யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 574 பேரின் எலும்புக்கூடுகளில், ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர் குழந்தைகளாகவோ சிறுவர்களாகவோ இருந்ததாக, அகழ்வாய்வுக்குத் தலைமை தாங்கும் தொல்லியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட மூன்றாவது இடைக்கால அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த இடம், உலகின் பிற பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரகசியப் புதைகுழிகளைவிட, முறைப்படியான அடக்கச் சடங்குகளைக் கொண்ட புதைகுழிகளுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக அறிக்கை முடிவுசெய்கிறது. அதேவேளை, இறந்தவர்கள் எவ்வாறு அந்த இடத்தில் புதைக்கப்பட்டார்கள் என்பதைத் தங்களிடம் உள்ள ஆதாரங்களைக் கொண்டு நிறுவ முடியாது என்றும் அதன் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
“இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பொருள் சார்ந்த ஆதாரங்களின் தொகுப்பானது, தனித்து நோக்கும்போது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட புதைகுழிகளின் தன்மை மற்றும் இயல்புகுறித்து உறுதியான முடிவொன்றுக்கு வருவதற்குப் போதுமானதாக இல்லை” என்று தொல்லியல் அகழ்வாய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் ராஜ் சோமதேவவும், தொல்லியல் குழுவின் மற்றொரு உறுப்பினரான அனுஷா வன்னிநாயக்கவும் எழுதுகின்றனர்.
இந்த அறிக்கையில் எச்சங்களுக்கான விஞ்ஞானபூர்வமான காலக்கணிப்போ, எலும்புகளில் ஏற்பட்ட காயங்கள் அல்லது நோய்கள் குறித்த ஆய்வுகளோ இடம்பெறவில்லை. அந்த இடத்தில் புதைக்கப்பட்டவர்கள் எப்போது இறந்தார்கள், அவர்களின் மரணத்துக்குக் காரணம் என்ன, அவர்களைப் புதைத்தவர்கள் யார் என்பதையும் அறிக்கை நிறுவவில்லை.
இந்த அறிக்கை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்ட தடயவியல் விசாரணைக்காகத் தயாரிக்கப்பட்டது.
அதன் முன்னுரையின்படி, நீதவான் மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் சோமதேவ 2026 ஒக்டோபர் 10ஆம் திகதி கொழும்பில் அறிக்கையின் முன்னுரையில் கையொப்பமிட்டுள்ளார். ஒக்டோபர் 15ஆம் திகதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த டாக்டர் எஸ். பிரணவனுக்கு இவ்வாவணத்தை அனுப்பிய அவர், அதனுடன் இணைக்கப்பட்ட கடிதத்தில் இதனை “தடயவியல் தொல்லியல் அகழ்வாய்வு தொடர்பான மூன்றாவது இடைக்கால அறிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டவர்களில் 41 சதவீதத்தினர் குழந்தைகள் எனவும், 22 சதவீதத்தினர் சிசுக்கள் எனவும் அறிக்கை வகைப்படுத்துகிறது. இவ்விரு பிரிவுகளிலும் மொத்தமாக ஏறத்தாழ 360 பேர் உள்ளடங்குகின்றனர்.
வயது வந்தவர்கள் 30 சதவீதத்தினராகவும், இளம்பருவத்தினர் 5 சதவீதத்தினராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த நான்கு பிரிவுகளின் சதவீதங்களும் மொத்தமாக 98 சதவீதத்தையே எட்டுகின்றன. மீதமுள்ள இரண்டு சதவீதத்தினர் தொடர்பாக அறிக்கை விளக்கமளிக்கவில்லை.
எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது தடயவியல் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட வயது மதிப்பீடுகள் “ஆரம்பகட்டக் கள மதிப்பீடுகள்” என அறிக்கை குறிப்பிடுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் உரிய வயது வரம்பை அது வரையறுக்கவில்லை. அதேபோன்று, குழந்தைகளின் விகிதம் ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது என்பதற்கான விளக்கத்தையும் வழங்கவில்லை.
ஏறத்தாழ 80 நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்களையும் அவற்றுடன் தொடர்புடைய தொல்பொருட்களையும் இந்த அறிக்கை ஆராய்கிறது.
