— எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் —
தோழர் ‘செங்கதிரோன்’ என அறியப்பட்ட கோபாலகிருஷ்ணன் அவர்கள் மட்டக்களப்பு தமிழகத்தின் பேராளுமைகளில் ஒருவர். கலை, இலக்கியம், அரசியல் மற்றும் சமூக விஞ்ஞானம் சார்ந்த அவரது பங்களிப்புகள் மட்டக்களப்புத் தமிழகத்தின் சமூக அசைவியக்கத்துக்கு பலம் சேர்ப்பன. செங்கதிர் சஞ்சிகை,சிறுகைதைகள், குறுங்காவியங்கள், உருவகக்கதைகள்,தொன்ம வரலாறுகள் மற்றும் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் என்று பல்வேறு நூல்களின் ஆசிரியர். இத்தனையையும் தாண்டி சுமார் ஐம்பதாண்டு காலமாக நேரடி அரசியல் களப்பணியாளனாக ஓயாது இயங்கிவருபவர்.
அவரிடமிருந்து ஒரு நாவல். அதுதான் ‘கனகர் கிராமம்’ என்னும் அரசியல் சமூக வரலாற்று நாவல். வரலாறு என்பது ஒருபோதும் ஒரே படித்தானதல்ல. அதற்கும் பன்முகத்தன்மையுண்டு. ஆனால் ஆதிக்க சக்திகள் எழுதுவதே வரலாறுகளாக நமக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழர் அரசியலின் மைய நீரோட்ட வரலாற்று பார்வைகளை மறுதலித்து மட்டக்களப்புத் தமிழகத்தின் சொந்தக்கதைகளையும் அதன் நியாயங்களையும் பேச முனைகின்றது இந்நாவல்.
நாவலின் மையப்பாத்திரங்களான கோகுலன் என்னும் இளைஞனையும் கனகரெட்ணம் என்னும் அரசியல்வாதியையும் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. நாவலின் முதற் பகுதி கோகுலனின் இளமைக்காலங்கள், பள்ளி வாழ்க்கை, குடும்ப உறவுகள் கிராம சூழல் என்று நகருகின்றது. இரண்டாம் பகுதியில் கோகுலனின் உத்தியோகமும் அத்தோடு பின்னிப் பிணைந்த அவனது அரசியல் வாழ்வுமாக விரிகின்றது.
கோகுலன் காரைதீவில் பிறந்திருந்தாலும் கோகுலனின் பெற்றோர் அவனுக்கு ஒரு வயதாகி இருந்தபொழுதிலேயே பொத்துவிலுக்கு குடிபெயர்ந்து விட்டனர். பொத்துவில் என்பது கிழக்கு மாகாணத்தின் தென்கோடி பிரதேசமாகும். மட்டக்களப்பு மாநகரத்திலிருந்து தெற்கே சுமார் நூறு கிலோமீற்றர்களைத் தாண்டிய தொலைவில் அமைந்திருக்கும் கிராமம். அங்கு தனது ஆரம்பக்கல்வியை ஒரு மெதடிஸ்த பாடசாலையில் கற்றுத்தேறிய கோகுலன் தனது 16 வயதிலேயே தந்தையை இழந்துவிட நேர்கின்றது. அதே ஆண்டில் 1966ஆம் ஆண்டிலே வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் விடுதியில் தாங்கிப் படிக்க அனுமதிக்கப்படுகின்றான் என்பதிலிருந்து நாவல் தொடங்குகின்றது.
இலங்கையில் இலவசக்கல்வி வசதி ஏற்படுத்தப்பட்ட போது இலங்கையில் உருவாக்கப்பட்ட அரச நிதிபெறும் ஐந்து மத்திய மகாவித்தியாலயங்களில் அதுவும் ஒன்றாக அமையப்பெற்றது. விடுதி வசதியுடன் கூடிய அப்பாடசாலை கன்னங்கராவின் தலைமையில் பிரதி கல்வி அமைச்சராக அன்றிருந்த மட்டக்களப்பு நல்லையா என்னும் பெருந்தகையால் கட்டப்பட்ட வரலாறுகளையும் கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் அது ஆற்றிய பங்களிப்புகளையும் தருகின்றது.
அத்தோடு கோகுலனின் விடுதிவாழ்க்கை பற்றிய விவரணங்கள் பல பக்கங்களில் விரிகின்றன. அம்மா எழுதும் கடிதங்கள் தாங்கிவரும் ஊர்க் கதைகள், சீருடைகள் புத்தகங்கள் என்று அனைத்துக்குமான அந்த விடுதி றங்குப்பெட்டியின் இரகசியங்கள், நீண்ட வாரங்களின் பின்னர் வருகின்ற வீடுதிரும்பும் விடுமுறைக்கால இ.போ.ச.பஸ் பயணங்கள் தரும் மகிழ்ச்சிகள் என்று நனவோடை தோய்தலாக தொடருகின்றது நாவல்.
அப்பயணங்களின்போது கல்லடிப் பாலம் முதற்கொண்டு அவன் கடந்து செல்லுகின்ற ஒவ்வோரு கிராமங்களின் காரணப் பெயர்களும் அவற்றின் வரலாற்று மூலங்களும் பற்றிய விபரிப்புக்கள் அலாதியானவை.
