வைகறை: கனவாகிப்போன ஈழப்போராட்டத்தின் மெய்ப்போராளி 

வைகறை: கனவாகிப்போன ஈழப்போராட்டத்தின் மெய்ப்போராளி 

 — கருணாகரன் —

விடுதலைப் போராட்ட அனுபவங்கள் தருகின்ற உண்மைகளில் பலவும் ஆச்சரியம் ஊட்டுகின்றவை. அவற்றில் பல கசப்பை அல்லது துயரத்தைத் தருவதுண்டு. அதில் ஒன்று, அர்ப்பணிப்பும் விடுதலைத் தாகமும் கொண்டு செயற்பட்ட போராளிகளின் போராட்டம் வெற்றியடையாமல் கனவாகி, கருகிப்போனது ஏன்? என்ற கேள்வியிலிருந்து வருவது. மிகத் தீவிரமான நிலையில் செயற்பட்டும் கனவாகியேபோன போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளின் துயரம் சாதாரணமானதல்ல; மிகப் பெரியது. அதைத் தாங்குவதும் எதிர்கொள்வதும் கடினம். ஆனாலும் எதிர்கொண்டு, தாங்கியே ஆக வேண்டும் என்பதே நியதி. அந்த நியதியை ஏற்றோரில் தோழர் ‘வைகறை’யும் ஒருவர்.  

விடுதலையைக் குறிப்புணர்த்தும் விதமாகத் தன்னுடைய பெயரை  வைத்துக் கொண்டவர் வைகறை. இளமையில் மானுட விடுதலையில் நாட்டம் கொண்ட வைகறையை 1970 களில் முகிழ்த்த ஈழ விடுதலைப் போராட்டம் ஈர்த்தது. அந்த ஈர்ப்பு விசையில் உந்தப்பட்டவர், ஈழப்புரட்சி அமைப்பு, (EROS) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஆகியவற்றோடு  நெருங்கிச் செயற்பட்டார். 