அறிக்கையின் முடிவுரை இரண்டு பந்திகளைக் கொண்டுள்ளது. அதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள வாசகம் பின்வருமாறு:
“புதைகுழிகளின் செறிவுக்குத் தொற்றுநோய் அல்லது வேறு வகையான இயற்கைப் பேரிடர் காரணமாக இருந்திருந்தால், அவற்றுடன் தொடர்புடைய பண்பாட்டுப் பொருட்கள் குறைந்த அளவில் காணப்படுவது எதிர்பாராத ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை.”
அத்தகைய சூழ்நிலைகளில், இறந்தவர்களுடன் காணிக்கைகளையோ உடைமைகளையோ வைப்பதைவிட, “இறந்தவர்களின் உடல்களை விரைவாக அகற்றுவதே முதன்மையான கவலையாக இருந்திருக்கலாம்” என்றும் ஆய்வாளர்கள் எழுதுகின்றனர்.
எனினும், இந்தக் கூற்று ஒரு நிபந்தனையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது. புதைகுழிகளில் ஏன் குறைந்த எண்ணிக்கையிலான பொருட்கள் காணப்படுகின்றன என்பதை விளக்குவதற்காகவே ஆசிரியர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர்.
தொடர்ந்து வரும் வாக்கியத்தில், தொல்பொருட்களின் பற்றாக்குறையை “எந்தவொரு புதைகுழிச் சூழலுக்கும் உறுதியான சான்றாகக் கருதக்கூடாது” என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறிக்கை எந்தவொரு குறிப்பிட்ட தொற்றுநோயையோ இயற்கைப் பேரிடரையோ பெயரிட்டு குறிப்பிடவில்லை. அத்தகைய சம்பவம் நிகழ்ந்ததற்கான பதிவுகளையும் முன்வைக்கவில்லை. எலும்புகளில் நோய்க்கான சான்றுகள் இருப்பதாகவும் கூறவில்லை. இறந்தவர்களில் எவரேனும் கொல்லப்பட்டார்களா என்பதையும் அது ஆராயவில்லை.
முறைப்படியான அடக்க முறைகள் என ஆய்வாளர்கள் கருதுவதற்கான காரணம்
உடல்கள் எவ்வாறு கிடத்தப்பட்டிருந்தன என்பதே, அந்த இடம் முறைப்படியான அடக்கச் சடங்குகளைக் கொண்ட புதைகுழிகளுடன் ஒத்திருக்கிறது என்ற ஆய்வாளர்களின் கருத்துக்கு முக்கிய அடிப்படையாக உள்ளது.
புதைக்கப்பட்ட பின்னர் கலைக்கப்படாமல் இருந்த பல எலும்புக்கூடுகளில், கைகள் வயிற்றுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தன அல்லது உடலின் இருபுறங்களிலும் நீட்டப்பட்டிருந்தன.
இதனை, தடயவியல் வழக்குகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரகசியமான அல்லது ஒழுங்கற்ற புதைகுழிகளில் பொதுவாகக் காணப்படும் சீரற்ற கை, கால் நிலைகளுடன் ஆய்வாளர்கள் ஒப்பிடுகின்றனர்.
இந்தக் கருத்தை விளக்குவதற்காக, 2016ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான கிரேக்கக் காலத்தைச் சேர்ந்த Phaleron Captives எனப்படும் கூட்டுப் புதைகுழியின் வரைபடத்தையும் அவர்கள் இணைத்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட மண்டையோடுகளில் 72 சதவீதம் வடமேற்குத் திசையை நோக்கியும், 11 சதவீதம் தென்கிழக்குத் திசையை நோக்கியும், 7 சதவீதம் தென்மேற்குத் திசையை நோக்கியும் இருந்தன. எஞ்சியவை வேறு திசைகளில் காணப்பட்டன.
இருப்பினும், செம்மணியில் மண்டையோடுகள் அமைந்திருந்த திசையில் ஒரே சீரான முறை காணப்படவில்லை என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த வேறுபாடுகள் புதைக்கும் சூழ்நிலைகளையோ, இறந்தவர்களைப் புதைத்தவர்களின் நடைமுறைகளையோ பிரதிபலிக்கக்கூடும் என அது கூறுகிறது.
அதேவேளை, இந்த வேறுபாடுகள் பண்பாட்டு அல்லது மதம் சார்ந்த அம்சங்கள் இல்லாதிருந்தன என்பதை நிரூபிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறது.
227 மற்றும் 429 என இலக்கமிடப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகள் அமர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்து மரபில், ஆன்மீகச் சிறப்பை அடைந்த ஒருவர் அமர்ந்த நிலையில் புதைக்கப்படுவதுடன் தொடர்புடைய சமாதி மற்றும் ஜீவசமாதி நடைமுறைகளை அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆனால், உடல் அமர்ந்த நிலையில் காணப்பட்டமை மட்டுமே அந்த மரபுடன் தொடர்புபடுத்துவதற்குப் போதுமான சான்றல்ல எனவும், இந்த இரண்டு புதைகுழிகளும் மேலதிக ஆய்வுக்குரிய விதிவிலக்கான நிகழ்வுகள் எனவும் அறிக்கை கருதுகிறது.
புதைகுழிகளில் காணப்பட்ட பொருட்கள்
அகழ்வாய்வின்போது 170 தொல்பொருள் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை ஆறு தற்காலிகப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மோதிரங்களும் வளையல்களும் பெரும்பாலும் வயது வந்தவர்களுடன் காணப்பட்டன. மணிகளில் பெரும்பாலானவை குழந்தைகளுடன் தொடர்புடையவையாக இருந்தன. பல எலும்புக்கூடுகளுடன் தாயத்துகளும் கண்டெடுக்கப்பட்டன.
சில நாணயங்களில் துணியின் தடயங்கள் காணப்பட்டன. இதன் அடிப்படையில், அந்த நாணயங்கள் துணியில் சுற்றப்பட்டு உடலுடன் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இலங்கையின் இந்து மற்றும் பௌத்த சமூகங்களில் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்புப் பெறும் நோக்கில் இவ்வாறு நாணயங்களை உடலுடன் இணைக்கும் நடைமுறை ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. “நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நபர்களுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய நிலையில்” இந்த நடைமுறை குறிப்பாகக் கவனிக்கத்தக்கது என்றும் தெரிவிக்கிறது.
எனினும், இந்த விளக்கம் தற்காலிகமானதே என அறிக்கை வலியுறுத்துகிறது.
சில எலும்புக்கூடுகளுடன் இரும்பு ஆணிகளும் ஒழுங்கற்ற வடிவிலான இரும்புத் துண்டுகளும் காணப்பட்டன. தனித்தனியாகப் பிரிந்து கிடந்த எலும்புகளைக் கொண்ட 51 குவியல்களில் சிலவற்றிலும் இரும்பு ஆணிகளும் இரும்புத் தகடுகளும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த உலோகப் பொருட்களில் சில சவப்பெட்டிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருத்திகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் அடையாளம் காண்கின்றனர். ஆணிகளின் அளவுகள் பெருமளவில் வேறுபடுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அறிக்கையின் தொல்பொருள் அட்டவணையில் 39 எலும்புக்கூடுகளுடன் தொடர்புடைய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் 19 எலும்புக்கூடுகளுடன் இரும்பு ஆணிகளும், 10 எலும்புக்கூடுகளுடன் நாணயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறைந்த எண்ணிக்கையில் மணிகள், தாயத்துகள், கண்ணாடிப் பொருட்கள், மோதிரங்கள், வளையல் ஒன்று, ஆடைகளுடன் தொடர்புடைய பொருட்கள், தலைமுடி அலங்காரப் பொருள் ஒன்று மற்றும் இறப்பர் துண்டுகள் ஆகியவையும் பட்டியலிடப்பட்டுள்ளன.
சில எலும்புக்கூடுகளுடன் தொல்பொருட்கள் காணப்பட்டமை, “அந்த உடல்களை நோக்கத்துடன் அடக்கம் செய்திருப்பதற்கான சாத்தியத்தைச் சுட்டிக்காட்டுகிறது” என்று படத்தின் விளக்கக் குறிப்பு தெரிவிக்கிறது.
எலும்புக்கூடு இலக்கம் 25
அறிக்கையில் விவரிக்கப்பட்ட புதைகுழிகளில், 25ஆம் இலக்க எலும்புக்கூட்டுடன் அதிக எண்ணிக்கையிலான பொருட்கள் காணப்பட்டன.
அவை:
ஒரு பிளாஸ்டிக் பை;
வெட்டி, தையலுக்குத் தயார்படுத்தப்பட்ட துணித் துண்டுகள்;
காலுறைகள்;
காலணிகள்;
தமிழில் கால் சங்கிலி என அழைக்கப்படும் உலோகக் கணுக்கால் சங்கிலி.
அருகில் காணப்பட்ட சிறிய ஆணிகளின் தொகுப்பு, சவப்பெட்டியின் எஞ்சிய பகுதியாக இருக்கலாம்.
இந்தக் கண்டுபிடிப்புகள், அந்த நபர் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும், அவருக்கு “ஒப்பீட்டளவில் முறைப்படியான அடக்கம்” வழங்கப்பட்டிருக்கலாம் என்பதையும் ஆதரிப்பதாக அறிக்கை கூறுகிறது.
அறிக்கையில் உள்ள புகைப்படங்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் பையொன்றும், கரடி உருவம் கொண்ட கார்ட்டூன் படத்தால் அலங்கரிக்கப்பட்ட செருப்பொன்றும் காணப்படுகின்றன.
அந்தப் பொருட்களுடன் புதைக்கப்பட்ட நபரின் வயதை அறிக்கை குறிப்பிடவில்லை.
ஒட்டுமொத்த அகழ்வாய்வுப் பகுதியிலும் இத்தகைய பொருட்கள் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.
ஆடைகளுடன் தொடர்புடைய பொருட்கள் “ஒப்பீட்டளவில் அரிதாகவே” காணப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய பொருட்கள் “மிகவும் அரிதானவை” என்றும் அது குறிப்பிடுகிறது. ஒரு எலும்புக்கூட்டுடன் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பொலித்தீன் மாலைகளே இதற்கான ஒரே பதிவு செய்யப்பட்ட உதாரணமாகும்.
இந்தப் பகுதியிலேயே 56 மற்றும் 48 ஆகிய இரண்டு எலும்புக்கூட்டு இலக்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவை எதற்காகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை.
வெவ்வேறு காலகட்டங்களில் இடம்பெற்ற அடக்கங்கள்
செம்மணி அகழ்வாய்வு தொடர்பான மூன்றாவது இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள வரைபடம். மீட்கப்பட்ட 574 பேரில் 41 சதவீதத்தினர் குழந்தைகளாகவும் 22 சதவீதத்தினர் சிசுக்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வயது மதிப்பீடுகள் தடயவியல் நிபுணர்களின் ஆரம்பகட்டக் கள மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.
பல இடங்களில், ஓர் எலும்புக்கூட்டின் மீது மற்றோர் எலும்புக்கூடு காணப்பட்டது. சில புதைகுழிகள் பின்னர் தோண்டப்பட்ட புதைகுழிகளால் வெட்டப்பட்டிருந்தன.
இந்த அடுக்குத் தொடர்புகளும், சவப்பெட்டியின் பகுதிகளாக இருக்கக்கூடிய பொருட்களும், இந்தப் புதைகுழிகள் ஒரே நேரத்தில் உருவானவை என்பதற்குப் பதிலாக, “வெவ்வேறு காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற அடக்க நிகழ்வுகளைக் குறிக்கக்கூடும்” என அறிக்கை தெரிவிக்கிறது.
தனித்தனியாகப் பிரிந்து கிடந்த எலும்புகளைக் கொண்ட சில குவியல்கள், பின்னர் புதைகுழிகளைத் தோண்டியவர்கள் ஏற்கெனவே புதைக்கப்பட்டிருந்த உடல்களைத் தொந்தரவு செய்ததால் உருவாகியிருக்கலாம் என்றும் அது கூறுகிறது.
ஒன்றின் மீது ஒன்று அமைந்துள்ள புதைகுழிகள், குறிப்பிட்ட புதைகுழிகளின் வரிசையை மட்டுமே காட்டுகின்றன. அவற்றுக்கிடையே எவ்வளவு கால இடைவெளி இருந்தது என்பதை அவை காட்டுவதில்லை என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எலும்புக்கூடுகள் தற்போதைய நிலப்பரப்பிலிருந்து 0.24 மீற்றர் முதல் 1.52 மீற்றர் வரையிலான ஆழத்தில் காணப்பட்டன.
பல குழந்தைகளின் புதைகுழிகள் மேற்பரப்புக்கு அருகில் இருந்தன. இருப்பினும், அகழ்வாய்வுக் குழியின் மேற்குப் பகுதியில் சில வயது வந்தவர்களினதும் இளம்பருவத்தினரினதும் எச்சங்கள் ஒரு மீற்றருக்கும் குறைவான ஆழத்தில் காணப்பட்டன.
அகழ்வாய்வுக் குழி முழுவதும் உடல்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதில் தெளிவான ஒழுங்குமுறை எதுவும் காணப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
மேலும், சில அடக்கங்கள் “ஒப்பீட்டளவில் திட்டமிட்டும் ஒழுங்காகவும் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்; மற்றவை விரைவாகவோ அல்லது அவசரத் தேவையின் அடிப்படையிலோ உடல்களைப் புதைத்த செயல்களின் விளைவாக இருக்கலாம்” என்றும் ஆய்வாளர்கள் எழுதுகின்றனர்.
புதைகுழியின் ஆழத்தை மட்டும் கொண்டு, இறந்தவர்களைப் புதைத்தவர்களின் நோக்கத்தைத் தீர்மானிக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குப்பைகள், விலங்குகளின் உடல்கள் மற்றும் மருத்துவமனைக் கழிவுகள்
அந்த நிலப்பகுதி மீண்டும் மீண்டும் தோண்டப்பட்டும் சீர்குலைக்கப்பட்டும் வந்துள்ளதாக அறிக்கை விவரிக்கிறது.
அங்கு குப்பைகள் கொட்டப்பட்டமை, கழிவுகளை அகற்றுவதற்காகக் குழிகள் தோண்டப்பட்டமை, விலங்குகளின் உடல்கள் புதைக்கப்பட்டமை ஆகியவை பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் “செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் கணிசமாக இடம்பெயர்ந்துள்ளன” என்று அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கையில் உள்ள புகைப்படங்களில் அந்த இடத்தில் புதைக்கப்பட்ட இறந்த பசு ஒன்றும், நிலப்பரப்பில் சிதறிக் கிடந்த மருத்துவமனைக் கழிவுகளும் காணப்படுகின்றன.
மண்ணின் மூன்று அடுக்குகளில் நடுப்பகுதியில், மனித எலும்புத் துண்டுகளுடன் பசு மற்றும் ஆட்டின் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.
இவை பின்னர் புதைக்கப்பட்ட கால்நடைகளின் எச்சங்களாக இருக்கலாம் என்றும், சில சந்தர்ப்பங்களில் “இந்த மண் அடுக்கின் நடுப்பகுதியில் ஆழமற்ற மனிதப் புதைகுழிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம்” என்றும் அறிக்கை விளக்குகிறது.
இந்த இடம் மனிதர்களைப் புதைப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை என்றும், “மனித எச்சங்கள் உட்பட பல்வேறு வகையான அகற்றப்பட வேண்டிய பொருட்களைக் கொட்டும் இடமாகவும்” பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கை முடிவுசெய்கிறது.
எனினும், இதன் பொருள் மனித உடல்கள் அங்கு கைவிடப்பட்டன என்பதா அல்லது பின்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளால் ஏற்கெனவே இருந்த புதைகுழிகள் இடம்பெயர்ந்தன என்பதா என்பதை அது தெளிவுபடுத்தவில்லை.
மனித எச்சங்களுக்கும் மருத்துவமனைக் கழிவுகளுக்கும் இடையே எந்தத் தொடர்பையும் அறிக்கை ஏற்படுத்தவில்லை.
அந்தப் பகுதியின் கடந்தகால வரலாறு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் முன்னுரையில், செம்மணி “சமீபகாலத்தில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சந்தேகத்துக்குரிய மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு, உள்ளூரில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அடையாளம் காணப்பட்டிருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயான வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டபோது தற்செயலாக எச்சங்கள் முதன்முதலில் வெளிப்பட்டன.
ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை மீண்டும் எதையும் குறிப்பிடவில்லை.
ஆடைகள்
எந்தவொரு எலும்புக்கூட்டுடனும் பாதுகாக்கப்பட்ட ஆடைகள் காணப்படவில்லை.
ஆனால், இதன் மூலம் இறந்தவர்கள் ஆடையின்றிப் புதைக்கப்பட்டனர் என்று முடிவெடுக்க முடியாது என ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். மண்ணின் வேதியியல் தன்மை, ஈரப்பதம், நுண்ணுயிர்களின் செயல்பாடு மற்றும் காலப்போக்கு ஆகியவற்றால் துணிகள் சிதைந்துவிடக்கூடும் என்று அவர்கள் விளக்குகின்றனர்.
பல எலும்புக்கூடுகளுடன் மீட்கப்பட்ட பிளாஸ்டிக் பொத்தான்கள், ஆடைத் துளைகளில் பொருத்தப்படும் உலோக வளையங்கள் (eyelets) மற்றும் பிளாஸ்டிக் ஆடைப் பொத்தான்கள் போன்றவை, இறந்தவர்களில் குறைந்தபட்சம் சிலர் ஆடைகளுடன் புதைக்கப்பட்டிருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
துணி எச்சங்கள் இல்லாத நிலையை “புதைக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட மாற்றம் தொடர்பான அவதானிப்பு” (taphonomic observation) என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், மண்ணின் தன்மைகள் இந்தச் சிதைவுக்கு எந்த அளவுக்குக் காரணமாக இருந்தன என்பதை மேலதிக ஆய்வுகளின்றித் தீர்மானிக்க முடியாது என்றும் ஒப்புக்கொள்கின்றனர்.
சில துணி எச்சங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.
25ஆம் இலக்க எலும்புக்கூட்டுடன் வெட்டப்பட்ட துணி மற்றும் காலுறைகள் கண்டெடுக்கப்பட்டன. சில நாணயங்களிலும் துணியின் தடயங்கள் காணப்பட்டன.
இந்தத் துணிகள் எத்தகைய பொருட்களால் தயாரிக்கப்பட்டவை என்பதையோ, மற்ற இடங்களில் ஆடைகள் சிதைந்தபோதும் இவை மட்டும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன என்பதையோ அறிக்கை விளக்கவில்லை.
நாணயங்களும் காலக்கணிப்பும்
செம்மணி மயான அகழ்வாய்வின்போது மீட்கப்பட்ட நாணயங்கள் தொடர்பான படங்கள் மூன்றாவது இடைக்கால தொல்லியல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள திகதிகளைக் கொண்டு, அவற்றுடன் புதைக்கப்பட்டவர்களின் அடக்கத் திகதியை நம்பகமாகத் தீர்மானிக்க முடியாது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் “காலக்கணிப்புக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரே பொருள் நாணயங்களே” என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
எலும்புக்கூடுகளுடன் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் பெரும்பாலானவை அரிப்படைந்திருந்ததால் அவற்றிலுள்ள எழுத்துகளையும் திகதிகளையும் வாசிக்க முடியவில்லை.
பாதுகாப்புப் பணிகளுக்குப் பின்னர், 367ஆம் இலக்க எலும்புக்கூட்டுடன் கண்டெடுக்கப்பட்ட ஒரு நாணயத்தில் 1870 என்ற திகதி அடையாளம் காணப்பட்டது.
எனினும், நாணயம் தயாரிக்கப்பட்ட திகதி, அந்த நபர் புதைக்கப்பட்ட திகதியை நிறுவாது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு நாணயம் பல ஆண்டுகள் புழக்கத்தில் இருக்கலாம் அல்லது நீண்டகாலமாக ஒருவரிடம் பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்பதே இதற்கான காரணமாகும்.
இறந்தவர்களுடன் வைக்கப்பட்ட நாணயங்கள் சடங்கு சார்ந்த நோக்கத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்றும், அவை புதைகுழிகளின் காலக்கணிப்புக்கு அதிகம் உதவுவதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சாம்பல் அடுக்கில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள்:
அகழ்வாய்வுக் குழி கிழக்கு மற்றும் தென்கிழக்குத் திசைகளில் விரிவாக்கப்பட்டபோது, மயானத்தின் தகன மேடையிலிருந்து சுமார் ஐந்து முதல் ஆறு மீற்றர் தொலைவில் அமைந்திருந்த தடிப்பான சாம்பல் அடுக்கிலிருந்து மற்றொரு தொகுதி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
பழைய தகனப் பகுதி ஒன்று சுத்தப்படுத்தப்பட்டு சமப்படுத்தப்பட்ட பின்னர், தகன மேடையின் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அந்தச் சாம்பல் அப்பகுதியில் எஞ்சியிருந்த பொருளாக இருக்கலாம் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த நாணயங்கள் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் காணப்பட்டன. அவற்றில் பின்வரும் ஆண்டுகள் பொறிக்கப்பட்டிருந்தன:
1920, 1944, 1963, 1975, 1978, 1982, 1991 மற்றும் 1994.
இந்தத் திகதிகளின் பரவல், அந்தப் பொருட்கள் நீண்டகாலமாக அங்கு படிந்திருக்கலாம் என்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த நாணயங்களைக் கொண்டு சாம்பல் அடுக்கு உருவான திகதியையோ, சுவரின் கட்டுமானத் திகதியையோ தீர்மானிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
1920ஆம் ஆண்டு நாணயம் 172ஆம் இலக்க எலும்புக்கூட்டுடன் தொடர்புபடுத்திப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், சாம்பல் அடுக்கிலிருந்து கிடைத்த அந்த நாணயம் எவ்வாறு குறிப்பிட்ட எலும்புக்கூட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டது என்பதற்கான விளக்கம் அறிக்கையில் இல்லை.
கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் பிளாஸ்டிக் பொத்தான்கள், ஆடைப் பொத்தான்கள், பிளாஸ்டிக் பை, பொலித்தீன் மாலைகள் மற்றும் இறப்பர் துண்டுகளும் அடங்குகின்றன.
இந்தப் பொருட்கள் காணப்பட்ட புதைகுழிகளின் காலத்தைத் தீர்மானிப்பதில் அவை எத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்பதை அறிக்கை ஆராயவில்லை.
அகழ்வாய்வு இடம் எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டது? புதைகுழிப் பகுதி எவ்வளவு தூரம் விரிந்திருக்கலாம்?
செய்மதிப் படங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டிய இடங்களைத் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவுசெய்தனர்.
அந்தப் படங்களில், நிலத்தின் அடிப்பகுதியில் ஏதோ மாற்றங்கள் அல்லது இடையூறுகள் ஏற்பட்டிருப்பதைக் குறிக்கும் வகையில் இரண்டு வெள்ளை நிறச் செவ்வக வடிவிலான நிலப்பகுதிகள் தென்பட்டன.
முக்கிய அகழ்வாய்வுக் குழி 28.5 மீற்றர் நீளமும் 18 மீற்றர் அகலமும் கொண்டதாக இருந்தது. இதன் மொத்தப் பரப்பளவு 513 சதுர மீற்றராகும்.
எச்சங்கள் காணப்பட்ட இடங்களில், சுற்றியிருந்த நிலத்தின் உயரமான புள்ளியிலிருந்து 1.6 மீற்றர் ஆழம் வரை அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, கிழக்குத் திசையில் சுமார் 40 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த மற்றொரு இடத்தில் மூன்று குறுகிய சோதனை அகழிகள் தோண்டப்பட்டன. அவை 0.8 மீற்றர் ஆழம் வரை தோண்டப்பட்டிருந்தன.
ஆனால், அந்த இரண்டாவது இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை அகழ்வாய்வின் முடிவுகள் குறித்து அறிக்கை எந்தத் தகவலையும் வழங்கவில்லை.
அகழ்வாய்வுக் குழியைச் சுற்றியுள்ள நிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தரைக்கீழ் ஊடுருவும் ரேடார் ஆய்வில் (Ground-Penetrating Radar — GPR), நிலத்தின் கீழ் பல்வேறு ஒழுங்கற்ற அமைப்புகள் கண்டறியப்பட்டன.
இவற்றில் சில மேலதிகப் புதைகுழிகளுடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் அடிப்படையில், “தொல்லியல் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பகுதியைவிட இந்த இடம் கணிசமான அளவில் விரிவடைந்திருக்கக்கூடும்” என்று அறிக்கை முடிவுசெய்கிறது.
நன்றி: ஜப்னா மொனிட்டர்
