ஞானசார விவகாரமும் அரசியல் ஆபத்துக்களும்!

ஞானசார விவகாரமும் அரசியல் ஆபத்துக்களும்!


  • வீரகத்தி தனபாலசிங்கம் 

சகல சமூகங்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களது கொள்கை என்றும் மீண்டும் இனவாதமும் மதத்தீவிரவாதமும் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஏனைய தலைவர்களும் இடையறாது செய்து வந்திருக்கும் பிரகடனம்  தற்போது பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சம்பந்தப்பட்ட சர்ச்சையின் வடிவில் உண்மையான சோதனையைச் சந்தித்திருக்கிறது.

தென்னிலங்கை அரசியலில் ஞானசார விவகாரம் என்பது வெறுமனே ஒரு தனிப்பட்ட  பௌத்த பிக்கு சார்ந்த சட்ட நடவடிக்கை என்றில்லாமல், இலங்கையின் ஜனநாயக எதிர்காலத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான சோதனைக் களமாக மாறியிருக்கிறது.

இதுகாலவரையில் நடைமுறையில் இருந்து வந்திருக்கும் இலங்கைச்  சிறைச்சாலை திணைக்களத்தின் விதிமுறைகளின் பிரகாரம் ஞானசாரவின் காவியுடை களையப்பட்டு, சாதாரண உடையில் அவர் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட சம்பவத்தையடுத்தே  சர்ச்சை மூண்டது.

ஒரு பிக்குவின் காவி உடையை அல்லது  பிக்கு நிலையை நீக்கும் அதிகாரம் சுயவிருப்பத்தின் பேரில் அந்த பிக்குவிற்கு அல்லது பௌத்த ஒழுக்க விதிகளின் பிரகாரம் பௌத்த உயர்பீடங்களின் தலைவர்களான  மகாநாயக்க தேரர்கள் அடங்கிய சங்க சபைக்கு மாத்திரமே இருக்கிறது என்று  கூறப்படுகிறது. 

சிறைச்சாலை அதிகாரிகள் ஞானசாரவின் காவியுடையை அகற்றியதன் மூலம் பௌத்த சாசனத்தை  அவமதித்துவிட்டனர் என்று குற்றஞ்சாட்டிய மகாசங்கத்தினர் அவர் சிறையிலிருந்து  வெளியில்  நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகின்றபோது காவியுடையை  அணிந்திருப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

ஞானசார நடத்தப்பட்ட முறையை ஆட்சேபித்து நான்கு பௌத்த உயர் பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள்  கூட்டாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து மூன்று நிக்காயாக்களைச் சேர்ந்த மூத்த மதகுருமாரை, பௌத்த சாசன மற்றும் நீதியமைச்சர்கள்  சகிதம் ஜனாதிபதி திசநாயக்க தனது செயலகத்தில் அக்டோபர் 8 ஆம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை  நடத்தினர். 

தனிநபர் ஒருவருக்காகவோ அல்லது அமைப்பு ஒன்றின் அழுத்தத்துக்காகவோ சட்டத்துக்குப் புறம்பாக உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்றும் தனது தனிப்பட்ட விருப்பங்கள் நாட்டின் சட்டமாக முடியாது என்றும் அந்த சந்திப்பில் திசநாயக்க உறுதியாகக்  கூறினார். 

 அனைவருக்கும் சமமானதாக இருக்கும் சட்டத்தை மீறும் அதிகாரம் நிறைவேற்று அதிகார  ஜனாதிபதிக்கும் கூட  இல்லை என்று மகாசங்கத் தூதுக்குழுவுக்கு முன்னால் நின்று  திசநாயக்க செய்த பிரகடனம் பரவலாக பாராட்டப்பட்ட  அதேவேளை, பிக்குகள் தொடர்பில் நடைமுறையில் உள்ள சிறைச்சாலைச் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் மறுபரிசீலனை செய்வதற்கு இரு வாரங்களில் குழு ஒன்று நியமிக்கப்படும் என்று செய்த அறிவிப்பு அவர் மகாசங்கத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிட்டார் என்ற விமர்சனத்தையும் மறுபுறத்தில் கிளப்பியது.