அன்றைய சூழலில் தமிழகத்தில் இடதுசாரிய அரசியற் பார்வையைக் கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்ற இயக்கங்களோடு நெருங்கியிருந்தனர். அவர்களில்  வைகறை ஒருவர். வைகறை ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவற்றில் நெருங்கிச் செயற்பட்டார் என்று சொல்வதை விட இணைந்து செயற்பட்டார் என்று சொல்வதே சரி. இந்த அமைப்புகளின் உறுப்பினராக இல்லை என்றாலும் அத்தகைய தன்மையோடு ஈழப்போராட்டத்துக்கான வைகறையின் அரசியல், இலக்கிய, பதிப்புச்  செயற்பாடுகளும் உணர்வுகளும் வலிமையாக இருந்தன. விடுதலை உணர்வுத் தீவிரமுடையவர்களின் உள விசையும் செயல் முனைப்பும் கட்டற்ற வேகங்கொண்டது. அது இன்னும் இன்னும் என்று முன்னோக்கிச் செல்லும் பறத்தற் தீவிரத்தின் முனையாகும். வைகறையின் செயற்பாடுகளும் உளமும் அப்படித்தானிருந்தது. ஈழம் என்பது அவருடைய குருதியில் கலந்தோடியது. அதனால்தானோ என்னவோ ‘ஈழம்’ இதழ்களை வியக்கும் வகையில் கி.பி. அரவிந்தனோடு இணைந்து செம்மையாக உருவாக்கினார். மட்டுமல்ல, வைகறை வேறு பல பணிகளையும் செய்தார். அந்த நாட்களில் ஈழப்போராட்டத்துக்கான உந்துவிசையை ஏற்படுத்தும் விதமாக ‘வீரத் தெலுங்கானா’ தொடக்கம் சேரனின் கவிதைகளையும் வீர சந்தானத்தின் ஓவியங்களையும் இணைத்து, ‘முகில்களின் மீது நெருப்பு’  ஓவிய நூல் வரையில் பலவற்றை வெளியிட்டார். முகில்களின் மீது நெருப்பு என்ற ஓவியக் காட்சியைச் சென்னையில் நடத்தினார். இதை விடப் பொன்னி பதிப்பகம் மூலமாக பூமணியின் ரீதி, அம்பாரம் மற்றும் அவருடைய ஐந்து நாவல்கள் முதல் மெக்காலே, சொப்பு – தலித் சிறுகதைகள், பாரிஸ் கதைகள், கி.பி. அரவிந்தனின் ‘இடமும் இருப்பும்’, இளையவனின் ‘காணி உறுதி’, எஸ்.வி.ஆரின் ‘கலை எனப்படுவது இனப்படுகொலை’  வரையில் பல முக்கியமான நூல்களைப் பதிப்புச் செய்தார் வைகறை. ஈழப்புரட்சி அமைப்பின் வெளியீடுகளான ‘ஈழம்’, ‘நட்புறவு பாலம்’ போன்றவற்றின் வழியாகவும் பொன்னி வெளியீடாக வெளிவந்திருந்த புத்தகங்களுக்கூடாகவும் வைகறையைப் பற்றி சென்னையில் இருந்த ஈழப்போராளிகளுக்கு மட்டுமல்லாமல், ஈழத்தில் இருந்த போராளிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் வைகறை அறிமுகமானார். அறிமுகத்தைத் தாண்டிப் பலருக்கு நெருக்கமானார். சென்னையில் அப்போதிருந்த தோழர்கள் கி. பி. அரவிந்தன், வே. பாலகுமாரன், முகுந்தன் (முகிலன்), க. பத்மநாபா, எஸ்.ஏ. உதயன் போன்றோரோடு நெருக்கமாக உறவாடிய வைகறை, அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, பல பணிகளையும் வைகறை செய்தார். அந்த நாட்களில் நான் ஈழத்தில் இருந்தேன். ஆனாலும் வைகறையைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருந்தேன். பல தோழர்களும் வைகறையைப் பற்றிச் சிறப்பாகவே சொல்வார்கள். அந்தத் தோழர்களுடைய சொற்களையும் விட, வைகறையின் பொறுப்பில் நடந்த பொன்னி பதிப்பக, இராசகிளி அச்சக வெளியீடுகள், வைகறை எப்படியான ஆளுமை? வைகறையின் ரசனை என்ன? அவருடைய அரசியற் தேர்வு எப்படியானது? இலக்கியப் பார்வை எவ்வாறானது? என்பதையெல்லாம் நிரூபித்துக் காட்டின. ஏறக்குறைய வைகறையின் தேர்வுகளும் ரசனையும் என்னுடைய தேர்வுகளோடும் ரசனையோடும் ஒத்தோடின. குறிப்பாக பூமணி, எஸ்.வி. ஆரின் நூல்களை அவர் தேர்ந்து வெளியிட்டது பிடித்திருந்தது. இதனால் உணர்வு ரீதியாக வைகறையோடு நெருக்கமாகினேன். இதை கி. பி. அரவிந்தனும் இளையவனும் (சின்ன பாலாவும்) வே. பாலகுமாரனும் மேலும் ஆழமாக்கினார்கள். 

ஒருவருடைய தேர்வுகள் அவர் எத்தகைய உளத்தைக் கொண்டவர், எவ்வாறான வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் இருக்கிறார் என்பதை உணர்த்தும். நான் உணர்ந்த மாதிரியே வைகறை தன்னை எளிமையானவராகவே வைத்திருந்தார். வாழ்க்கையின் லௌகீகத் தேவைகளில் தன் வாழ்க்கையின் அடிப்படைகளை அடகு வைக்காமல், தனக்குப் பிடித்த இலட்சிய வழிகளில் பயணித்தார். இளமைக்காலத்திலேயே லட்சிய வழியில் பயணிக்கும் ஒருவருடைய சமூக அடையாளம் துலக்கமாக இருக்கும். பதிலாக அவருடைய வாழ்க்கையோ நெருக்கடிகளால் சூழப்பட்டு விடும். இலட்சிய வாழ்க்கைக்கு எப்போதும் எதிரானது, லௌகீக வாழ்க்கை. என்பதால்தான் இலட்சிய வாழ்க்கையைத் தேர்வு செய்கின்றவர்களிற் பலருடைய வாழ்க்கையும் நெருக்கடிகள் நிறைந்ததாக இருப்பதுண்டு. நான் அறிந்த வரையில் தோழர் வைகறையுடைய வாழ்க்கையும் அப்படித்தான். அவருடைய பணிகளால் பொதுப்பரப்பில் அவர் அறியப்பட்ட அளவுக்கு அவருடைய வாழ்க்கை ஒன்றும் மேம்பட்டதாக, வசதி, வாய்ப்புகளோடு இருந்ததாக இல்லை. 

1980 களின் தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்குப் பேராதரவு அலை வீசியது.  1977, 1983 களில் இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள அரசும் சிங்களக் காடையர்களும்  மேற்கொண்ட இன வன்முறையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்தது. இதனால் தமிழகத்தில் இருந்த எல்லாத் தரப்பினரும் ஈழப்போராட்டத்துக்கு பேராதரவு தர முயன்றனர். இந்த ஆதரவு உணர்ச்சிகரமானது – அறிவு பூர்வமானது என இரண்டு வகையில் இருந்தது. எந்தச் சமூகத்திலும் எல்லோரையும் ஒரு முகப்படுத்துவது கடினம். வைகறை அறிவுபூர்வமாக விடயங்களைப் பார்க்கும் தரப்பிலிருந்தார். உணர்ச்சிகரமான ஆதரவாளர்களுக்கு மத்தியில், ஈழப்போராட்டத்தை அறிவார்ந்த தளத்திலும் கருத்தியல் பரிசீலனையிலும் வைத்து இயங்கியவர்கள் வைகறை போன்ற மிகச் சிலரே. அதுவும் கடினமான ஒன்று. என்றாலும் வைகறை அந்தத் தளத்தில் சலிப்பின்றிக் களைப்பின்றிக் கடைசிவரையிலும் நின்றார். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக. 

சென்னையில் இருந்து இயங்கிய வைகறை வெறுமனே ஆரவாரங்களோடு நின்றுவிடாமல், ஈழப் போராட்டத்தின் பின்னுள்ள வரலாற்றுத் தேவையை, அதன் அரசியல் நியாயங்களைப் புரிந்து கொண்டு செயற்பட்டார். இதற்கு ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல அவருடைய அறிவுபூர்வமான அணுகுமுறையே காரணம். இதன்வழியே இலக்கியம், இதழியல் மற்றும் பதிப்பு முயற்சிகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்தார். விடுதலை என்பது வெறும் ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல; அது தீவிரமான கருத்துப் போராட்டமும் கூட என்பதை உணர்ந்த வைகறை, அதற்கான முறையில் அரசியல் கோட்பாட்டுத் தெளிவை உருவாக்குவதற்காக இதழ்களை ஆயுதமாகக் கையாண்டார். 

