(அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர் )
— -தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
மெய்ப்பொருள் காண்பது அறிவு
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்பதே தமது தாரக மந்திரம் எனக் கூறிக்கொண்டு பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலத்தில் பிரபாகரனை ஒரு வழிபாட்டு நிலையில் ‘தேசியத் தலைவர்'(?) எனத் தூக்கி வைக்கும் – தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்றைய போராளி இயக்கங்கள் எல்லாவற்றையும் ‘ஒட்டுக் குழுக்கள்’ என ஓரம் கட்டும்- தமிழீழ விடுதலைப் புலிகளை அரசியல் சித்தாந்த அடிப்படையில் அறிவு பூர்வமாக விமர்சித்தவர்களைக்கூடத் ‘துரோகிகள்’ எனத் தூற்றும் தொடர் பிரச்சாரங்கள் புலிகளின் ஊடகங்களால் மிகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பெற்று முன்னெடுக்கப்பட்டன. ஏனைய புலிசார் தமிழ் ஊடகங்களும் அதற்கு ஒத்தூதியமைதான் கடந்த கால வரலாறு.
இவ்வாறாகப் பிரபாகரனைத் தேசியத் தலைவராகவும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு புனிதமான விடுதலைப் போராட்ட இயக்கமாகவும் ஊடகங்களால் கட்டமைக்கப்பெற்ற நிலையில் மக்கள் நலன் சார்ந்த மாற்றுச் சிந்தனைகள் யாவும் மழுங்கடிக்கப்பட்டன; மறைக்கப்பெற்றன; அல்லது மரணிக்கப்பெற்றன.
அதனால் தமிழ் மக்கள் உண்மையை அறிந்து கொள்ளுவதற்கான-உண்மையைத் தேடுவதற்கான-உண்மையை பகிரங்க வெளியில் உரையாடுவதற்கான ஜனநாயக இடைவெளியோ கருத்துச் சுதந்திரமோ நாட்டில் குறிப்பாகப் புலிகளின் அடக்குமுறையின் கீழிருந்த இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கவில்லை. புலம்பெயர் நாடுகளிற்கூட தமிழ் மக்களிடையே கருத்துச் சுதந்திரம் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நேரடியாகக் கூறப்போனால் புலிகளை விமர்சிக்கும் விடயம் ஓர் உயிராபத்தானதொன்றாகவே உணரப்பட்டது. இந்த நிலை 2009 மே 18 ல் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடியும்வரை மிக இறுக்கமானதாகவேயிருந்தது. மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் யுத்தம் முடிந்த பின்னர்கூட இந்த நிலை பல வருடங்கள் நீடித்தது.
தமிழ் மக்களிடையேயுள்ள அறிவார்ந்த கல்விமான்கள்கூட தமது கருத்துக்களை வெளிச்சொல்லத் தயங்கினார்கள். ஒன்று உயிர்ப் பயம் மற்றது தாமும் (தமிழ்த் தேசிய) ‘துரோகி’கள் எனப் பட்டம் சூட்டப் பெற்றுவிடுவோமோ என்ற உளவியல். இருந்தாலும்கூட நிலத்திலும் (இலங்கையிலும்) புலத்திலும் (புலம்பெயர் நாடுகளிலும்) ஆங்காங்கே உண்மைகள் அண்மைக்காலத்தில் முளைகொள்ளத் தொடங்கியுள்ளன.
துணிவும்-ஓர்மமும்-மக்கள் நலன் சார்ந்த எண்ணமும் கொண்டவர்கள் பலரும் படிப்படியாகத் ‘தமிழ்த் தேசியம்’ என்ற போர்வையில் பிரபாகரனது தனிநபர் அதிகார நலன்களுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் உள்ள தவறுகளையும் பலவீனங்களையும் அதேபோன்று புலிகளின் பெயரால் சுயலாப அரசியலை மேற்கொண்ட மிதவாத அரசியல்வாதிகளின் சுயரூபங்களையும் ஓரளவு மாற்று ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரத் தொடங்கிவிட்டனர்.
அண்மைக்காலமாக இவ்வாறான மாற்றுச் சிந்தனைகளும் மாற்றுக் கருத்துக்களும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட மாற்று அரசியற் களச்செயற்பாடுகளும் தாமதமாகவேனும் தமிழ் மக்களுடைய அரசியற் பொதுவெளியில் அறிவார்ந்த அரசியலை நோக்கி மக்களைத் தூண்டக்கூடியதோர் அருட்டுணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன.
அண்மைக்காலத்தில் உருவாகியுள்ள ஜனநாயகச் சூழலிலும் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர இடைவெளியிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் பிரசன்னம் இனி மீளவும் எழச் சாத்தியமில்லை என்ற துணிவிலும தமிழ் மக்களிடையே அண்மைக்காலமாக இத்தகையதோர் அறிவார்ந்த போக்கு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
அதேவேளை இந்த மாற்றத்தை விரும்பாத-ஜீரணித்துக் கொள்ளமுடியாத புலிசார் முகவர்களும் ஊடகங்களும் மாற்றுச் சிந்தனைகள் மக்களிடையே வேரூன்றாதபடி எதிர்வினை ஆற்றவும் மிகத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. குறிப்பாக முகநூல் மற்றும் யுரியூப் (லழரவரடிந) உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்களிற்கூடாக மாற்றுச்சிந்தனையாளர்களையும் புலிகளை விமர்சிப்பவர்களையும் புலிகளின் மறுபக்கத்தை வெளிப்படுத்துவோரையும் 1987இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துச் செயற்படுவோரையும் ‘ஒட்டுண்ணிக் குழுக்கள்’ என்றும் ‘துரோகிகள்’ என்றும் முத்திரை குத்த மீண்டும் தொடங்கியுள்ளன. இத்தீய சக்திகள் தங்கள் எதிர்ப்பினை-செயற்பாடுகளைத் தந்திரோபாயமாக மக்கள்மயப்படுத்தும் சூழ்ச்சியாகத் தமிழ் மக்களை உணர்ச்சியூட்டி உசுப்பேற்றும் வகையில் தமது செயற்பாடுகளை முடுக்கிவிடவும் முனைப்போடு ஈடுபடுகின்றன. இதற்கு உதாரணமாக ‘திலீபன் சிலை திறப்பு’ விவகாரத்தைக் குறிப்பிடலாம்.
இந்தக் கட்டத்தில் தமிழ்ப் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வோடு இச்சூழலை எதிர்கொள்ள வேண்டும். இதுவரை ‘ஏட்டுச் சுரைக்கா’யாக விளங்கிய மரபுவழி அரசியலிலிருந்தும் புலிகளின் ‘பாசிச’ப் பிடியிலிருந்தும் உளவியல்ரீதியாக விடுபட்டு அறிவுபூர்வமான செயற்பாட்டு அரசியலுக்கு மாற்றமுறவேண்டிய நிலைமாறுகாலச் சந்தியிலேதான் தமிழ் மக்களை வரலாறு இப்போது கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
எனவே இருதரப்புக் கருத்துக்களையும் நியாயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ எனும் குறளின் அடிப்படையில் சிந்தித்து உண்மையைத் தேடும் எத்தனத்தில் தமிழ் மக்கள் இனியாவது இறங்க வேண்டும். அப்படியில்லாமல் கடந்த காலங்களைப்போல் கண்களை மூடிக்கொண்டு வெறுமனே உணர்ச்சி மைய அரசியல் பாதையிலே தொடர்ந்து செல்ல முனைவார்களாயின் அது மேலும் தமிழ் மக்களைப் படுபாதாளத்தில் கொண்டுபோய்த்தான் இறக்கும்.