இந்த இரண்டு பார்வைகளையும் காலங்காலமாக இலங்கையின் அரச தலைவர்கள் மகாசங்கத்தினரின் விருப்பு வெறுப்புகளுக்கு  அடிபணிந்து செயற்பட்ட வரலாற்றின் பின்புலத்தில் வைத்து நடுநிலையோடு ஆராய வேண்டியது அவசியமாகும்.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை மீறித் தன்னிச்சையாக ஒரு உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்திருந்தார் என்றால் அதை “அப்பட்டமான அடிபணிதல்” என்று கூறமுடியும். அதைத் தவிர்த்து காலனித்துவ காலப் பழமைவாய்ந்த  சிறைச்சாலைக் கட்டளைச் சட்டத்தை காலத்தின் தேவைக்கு ஏற்பவும் பெளத்த சாசன மரபுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் சட்ட ரீதியாகத் திருத்துவதற்கு முற்படுவதை அடிபணிதலாகப் பார்ப்பது சரியான அணுகுமுறையல்ல .  

மகாசங்கத் தூதுகுழுவிடம் ஜனாதிபதி திசநாயக்க கூறிய வார்த்தைகளை அரசியல் அல்லது மதச் செல்வாக்கு மூலமாக சட்டத்தை வளைக்கும் நீண்டகாலக்  கலாசாரத்தை  மாற்றியமைக்கும் நோக்கிலான  துணிச்சலான ஒரு முதல்  நகர்வாக ஏன் பார்க்கக்கூடாது? புதிய திருத்தங்களும்  ஒழுங்கு விதிகளும்  எந்தவொரு குறிப்பிட்ட பிக்குவையும் இலக்காகக் கொண்டதாகவோ அல்லது சலுகை அளிக்கும் வகையிலானதாகவோ  அமையக்கூடாது என்றும் இது ஒட்டுமொத்த சிறைச்சாலை  முறைமைக்கும் பொதுவானதாக உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியது தனிநபர் அரசியல் இலாபங்களுக்கான சலுகைகளை நிராகரிக்கும் ஒரு வரவேற்கத்தக்க நிலைப்பாடாகும். 

இரு வாரங்களில் குழுவொன்று அமைக்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில், சிறைச்சாலைகளை நிருவகிக்கும் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவொன்று அதன் இடைக்கால அறிக்கையை ஒரு வாரத்துக்குள்ளாகவே (ஒக்டோபர் 14) ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்தது. அதைத் தொடர்ந்து சிறைச்சாலைக்கு வெளியே பிக்குமார் கூட்டிச்செல்லப்படும்போது காவியுடையை அணிவதற்கான அவர்களின் உரிமை உட்பட சிறைக் கைதிகளான  பிக்குமார் நடத்தப்பட வேண்டிய முறை தொடர்பான  ஒழுங்கு விதிகளை மாற்றுவது குறித்து  அரசாங்கம் பரிசீலனை செய்கிறது என்று நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடமிருந்து அறிவிப்பு வந்தது.

இது ஜனாதிபதி திசநாயக்கவும் அவரது அரசாங்கமும் இந்த விவகாரத்தில் எந்தளவுக்கு நெருக்குதலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. மகாசங்கத்தை பகைத்துக்கொள்ளும் வகையிலான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு அவரது தலைமையிலான மக்கள் விடுதலை ரமுன்னணிக்குள் (ஜே.வி.பி.) உள்ள  பிரிவுகளிடமிருந்து கூட நெருக்குதல் வந்திருக்கக்கூடிய சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் திசநாயக்க ‘சட்டத்தின் முன் சகலரும் சமம்’ என்ற கோட்பாடு குறித்து  அளித்த விளக்கம் மகாசங்கத்தினரை  ஆத்திரமடைய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

அரசியலமைப்பில் பெளத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிமுதன்மை அந்தஸ்தையும்  பௌத்த சாசனத்தை போற்றிப் பாதுகாப்பது இலங்கை அரசின் கடமை என்று கூறப்பட்டிருப்பதையும் தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் தாங்கள் சொல்வதையே அரசாங்கங்கள் செய்ய வேண்டும் என்றும் பிக்குமாரில் பெரும்பாலானவர்கள் விளங்கிக்கொண்டிருக்கிறார்களோ  என்று சந்தேகிக்க வேண்டிய அளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. தங்களது மதம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துடன் அடையாளப்படுத்தப்படக்கூடிய ஒன்று அல்ல என்பதை எத்தனை பிக்குமார் அறிந்து வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

