 10 இலட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தோனேசியாவைப் பின்னுக்குத் தள்ளி, உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக பாகிஸ்தான் மாறும்.
இந்தியா 33 கோடியே 40 இலட்சம் முஸ்லிம்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்.
பங்களாதேஷின் முஸ்லிம் மக்கள் தொகை 21 கோடியே 80 இலட்சமாக அதிகரிக்கும்.
இதற்கிடையில், உலகில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளாக இந்தியாவும் நேபாளமும் தொடர்ந்து நீடிக்கும்.
2035ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாம் மாறுமா?
இந்தப் பிராந்திய மாற்றங்களுக்குப் பின்னால் உலகளாவிய மக்கள் தொகை மாற்றங்களும் உள்ளன.
Pew நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2035ஆம் ஆண்டளவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை முஸ்லிம்களின் எண்ணிக்கை மிஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலகிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படும் மதமாக இஸ்லாம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டில் உலக முஸ்லிம் மக்கள் தொகை 202 கோடியாக இருந்தது.
2070ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 364 கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, உலக கிறிஸ்தவ மக்கள் தொகை 300 கோடிக்கும் சற்றுக் குறைவாக இருக்கும்.
தற்போது உலக மக்கள் தொகையில் 26 சதவீதமாக உள்ள முஸ்லிம்களின் விகிதம், 2070ஆம் ஆண்டில் 36 சதவீதமாக அதிகரிக்கும்.
கிறிஸ்தவத்தின் புதிய மையமாக ஆபிரிக்கா!
உலக மத ரீதியான மக்கள் தொகையில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் தெற்காசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆபிரிக்காவில் நிகழக்கூடும்.
கிறிஸ்தவ மதத்தின் மக்கள் தொகை மையம் ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்கக் கண்டங்களிலிருந்தும் படிப்படியாக சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே உள்ள ஆபிரிக்க நாடுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
2020ஆம் ஆண்டில் உலக கிறிஸ்தவர்களில் 31 சதவீதமானவர்கள் இந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்தனர்.
தற்போதைய மக்கள் தொகைப் போக்குகள் தொடர்ந்தால், 2070ஆம் ஆண்டில் உலக கிறிஸ்தவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் இந்த ஆபிரிக்கப் பிராந்தியத்தில் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், உலகிலேயே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் நாடாக அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி கொங்கோ ஜனநாயகக் குடியரசு முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் Pew கணித்துள்ளது.
ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களின் விகிதம் குறையும்:
கிறிஸ்தவ மக்கள் தொகையின் உலகளாவிய பங்கில் மிகப்பெரிய சரிவு ஐரோப்பாவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டில் உலக கிறிஸ்தவர்களில் 22 சதவீதமானவர்கள் ஐரோப்பாவில் வாழ்ந்தனர்.
ஆனால் 2070ஆம் ஆண்டில் இந்த விகிதம் 11 சதவீதமாகக் குறையும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்காவிலும் கிறிஸ்தவத்தின் பெரும்பான்மை நிலை மாறக்கூடும்.
2065ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் குறைவாகிவிடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 2070ஆம் ஆண்டிலும் அமெரிக்காவின் மிகப்பெரிய தனிப்பட்ட மதக் குழுவாக கிறிஸ்தவர்கள் தொடர்வார்கள்.
மத நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாடுகள்:
உலகின் மத ரீதியான மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கான மற்றொரு முக்கிய காரணம், எந்த மதத்துடனும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாத மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகும்.
பிரித்தானியாவிலும் பிரான்ஸிலும் 2070ஆம் ஆண்டளவில் மதச் சார்பற்றவர்கள் பெரும்பான்மையாக மாறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவிலும் இதேபோன்ற மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் உலகளவில் மதச் சார்பற்ற மக்களின் விகிதம் அதிகரிப்பதற்குப் பதிலாகக் குறையும் என்று Pew தெரிவிக்கிறது.
2020ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 24 சதவீதமாக இருந்த இவர்களின் விகிதம், 2070ஆம் ஆண்டில் 17 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சீனாவின் மக்கள் தொகை குறைவதாகும்.
உலகில் எந்த மதத்துடனும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாத மக்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் சீனாவில் வாழ்கின்றனர்.
எதிர்காலத்தில் சீனாவின் மொத்த மக்கள் தொகை குறைவதால், ஏனைய நாடுகளில் மதச் சார்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், உலகளவில் அவர்களின் மொத்த விகிதம் குறையும் என்று ஆய்வு விளக்குகிறது.
அமெரிக்காவில் இந்துக்கள் அதிகரிப்பார்கள்!
2070ஆம் ஆண்டில் மேலும் சில எதிர்பாராத மாற்றங்களும் நிகழக்கூடும்.
உலகிலேயே ஐந்தாவது அதிக இந்து மக்கள் தொகையைக் கொண்ட நாடாக அமெரிக்கா மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாகக் குடியேற்றம் அமையும்.
அதேபோன்று, அவுஸ்திரேலியாவில் எந்த மதத்துடனும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாதவர்கள், கிறிஸ்தவர்களை மிஞ்சி நாட்டின் மிகப்பெரிய குழுவாக மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பௌத்த மக்கள் தொகையில் பெரும் சரிவு!
இதற்கிடையில், உலக பௌத்த மக்கள் தொகை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளவுள்ளது.
குறிப்பாக சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் பௌத்த மக்கள் தொகை பாதிக்கும் அதிகமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடுகளில் மக்கள் தொகை முதுமையடைந்து வருவதும், மொத்த மக்கள் தொகை குறைந்து வருவதுமே இதற்கான முக்கிய காரணங்களாகும்.
லாவோஸ் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் தங்களது பௌத்தப் பெரும்பான்மை நிலையை இழக்கக்கூடும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தக் கணிப்புகள் நிச்சயமாக நிகழுமா?
இந்த ஆய்வின் முடிவுகளைப் புரிந்துகொள்ளும்போது சில முக்கியமான வரம்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவை மக்கள் தொகையியல் அடிப்படையிலான எதிர்காலக் கணிப்புகளே தவிர, நிச்சயமாக நிகழப்போகும் சம்பவங்கள் குறித்த தீர்க்கதரிசனங்கள் அல்ல.
அண்மைக்காலத்தில் காணப்பட்ட குழந்தைப் பிறப்பு விகிதங்கள், குடியேற்றப் போக்குகள் மற்றும் மதமாற்றங்கள் எதிர்காலத்திலும் தொடரும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே Pew இந்தக் கணிப்புகளை மேற்கொண்டுள்ளது.
அறிக்கையே இதனை ஒப்புக்கொள்கிறது.
“போர்கள், இயற்கைப் பேரழிவுகள், தொற்றுநோய்கள், பொருளாதார மற்றும் சமூகச் சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மதக் குழுக்களின் மக்கள் தொகையைப் பாதிக்கக்கூடும்.
“ஆனால் இத்தகைய நிகழ்வுகள் இந்த ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்படவில்லை” என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மற்றொரு முக்கியமான வரம்பும் உள்ளது.
இந்தியாவின் அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதமானதால், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே 2020ஆம் ஆண்டிற்கான மத ரீதியான மக்கள் தொகை அமைப்பு மதிப்பிடப்பட்டுள்ளது.
2070ஆம் ஆண்டில் உலகின் மத அமைப்பு எவ்வாறு இருக்கும்?
இந்த வரம்புகள் இருந்தபோதிலும், உலகின் மத ரீதியான மக்கள் தொகை மாற்றங்கள் எந்தத் திசையில் நகர்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.
உலக மதங்களின் எதிர்காலத்தில் தெற்காசியா தொடர்ந்து மிக முக்கியமான இடத்தை வகிக்கும்.
இதற்கு இந்தியாவின் மிகப்பெரிய இந்து மக்கள் தொகை மட்டுமன்றி, தெற்காசியாவில் வேகமாக அதிகரித்துவரும் முஸ்லிம் மக்கள் தொகையும் காரணமாக அமையும்.
கிறிஸ்தவ மதத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் ஆபிரிக்காவின் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதேவேளை, ஐரோப்பாவிலும் கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் மதச் சார்பற்றவர்களின் விகிதம் அதிகரிக்கும்.
2070ஆம் ஆண்டில் உலகின் மத ரீதியான மக்கள் தொகை அமைப்பு இன்றைய நிலையிலிருந்து கணிசமாக மாறியிருக்கக்கூடும்.
இந்த மாற்றங்களை மதமாற்றங்களைவிட, குழந்தைப் பிறப்புகள், இறப்புகள் மற்றும் குடியேற்றங்களில் காணப்படும் வேறுபாடுகளே பெருமளவில் தீர்மானிக்கும் என்பதே இந்த ஆய்வின் முக்கியமான முடிவாகும்.
மூலம்: பிபிசி செய்திகள் / Pew Research Center
