— அழகு குணசீலன் —
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பு இருபத்தியிரண்டாவது தடவையாக திருத்தப்படுவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதாவின் அரசியல் அமைப்பு ஏற்புடமை மற்றும் முரண்பாடு குறித்து ஐந்து நீதியரசர்களைக்கொண்ட குழு ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில் தென்னிலங்கை சிங்கள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குறிப்பிட்ட திருத்தம் பாராளுமன்ற ஜனநாயக அரசியல் பாரம்பரியத்திற்கு ஜனநாயக விரோதமானது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. அவர்களின் பிரதான கவலை நீதித்துறையின் சுதந்திரமான செயற்பாடு, அதிகாரப்பிரிவினை தொடர்பானதாக அமைகிறது. ஆனால் பாராளுமன்றத்தில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற சிறுபான்மை கட்சிகளின் நிலைப்பாடு இது விடயமாக இன்னும் தெட்டத்தெளிவானதாக இல்லை.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் என்பனவும் மசோதாவுக்கு எதிர் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னெப்போதும் இல்லாதவாறு 67 எதிர்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது இந்த அரசியல் விவகாரத்தின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது. தென்னிலங்கையின் அரசியல் விழிப்புணர்வை, ஆர்வத்தை, அரசியல் பங்கேற்பை வெளிப்படுத்துகிறது. பிராந்திய, சர்வதேச சட்ட அமைப்புக்களும் இந்த மசோதாவின் ஜனநாயக முரண்பாடு குறித்து கவலைகளை வெளியிட்டுள்ளன. எதிர்காலத்தில் ஜே.வி.பி.- என்.பி.பி.அரசாங்கத்தின் சர்வதேச அரசியல், பொருளாதார போக்குகளுடன் இந்த விவகாரம் தொடர்புபடுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களை நிராகரிக்க முடியாதுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை அரசியல் நிகழ்வில் சிறாபான்மையினர் கட்சிகள் வெளிப்படைத்தன்மையற்றும், அடக்கியும் வாசிப்பதன் மர்மம் என்ன? பாராளுமன்றத்தில் இலஞ்சம், ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, ஈஸ்டர் படுகொலை சூத்திரதாரியை தேடுதல் என்பனவற்றில் இந்த கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளன. அதுவல்ல விவகாரம் மேற்குறிப்பிட்ட இலக்குகளை ஒரு சட்டவாட்சி கட்டமைப்பு ஜனநாயகத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாமல் எப்படி அடையப்போகிறது என்பதே கேள்வியாகும்.
ஏற்கனவே பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், மாகாணசபை தேர்தலை நடாத்துதல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இராணுவம் அத்துமீறி கையகப்படுத்திய பொதுமக்களின் காணிகள், தொல்பொருள் ஆராய்ச்சி ….. போன்ற போர்வையில் சட்டம் தன்னிச்சையாக ஜனநாயக மறுப்புக்கும், நீதித்துறையில் நிர்வாகத்தலையீட்டுக்கும் எண்ணற்ற நிகழ்வுகள் பட்டியலில் உள்ளன. வடக்கு கிழக்கில் சேகரித்துக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் இந்த சந்தேகம் வலுவற்றதல்ல.
இருபத்தியிரண்டாவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி, அனுபவம் வாய்ந்த நீதிபதிகளை கொண்டு தேங்கிக்கிடக்கும் பதினொரு இலட்சம் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தப்போவதாக கூறுகிறது. காலதமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று வாதிடுகிறது.
இதை மறுத்து நிற்கின்ற எதிர்த்தரப்பினர் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறைவானவை என்றும் மற்றைய நீதிமன்றங்களில் ஒன்பது இலட்சம் வழக்குகள் தேங்கிக்கிடப்பதாகவும் வாதிடுகின்றனர். அத்துடன் அடிப்படை நீதிக்கோட்பாட்டை கோடிட்டு குறிப்பிட்ட சட்டத்திருத்தத்தின் மூலம் நேரடியாக முதல் பயனாளியாகும் ஒரு நீதிபதி அந்த விவகாரத்தை எவ்வாறு விசாரணை செய்ய முடியும் என்றும் , இது “தனக்குதானே நீதிபதி” என்ற வகையில் அடிப்படை நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் என்றும் கூறுகின்றனர்.