பொத்துவிலில் பயிரை அழித்தொழிக்க வரும் யானைகள், கிழங்குகளை சூறையாட வரும் பன்றிகள், அன்றாடம் தொல்லைதரும் குரங்குகள், காலனாகக் காத்திருக்கும் விஷப்பாம்புகள் என்று அனைத்திடமிருந்து தப்பிப் பிழைத்து அம்மா ‘கனகம்’ சம்பாதிக்கின்ற சேனைப்பயிர்கள் தரும் சின்னச்சின்ன வருமானங்களை மட்டுமே நம்பிய வாழ்வு. அனைத்து துன்ப துயரங்களையும் அனுபவிக்கும் கோகுலனின் இளமைக்கால வாழ்வு மெல்ல மெல்ல நகருகின்றது. இயற்கையோடிணைந்த இத்தகைய சேனைப்பயிர் பண்பாடு கோகுலனின் குடும்பத்துக்கு மட்டுமன்றி அப்பிரதேச மக்களின் வாழ்வோடு இரண்டறக்கலந்தது என்பதை நாவல் தொட்டுச்செல்லுகின்றது.
கோகுலன் குடும்பத்தோடு பயணிக்கும் கதிர்காம யாத்திரையில் அவர்களோடு இணையும் முதியவரான சாமித்தம்பி மற்றும் கதிரவேல் என்னும் பள்ளித்தோழனுடனான உரையாடல்கள் ஊடாக அப்பிரதேசங்களின் பல்வேறு வரலாற்று தகவல்களை தருகின்றார் நாவலாசிரியர். திருக்கோவிலில் உள்ள விஷக்கல்லின் வரலாறு ஒரு இஸ்லாமிய அவுலியா ஒருவரின் கொடை என்னும் தகவல்களும் பாணமையில் உள்ள பத்தினியம்மன் கோவிலும் கோவலனுக்குரிய கழுபண்டார கோவிலும் அவற்றினை தமிழரும் சிங்களவரும் இணைந்து தொன்று தொட்டு நடத்திவரும் வரலாற்று நினைவுகளும் இப்பிரதேசங்களில் நீண்ட காலமாக இருந்துவரும் மத நல்லுறவின் சாட்சியங்களாக சிலாகிக்கப்படுகின்றது.
அதேபோன்று உகந்தை மலை கோவில், முருகன் வள்ளி தெய்வானை தொன்மங்கள் மற்றும் சன்னாசி மலையின் வரலாறு, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இப்பிரதேசங்களில் வாழ்ந்த நாகர் மற்றும் இயக்கர் எனப்படும் பழங்குடிகளிடையே நிலவி வந்த வேல் வழிபாட்டின் தொடர்ச்சி, 16ஆம் நூற்றாண்டு காலம் வரை தொடர்ந்த ஒரு நிலையான சமூக பரம்பல், அதன்பின் ஏற்பட்ட மலேரியா தொற்று, அதனால் ஏற்பட்ட அழிவுகளும் இடப்பெயர்வுகளும் என்று இப்பிரதேசம் காடுமண்டிய வரலாறுகள், கதிர்காமத்துக்கான காட்டுவழிப் பாதையில் உள்ள குமண பிரதேசத்தில் வாழும் ‘பதுவர்’ என்றழைக்கப்படும் பழங்குடிகளின் வாழ்வு பற்றிய தகவல்கள் அனைத்தும் கொண்ட ஒரு மானிடவியல் சுரங்கம் இந்த மட்டக்களப்புத் தமிழகம் என்று நாவல் உரத்துச் சொல்லுகின்றது.
அத்தோடு கதிர்காமத்தில் இடம்பெறும் கொடியேற்ற நிகழ்வு அங்கிருக்கும் பள்ளிவாசலில்தான் இடம்பெறுவது பற்றிய வர்ணனைகள், கதிர்காமப்பகுதியில் வாழ்ந்த அவுலியாக்களின் கபுறுகள் போன்ற பல்வேறு விபரங்களையும் பேசுவதன் ஊடாக கிழக்கு மாகாணத்தில் பல்லினத்தன்மையையும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழும் வரலாற்று செழுமையையும் நாவல் செவ்வனே பதிவு செய்கின்றது.
இவ்வாறாக இன, மத நல்லிணக்க பூமியாகத் திகழ்ந்த மண்ணில்தான் கோகுலன் பிறந்து வளர்ந்து வருகின்றான். குடும்பச் சுமை காரணமாக மூன்று அக்காமாரையும் ஒரு தம்பியையும் கொண்ட கோகுலன் மேற்படிப்புக்கு செல்வதை விட இளமையிலேயே ஒரு வேலையைத்தேட வேண்டியவனாகின்றான். அதனிமித்தம் தனது 18 வது வயதிலேயே ஒரு தொழில்நுட்ப உதவியாளனாக நீர்ப்பாசனத்துறையில் அரச உத்தியோகம் பெற்றுவிட்டான்.
ஏழ்மையாகவோ எளிமையாகவோ வாழ்ந்தாலும் சொந்த மண்ணில் நின்மதியாக வாழ்ந்துவந்த இந்த மாநிலத்து மக்கள் தேர்தல் அரசியல் வாதிகளாலும் அரசியல் குழப்பங்களாலும் அதைத் தொடர்ந்துவந்த வன்முறைச்சூழல்களாலும் காலப்போக்கில் சின்னாபின்னப்படுத்தப்படுகின்றனர். தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் என்று முரண்பாடுகள் வளரத்தொடங்குகின்றன. இந்நிலையில்தான் கோகுலனும் அரசியலில் ஈடுபாடு காட்டத்தொடங்குகின்றான்.
தொடரும் ………….
