— பேராசிரியர் த. ஜெயசிங்கம் —
முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நாம் மரியாதையின் நிமித்தம் நினைவு கூருகிறோம், ஆனால் ஒருவரைப் பறிகொடுத்து தங்களின் உறவுகள் காணாமல்போயுள்ள குடும்பங்களைப் பொறுத்தவரை, இது ஒரு நினைவேந்தலோ அல்லது நினைவுகூருதலோ அல்ல. மாறாக, காணாமல்போனவர்களைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைக்குமா கிடைக்காதா என்ற எதிர்பார்ப்புடன், அவர்கள் கடந்துவர வேண்டிய மற்றொரு துயரம் நிறைந்த ஆண்டாகும். இது கையாள்வதற்கு மிகவும் மனவேதனையும் துயரமும் நிறைந்த ஒரு தொடர் நிகழ்வு.
1990 செப்டம்பர் 5 ஆம் திகதி வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்து 158 பேர் ஆயுதப் படைகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். 36 ஆண்டுகளுக்குப் பிறகும், அவர்களைப் பற்றிய தகவல்களை அறிய நாங்கள் இன்னும் காத்துக்கொண்டிருப்பதால் இதை நான் நன்கறிவேன். 36 ஆண்டுகள் கடந்த நிலையிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆண்டுதோறும் சந்தித்து, தங்களின் துயரத்தையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதோடு, காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பதை அறிவதற்கான தொடர் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, யாராவது ஒருவரிடமிருந்தாவது தகவல் வராதா என்று இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களாகவே உள்ளனர். நீதித்துறை என்பது ஆட்சியின் ஒரு அங்கமாக இருக்கும் ஒரு ஜனநாயக நாட்டில், நிகழ்ச்சி நிரலிலும் பதிலிலும் காணாமல்போன இந்த விவகாரத்தில் நீதியும் காணாமல் போயுள்ளதாகவே தெரிகிறது.
யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர் தொடர்பான மாதர்களின் சங்கம், காணாமல்போன தங்களது உறவுகளுக்காகக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகிறது. தேசிய அளவிலான அமைப்புகளும் பல்வேறு சம்பவங்களைக் கண்காணித்து, ஒரு ஜனநாயக நாட்டில் இதற்கான பதில் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் கூட்டாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், மிகக் குறைந்த அளவிலான முன்னேற்றமே ஏற்படுவதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்திற்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை அதிகாரிகள் ‘கடினமாக நடத்திய’ சமீபத்திய யாழ்ப்பாணச் சம்பவங்கள், வெறுமனே ஒரு கூட்டத்தை கையாளும் பிரச்சனையா? அல்லது தாங்கள் மறக்க நினைக்கும், ஆனால் மக்கள் நினைவில் வைத்திருக்கும் ஒரு விவகாரம் குறித்த அதிகாரிகளின் விரக்தியின் வெளிப்பாடா?
நிதியியல் முறைகேடுகள், மோசடிகள், நிர்வாகச் சீர்கேடுகள் போன்றவற்றைத் தீவிர குற்றங்களாகவும், முந்தைய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ‘நடவடிக்கை எடுக்காமையை’ கடுமையான குற்றமாகவும் கருதும் ஒரு அரசாங்கத்தால், காணாமல்போன மக்களின் மற்றும் அவர்களது குடும்பங்களின் விதியை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாகக் கருத முடியவில்லை.
நடவடிக்கை எடுக்காததற்காக அரசையோ அல்லது அதன் உறுப்பினர்களையோ பொறுப்பாக்க முடியுமா? காணாமல்போன சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் பெயர்கள்/பதவிகள் (உதாரணமாக, கிழக்கில் காணாமல்போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு) குறிப்பிடப்பட்டிருந்தாலும், நமக்குத் தெரிந்தவரை அவர்கள் எவரும் விசாரணைக்காகவோ அல்லது வழக்குக்காகவோ அழைக்கப்படவோ அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது எதை உணர்த்துகிறது? ஏற்றுக்கொள்வதையா அல்லது நிராகரிப்பதையா?
காணாமல்போன தங்களது உறவினர்களைப் பற்றிக் கேள்வி எழுப்பும் இந்த குடிமக்களுக்கு இவை இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. தற்போதைய அரசாங்கம் மோதல்களின் போது மக்கள் காணாமல்போன விவகாரத்தை நன்கு அறிந்திருக்கிறது. மேலும் தங்களது போராட்டங்களின் போது பல பகுதிகளில் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கும். அவ்வாறிருக்க, காணாமல்போன மக்களின் பிரச்சினைகளைப் புறக்கணிப்பது என்பது நிஜமான அணுகுமுறையாக இல்லாமல், வெறும் சுயநல வாய்ப்பாதரவாகவே தோன்றுகிறது.
1990 செப்டம்பர் 8 ஆம் திகதி வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் உள்ள எனது அலுவலகத்தில் வைத்து, அன்றைய கிழக்கிலங்கை கட்டளைத் தளபதி ஜெனரல் கெரி டி சில்வா கூறிய ‘அவர்கள் அனைவரும் விடுதலை புலிகள், அவர்களைப் பற்றிக் கேட்காதீர்கள்’ என்ற வார்த்தைகள் இன்னமும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக, நீதியரசர் பாலக்கிட்ணர் தலைமையிலான கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இந்த நடவடிக்கை குறித்து வாக்குமூலமோ அல்லது சாட்சியமோ அளிப்பதற்கு இவர் ஒருபோதும் அழைக்கப்படவில்லை.
2008/9 காலப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் சரணடைவதைக் காண முடிந்தது. மேலும் சிறையிலும் காவலிலும் இருந்தவர்கள் தொடர்பான பல தகவல்கள் தொலைக்காட்சி மற்றும் ஆவணங்கள் மூலம் காண்பிக்கப்பட்டு பெரும் மகிழ்ச்சியைக் தந்தன. ஆனால் இப்போது அவர்கள் கைதாகி வைத்திருக்கப்பட்டதைக்கூட யாரும் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.
அனந்தி சசிதரன் தனது கணவர் கைது செய்யப்பட்ட பிறகு காணாமல்போனதைச் சவாலுக்கு உட்படுத்தி, இன்னமும் நீதி தேடும் பாதையில் பயணிக்கும் ஒருவராவார். அவரைப்போல் செயல்பட முடியாத நூற்றுக்கணக்கானோர், ஜனநாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்து, பதில்களைத் தேடி காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களின் முன் கூடுகிறார்கள்.
இந்த நாட்டில் பல பிரச்சினைகளுக்காக ‘அரகலய’ (போராட்டம்) முன்னெடுக்கப்பட்டு, அது அரசாங்கத்திலும் ஜனாதிபதியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், அந்தப் போராட்டத்தின் சாம்பலிலிருந்து உருவானவர்கள், காணாமல் போனவர்களைத் தேடிப் போராடுபவர்களின் போராட்டத்தை அங்கீகரிக்கத் தயங்குவதை, சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் பொலிசாரைப் பயன்படுத்தி அவர்களை அப்புறப்படுத்திய நிகழ்வு தெளிவாகக் காட்டுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்திடமிருந்து தங்களது கேள்விகளுக்குப் பதில் தேடும் இரண்டு தரப்பினரின் அணுகுமுறையிலும் சூழலிலும் எத்துணை வேறுபாடு. குறிப்பாக, முதல் போராட்டமான ‘அரகலய’வின் கல்லறைகளிலிருந்து மீண்டெழுந்தவர்களிடமிருந்து இந்த அணுகுமுறை வெளிப்படுவது விசித்திரமானது. ஆனால் வரலாறு எப்போதும் மாறாத ஒன்றாகவே இருந்துள்ளது.
மக்களுக்கு தங்களின் உரிமைகள் மறுக்கப்படும்போதோ அல்லது அத்தகைய ‘பிரஜைகளின்’ கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கத் தவறும்போதோ, உண்மையான அக்கிரமங்களுக்கும் குற்றங்களுக்கும் காலம் பதில் சொல்லியே தீர்ந்துள்ளது—சில வேளைகளில் உலகெங்கிலும் புதிய தேசங்கள் உருவாகவும் இது வழிவகுத்துள்ளது.
காணாமல் போனோர் பற்றிய பிரச்சினையைக் காற்றுடன் காற்றாகக் கரைந்துவிடும் என்று எதிர்பார்ப்பதை விட, அரசும் அரசாங்கமும் அதற்கு உடனடித் தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது. ஆனால், அந்தக்காற்று பல ஆண்டுகள் கழித்து சுறாவளியாக மாறி, தூசுகளை அகற்றி, உண்மையான நிலப்பரப்பை வெளிப்படுத்தும் என்பதை வரலாறு நமக்குக் காட்டியுள்ளது.
காணாமல் போனவர்கள் உலகின் ஏதோவொரு பகுதியில் உயிரோடு இருக்கிறார்கள் என்ற பலரின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதோடு, அதுவே நடக்க வேண்டும் என விரும்பும் அதே வேளையில், அவர்கள் கடைசியாகக் காணப்பட்ட இடங்களான காகித ஆலை முகாம் மற்றும் நாவலடி இராணுவ முகாம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் புதைக்கப்பட்ட அடையாளங்கள் உள்ளதா என ஆராய்வதற்கான சரியான தருணம் இதுவாக இருக்கலாம்.
கைது செய்யப்பட்ட காலகட்டத்தில் அந்த இடங்களில் மக்களின் அலறல் சத்தங்கள் கேட்டதாக, இதுவரை அறியப்படாத ஆனால் தகவலறிந்த மூலங்கள் கூறுகின்றன. அந்தக்காலத்தைச் சேர்ந்த பலரால் மற்றவர்களை விட அதிக வெளிச்சத்தைக் கொண்டுவர முடியும். மனிதகுலத்திற்கு எதிராக ஏதேனும் குற்றம் இழைக்கப்பட்டிருந்தால், அதை வெளிக்கொணர்வது அவர்களின் மனசாட்சியை விடுவிக்கவாது உதவும்.
பல தசாப்தங்கள் ஆனாலும், நாங்கள் கடந்துபோன பிறகும் கூட, நேர்மறையான ஒரு பதில் கிடைக்கும் வரை நாங்கள் காத்திருக்கிறோம், காத்திருப்போம். நவீன தொழில்நுட்பங்களின் மூலம் நிலப்பரப்பிலிருந்தோ அல்லது வான்வழியிலிருந்தோ பெரிய அளவிலான மனிதப் புதைகுழிகளை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை கண்டறிய முடியும்.
காணாமல் போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் மீது எவ்விதத் தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், அரசு இதைச் செய்யத் தயங்கினால், புலம்பெயர் மக்கள் இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி ஒரு திட்டமாக மேற்கொள்ளலாம். இந்த ஆணைக்குழுவின் அறிக்கை பின்பற்றப்படாவிட்டால், அது அந்த முயற்சியையே வீணடிப்பதற்குச் சமம்.
வந்தாறுமூலையில் காணாமல் போனவர்கள் தொடர்பாகப் பல ஆவணங்கள், நேர்காணல்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் கூடத் தொகுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். தங்களின் தவறு அல்லது குற்றம் என்னவென்று கூறுவதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படாமல் காணாமல் போனவர்களுக்கு, இது ஒரு அடையாளச் சின்னமாக உயர்த்தப்பட வேண்டும். மேலும், தங்களுக்குப் பிரியமானவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையுடனும் துயரத்துடனும் 36 ஆண்டுகளாக வேதனையுடன் பயணித்து வரும் மனிதர்களுக்கு, இந்த நம்பமுடியாத நம்பிக்கைப் பயணம் ஒரு ஆறுதலாக அமையும்.
“யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மை என்றாவது ஒரு நாள் வெளிவந்தே தீரும், அது வரலாற்றையே மாற்றியமைக்கும்” என்ற ஆழமான நம்பிக்கைதான், காலப்போக்கில் தேசங்களின் துயரங்களுக்குக் காரணமாக அமைகிறது. தங்களுக்குப் பிரியமானவர்களைத் தேடுவதில் மகத்தான தைரியத்தை வெளிப்படுத்தி, மேலும் காத்திருக்கத் தயாராக இருக்கும் அனைவருக்கும், அவர்களின் துயரைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் வணக்கங்கள்… அவர்களின் துயரைப் பகிர்ந்து கொள்ள நான் இன்னும் எவ்வளவு காலம் இருப்பேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் தலைமுறைகள் கடந்தும் என் வாழ்த்துகள் என்றும் நிலைத்திருக்கும்.
( பேராசிரியர் ஜெயசிங்கம் 1990 செப்டெம்பர் 5 வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்த அகதி முகாமின் பொறுப்பதிகாரியாக பணியாற்றியவர் )