முழுமையான 13 நீதிபதிகளின் அமர்வை கோரிய எதிரணியினர் இந்த மசோதா பாராளுமன்ற பெரும்பான்மையினால் மட்டும் நிறைவேற்றப்பட முடியாதது என்றும், மக்கள் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படவேண்டும் என்றும் கோருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் சிறுபான்மை கட்சிகள் பாராளுமன்றத்திலும், ஊடகச்சந்திப்புக்களிலும் ஆங்காங்கே பட்டும் படாமலும் சில விடயங்களை குறிப்பிட்டு இருந்தாலும் தெளிவான, கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கைகள் வெளி வந்ததாக இல்லை. இது சிறு பான்மை கட்சிகளின் ஒரு நழுவல்போக்கையும், மறைமுகமாக இந்த அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகளை பெரிது படுத்தாது “சுய அரசியல் பயன்பாடு” இலக்கை அடையும் வகையில் மறைத்து வைத்து செயற்படுகின்றனவா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஜனநாயகம், அதிகாரப்பிரிவினை- நீதித்துறை சுதந்திரம் என்பன என்னகேடு கெட்டாலும் இந்த கட்சிகள் – ஆறு கட்சி கூட்டணி உட்பட தமது அரசியல்வாதிகள் மீது இலஞ்ச, ஊழல் விசாரணை, ஈஸ்டர் படுகொலை விசாரணை, சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்த விசாரணைகள் … போன்றவை பாயாமல் இருக்க – தம்மை பாதுகாத்துக் கொள்ள கள்ள மௌனம் சாதிக்கின்றனவா? . ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அரசியல் அமைப்பு திருத்த எதிர் மனுக்கள் சார்பாக ஆஜராவது மட்டும், சர்வஜன வாக்கெடுப்பை கோரிநிற்கின்ற இந்த முறையீட்டில் போதுமான தமிழரசு மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலாக இருக்க முடியாது. அரசாங்கமும், தென்னிலங்கை எதிர்க்கட்சிகளும் மக்கள் நோக்கி தங்கள் பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில் சுமந்திரன் கோரிநிற்கின்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்ற தீர்ப்பு வழங்கப்படுமாயின் தமிழரசுக்கட்சி உட்பட இந்த கட்சிகள் நழுவல் அரசியல் செய்ய பதுங்குகின்றனவா?
இந்த பதுங்குதலின் பின்னால் ஒழிந்திருக்கின்ற அரசியல் தான் சுவாரஸ்யமானது. ஜனநாயக மறுப்பு, நீதித்துறை சுதந்திர மறுப்பு, அதிகார பிரிவினை துஷ்பிரயோகம் என்பனவற்றை மறைமுகமாக ஆதரித்து அரசியல் எதிரிகளை பழிவாங்கும் இலக்கையே இவர்களும் கொண்டுள்ளனரா? என்ற கேள்வி எழுகிறது.
(*) முள்ளிவாய்க்காலுக்கு பழிவாங்க ராஜபக்சாக்களுக்கு எதிராக 22வது திருத்தம் கைகொடுக்கும் என்று தமிழ்த்தேசிய தரப்பு நம்புகிறது. யுத்தத்தில் ராஜபக்சாக்களையும், இராணுவத்தையும் பாதுகாக்கும் அரசாங்கம், வேறுவழிகளில் பழிவாங்க தமிழ்த்தேசியம் எதிர்பார்க்கிறது. இதற்குள் தமிழ்பேசும் மக்களின் அதிகாரப்பகிர்வு முடக்கப்படுகிறது.
(*) ஈஸ்டர் படுகொலையில் ஷஹ்ரானின் வகிபாகத்தை கழுவி கறையை அகற்றி சூத்திரதாரியை தேட முஸ்லிம் அரசியல் முனைகிறது. அதற்கு நீதித்துறை சுதந்திரத்தை பலி கொடுக்கவும் அது தயார்.
(*). ஜனஸா எரிப்பு விவகாரத்தில் ராஜபக்சாக்களுக்கு பாடம் புகட்டவும் இருபதாவது திருத்தத்தை ஆதரித்த அரசியல் கறையை கழுவி சொந்த சமூகத்திற்கு செய்த அநியாயத்தை மறைத்து மீண்டும் முஸ்லிம் காங்கிரஸின் கதிரைகளை இன்னொரு பிரிவினர் கணக்கு போடுகின்றனர்.
(*) மலையக கட்சிகள் காலத்திற்கு காலம் பேரினவாத அரசியலுக்கு அனுசரணை வழங்கியதை அரசாங்க தலைமைகளின் தலைகளில் கட்டிவிட்டு தப்பி கொள்ள முனைகின்றனர்.
நீதித்துறை ஜனநாயகத்தை 22 வது திருத்தத்திற்கு விலையாக கொடுத்து குறுகிய அரசியல் இலாபத்தை அடைவது என்ற கொள்கை ஜே.ஆர் முதலான ஏ.டி.கே. வரையான நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளின் அரசியல் முகங்களுக்கு திரைபோடும் அரசியலாகவே அமையும். அதையே வடக்கு, கிழக்கு, மலையக கட்சிகள் சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கின்றன.
