— அழகு குணசீலன் —
இலங்கையின் கடந்த 75 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ‘இந்தத் தலைப்பு’ பலமுறை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளை பறிக்க – நசிக்க பயன்படுத்தப்பட்ட இந்த பாராளுமன்ற பெரும்பான்மை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி அமைப்பின் அதிகாரமையத்தில் ஊழல், இலஞ்சம், நிர்வாகம், சட்டம், நீதி துறைகளின் தலையீட்டினூடான அதிகார துஷ்பிரயோகத்திற்கு பெரிதும் வழிவகுத்துள்ளது.
இவை அனைத்தையும் ஒழிப்போம் என்று மக்களுக்கு தேர்தல் வாக்குறுதியை அளித்து ஆட்சியில் அமர்ந்துள்ள இன்றைய ஜே.வி.பி/ என்.பி.பி ஆட்சியாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது அவர்கள் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலத்தில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சமகால பேசு பொருளாக நிலக்கரி ஊழல் மாறியிருக்கிறது.
இந்த அரசாங்கமும், அதன் தலைமையும் போதைப்பொருள், இலஞ்சம், ஊழல், குற்றச்செயல்கள் …. ஒழிப்பில் மிகக்கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது சர்வதேச வலைப்பின்னல் ஒன்றின்/ பலவற்றின் பின்னணியைக் கொண்டது. அரசாங்கத்தின் இன்றைய பொருளாதார சிக்கலில் இவற்றை செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது.
சர்வதேச அனுபவங்களின் படி இந்த தேசவிரோத செயல்களை ஒழிப்பதில் ஒரு தேசிய அரசாங்கம் ஒரு வரையறைக்குள்ளேயே செயற்பட முடியும். என்.பி.பி. ஆட்சியில் இடம்பெற்ற இந்த ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், தொடரும் இந்த குற்றச்செயல்கள் குறித்த நாளாந்த செய்திகள் கவலையளிப்பதாகவே உள்ளன. ஒரு வகையில் நாட்டிற்குள் இடம்பெறுகின்ற பாதாள உலகக்கோஷ்டிகளின் துப்பாக்கி சூட்டு கொலைக்கலாச்சாரம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. மறுபக்கத்தில் சர்வதேச மாபியா பின்னணியிலான குற்றச்செயல்களை இலங்கை தனது ஆட்புல, சட்டவரையறைக்குள் மட்டும் நின்று கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கத்தின் நாளாந்த புள்ளிவிவரங்கள் பேசுகின்றன.
கடந்த கால அரசாங்கங்களின் ஊழல்கள், சட்டவிரோத செயற்பாடுகளை நீதியின் முன் நிறுத்துவது என்பது இந்த அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி. அந்த திசையில் பல கைதுகள், விசாரணைகள் நடந்துள்ளபோதும் முன்னேற்றங்கள் குறைவாகவே உள்ளன. இதற்கு இடையில் கடந்த காலத்தை கழுவுவதை விடவும் தனது ஆட்சியின் சமகாலத்தை கழுவி துப்பரவு செய்ய வேண்டிய நிலை ஜே.வி.பி/ என்.பி.பி. அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்கள்.
இதில் பாதுகாப்பு தரப்பினர் சம்பந்தப்பட்டிருக்கும் ‘வேலியே பயிரை மேயும் அரசியல்’ இன்னும் மோசமானது. மேலும் எதிர்த்தரப்பையும், அரசாங்கத்தரப்பையும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தனது கோஷத்தின் படி அரசாங்கம் கையாயாளவில்லை என்பதற்கு மிகக்குறைவான காலத்தில் அதிகமான உதாரணங்கள் உண்டு. இந்த இடத்தில் தான் காலம் கடந்து பதவியை இராஜினாமா செய்துள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீதான நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு வந்து நிற்கிறது.
இந்த விவகாரம் அமைச்சர், அமைச்சு அதிகாரிகளோடு மட்டும் சார்ந்த விடயம் அல்ல. இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சர், அமைச்சின் செயலாளர், மற்றும் அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதி, ஜனாதிபதியின் கீழான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட ஒரு பாராளுமன்றத்தின் செயற்பாடுகள்…. போன்ற பல விடயங்களால் சூழப்பட்ட ஒன்று. இது விடயத்தில் ஜனாதிபதியும், அமைச்சரவையும், பெரும்பான்மை பாராளுமன்றமும் செயற்பட்ட முறைகள் கட்சி அரசியல் அற்ற, அரசியல் நேர்மை தவறாத, சட்டத்தை மதிக்கும், தனிப்பட்ட உறவுகளை கடந்த ஒரு அரசியல் அணுகுமுறையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு இல்லை என்பது தெளிவான பதிலாக இருக்க முடியும். இந்த வகையில் அமைச்சர் குமார ஜெயக்கொடியினதும், அவரது அமைச்சு செயலாளரதும் இராஜினாமா காலம் கடந்த, ஒன்று மட்டும் அல்ல அநுர அரசாங்கம் கண்கெட்ட பின்னர் செய்யும் சூரிய நமஸ்காரமுமாகும்.
வெள்ளிக்கிழமை வரை ஜெயக்கொடியை காப்பாற்ற ‘பிடிவாத விரதம்’ இருந்த அரசாங்கம் தீடீரென அவரே ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு, இடையூறு இல்லாமல் இருக்க தானாக பதவி விலகியுள்ளதாக கதை எழுதுகிறது. உண்மையில் இந்த நேர்மை அரசாங்கத்திற்கும், அமைச்சருக்கும் இருந்திருந்தால் பல மாதங்களாக தொடரும் இத்தனை இழுபறிகளுக்கும், விமர்சனங்களுக்கும் இடமில்லாமல் போயிருக்கும்.
இன்றைய நிலையில் அரசாங்கமே தனக்கு தானே, அதன் மீதான மக்களின் நம்பிக்கையிலும், அது பேசிய ஊழல் அற்ற ஆட்சியிலும், பாராளுமன்ற பெரும்பான்மையை மக்கள் நலனுக்கே பயன்படுத்துவோம்…. போன்ற கதையாடல்களுக்கும் சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இடம்பெற்றுள்ள இராஜினாமா நாடகம் உண்மையில் அரசாங்கம் உள்ளேயும், வெளியேயும் எதிர்கொண்ட. அழுத்தங்களை தாக்குபிடிக்க முடியாததால் எடுக்கப்பட்ட முடிவு.
இந்த முடிவை எடுப்பதற்கு அமைச்சருக்கும், அரசாங்கத்திற்கும் போதுமான கால அவகாசமும், சரியான பல சந்தர்ப்பங்களும் இருந்தன. இரு தரப்பும் இந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்ளவில்லை. மாறாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி என்று எல்லோரும் சேர்ந்து வெள்ளையடித்து அமைச்சரை காப்பாற்றும் முயற்சியிலேயே ஈடுபட்டனர்.
புத்தாண்டு விடுமுறைக்காலத்திற்கு பின்னரும் இந்தப் பாதையை தொடர முடியாத நிலை அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் ஏற்பட்டது. விளைவு: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை என்ற கோதாவில் ஜனாதிபதியின் வற்புறுத்தலில் அமைச்சர் ஜெயக்கொடி இராஜினாமாச் செய்ய தூண்டப்பட்டார். ஒரு வகையில் ஜெயக்கொடிக்கு எதிராக இன்னொரு நீதிமன்ற விசாரணையை தடுக்கும்/ பிற்போடும் தந்திரோபாயமாகவே இந்த இராஜினாமாவை நோக்கவேண்டியுள்ளது. ஏனெனில் அவர் மற்றொரு உர ஊழலில், பிணையில் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர். இதுவும் நீதிமன்றத்திற்கு போனால் அதை ஜே.வி.பி. தாங்கினாலும் என்.பி.பி.தாங்காது.
ஜனாதிபதிக்கும், அமைச்சருக்கும் இருந்ததும், அவர்களால் அலட்சியம் செய்யப்பட்ட, தவறிய சந்தர்ப்பங்களை பார்ப்போம்.
* தென்னாப்பிரிக்க நிலக்கரி கொள்வனவில் தவறான ஒப்பந்த நடைமுறை, இந்திய நிறுவனம் வழங்கிய தரம் குறைந்த நிலக்கரி, அதனால் ஏற்பட்ட மின் உற்பத்தி வீழ்ச்சி, செலவு அதிகரிப்பு, சுற்றாடல் மாசுபடல் …. போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. அது மட்டும் அன்றி ஆரம்பத்தில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றே பொய்யுரைத்தது.
* எதிர்க்கட்சிகளும், பாராளுமன்ற தெரிவுக்குழுவும் இந்த விவகாரம் குறித்து விவாதித்த போதும், கேள்வி எழுப்பிய போதும் அரசாங்கத்தின் கண்களிலும், காதுகளிலும் அது விழவில்லை. பாராளுமன்றத்தில் சமகால தவறை சுட்டிக்காட்டினால், கடந்த கால தவறை சுட்டிக்காட்டும் விதண்டாவாதம் அரசாங்க தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஒரு தவறை இன்னொரு தவறைச்சொல்லி மறைக்கும் அரசியல்.
* அறகலயவின் பங்காளிகளும், அமெரிக்க பின்னணியை அறியாது அநுர அரசின் ஆட்சிக்கு வழிவகுத்தவர்களுமான முன்னிலை சோஷலிசக்கட்சியினர் துறைசார்ந்த நிபுணத்துவத்துடன் புள்ளிவிபரங்களையும், தரவுகளையும் விஞ்ஞான பூர்வமாக முன்வைத்தபோது கல்வியாளர்களையும், கலாநிதிகளையும் கொண்ட அரசாங்கம் அதை ஏடெறுத்தும் பார்க்கவில்லை.
* இலங்கையின் சமூக அமைப்புக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சட்டத்துறையினர், சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள், மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்புக்கள் விடுத்த அனைத்து கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டன.
* எதிர்கட்சிகளின், அமைச்சர் ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசாங்கம் பெரும்பான்மை பாராளுமன்ற ஜனநாயகத்தை துஷ்பிரயோகம் செய்து பிரேரணையை தோல்வியுறச் செய்தது. அன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்திற்கு முன்னால் எஸ்.ஜே.பி. ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் போராட்டமும் கருத்தில் கொள்ளப்படவில்லை.
* இதுவரை அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளை கூட மனச்சாட்சிக்கு விரோதமாக நியாயப்படுத்தி வெள்ளையடித்த அரசாங்க ஆதரவு கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் தேவசிறி அதற்காக வெட்கப்பட்டு, இனியும் வெள்ளையடிக்கப் போவதில்லை என்ற போதும் ஜனாதிபதிக்கும், அமைச்சருக்கும் வெட்கம் வரவில்லை. தேவசிறியை இந்தளவு நகர்த்தியது நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் அரசாங்கம் நடந்து கொண்டவிதமும், கணக்காய்வு அறிக்கையும்தான்.
* மூன்று அழுத்தங்கள் ஒன்றாக சேர்ந்தபோது ஜனாதிபதியாலும், அமைச்சரவையாலும் அதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ‘விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பாணியில் ஜனாதிபதி ஆணைக்குழு, அமைச்சரதும், செயலாளரதும் இராஜினாமா என்பன நடந்தேறியுள்ளன
ஒன்று: கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை. நம்பிக்கைகள் இல்லாப் பிரேரணைகாலத்தில் கல்லும் தேங்காயும் சந்தித்தபோல் சரியான நேரத்தில் வெளிவந்ததால் அரசாங்கம் ஆடிப்போனது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கும், நீதிமன்றத்தில் ஜெயக்கொடியை நிறுத்துவதற்கும் அந்த அறிக்கை தட்டிக் கழிக்க முடியாத உறுதியான சாட்சியம்/ஆதாரம்.
இரண்டு: என்னதான் இருந்தாலும் ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வாவினதும், அவரது அணியினரதும் அழுத்தம், பல வாரங்கள் கடந்து பலித்திருக்கிறது. பெலவத்தை, காலிமுகத்திடல் அதிகார பீடங்களுக்கு இடையே புத்தாண்டுக்கு முன்னரும், பின்னரும் பலத்த கருத்து மோதல்கள் இடம்பெறுள்ளன. ஜெயக்கொடி பதவி விலக வேண்டும் அல்லது விலக்கப்படவேண்டும் என்பதில் ரில்லவின் அணி பலமாக இருந்துள்ளது. இதனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தனது தேசிய பட்டியல் நண்பரை காப்பாற்ற முடியவில்லை. ‘பாம்புக்கும் நோகாமல் கம்புக்கும் நோகாமல்’ அவர் எடுத்த முடிவு, ஜெயக்கொடி தானாக எடுத்த முடிவாக உலாவருகிறது. ரில்வின் சில்வாவுக்கு கணக்காய்வு அறிக்கை ஒரு துரும்பாக அமைந்தது.
மூன்று : சர்வதேச நாணய நிதியம் இது விடயத்தில் அரசாங்கத்திடம் இருந்து ஒரு காத்திரமான நடவடிக்கையை எதிர்பார்த்து நம்பியிருந்தது.
எதுவும் நடக்கவில்லை. இறுதியில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அநுரவின் மேசையில் தூக்கிப்போட்டபோது அநுராவினால் எதுவும் செய்ய முடியவில்லை. இது கணக்காய்வு அறிக்கை வரும் வரை சர்வதேச நாணய நிதியம் காத்துக்கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகிறது.
ஜே.வி.பி/ என்.பி.பி. அரசாங்கத்தில் அவதானிக்க கூடியதாக உள்ள ஒரு விடயம் விவகாரங்களை கையாளுவதில் அதன் மெத்தனப்போக்கு. அரச தலைமையொன்று தீர்மானங்களை, நேர்மையாக எடுக்கின்ற திறன் கொண்டதாக அமையவேண்டும். எப்போதும் தீர்மானங்களை ஆறப்போடமுடியாது. இந்த அணுகுமுறை பிரச்சினைக்கு தீர்வாக அன்றி பிரச்சினையாகவே அமைந்து விடுவது வழக்கம். மற்றொரு விடயம் ஒன்றை செய்து பராக்குகாட்டி அதன் நிழலில் இன்னொன்றை செய்யும் தந்திரோபாயம்.
ஆக, மீனுக்கு தலைதான் முதலில் அழுகும்/கெடும்/நாறும் என்று கூறுவார்கள். இதனால் தான் மீன் வாங்கும் போது அதன் தலைப்பகுதியில் உள்ள செப்பட்டையை நீக்கி, அதன் நிறத்தை பார்த்து மீனின் தரத்தை நுகர்வோர் நிர்ணயிக்கின்றனர். இந்த கருத்தில் இந்த அரசாங்கத்திற்கு இரு செய்திகள் உள்ளன.
முதலாவது: அதன் நிறம் மாறுகிறது என்ற செய்தி.
இரண்டாவது : : தலை(மை) நாறினால் வாலும் நாறும் என்ற செய்தி.
