— அழகு குணசீலன் —
இலங்கை கத்தோலிக்கர்களின் பேராயர் கார்டினல் மல்கம் ரஞசித். அவரின் கடந்த கால அரசியல் ரீதியான கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டவை. சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகள் குறித்த கருத்துக்களும் இதில் அடங்கும். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு அப்பால் அண்மையில் நத்தார் பிரதான ஆராதனையின் போது பேராயர் ஆற்றிய உரையின் உள்ளடக்கம் பெரும் கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறது. பாப்பரசர் பிரான்சிஸ் விட்டுச்சென்ற இடத்தை தொட்டுச்செல்வதாக உள்ளது.
அப்படி அவரின் உரையில் என்ன இருந்தது….?
” THE COMMERCIAL ECONOMY HAS GRADUALLY TRSNSFORMED CHIRISTMAS INTO AN OCCATION DRIVEN BY FINANCIAL GAIN RATHER THAN ITS TRUE SPRITUAL MEANING ……”.
” PUBLIC MUST CLEARLY UNDERSTAND THAT CHIRISTMAS WAS NOT MEANT TO BE A MONEY MAKING FESTIVAL. JESUS CHIRIST URGING SOCIETY TO MOVE AWAY FROM MATERISLISM AND CONSUMERISM…”
பேராயர் மல்கம் ரஞசித் மேலும் விபரமாகவும், தெளிவாகவும் சமூகத்திற்கு இந்த பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார். “நத்தார் என்பது பணம் சம்பாதிக்கும் பண்டிகையல்ல. மாறாக நம்பிக்கை, பணிவு, மற்றும் இரத்தம் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம். அதிகப்படியான வணிகமயமாக்கல் யேசு கிறிஸ்துவின் பிறப்பு கொண்டாட்டத்துடன் தொடர்புடைய முக்கிய மதிப்புக்களை மறைத்து விட்டது. சமூகம் பொருள்முதல்வாதம் மற்றும் நுகர்வோர்வாதங்களில் இருந்து விலகிச் செல்லவேண்டும்.”
“நத்தார் கொண்டாட்டத்தில் உண்மையில் முக்கியமானது நத்தார் மரம், தொழுவம், நத்தார் தாத்தா அல்ல. மாறாக யேசு கிறிஸ்து காட்டிய பாதையைப் புரிந்து கொண்டு அதில் பயணிப்பதுதான்….”
பேராயரின் இந்த கருத்து இலங்கையை அவதானித்ததன் விளைவு அல்ல. முழு உலகை அவதானித்ததன் வெளிப்பாடு. உலகமயமாக்கமும் அதனூடான தாராள வர்த்தகமும் சமூகத்தை பொருளாதார ரீதியிலும் அதனூடான நுகர்வு மட்டத்திலும் வைத்து மதிப்பிடுகிறது. இது இறக்குமதி செய்யப்பட்ட முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரத்திற்குள் சமூகத்தை தள்ளிவிடுகிறது. ஒருவரைக்கண்டு ஒருவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். சிகரட், மதுபானம், போதைப்பொருள், பாலியல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாடுவதை மட்டும் இது கருதவில்லை, அளவுக்கு அதிகமாக பொருட்சேர்த்தல், அளவுக்கு அதிகமான நுகர்வு என்பனவற்றையும் இது கருதுகிறது.
யேசுவின் பிறப்புச் சூழல் இந்த நிலையில் இருந்து அல்லது சமூகம் அதை இன்று விளங்கிக்கொண்டிருப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. யேசு பிறப்பதற்கு ஒரு இடம், தலைக்கு மேல் ஒரு கூரையில்லாத நிலையில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. அவர் பஞ்சு மெத்தையில் அல்ல வைக்கோல் புதரில் பிறந்தார் என்றால் அவரின் பிறப்பை சமூகம் எவ்வாறு நினைவில் கொள்ள வேண்டும், எவ்வாறு கொண்டாடவேண்டும் என்பது குறித்த கேள்வி எழுப்பலாகவே பேராயரின் உரை அமைகிறது.
இன்றைய உலகமயமாக்கல், தாராளவர்த்தக உலகில் மதமும், அதன் சடங்குகளும் வியாபாரமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையானது மத நம்பிக்கைகளுக்கு அப்பால் ஒரு களியாட்ட, நுகர்வு கொண்டாட்டமாக மட்டும் அல்ல தராதரம் பார்த்து, பணப்பெறுமதியை மதிப்பிட்டு அன்பளிப்புக்களை வழங்குவதாகவும் மாறிவிட்டது. யேசு பிறந்த போது வால்வெள்ளியின் திசையை நோக்கி பயணித்த மூவேந்தர்களும், மக்களும் மரியா -யோசேப் – யேசு குடும்பத்திற்கு என்ன பொருட்களை அன்பளிப்பாக எடுத்து வந்தார்கள்? தங்களிடம் என்ன இருந்ததோ, தங்களால் இயன்றதை கொண்டு வந்தார்கள். இந்த நம்பிக்கையிலான மானிடவியல் பாரம்பரியத்தை இன்றைய சமூகம் எவ்வாறு கொண்டாடுகிறது. அந்தஸ்து, பொருளாதார தரம், தகுதி பார்த்து அன்பளிப்புக்களை பரிமாறிக்கொள்கிறது.
உண்மையில் யேசுவின் பிறப்பும், கிறிஸ்தவமும் அன்பளிப்பு தொடர்பாக எமக்கு சொல்லுகின்ற செய்தி இதற்கு முற்றிலும் மாறானதில்லையா…? உள்ளவர்கள் தங்களிடம் மேலதிகமாக இருப்பவற்றை இல்லாதவர்களுக்கு – வறுமையில், ஏழ்மையில் வாழ்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதை -அன்பளிப்பு செய்வதே இந்த பாரம்பரியத்தின் தாற்பரியம். ஆனால் இன்று இது முற்றிலும் பேராயர் குறிப்பிட்ட வர்த்தக மயமாக்கலின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
மேற்கில் இருந்து மற்றைய திசைகளுக்கு நகர்த்தப்பட்ட இந்த வர்த்தக விரிவாக்கம் இன்று நவகாலனித்துவமாக முழு உலகிற்கும் வியாபித்துள்ளது. மேற்குலகில் கிறிஸ்தவ மதம் மீதான ஆர்வம் குறைவடைந்து வருகிறது. தேவாலய வரிகளை செலுத்த மறுத்த மக்கள் மதங்களில் இருந்து விலகிக்கொள்கிறார்கள். தேவாலயங்கள் இயங்குவதில் பொருளாதார நெருக்கடி மட்டும் அல்ல, மக்கள் இல்லாத குறையும் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனைக்கு வருபவர்கள் கையளவு வயோதிபர்கள் மட்டுமே. இதை ஊக்குவிக்க இலவச மதிய உணவு, இலவச கோப்பி வழங்கலை தேவாலயங்கள் அறிமுகம் செய்து படாத பாடுபடுகின்றன.
அதேவேளை முதலாளித்துவ வர்த்தக அரசியல் ஒரு காலத்தில் கட்டாய விடுமுறையாக இருந்த ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரம் செய்ய சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து செயற்படுகிறது. ஆக, ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு போகின்றவர்களை விடவும் “ஷொப்பிங்” போகிறவர்கள் நகர வீதிகளில் நிரம்பி வழிகிறார்கள். எல்லையற்ற நுகர்வு பொருளாதார இலக்காகாக இருக்கிறது.
அது மட்டுமின்றி மதச்சண்டைகளைப் போடுகின்றவர்கள் கூட இன்று எல்லா மதக் கொண்டாட்டங்களையும் “பார்ட்டி” போட்டு அனுபவிக்கிறார்கள். அந்தளவுக்கு தாராளமயமாக்கல் வர்த்தகம் மதவேலிகளை நுகர்வுக்காக திறந்து விட்டுள்ளது. இதற்கு பின்னால் அரசாங்கங்களின் ஏற்பாட்டிலும், இராட்சத பொருளாதார பல்தேசிய கம்பெனிகளின் ஏற்பாட்டிலும் நடாத்தப்படும் மத, கலாச்சார நிகழ்வுகள் காரணமாகின்றன. வெள்ளை மாளிகையில் தீபாவளி, டவுன்ஸரீட்டில் பொங்கல், புது டில்லியில் நத்தார், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஹஜ்ஜிப்பெருநாள்…., குவைத்தில் வெசாக்….. இவை எல்லாம் வர்த்தக விளம்பர யுக்திகள். ஆனால் காட்டப்படும் படம் இதற்கு எதிர்மாறாக எம்மதமும் சம்மதம்.
பேராயர் மல்கம் ரஞ்சித் இந்த உரையை இவ்வாண்டு நத்தார் ஆராதனையில் கத்தோலிக்க மதம் சார்ந்து ஆற்றியிருந்தாலும். உலகின் சகல மத கொண்ணாட்டங்களினதும் பொதுப்பயணம் இந்த வழியே பயணிக்கிறது. எனவே பேராயர் மல்கம் ரஞ்சித் வழங்கியுள்ள நத்தார் பரிசு ஒரு ‘ஒன் சைஸ்’ (ONE SIZE) தொப்பி எல்லோருக்கும் அளவானது.
போட்டுக்கொண்டு புத்தாண்டில் கண்ணாடிக்கு முன் நிற்க எத்தனை பேர் தயார்..,..?
அரங்கம் வாசகர்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள்.
