கேதீஸ் லோகநாதனும் இழக்கப்பட்ட தலைமுறையும்

கேதீஸ் லோகநாதனும் இழக்கப்பட்ட தலைமுறையும்

— அகிலன் கதிர்காமர் —

இருபது ஆண்டுகள் என்பது நீண்ட காலம். கேதீஸ்வரன்  லோகநாதனைப் பற்றி எனக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே தீவிரமாகத் தெரிந்திருந்தாலும், இந்த ஆண்டுகளில் நான் அடிக்கடி அவரைப் பற்றி யோசிப்பதுண்டு. என் தந்தை பல தசாப்தங்களாக கேதீஸுடன்  தொடர்பில் இருந்தார், அவரது அறிமுகமே கேதீஸுடன்  ஒரு நட்பையும் கூட்டுச் செயற்பாட்டையும்  தொடங்கியது. ஆனால், ஆகஸ்ட் 12, 2006 அன்று அவரது படுகொலையுடன் அது திடீரென முடிவுக்கு வந்தது.

ஒரு வன்முறை நிறைந்த அரசியல் கலாசாரத்தால் தங்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதன் மூலம், தமிழ் சமூகமும் ஒட்டுமொத்த நாடும் மகத்தான ஆர்வலர்களை இழந்துவிட்டன. அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து அரசியல் மற்றும் பொருளாதார களங்களில் முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தால், சமூக மாற்றத்திற்கான அவர்களின் ஆர்வம் நாட்டின் எதிர்காலத்தையே மறுவடிவமைப்பு செய்திருக்கக்கூடும். 

இத்தகைய துணிச்சலான மனிதர்கள், மாற்றுக் கருத்துக்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் சோகமான தியாகங்கள் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்வது அவசியம் என்று நான் கருதுவதால், கேதீஸைப் பற்றி இங்கு எழுதுகிறேன்.

உயர்குடி  வளர்ப்பிலிருந்து தீவிரவாதம் வரை

கேதீஸ்  ஒரு பிரபலமான தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் இலங்கை வங்கியின் முதல் இலங்கை பொது முகாமையாளரின் மகனாவார்;  அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் முன்னணி சமூக அறிவியல் நிறுவனங்களிலும் கல்வி கற்றார். தனது உயர்குடி வளர்ப்பையும் மீறி, தனது தலைமுறையைச் சேர்ந்த பல தமிழ் இளைஞர்களின் உணர்வால் ஈர்க்கப்பட்டு, தமிழ் தீவிரவாத இயக்கங்களில் ஒன்றில் சேர்ந்தார்.

கேதீஸின் மார்க்சிய சாய்வு அவரை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) அழைத்துச் சென்றது. உள்நாட்டுப் போரின் தொடக்க கட்டங்களில் தமிழ் தேசியவாதத்தால் உந்தப்பட்டாலும், சாதி எதிர்ப்பு மற்றும் வர்க்க அரசியலைக் கையில் எடுத்த ஓர் அமைப்பாக அது திகழ்ந்தது. 1986 ஆம் ஆண்டுக்குள், விடுதலை புலிகள் இயக்கம் அதன் சர்வாதிகார அரசியலால் மாற்றுக் கருத்துக்களை முறைப்படி அழித்து, மற்ற அனைத்து தமிழ் தீவிரவாதக் குழுக்களையும் இலக்கு வைத்ததால், குழுக்களிடையேயான மோதலில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.  பெரும்பாலும்  நசுக்கப்பட்டது.

 1988 முதல் 1990 வரை இந்திய அமைதி காக்கும் படையின் ஆதரவின் கீழ் வடக்கு – கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்த பிறகு, இந்திய அமைதி காக்கும் படையின்  வெளியேற்றத்துடன்  ஈ.பி.ஆர்.எல்.எவ். இந்தியாவிற்குப் பின்வாங்கியது.  1990 ஜூனில்  சென்னையில் விடுதலை புலிகளினால்  12 க்கும் மேற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்.  தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இருப்பினும், அந்த விதியை தீர்மானித்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காத கேதீஸ்  உட்பட ஒரு சில தலைவர்கள் உயிர் தப்பினர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைமையிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்ததால், 1990-களின் நடுப்பகுதியில் கேதீஸ் அந்த இயக்கத்திலிருந்து  விலகி, முதலில் பத்திரிகைத் துறையிலும், பின்னர் மோதல் தொடர்பான அரசியல் ஆய்வாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். 

இந்த காலகட்டத்தில் தான் இலங்கையில் அரசியல் தீர்வைக் காண்பது குறித்த ‘இழந்த வாய்ப்புகள்’ (Lost Opportunities) என்ற முக்கியமான புத்தகத்தை எழுதினார். 1985 ஆம் ஆண்டில் பூட்டான் தலைநகர்  திம்புவில் இலங்கை அரசுக்கும் பல தமிழ் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே இந்தியாவின் அனுசரணையில் நடைபெற்ற ஆரம்பகால பேச்சுவார்த்தைகளில் கேதீஸ் பங்கேற்றவர் என்பதால், அந்தப் புத்தகத்தை எழுத அவர் தகுதியானவராக இருந்தார். 

அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதிலும், தற்போது “திம்பு கோட்பாடுகள்” எனப் புகழ்பெற்ற தமிழ் தேசியவாத நிலைப்பாட்டை உருவாக்குவதில் கேதீஸ்  மையமாக இருந்தார்.

நோர்வே சமாதான செயன்முறை

2002 ஆம் ஆண்டில்  சர்வதேசமயமாக்கப்பட்ட நோர்வே சமாதான செயல்முறையின் போது நான் கொழும்பில் கேதீஸை  சந்தித்தபோது, அவர் தனது முந்தைய தமிழ் தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து கணிசமாக மாறியிருந்தார். அவர் அப்போது மாற்றுக். கொள்கைகளுக்கான நிலையத்தில்  (Centre for Policy Alternatives – CPA) பணியாற்றிக் கொண்டிருந்தார். 

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுடனான அமைதியைக் கோரி வெளிநாடுகளில் உள்ள நம்மில் சிலர் வெளியிட்ட முக்கிய பொது அறிக்கையைப் பற்றிய விவாதத்திற்குப் பிறகு, அவர் தனது சக ஊழியர்களுக்கு என்னை அறிமுகப்படுத்திய எங்கள் முதல் சந்திப்பு எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது.

எங்கள் ஆரம்பகால சந்திப்புகளில், விடுதலை புலிகளின்  சர்வாதிகாரப்  பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ் அரசியலின் நிலை குறித்து நாங்கள் இருவரும் உடன்பட்டாலும், ஒரு முக்கிய புள்ளியில் வேறுபட்டோம். நான் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பால்  ஈர்க்கப்பட்டதால், விடுதலை புலிகளின்  பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணத்தில் மிகுந்த சந்தேகத்துடன் இருந்தேன்.

மேலும் விடுதலை புலிகள்  மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கும், அதற்குள் தமிழ் சமூகத்தில் எஞ்சியிருக்கும் எந்தவொரு மாற்றுக் கருத்தையும் அழிப்பதற்கும் காலத்தைக்  கடத்துகிறது என்று நம்பினேன். இருப்பினும், கேதீஸ்  இதில் ஈடுபட விரும்பினார், நோர்வே சமாதான செயன்முறையை ஒரு முக்கியமான வாய்ப்பாக அவர்  கருதினார்.

ஒரு வருடம் கழித்து, 2003 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தமிழ் மாற்றுக் கருத்தாளர்களை விடுதலை புலிகள் படுகொலை செய்வது தீவிரமடைந்தபோதும், ஈ.பி.ஆர்.எல்.எவ்.வில் அவரது முன்னாள் தோழரான ‘ராபர்ட்’ என்று அழைக்கப்படும் தம்பிராஜா சுபத்திரன் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டபோதும், அனைத்து நோக்கங்களுக்காகவும் அமைதிப் பேச்சுவார்த்தை இறந்துவிட்டது என்ற நிலைப்பாட்டிற்கு கேதீஸ்  வந்தார். 

மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அனைத்து சமூகங்களின் பங்கேற்பு ஆகியவற்றின் விடயங்களில்  கூட, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும்  இடையே ஒரு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த முற்பட்ட நோர்வேயின் பங்களிப்பை அவர் கடுமையாக விமர்சித்தார்.

அதிகாரத்திற்கு உண்மையைப் பேசுதல்

பெரும்பாலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  உட்பட கொழும்பு நிறுவனங்கள் நோர்வேயின்  அணுகுமுறையுடன் ஒத்துப்போயிருந்த வேளையில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆதரவு பெற்ற சர்வதேசமயமாக்கப்பட்ட சமாதான செயன்முறையை சவாலுக்கு உட்படுத்திய கொழும்பின் சில முற்போக்குக் குரல்களில் கேதீஸும்  ஒருவர். தமிழ் விமர்சகர்கள் எவரையும் விடுதலை புலிகள்  அரிதாகவே விட்டுவைத்ததால், கேதீஸ்  தனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட வேண்டிய ஒரு சூழலாக இது இருந்தது.

உண்மையில் நம்மில் பலர் அவரது உயிருக்கு பயந்தோம்.

அந்த தீவிரமான ஆண்டுகளில், கட்டவிழ்ந்த  சூழலின் பகுப்பாய்விற்காக நம்மில் பலர் கேதீஸை நோக்கியே பார்த்தோம். அவர் டெயிலி மிறர்  இதழின் பக்கங்களில் “சத்யா” (உண்மை என்று பொருள்) என்ற புனைப்பெயரில் தவறாமல் ஒரு சக்திவாய்ந்த பத்தியை எழுதி வந்தார், அது நோர்வே சமாதான செயன்முறையின் மீதான ஒரு கடுமையான விமர்சனமாக மாறியது. உண்மையில், கேதீஸின் பத்தி நான் இங்கு சொந்தமாக எழுதத் தொடங்குவதற்கு ஒரு உத்வேகமாக இருந்தது. ஆனால் அவரது நடை தந்த ஆற்றலையும் தெளிவையும் என்னால் ஈடுசெய்ய முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அவரது துரதிர்ஷ்டவசமான படுகொலைக்கு முந்தைய ஆண்டுகளில், நான் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். வெளிநாட்டில் வாழ்ந்த நம்மில் சிலர், அங்குள்ள பாதுகாப்பு மற்றும் இடைவெளியைப் பயன்படுத்தி, கவலையளிக்கும் நிகழ்வுப் போக்குகள்  மற்றும் வெளிப்பட்டு வரும் பேரழிவைப் பற்றி விமர்சன ரீதியாக எழுதவும் பேசவும் முயன்றோம். அவர் மறைவதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில், அவர் எனக்கு வழிகாட்டிகளில் ஒருவராக மாறினார். 

எனக்குத் தெரிந்தவரையில் கேதீஸ்  தனியாக இயங்கும் ஒரு மனிதர், அவர் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டால் அவரை மாற்றுவது கடினம். ஆனால் அவர் இணையத் தேர்ந்தெடுத்த ஒரு சிலருடன், அவர் கருத்து வேறுபாடுகளைக் கவனமாகக் கேட்பார், மேலும் அவர் முழுமையாக நம்பினால் மட்டுமே தனது நிலைப்பாட்டை மாற்றுவார்.

அவரது மறைவுக்குப் பிறகும், போர் தீவிரமடைந்தபோதும், ஒரு கேள்வி அல்லது சூழ்நிலைக்கு கேதீஸ்  எப்படிப் பதிலளித்திருப்பார் என்று எனக்குள் யோசிப்பதுண்டு. இப்போது, போர் முடிந்து பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், எங்களது பிரச்சினைகள் நிறைந்த போருக்குப் பிந்தைய பயணத்தில் விவாதங்கள் மற்றும் நிகழ்வுப் போக்குகளுக்கு  கேதீஸ்  எவ்வளவு பங்களித்திருக்க முடியும் என்று நான் அடிக்கடி ஆச்சரியப்படுகிறேன். இதன் மூலம் பெரும் இழப்பு தமிழ் சமூகத்திற்கே ஏற்பட்டது.

கேதீஸும் அவரது காலத்து இளைஞர்களும் தீவிரவாதத்தைத் தழுவினர், அவர்கள் என் தந்தையின் தலைமுறைக்குப் பிறகும் என் தலைமுறைக்கு முன்பும் வந்தவர்கள். தமிழ் அரசியலை மறைத்த கொடூரமான துப்பாக்கி கலாசாரத்தில் இருந்து தப்பிய என் தந்தையும் அவரது காலத்து மனிதர்களும், தங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத ஆயுத அரசியலில் எவ்வாறு ஈடுபடுவது என்று தெரியாமல் பெரும்பாலான பகுதி அமைதியாகிவிட்டனர். 

தமிழ் தீவிரவாதத்தின் மரபைக் கையாள எனது தலைமுறை இன்னும் தயாராகவில்லை. செயலில் ஈடுபடாமல் பின்வாங்குவது அல்லது வெற்று முழக்கங்களை எழுப்புவது ஆகியவை தீவிரமான சிந்தனையையும்   முன்னோக்கிச் செல்வதற்கான வழியையும்  தேடாத நிலையையே காட்டுகின்றன.

கேதீஸின்  ‘இழந்த வாய்ப்புகள்’ என்ற புத்தகத்தின் தலைப்பை யோசிக்கும் போது, ஒரு இழந்த தலைமுறையைப் பற்றியே நான் நினைக்கிறேன். உண்மையில், அந்தத் தலைமுறையை இழந்தது ஒரு பேரழிவுகரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறிப்பாக தமிழ் அரசியலுக்கு இது ஒரு தலைமுறை இடைவெளி சார்ந்த முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேதீஸின்  தலைமுறையைச் சேர்ந்த பலர் சமூக மாற்றத்தைக் கனவு கண்டார்கள்; மற்றவர்கள் தூரத்து நாடுகளில்  பசுமையான வாய்ப்புகளைத் தேடிச் சென்றபோது, இவர்கள் தங்கள் எதிர்காலத்தை மனமுவந்து தியாகம் செய்தார்கள். அந்தத் தமிழ் ஆர்வலர்களின் தலைமுறை, போர்க்களத்தில் கொல்லப்படாமலோ அல்லது படுகொலை செய்யப்படாமலோ தப்பியிருந்தாலும், வன்முறை நிறைந்த அரசியல் கலாச்சாரத்தின் அதிர்ச்சியால் சிதைக்கப்பட்டு முடங்கிப்போனது. 

நான் கேதீஸை நினைவுகூரும் போது, அந்த சோகமான சகாப்தத்தின் பகுதியாக இருந்த மற்ற அனைவரையும் நினைக்கிறேன். அவர்கள் மிகவும் விரும்பிய சமத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் செயற்பட அவர்களின் வாழ்நாள் குறுகியதாகிவிட்ட போதிலும், அந்த இலக்குகளுக்காக உழைக்க வேண்டிய கடமை எமது  தலைமுறைக்கு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *