— அ. வரதராஜா பெருமாள் —
இப்போதும் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் மாகாண ஆட்சிக் கட்டமைப்புகள் இருக்கின்றன – ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாகாணத்திலும் ஐந்து அமைச்சுக்களினதும் நிர்வாகங்கள் செயற்படுகின்றன. இலட்சக்கணக்கான அரச ஊழியர்கள் மாகாண ஆட்சியின் சேவகர்களாக பணி புரிகிறார்கள். இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை மாறி மாறி வந்த மத்திய அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் ‘இந்த ஆண்டு இறுதியில் நடக்கும்’, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடக்கும்’ என கடந்த எட்டு ஆண்டுகளாக காலம் தள்ளிப் போட்டு வந்துள்ளன.
‘செவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’
என்பது சினிமா நகைச்சுவை மட்டுமல்ல, இப்போது மத்திய ஆட்சியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த தேர்தல் கால பிரச்சாரங்களின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மாகாண ஆட்சிக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றார்கள். இவர்கள், ‘இடதுசாரிகள், சாதாரண மக்களிடையே இருந்து எழுந்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் – தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு நேர்மையாக இருப்பார்கள்’ என்று பொது மக்கள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் நம்பினார்கள், ஆனால் இவர்களும் மாகாண ஆட்சிகளுக்கான தேர்தல்களை நடத்தாமலே காலத்தைக் கடத்தியபடியே தமது அதிகார அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறார்களா? அல்லது இந்த ஆண்டுக்குள் நடத்துவார்களா? இல்லாவிடினும் அடுத்த ஆண்டாவது நடத்துவார்களா? என இடைக்கிடை கேள்விகளோடு மக்கள் அன்றாடம் தாம் எதிர்நோக்கும் நெருக்கடிகளை சமாளிப்பதில் மூழ்கியபடியே தமது சீவியத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு தென்னிலங்கை எதிர்க்கட்சிகள் தமது வாக்காளர் வங்கிகளைத் திருப்திப்படுத்துவதற்காக அவ்வப்போது மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தைக் கோருகிறார்களே தவிர, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் விரைந்து நடத்துவதற்கான அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடியதாக தமது செயற்பாடுகளை அவர்கள் மேற் கொள்வதாகத் தெரியவில்லை. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தமது சுய மற்றும் தமது கட்சி நலன்களுக்கு சாதகமாக அமையுமா – தமக்கு அவசியம்தானா – இப்போது மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடந்து அதில் தாங்கள் படுதோல்வி அடைந்து விட்டால் அது தமது எதிர்கால அரசியல் கனவுகளை கலைத்து விடாதா என்ற கேள்விகளோடும் சந்தேகங்களோடும் தன்னம்பிக்கை தளர்ந்தவர்களாக தென்னிலங்கை எதிர்க் கட்சியினர் மாகாண சபைகள் தொடர்பில் ஓர் மென்மையான அரசியலை கடைப்பிடிப்பதாகவே தெரிகிறது.
இதேவேளை, தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் சமூக சக்திகள் மத்தியில் மாகாண சபைகள் தொடர்பாக பெரும் குழப்பமான கருத்துக்களையும், குழறுபடியான நிலைப்பாடுகளையுமே காண முடிகிறது.
உழுபவன் ஏரை ஓரடி இழுக்க வக்கில்லாத மாடு
நல்லூரான் தேரை தலையாலேயே தள்ளி விடுமாம்
ஒரு பகுதியினர், இந்த மாகாண ஆட்சிக்கான தேர்தல் நடைபெற்றால் அதில் பங்குபற்றி மாகாண சபை உறுப்பினர்களாக தாங்கள் வந்துவிட வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தாலும், இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறை தமிழர்களுக்கு பாதகமே தவிர பயனில்லை என்கின்றனர், அத்துடன் ஒரு படி மேலே போய் ஒற்றையாட்சி அரச கட்டமைப்புக்குள் எந்த வகையிலான அதிகாரப் பகிர்வு முறையையும் தாங்கள் ஏற்க மாட்டார்கள் என்கின்றனர். இவர்கள் அடைந்தால் சமஸ்டி ஆட்சி முறை அடைய வேண்டும் இல்லையென்றால் இந்த மாகாண ஆட்சி முறை மரணித்துப் போகட்டும் என்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரையில் இப்போது அரசியல் யாப்பில் இருக்கும் அதிகாரப் பகிர்வுக்கான சட்ட ஏற்பாடுகள் பற்றி இவர்கள் பேசும் போதெல்லாம் ஒற்றையாட்சி அரச கட்டமைப்புக்குள் அமையும் மாகாண ஆட்சி முறையை ஏற்க முடியாது – ஏற்கக் கூடாது – அதில் ஒன்றுமில்லை – அதனால் தமிழர்களுக்கு எந்தவித பயனுமில்லை எனும் தமது கருத்து நிலைப்பாட்டை நிரூபிக்கும் உள் நோக்குடனேயே பேசுகிறார்கள் – பிரசங்கங்களை ஆற்றுகிறார்கள். இவர்கள் ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரே ஆட்சி நிலப்பரப்பாக இணைத்து அதன் மீது தமிழர்களுக்கு உள்ள இறைமையின் அடிப்படையிலான சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட சமஸ்டி ஆட்சி முறை’ அமைய வேண்டும் என்கிறார்கள். அதுவல்லாத எந்த அரசியல் ஏற்பாட்டையும் நிராகரிக்கிறார்கள் – எதிர்க்கிறார்கள்.
இவர்கள் இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறைக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிரவு ஏற்பாடுகளைப் பற்றி – அதிலுள்ள நிறைகள் குறைகள் பற்றி, அவற்றை எவ்வாறு திருத்தினால், மாற்றி அமைத்தால் எவ்வகையான ஏற்பாடுகளை உள்ளடக்கினால் இந்த மாகாண ஆட்சி முறையை முன்னேற்றகரமானதாக்கலாம், பயனுடையதாக்கலாம் என்பது பற்றி தாமாக பேசவோ அல்லது மற்றவர்களுடன் உரையாடவோ தயாராக இல்லை என்பதையே காண முடிகிறது. இவர்கள் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடந்தால் தாங்கள் பங்குபற்றப் போவதாக கூறுகிறார்கள். ஆனால் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஒரு மக்கள் இயக்கத்தை அணி திரட்டுதற்கு தயாராக இல்லை. அப்படி ஒரு மக்கள் இயக்கதை அணி திரட்ட தாங்கள் முற்பட்டால் அது தங்களது சமஸ்டிக் கோரிக்கையை பலயீனப்படுத்தும் என கூறுகிறார்கள். இவர்களின் இந்த வகையான நியாயம் மாகாண ஆட்சி முறையை நிராகரிக்கும் அல்லது இல்லாது செய்யும் தளத்திலிருந்தே பிறப்பதனால் இதனை இங்கு விவாதிப்பது பொருத்தமற்றதாகும்.
தமிழ்ப் பேசும் மக்களிடையே உள்ள அரசியல் சமூக பிரமுகர்களில், மேலே கூறப்பட்ட வகையினரைத் தவிர்ந்த ஏனையோரோ, இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறை இலங்கையின் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் அரசியற் தீர்வாக அமையக் கூடியதல்ல எனவும் மேலும், சமஸ்டி அமைப்பு முறை மட்டுமே நிரந்தரமான அரசியற் தீர்வாக அமைய முடியும் எனவும் கூறுகிற அதேவேளை, அதுவரை, இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறையானது இலங்கையின் அரசியல் யாப்பு மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக கொண்ட வகையாக செயற்படுவது தமிழ்ப் பேசும் மக்களின் உடனடியான தேவைகளுக்கு அவசியமானது என்கின்ற அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசைக் கோருவதோடு, அவற்றிற்கு இந்திய அரசின் துணையையும் அவ்வப்போது நாடுகிறார்கள்;.
சாதித்துள்ள முன்னேற்றங்கள் அனைத்தும் உழைப்பாலும் போராட்டங்களாலும் அடைந்தவைகளே
இந்த வகையினர் ஓரணியாக திரள முடியாதவர்களாக – ஒரு அரங்கத்தில் ஒன்று கூடி பேச முடியாதவர்களாக தமக்குத் தாமே தடைகளைப் போட்டு, பல கூறுகளாக உள்ளனர். இருப்பினும் இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கில் வாழும் மக்களிடம் கடைசியாக நடைபெற்ற தேர்தல்களின் போது பெற்ற வாக்குகளை கூட்டிப் பார்த்தால் கூட, தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் ஒட்டு மொத்தமாக இவர்களின் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் மொத்த எண்ணிக்கையே மிகப் பெரும்பான்மை. இந்த வகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் மாகாண ஆட்சிகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும் எனவும் அத்துடன் மாகாண ஆட்சிகளுக்கு இலங்கையின் அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் முழுமையாக மாகாண ஆட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் இலங்கை அரசைக் கோருகிறார்கள் என்று கொள்வதே சரியாகும்.
மேலே குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவற்றுள் உள்ள அரசியற் கட்சிகள் பெரும்பாலும், இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறையினுடைய கட்டமைப்பிலுள்ள குறைபாடுகளும், மாகாண ஆட்சிக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பான குறைகள் மற்றும் குழறுபடிகள் காரணமாக இந்த மாகாண ஆட்சி முறையில் திருப்தி கொள்ளாவிட்டாலும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி அதிகாரத்தில் இருப்பது தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு குறிப்பிட்டளவு பாதுகாப்பை ஏற்படுத்தும் எனவும் அத்துடன் மக்களுக்கான சில அடிப்படையான பொருளாதார விடயங்களில் கரிசனை கொண்டு ஓரளவு முன்னேற்றங்களை ஏற்படுத்தும் வகையாக செயற்பட முடியும் என்றும் கூறுகின்றமை கவனத்துக்குரிய தொன்றாகும்.
பொதுவாக தேர்தல் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் தமது மற்றும் தமது கட்சியின் நலன்களின் நோக்குகளிலிருந்தே தேர்தல்களை அணுகுவர். இந்த வகையில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் உள்ள குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கை தளமாக கொண்ட கட்சிகளின் தலைவர்கள் மாகாண சபைத் தேர்தலுக்கும் தமது சொந்த நலன்களுக்கும் தமது கட்சியின் நலன்களுக்கும் இடையிலான பயன்பாடு மற்றும் நலன்களின் அவசியத்திலிருந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் தமது குரல்களை எழுப்புகின்றனர் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமானதல்ல.
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைந்து நடக்க வேண்டியது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையான தேசிய இனங்களின் நலன்களுக்கு கட்டாயமானதொரு தேவையாகும். இந்த நாட்டின் ஜனாதிபதியிடம், அவர் எவராயிருப்பினும், நிறைவேற்று அதிகாரங்கள் எல்லையற்ற அளவுக்கு குவிந்திருப்பதனால், இலங்கையின் மத்திய ஆட்சி அமைப்பானது அடிப்படையில் எதேச்சாதிகார கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றது என்பதே யதார்த்தமாகும். இந்த நிலைமையில் இலங்கையில் மாகாண ஆட்சிகள் முறையாகவும் முழுமையாகவும் சுயாதீன ஆற்றல்களுடனும் செயற்படுவது இந்த நாட்டின் ஜனநாயக பண்பாட்டின் முன்னேற்றத்துக்கு மிக மிக அவசியமாகும். இந்த வகையில் மாகாணங்களில் எப்போதும் மக்களாட்சிகள் செயற்படுவது முழு நாட்டினதும் அனைத்து இன மக்களினதும் பொது நலன்களோடு பின்னிப் பிணைந்தது என்பதையும் இவர்கள் உணர வேண்டும். அந்த வகையில் அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை தள்ளிப் போடும் தந்திரங்களை முழு மூச்சோடு எதிர்ப்பதுவும் தேர்தல்கள் விரைவாக நடப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை பரந்த அளவில் முன்னெடுப்பதுவும் இன்றைக்கு முக்கியமானதாக உள்ளது. ஆனால் தமிழர்கள் மத்தியிலுள்ள அரசியல் யதார்த்தமானது, தமிழர்களின் அரசியல் சமூக சக்திகளில் எவராவது அதற்குரிய வகையில் அர்ப்பணிப்போடு செயற்படுகிறார்களா என்ற கேள்வியையே எழுப்புகிறது.
எதிர்க்கட்சியாக இருக்கையில் வேற வாய் ஆளும் அதிகாரத்தில் இருக்கையில் நாற வாய்
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பெரிய கட்சி என்று சொல்லப்படுகிற தமிழரசுக் கட்சியினர் பெற்ற இடங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவ எண்ணிக்கையை இப்போது அரச அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களிடையேயிருந்து பெற்றிருக்கிறார்கள – யாரும் எதிர்பாரத்திருக்க முடியாத அளவுக்கு வாக்குளைப் பெற்றிருக்கிறார்கள். இது ஓர் அரசியல் வரலாற்று ஆச்சரியமே – சாதனையே. 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் பாராளுமன்னறத் தேர்தலின் போதும் மக்கள் விடுதலை முன்னணியினர் ‘ஊழல் மோசடிகளற்ற ஆட்சி’, ‘இனவாத கருத்துகளுக்கோ செயல்களுக்கோ இடமளிக்காத ஆட்சி’, ‘தமிழ்ப் பேசும் மக்களுக்கு கடந்த காலத்தில் நடந்த அநீதிக் கெல்லாம் நீதியை நிலை நாட்டும் ஆட்சி’, ‘இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும் நல்லிணக்கமான உறவுகளையும் நாட்டும் ஆட்சி’, ‘தமிழர்கள் போராடிப் பெற்ற மாகாண ஆட்சி முறையை அங்கீகரித்து பாதுகாப்பது தமது கடமை’ என்றே தமது பிரச்சாரங்களை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் பரப்பினார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாகாண ஆட்சிக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றார்கள்.
இப்போது அவர்களின் அரசியல் காட்சிகள் மாறி விட்டதற்கான சாட்சியங்களே அதிகமாக உள்ளன. இவர்கள் இப்போதாயினும் மாகாண ஆட்சிகளுக்கான தேர்தல்களை நடத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமது ஆட்சிகளை அமைப்பார்களோ இல்லையோ, நிச்சயமாக வலுவான எதிர்க்கட்சியாக ஆவார்கள் என்றே அரசியற் கணிப்புகள் உள்ளன. மாகாண சபைத் தேர்தல்கள் நடந்தால் மக்கள் விடுதலை முன்னணியினரும் மிகுந்த உற்சாகத்துடன் நாடு முழுவதும் தேர்தல் களத்தில் இறங்குவார்கள் என்பது தெரிந்ததே. இருப்பினும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணியினர் மாகாண சபைகளுக்கான தேர்தலை காலம் தாழ்த்தாது நடத்தும்படி மத்திய ஆட்சியிலுள்ள தமது கட்சித் தலைமையை வலியுறுத்துவார்கள் என எதிரபார்க்க முடியாத நிலைமையே இங்கு உள்ளது.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அநுரா அவர்களும் அவரது மக்கள் விடுதலை முன்னணியினரும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் வேறெந்தவொரு தேர்தலை நடத்தினாலும் அது தமக்கு வேதனையாக முடியக் கூடிய சோதனையாக அமைந்து விடக்கூடும் என்ற எச்சரிக்கைகளுக்கே உள்ளாகியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையிலும் பலயீனமாக இருக்கும் இன்றைய நிலையிலேயே ஆட்சியிலிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசியல் யாப்பின் மீது தாம் சத்தியம் செய்து ஏற்றுக்கொண்டுள்ள ஜனநாயகக் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற தயங்குவார்களேயானால், பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் மத்தியில் ஏற்படக் கூடிய விரக்திகள் வெறுப்புகள், அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் ஊழல் மோசடி குற்றச் சாட்டுகள், உட்கட்சிக்குள் வளர்ந்து வரும் உரசல்கள் முறுகல்கள் என்பன அதிகரிக்க அதிகரிக்க மக்கள் விடுதலை முன்னணியினரின் துணிச்சல்களும் தன்னம்பிக்கைகளும் ஆதரவு சக்திகளின் திரட்சிகளும் பலயீனமடைந்து செல்வது இயல்பாகி விடும். மாகாண சபைத் தேர்தல்களை இப்பொழுதே விரைவாக மக்கள் விடுதலை முன்னணியினர் துணிந்து நடத்த வேண்டும், இல்லையென்றால், இவர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் எந்த தேர்தலையும் நடத்த மாட்டார்கள் என்பதே உண்மையாகும்.
தேசிய மக்கள் சக்தியின் அணியில் இல்லாத எந்தவொரு சிங்கள சமூக அரசியல் பிரமுகரும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தைக் கோருவதில் முனைப்போடு செயற்பட மாட்டார்கள் என்பது தெளிவான ஒன்றாகும் -பெயரளவில் அவ்வப்போது குரல் கொடுப்பார்கள். எனவே இலங்கையின் சிறுபான்மையான தேசிய இனங்களாக உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் சமூக சக்திகளே மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற விடயத்துக்கான அரசியல் செயற்பாடுகளை நோக்கி திரள வேண்டும், முனைப்போடு விடா முயற்சியாக செயற்பட வேண்டும். அத்துடன், மாகாண ஆட்சிகளுக்காக அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
நல்ல யானைகளை சரியாக பராமரித்து முழுமையாக பயன்படுத்தாமல் கட்டிப் போட்டால் நல்ல யானைகளும் ‘வெள்ளை யானைகளே’
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் வழங்காமல் அவற்றை பயனெதுவுமற்றவை, வீண் செலவுச் சுமைகளை ஏற்படுத்துபவை என காட்டி சிங்கள மக்களுக்கு அதன் மீது வெறுப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேசும் மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியதைத்தான் இதுகாலவரை சிங்கள பேரின மேலாதிக்க வாதிகள் செய்து வந்திருக்கிறார்கள். நாளைக்கு இப்போது ஆட்சியிலிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரும். ‘மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நாங்கள் நடாத்தி விட்டோம், இனி அதனை மாகாண ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என அதே பழைய ஒழித்து பிடித்து விளையாடும் ஆட்டத்தில் இறங்கி விட மாட்டார்கள் என்றில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் யார் யார் முதலமைச்சர்களாக ஆக விரும்புகிறார்கள் – முதலமைச்சர்களாய் ஆவதற்கு யார் யார் போட்டியிடக் கூடும் – யார் யார் முதலமைச்சர்கள் ஆவார்கள் என்பவை இங்கு முக்கியமானவையல்ல. கடந்த கால அநுபவங்கள் – ஏமாற்றங்கள் காரணமாக மாகாண ஆட்சி முறை மீதும் தமிழ் அரசியற் பிரமுகர்கள் மீதும் எந்த அளவுக்கு தமிழ்ப் பேசும் மக்கள் பொதுவாகவே விரக்தியும் நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் உள்ள சக்திகள் அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். மாகாண ஆட்சிகளுக்கான அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் பெற்றுக் கொள்வது மிக அவசியமாகும். அதன் மூலமே மாகாண ஆட்சி முறையானது அர்த்தமுடையதாகவும் பயனுடையதாகவும் காத்திரமான செயற்பாடுகள் கொண்டதாகவும் அமைய முடியும். இதனை தெளிவாக புரிந்து கொண்டு, இப்போதிருந்தே அதை நோக்கிய செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்பதில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள அனைத்து அரசியல் சமூக சக்திகளும் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொள்ள வேண்டும்.