சாந்தமே உருவான புத்தபிரானின் போதனைகளைப் பின்பற்றுவதுடன் மக்களுக்கும் போதிப்பதை கடமையாகக் கொண்ட பிக்குமார் வன்முறைக் கும்பல்களைச் சேர்ந்தவர்களைப் போன்று பொதுவெளியில் அட்டகாசமாக  நடந்து கொள்கிறார்கள். கடந்தவாரம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தின்போதும் அவர்களின் அத்தகைய நடத்தைகளைக் காணக் கூடியதாக இருந்தது.

 ஞானசாரவின் காவி உடையைக் களைந்து  சாதாரண உடையில் அவரை நீதிமன்றத்துக்கு கொண்டுவந்த சிறைச்சாலை அதிகாரிகளின் செயலுக்கு எதிராக தொடங்கிய போராட்டம் இறுதியில் அவரின் உடனடி  விடுதலையைக் கோரும் இயக்கமாக மாறியிருக்கிறது. ஒக்டோபர் 10 ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் இருந்து கொழும்பை நோக்கி பிக்குகளால் முன்னெடுக்கப்பட்ட “காவி உடைக்கான நீதி / சுதந்திரப் பாதயாத்திரை” ஆறாவது நாள் ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்தது. 

ஞானசார விவகாரத்தில் அரசாங்கத்தை அடிபணியவைக்க வேண்டும் என்பதே அந்த பிக்குமாரின் குறிக்கோளாக இருந்தது. ஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து பத்து நிமிடங்களில் பதில்  வரவேண்டும் என்று கூட சில பிக்குமார்  ஜனாதிபதியின் செயலாளருக்கு கால அவகாசம் வழங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அரசாங்கம் அவர்களின் கோரிக்கைக்கு விட்டுக் கொடுக்காமல் சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்க முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது. ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக மூன்று நாள் முற்றுகையின் இறுதியில் நீதிமன்றத் தடையுத்தரவையடுத்து பிக்குமாரும் அவர்களது ஆதரவாளர்களும் கூடாரங்களை அகற்றிக்கொண்டு  கடந்த வெள்ளியன்று கலைந்து செல்ல வேண்டியதாயிற்று. 

ஞானசாரவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு நீதிமன்றத்தினால் இரத்துச் செய்யப்பட்டதன் பின்னரே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பதால், இதில் சட்டரீதியான நடைமுறைகளே பின்பற்றப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கிறது. சட்டத்துக்கு புறம்பாக தன்னால் செயற்பட முடியாது என்று ஜனாதிபதி திசநாயக்க மீண்டும் கூறிய அதேவேளை, ஞானசார விவகாரத்தை நீதிமன்றமே கையாள முடியும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருக்கிறார். 

ஞானசாரவை விடுதலை செய்யும் தீர்மானத்தை ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ எடுக்கப்போவதில்லை என்று அமைச்சர் லால் காந்த கூறினார். அரசியல் அதிகாரம் அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமமான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எந்தவொரு தனிநபருக்கும் சலுகை வழங்குவதற்காக சட்டத்தைத் திருத்தவோ அல்லது வளைத்துக் கொடுக்கவோ அரசாங்கம் தயாரில்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.

அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்ட நிலையில், பிக்குமார் அடுத்து எத்தகைய நடவடிக்கைகளில் இறங்கப் போகிறார்களோ தெரியவில்லை. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் கூடாரங்களை அமைத்து நடத்தும் முற்றுகைப் போராட்டங்கள் எல்லாமே ‘அறகலய’ ஆகிவிடாது. போராட்டங்களுக்கான காரணங்களே அவற்றுக்கான மக்களின் ஆதரவைத் தீர்மானிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, தென்னிலங்கயைின் எதிரணி கட்சிகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அணிதிரட்டல்களுக்கு பிரதானமாக இனவாதத்தையும் மதவாதத்தையுமே நம்பியிருக்கின்றன என்பதையும் ஞானசார விவகாரம் அம்பலப்படுத்தியிருக்கிறது. 

மதத்தலைவர்கள் சிவில் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களா என்ற கேள்விக்கு உலகின் எந்தவொரு ஜனநாயக நடைமுறையிலும் “இல்லை” என்பதே பதிலாகும். ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற அடிப்படை அரசியலமைப்பு உரிமையானது சாமியாருக்கும் சாமானியனுக்கும் பொதுவானது.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஞானசார விவகாரத்தை குறுகிய அரசியல் இலாபங்களுக்கான ஆயுதமாக மாற்றுவதில் அக்கறை காட்டினார்கள். இலங்கை வரலாற்றில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவது அரசியல்வாதிகளின் பழகிப்போன உத்தியாகும். இனவாதத்தின் விளைச்சலையே  மூன்று தசாப்தகால கொடூரமான  உள்நாட்டுப் போராக நாடு அறுவடை செய்தது.

அதேபோன்றதொரு ஆபத்தான விளையாட்டைத் தான் தென்னிலங்கை எதிர்க்கட்சிகளும் தீவிரவாத அமைப்புக்களும் இன்று மீண்டும் கையில் எடுத்திருக்கின்றன. ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்து, கடந்தகால  அரசியல் புள்ளிகள் பலரின் முகத்திரை கிழியத் தொடக்கியுள்ள நிலையில், தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் மக்கள் செல்வாக்கை மீண்டும் பெறவும் அவர்கள் மத உணர்வுகளை ஒரு கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்.

தண்டனை பெற்ற ஒரு மதகுருவின் உடையை மையமாகக் கொண்டு “மதம் ஆபத்தில் இருக்கிறது” என்ற போலிப் பிம்பத்தை உருவாக்கி, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சிப்பது நாட்டின் அமைதிக்குப் பேரபாயத்தை விளைவிக்கும். இலங்கைச் சமூகம் கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களை மறந்துவிடக் கூடாது. மதத்தினதும் தேசியவாதத்தினதும் பெயரால் வீதிகளில் இறங்கிப் போராட அழைக்கும் அரசியல்வாதிகளின் பின்னணியில் உள்ள சுயநல அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நீதியை நிலைநாட்டுவதும் சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்துவதும் நாகரிக சமூகமொன்றின் அடையாளமாகும். குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மீண்டும் இனவாத, மதவாதத் தீயை மூட்டத்துடிக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் மக்கள் நிதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்பட வேண்டும். உணர்ச்சிவசப்பட்ட விமர்சனங்களைக் கடந்து, சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை  ஆதரிப்பதே நாட்டின் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்.

இலங்கை அரசியலில் மகாசங்கத்தின் செல்வாக்கின் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து கவலைப்படுபவர்கள் ஞானசார விவகாரம் தோற்றுவித்த சர்ச்சையில் ஜனாதிபதி திசநாயக்கவின் நிலைப்பாட்டுக்கே தங்களது ஒருமைப்பாட்டை  நிச்சயமாக வெளிக்காட்ட  வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாட்டையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கப் பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் ஜனாதிபதியும் அரசாங்கமும் சிறுபான்மைச் சமூகங்களைப் பாதிக்கின்ற எண்ணற்ற பிரச்சினைகளிலும் இதே போன்ற உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு அரசியல் துணிவாற்றலை வரவழைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதை அவர்கள்  செய்வார்களா? 

இறுதியாக, ஞானசார  புத்தரின் போதனைகளுக்கு எதிராக சமூகங்களுக்கு இடையில் மோதல்களைத் தூண்டிவிடும் வகையில் முன்னெடுத்த செயற்பாடுகளை  காவி உடைக்கும்  தங்களது மதத்துக்கும்  அவமதிப்பாக கருதத் தவறிய  மகாசங்கத்தினர், அவர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைக் கைதியாக இருக்கும் போது காவி உடையுடன்  இருக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவது அவர்கள்  மத்தியிலான ஒழுக்க நியாயப் பாரம்பரியம் பற்றி முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *