(எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம்)
போர் முடிந்துவிடலாம், ஆனால் போரின் முடிவு என்பது சமூகத்தின் முடிவு அல்ல. ஒரு சமூகம் துப்பாக்கிச் சத்தத்திலிருந்து மீண்டு வந்த பிறகுதான், அதன் உடலில் எத்தனை காயங்கள் இருக்கின்றன என்பதும், அதன் மனதில் எத்தனை இருட்டறைகள் உருவாகியிருக்கின்றன என்பதும் தெரியத் தொடங்கும். போருக்குப் பின்னரான சமூகங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து எப்போதும் இன்னொரு போர் அல்ல. போருக்குப் பிறகு உருவாகும் வெற்றிடத்தை யார் நிரப்புகிறார்கள் என்பதே.‘போராட்டம்’ திரைப்படம் அந்த வெற்றிடத்துக்குள் நுழைய முயல்கின்றது.
யாழ்ப்பாணப் பெருநகரப் பரபரப்புகளுக்குள் ஒரு மூலையில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களின் வாழ்வு, அங்கு வேலைவாய்ப்பின்மையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள், போதைப்பொருளின் பிடியில் சிக்கிக்கொண்ட வாழ்க்கைகள், உதை பந்தாட்டத்தைச் சுற்றி உருவாகும் இளைய தலைமுறையின் ஒரே எதிர்கால நம்பிக்கைகள். கொலை, அரசியல் அதிகாரம் இவை அனைத்தையும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த ஒரு சமூகச் சூழலை இத் திரைப்படம் பேசுகின்றது..
ஒரு போருக்குப் பிந்தைய சமூகத்தை வெறும் அழிந்த வீடுகளாலும், சிதைந்த சுவர்களாலும் காட்டாமல், மனிதர்களின் பழக்கவழக்கங்களில், உடல்களில், ஆசைகளில், போதைகளில், விளையாட்டுகளில், காதல்களில், அரசியலில் எப்படி போர் தொடர்ந்து வாழ்கிறது என்பதைத் திரைப்படம் சுட்டிக்காட்டுகிறது.
அதுதான் இப்படத்தின் மிக முக்கியமான பலம். ஆனால் அந்த இடத்தில்தான் திரைப்படத்தின் மிகப்பெரிய பலவீனமும் தொடங்குகிறது.
சமூகச் சீரழிவின் பெரிய காட்சி, அதன் பின்னால் ஒரே ஒரு வில்லன் திரைப்படத்தின் உலகில் போதைப்பொருள் இருக்கிறது. குற்றம் இருக்கிறது.
கொலை இருக்கிறது. இளைஞர்களின் சீரழிவு இருக்கிறது. வன்முறை இருக்கிறது. அரசியல் அதிகாரத்தின் இருண்ட விளையாட்டு இருக்கிறது.
இவை அனைத்திற்கும் பின்னணியில் ஒரு அரசியல்வாதியை வில்லனாக்கி நிறுத்துகிறது படம். இது இந்திய சினிமாவுக்குப் பரீச்சயமான உத்தி. சமூகத்தின் சிக்கலான நோயை ஒரு தனி மனிதனின் முகத்தில் எழுதிவிட்டால், பார்வையாளனுக்கு அந்த நோய்க்கு ஒரு முகம் கிடைத்துவிடுகிறது. அவனை வீழ்த்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்ற நம்பிக்கையை பார்வையாளர்களுக்கு விதைக்கின்றன இத்தகைய சினிமாக்கள்.
ஒரு நகரத்தில் போதைப்பொருள் வேரூன்றுவதற்கு ஒரு அரசியல்வாதி மட்டும் முழுக்காரணம் அல்ல. அதற்குப் பின்னால் பொருளாதாரத் துயரம் இருக்கலாம், வேலைவாய்ப்பின்மை இருக்கலாம், போருக்குப் பிந்தைய மன உளைச்சல்கள் இருக்கலாம், குடும்பச் சிதைவுகள் இருக்கலாம் சட்ட அமுலாக்கத்தின் பலவீனம் இருக்கலாம் எல்லை தாண்டிய போதைப்பொருள் வலையமைப்புகள் இருக்கலாம், இளைஞர்களுக்கான மாற்று வாழ்க்கை வாய்ப்புகளின் பற்றாக்குறை இருக்கலாம்.
அதன்படியே ‘போராட்டம்’ என்னும் இந்தச் சினிமாவும் இத்தனை சாத்தியங்களையும் தொட்டுப் பார்க்கக்கூடிய ஒரு கதைக்களத்தை உருவாக்கிவிட்டு, இறுதியில் அவற்றுக்கெல்லாம் “அந்த அரசியல்வாதிதான் காரணம்” என்ற ஒரு எளிய முடிச்சில் கட்டிவிடுகிறது. அங்கேதான் அதன் அரசியல் அபத்தமாகிறது.
திரைப்படத்தின் உச்சக்கட்டத்தில் அந்த அரசியல்வாதி மக்களால் அம்பலப்படுத்தப்படுகிறார். மக்கள் அவரைச் சுற்றிவளைக்கிறார்கள்.
அதிகாரத்தின் முகமூடி கிழிக்கப்படுகிறது.
ஒரு வகையில் இது ஒரு மக்களாட்சி கனவு. ‘மக்கள் எழுந்தால் அதிகார மையங்கள்’ வீழும். இந்த வாக்கியத்தில் ஒரு சினிமாப் பேரார்வம் இருக்கிறது.
ஆனால் அதற்குப் பிறகு படம் சொல்லவருவதுதான் இன்னும் சுவாரஸ்யமானது. பழைய அரசியல்வாதி வீழ்ந்த இடத்தில், எங்கிருந்தோ ஒரு புதிய அரசியல்வாதி முளைக்கிறார்.
அவர் அந்தச் சமூக விரோதியான பழைய அரசியல்வாதியால் கொலைசெய்யப்பட்ட ஒரு உதை பந்தாட்ட வீரனின் பெயரில் ஒரு மைதான பார்வையாளர் அரங்கை திறந்துவைக்க வருகிறார். அத்தோடு திரை மூடுகின்றது.
இதுதான் படத்தின் மிகப் பெரிய அரசியல் நகைச்சுவை. ஏனெனில் பெயர்கள் மாறியிருக்கின்றன. ஆனால் சமூக அமைப்பு மாறியிருக்கிறதா?அரசியல்வாதி மாறியிருக்கிறார். ஆனால் அரசியலின் இயந்திரம் மாறியிருக்கிறதா?வில்லன் மாறியிருக்கிறார். ஆனால் வில்லனை உருவாக்கிய சமூக நிலைமைகள் மாறியிருக்கிறதா?
இதற்கு படம் பதில் சொல்லவில்லை.
இங்குதான் ‘போராட்டம்’ ஒரு குறிப்பிட்ட தமிழ்ச் சினிமா மரபுக்குள் சென்று நிற்கிறது. எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் அரசியல் கற்பனையில், சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஒரு தனி மனிதனின் வரவு ஒரு தீர்வாக அமையும்.
‘போராட்டம்’ அந்த பழைய இலக்கணத்தை ஒரு போருக்குப் பின்னரான ஈழம் என்னும் புதிய நிலப்பரப்பில் மறுபடியும் விதைக்க முனைகின்றது.
போருக்குப் பின்னான மண்ணின் சிக்கலான சமூக யதார்த்தத்தைப் பின்னணியாக எடுத்துக்கொண்டு, இறுதியில் அது “தவறான அரசியல்வாதியை அகற்றினால் புதிய அரசியல்வாதி அனைத்தையும் மாற்றிவிடுவார்” என்ற பழைய சினிமா நம்பிக்கைக்கே பார்வையாளர்களைக் கொண்டு செல்கின்றது.
இது தான் படத்தின் மிகப்பெரிய கருத்தியல் குறைபாடு. ஆனாலும் தத்துவார்த்த வரட்சி மிக்க இந்தப் படத்தை முழுமையாக நிராகரிக்க முடியாத அளவுக்கு அதன் நடிகர்கள் வெற்றி கண்டுள்ளனர். .
காதல் ஜோடியாக வரும் இளம் நடிகர்கள் தமது திறமையால் கதையின் சீரான ஓட்டத்துக்கு வலுச் சேர்க்கின்றனர். வில்லன் அரசியல்வாதியாக வருபவர் முடிந்தவரை அதிகாரத்தின் குளிர்ச்சியையும் அதன் பின்னாலிருக்கும் வன்முறையையும் நன்றாகத் தாங்கிச் செல்கிறார். நகைச்சுவைப் பாத்திரத்தில் வரும் அந்த குண்டான இளைஞன் இந்திய யோகி பாபுவை பதிலிடுகின்றார். கதாபாத்திரங்கள் பல இடங்களில் உயிரோட்டமாக இருக்கின்றன.
போதைப்பொருள் கலாசாரம் பற்றிய காட்சிகளில் சமூகச் சோகத்தின் தடயங்கள் இருக்கின்றன. போதைப்பொருளுக்கு அடிமையான கணவனாகவும், போதைப்பொருள் விற்பனைக்குள் இழுத்து விடப்பட்ட மனைவியாகவும் நடிப்பவர்கள் மிகச்சிறப்பாக பாத்திரமுணர்ந்து நடித்திருக்கின்றனர். 1990 களைத் தொடர்ந்து கொழும்பின் புறநகரப்பகுதிகளில் உள்ள சேரிக்குடியிருப்புகளில் பெருகத் தொடங்கிய போதைப்பொருள் விற்பனை பெண்களை நினைவுபடுத்துகின்றார் அந்தப்பெண். அவருக்கான ஒப்பனை அச்சொட்டான பொருத்தம். அந்தப் பெண்ணின் முகத்தில் தான் இந்தப் படத்தின் உண்மையான சோகமே தங்கியிருக்கிறது. அவர்களிடையே உள்ள கணவன்-மனைவி உறவும் வாழ்வின் மீதான நம்பிக்கையென்பதும் சிதைவின் நடுவே ஒரு சிறிய உயிர்த்துடிப்பு எனலாம். இந்தப் படத்தின் சிறந்த நடிகையென்றால் அந்தப் பெண்தான்.
‘போராட்டம்’ பார்க்கும்போது பல இடங்களில் ஒரு விசித்திரமான உணர்வு வருகிறது. இது ஈழத்தின் மண்ணில் எடுக்கப்பட்ட திரைப்படம். யாழ்ப்பாணத் தமிழில் இடம்பெறும் கதை வசனம் சரளமாக செல்கின்றது.
ஆனால் அதன் ‘கதை சொல்லும் பாங்கு அச்சோட்டாக கோடம்பாக்கத்தினுடையது. அதனால் இதை “ஈழத்திலிருந்து வந்த ஓரளவு வெற்றிகரமான கோடம்பாக்க நகல்” என்று சொல்லலாம்.
ஆனால் ஈழத்தின் சொந்த வரலாறும், போருக்குப் பின்னான சமூகத்தின் சிக்கல்களும், அதன் உளவியலும் இவ்வளவு பெரியதாக இருக்கும்போது, அதனை மீண்டும் கோடம்பாக்கத்தின் நல்லவன்–கெட்டவன் இலக்கணத்துக்குள் அடைத்துவிடுவது ஒரு தவறவிட்ட வாய்ப்பாகத் தோன்றுகிறது. எமக்கென்று ஒரு சினிமா என்பது கதை சொல்லும் பாங்கில் தனித்துவத்தை சிருஷ்டிப்பதிலன்றி வேறொன்றாலும் சாத்தியமாகாது.
மிகவும் அபத்தமான தருணம் அந்த புதிய அரசியல்வாதியின் வருகை.
படத்தின் இறுதியில் தோன்றும் புதிய அரசியல்வாதிதான் இந்த விமர்சனத்தின் மையப் புள்ளி. அந்தப் புதிய அரசியல் வாதியாக நடித்திருப்பவர் வேறுயாருமல்ல. இந்தப்படத்தில் தயாரிப்பாளர் மற்றும் ஈழத் தமிழ் முன்னணி ஊடகங்களையம் கையில் வைத்திருக்கும் ரீச்சா பாஸ்கரன்தான். வடக்கு மாகாண முதலமைச்சர் தேர்தலில் களமிறங்கத்தயாராக இருப்பவர். சுவாரஸ்யமான ஒரு திரைப்படத்தை உருவாக்கக்கூடிய அளவுக்கு வளமான சமூகப் பொருளாதார வாய்ப்புகளை கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவர்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உருவான மிக வலிமையான அரசியல் கற்பனை ஒன்று உண்டு. திரையில் மக்களின் மீட்பராக நடித்தவன், நிஜ வாழ்க்கையிலும் மக்களின் தலைவனாக மாறலாம். எம்.ஜி.ஆர். அதற்கு மிகப்பெரிய வரலாற்று உதாரணம். இப்போது ஜோசப் விஜய்யும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கின்றார். அதனால்தான் புதிய அரசியல்வாதி வரும் காட்சி வெறும் கதையின் முடிவு அல்ல. அது கோடம்பாக்கம் தமிழ்ச் சினிமாவின் நீண்டகால அரசியல் மரபின் ஒரு மறுபதிப்பு. பழைய சினிமா நம்பிக்கைக்கு வரலாறு மீண்டும் ஒரு வினோதமான அடிக்குறிப்பைச் சேர்த்திருக்கிறது.
‘போராட்டம்’ ஒரு மோசமான திரைப்படம் அல்ல.
ஆனால் ரீச்சா பாஸ்கரன் தனது வடக்கு மாகாண முதலமைச்சர் கனவுக்காக முதலாவது காலடியை எடுத்து வைத்த திரைப்படம்.
கோடம்பாக்கம் சினிமாவால் நான்கைந்து முதலமைச்சர்களை தமிழ் நாட்டுக்கு தர முடியுமென்றால் ஏன் எமது ஈழத்துச் சினிமாவால் ஒரு வடக்கு மாகாண முதலமைச்சரைத் எமக்குத் தரமுடியாது? என்று உங்களில் யாராவது கேட்பீர்களானால் …..
இது கலிகாலம் எதுவும் நடக்கலாம்.