விடுதலை இயக்கமோ ஒரு விடுதலைப் போராட்டமோ நிலப்பரப்பினால் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை; அது உலகெங்கும் பரந்துள்ள மானுட விடுதலையை நேசிக்கும் மனிதர்களின் உணர்வாலும் கருத்தியலாலும் கட்டமைக்கப்படுகிறது. அந்த வகையில், ஈழ விடுதலைப் போராட்டம் என்பது ஈழத் தமிழர்களின் களம் மட்டுமல்ல, அது உலகளாவிய தமிழர்களின், விடுதலை விரும்பிகளின் தார்மீகக் குரலாகவும் இருந்தது. வைகறையின் குரல் அவற்றில் ஒன்று. ஆனால், தனத்துவமானது. அந்தத் தனித்துவத்திற்கு ஒரு அடையாளமாக நாம் பார்க்கக்கூடிய ஒன்று, தமிழகத்தின் வணிக ஊடகங்கள் ஈழப் போராட்டத்தைச் பரபரப்பாக மட்டுமே அணுகிய காலத்தில், போராட்டத்தின் அரசியல் பரிமாணங்களையும் மக்களின் அன்றாடத் துயரங்களையும் சர்வதேச அரசியல் பின்னணியையும் நடுநிலையோடு விவாதிக்கும் தளங்களை வைகறை உருவாக்கினார் என்பது. இன்று கூட வணிக இதழ்கள் ஈழப்போராட்டத்தை வணிக மயப்படுத்தும் நோக்கிலேயே அணுகி வருகின்றன. வைகறையோ இதற்கு மாற்றான தளத்திலேயே தன்னை நிறுத்திக் கொண்டு செயற்பட்டார். அதற்கான அணியொன்றும் அவருடன் கூட இயங்கியது. இதனால் ஈழப் போராட்டத்தின் அரசியல் கோட்பாடுகளையும் விடுதலைக் கருத்துகளையும் ஆழமாக விவாதிக்கும் வகையில் தன்னுடைய பொறுப்பில் வெளிவந்த  சிற்றிதழ்களை நடத்தினார். ஈழ விடுதலை இயக்கங்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்கும், தமிழகத்தின் அறிவுஜீவிகளுக்கும் ஈழப் போராட்டத்திற்குமான உரையாடலுக்கு வைகறையின் இதழ்கள் ஒரு பாலமாகச் செயல்பட்டன.

வைகறையின் தொடர் செயற்பாட்டில் போரின் நிழலில் உருவான ஈழத்துக் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மற்றும் அரசியல் கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாகக் கொண்டுவந்தார். ஈழத்து நவீன இலக்கியமும், போராளிகளின் கவிதைகளும் தமிழகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த இவரது பதிப்பு முயற்சிகள் முதன்மைக்காரணம். அத்துடன், ஈழ நிலப்பரப்பில் நடந்த மனித உரிமை மீறல்கள், இன ஒடுக்குமுறையின் வரலாற்றுப் பின்னணிகள் மற்றும் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய தருணங்கள் என ஆவணப்படுத்தும் நூல்களுக்கும் கவனம் செலுத்தினார் வைகறை.

சொந்த மண்ணின் போராட்டத்தில் இணைந்திருப்பது வேறு. ஏனென்றால், போராளி என்பவர் ஆயுதம் ஏந்திப் போர்க்களத்தில் நிற்பவர் மட்டுமல்ல; நிலப்பரப்பு கடந்து, தன் வாழ்நாளையும் சிந்தனையையும் அப்போராட்டத்திற்காகவே தியாகம் செய்த வைகறை போன்றவர்களும்தான். ஆனால், மாற்று நிலத்தில் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்பது என்பது எளிதான காரியமல்ல. வைகறை போன்ற உணர்வாளர்கள் தங்கள் வாழ்நாளில் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களும், பொருளாதார நெருக்கடிகளும், அரசுக் கெடுபிடிகளும் ஏராளம். ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காகப் பல்வேறு அபாயங்களையும் தனிப்பட்ட துயரங்களையும் அவர்கள் சந்திக்க நேரிட்டது. 1991 இல் தமிழகத்தில் நடந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் உருவான ஈழ ஆதரவாளர்கள் மீதான நெருக்கடி பயங்கரமான நிலைமையை உருவாக்கியது. பலருடைய செயற்பாடுகள் முடக்கப்பட்டது மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையையே பார்த்துக் கொள்ள முடியாது என்றானது. ஆனால், வைகறையைப் போன்றவர்கள் இதையெல்லாம் கண்டு சோர்ந்து விடவில்லை. என்பதால் எந்தவொரு அடக்குமுறையோ, நிதி நெருக்கடியோ வைகறையின் மானுட விடுதலை நேசிப்பையோ, அவரது பதிப்புச் செயல்பாடுகளையோ முடக்க முடியவில்லை. இது முக்கியமானது.

2009 இல் ஈழ விடுதலைப் போராட்டம் பேரழிவோடு முடிவுக்கு வந்தபோது, உலகெங்கிலும் இருந்த தமிழர்களும் ஆதரவாளர்களும் மீள முடியாத சோகத்திலும் மனச்சோர்விலும் மூழ்கினர். ஆனால், நிஜமான போராளிகளும் அர்ப்பணிப்பான ஆதரவாளர்களும் தோல்வியைக் கண்டு முடங்கிவிடுவதில்லை. போராட்டத்தின் வீழ்ச்சி வைகறையைச் சோரச் செய்யவில்லை. “அடுத்தகட்டமாக நாம் என்ன செய்ய வேண்டும்? புதிய வழிகளில் எப்படி இந்தப்போராட்டத்தின் நியாயங்களை, மக்களின் துயரங்களை உலகிற்கு எடுத்துச் சொல்ல  வேண்டும்?” என்ற வேட்கையோடு தொடர்ந்து இயங்கினார். நிலம் தோற்றிருக்கலாம், ஆனால் அதன் பின்னிருந்த நியாயமும் கருத்தியலும் தோற்கவில்லை என்பதைத் தனது தொடர் எழுத்துகள், பதிப்புச் செயல்பாடுகள் மூலம் நிரூபித்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை அந்த லட்சிய உறுதியோடு இயங்கிய வைகறை, எல்லைகளைக் கடந்த மானுட விடுதலையின் அடையாளம். அவர் பிறப்பினாலும் வாழுமிடத்தினாலும் ஈழத்தவர் அல்லர்; ஆனால் ஈழ மக்களின் விடுதலைக் கனவைத் தன் சொந்த நெஞ்சில் சுமந்து வாழ்ந்தவர். வாழ்வினால் ஈழத்தவர் ஆகியவர். 

வைகறையின் கனவிலும் மனதிலும் ஈழமே இருந்தது. அவர் காண விரும்பிய ஈழ விடுதலை சாத்தியமாகாது விட்டாலும் ஒரு தடவையாவது ஈழ நிலத்தை, அங்குள்ள மக்களை, அங்குள்ள பனை மரங்களை, வயல்களை, ஆறுகளை, அந்தப் பண்பாட்டு அடையாளங்களை, ஒடுக்குமுறையின் சிதைவுகளை, விடுதலைக்காக நடந்த வழித்தடங்களை எல்லாம் பார்த்து விட வேண்டும் என்று விரும்பியிருந்தார். அந்த விருப்பமும் (கனவும்) நிறைவேறவில்லை. இது துயரே. 

இருந்தாலும் ஈழப் போராட்டம் தோற்றுப்போய்விட்ட பின்னும், அதை நேர்மையோடும் அர்ப்பணிப்போடும் நெஞ்சில் ஏந்தி வாழ்ந்த தோழர் வைகறையின் வாழ்வு, விடுதலையாளர்களின் மனதில் அழியாச் சிற்பம். விடுதலைக் கனவு சாம்பலானாலும், அதைத் தன் மூச்சு உள்ளவரை தணலாகச் சுமந்து வாழ்ந்த இந்த மூத்த ஆளுமைக்கு வரலாற்றுப் பக்கங்களில் என்றென்றும் நீங்காத இடமுண்டு. அந்த இடத்தை இந்தப் பதிவும் வலியுறுத்துகிறது; வழங்குகிறது. அது தோற்றுப்போன போராட்டத்தின் பாரத்தைச் சுமந்து வாழ்ந்த ஒரு நேர்மையான போராளியை, தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான கருத்தியல் பாலமாகச் செயல்பட்ட ஒரு பதிப்பாளரை, மதி்ப்போடும் அன்போடும் வரலாற்றுப் பக்கங்களில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வரலாற்றுணர்வின், உண்மை விருப்பத்தின் வெளிப்பாடாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *