— சித்தி சிவராஜா —
ரெட்ரேப்பிசம்: ‘எந்த வேலையையும், எந்தச் செயலையும், அலுவலக ஒழுங்கு முறையோடும், வழக்கமான வழிகளில் காலத்தை பற்றிக் கவலைப்படாது (பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில்) மெதுவாகச் செய்யும் எண்ணங்கொண்டவர்களை ‘ரெட் ரேப்பிஸ்டுகள்’ என்று அழைப்பார்கள்.
இதனை மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னிடம் சொன்னது எனக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. இதைப்பற்றி என்னுடன் பேசியவர் சாதாரணமான ஒருவர் இல்லை! ஆம் அவர் மட்டக்களப்பின் புகழ்பெற்ற பாடசாலை (மத்திய கல்லூரி) அதிபராகப் பல ஆண்டுகள் கடமை புரிந்தவர். கடந்த 1989ம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவானவர் -பிறின்ஸ் காசிநாதர் ஐயா அவர்கள்.
1989ம் ஆண்டில் மட்/கச்சேரியில் நான் பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தராகக் (P R O) கடமையிலிருந்தேன். அன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் பிரச்சனைகளில், முக்கியமானவைகளாக உயிர் இழப்பு, ஊனமடைந்தவர்கள் பிரச்சனை தினசரிச் சம்பவங்களாக இருந்தன.
அரச படை, ஆயுதக் குழுக்கள் மோதலில் அப்பாவிப் பொதுமக்களே மிகத் துன்பங்களுக்கு ஆளானார்கள். உயிர் இழப்பு, காயம் பட்டவர்களுக்கான புனர்நிவாரணப் பண உதவிபெற கச்சேரிக்கு வரும் நூற்றுக்கணக்கான மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு உதவும் மனப்போக்கும் அக்கறையும் கச்சேரி அரச உத்தியோகத்தர்களுக்கு மிக குறைவாகவே இருந்தது.
இப்படியான ஒரு காலகட்டச் சூழலில்தான் நான் பொதுமக்கள் பிரச்சனையை மட்டக்களப்பின் MP ஆன திரு. பிறின்ஸ் காசிநாதர் ஐயா அவர்களுடன் அடிக்கடி சென்று பேசுவது வழக்கமாயிருந்தது. இந்த விசயங்களில் அவர் மிகவும் ஆர்வமுடன் எனக்கு உதவினார்.
அரச உத்தியோகத்தர்களின் அசமந்தப் போக்கான ‘ரெட்ரேப்பிச’ நடவடிக்கைகளைப்பற்றி அவர் மிக ஆவேசமாகக் கோபமடைந்து என்னிடம் பேசுவார்.
திரு.பிறின்ஸ் காசிநாதர் ஐயாவைப் பற்றி பலரும் பல விதத்தில் பேசுவதுண்டு? அவர் மற்றவர்களுடன் அதிகம் பழகுவதில்லை என்பதும் ஒன்று!! நான் அவருடன் பழகியது சில நாட்கள்தான். ஆனபோதும் என்னைப் பொறுத்தளவில் அவர் அப்படியானவர் அல்லர்.
என்னை அன்பாகச் சிவா! என்றுதான் பெயரைச் சொல்லிக் கதைப்பார். தான் பதவி ஏற்று முதலாவதாக மட்டக்களப்புக்கு வந்தபோது தன்னை வரவேற்கப் பதாதைகள் கட்டியிருந்ததையும், அதில் வணக்கம் வருக! என்று தமிழிலும் ஆங்கிலத்தில் WelCome என்று எழுதியிருந்ததையும் குறித்து என்னிடம் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார், தான் பிறந்து வளர்ந்த ஊரில் தன்னைக் கிணறுகளும் வரவேற்கின்றன என்று சொல்லிச் சிரிப்பார்.
அவர் ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தார். நான் ஒரு தடவை கொழும்பில் அவர் தங்கியிருந்த ‘சிராவஸ்த்தி’ எனும் இடத்தில் அவரைக் காணச் சென்றேன். வழமைபோல அன்புடன் சில விசயங்களைப் பேசிக் கொண்டோம். அன்று அவர் பாராளுமன்றம் போவதாகவும், விரும்பினால் என்னையும் வரச்சொன்னார். நான் வேறு ஏதும் முக்கியமான அலுவல்கள் இல்லாத காரணத்தால் சரி வருகிறேன் என்றேன். 1990.01.09ம் திகதி அவருடன் கோட்டை பாராளுமன்றம் சென்றேன். எனது வாழ்நாளில் முதலும் கடைசியுமானதாக அந்த நிகழ்வு நடந்தது. எனக்கு ஒரு புதிய அனுபவமுமானது. அன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த தினேஸ்குணவர்த்தன பேசிய ஆவேசமான பேச்சையும் கேட்டேன். பின்பு மதிய உணவை அவருடன் அங்கே சாப்பிட்டேன். எல்லா விதமான கறிவகைகளுடனும் அங்கு உணவு வகைகள் இருந்தன. விரும்பியதை எடுத்துச் சாப்பிடலாம். நானும் சாப்பிட்டேன். மனதில் பலதையும் நினைத்தேன். கொழும்பில் எம்.பிமார்கள் எப்படியெல்லாம் வசதியாக வாழ்கிறார்கள் என்று. திரும்பி வரும்போது எப்படி சிவா இருந்தது பாராளுமன்றம்? என்று கேட்டார். நான் சொன்னேன், நமது ஊரிலுள்ளவர்கள் இதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் ஐயா என்று. என்னை நான் தங்கியிருந்த விடுதியில் விடுவித்து பண காசோலையும் தந்துபோனார். இச் சந்தர்ப்பமொன்றினால் என் வாழ்வில் அவர் மறக்க முடியாத ஒருவரானார்.
