— அழகு குணசீலன் —
இலங்கையின் அரசியல் அமைப்பில் பல விடயங்களில் பலவீனமான சரத்துக்கள் அல்லது தவறாக விளங்கிக்கொள்ள கூடிய – ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை ஊகிக்க கூடிய சரத்துக்கள் இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் அரசியல் அமைப்பில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரின் நியமனம் குறித்த சரத்து அப்படியானதல்ல. அரசியல் அமைப்பின் 153 பிரிவு இதனை தெட்டத் தெளிவாக விவரிக்கிறது. அப்படியிருந்தும் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிப்பதில் ஜனாதிபதிக்கும், அரசியலமைப்பு சபைக்கும் இடையிலான இழுபறிக்கான காரணம் என்ன?
2025 ஏப்ரலில் இருந்து நிரந்தரமான கணக்காய்வாளர் நாயகம் இல்லாமல் இத்திணைக்களம் ஊடகங்களிலும், சிவில் அமைப்புக்கள், மற்றும் அரசியலிலும் பெரும் பேசுபொருளாக உள்ளது. பொதுநிதியின் சரியான பயன்பாடு, கண்காணிப்பு போன்றவற்றையும் அரச நிதி துஷ்பிரயோகம், இலஞ்சம், ஊழல், தவறாக சொத்துச்சேர்த்தல், கறுப்புபணம்…… போன்றவற்றை மேற்பார்வை செய்யும் -கணக்காய்வு செய்யும் பொறுப்பு கணக்காய்வாளர் நாயக அலுவலகத்திற்கு உண்டு.
ஆனால் கடந்த ஒரு வருட கால ஆட்சியை கடந்துள்ள அரசாங்கம் மேற்கூறிய பொதுநிதி சார்ந்த விடயங்களில் வெளிப்படைத்தன்மை, நேர்மை, மக்களின் வரிப்பணம் அதன் பயன்பாட்டு திறன் பற்றி எல்லாம் பேசுகின்ற ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரு பொருத்தமான – பொதுவான, அரசியல் அமைப்பின் பிரிவு 153 கூறுகின்ற தகுதிகளுடனான ஒருவரின் பெயரை அரசியல் அமைப்பு சபைக்கு சமர்ப்பிக்க முடியாமல் இருப்பது கவலைக்குரியது.
W.P.C விக்கிரமரத்ன கணக்காய்வாளர் நாயகம் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்,
எச்.ரீ.பி.சந்தான: பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கணக்காய்வு அதிகாரியான H.T.P. சந்தான ஜனாதிபதியினால் அரசியல் அமைப்பு சபைக்கு சிபாரிசு செய்யப்பட்டார். இந்த தற்காலிக நியமனத்திற்கான சிபார்சை அரசியல் அமைப்பு சபை ஏற்றுக்கொள்ளவில்லை.
தர்மபால கம்மன்பில: பின்னர் சேவை மூப்பின் அடிப்படையில் கணக்காய்வாளர் அலுவலகத்தை சேர்ந்த தர்மபால கம்மன்பில ஜனாதிபதியினால் சிபார்சு செய்யப்பட்டார். ஆறு மாதங்களுக்கான இந்த தற்காலிக சிபார்சை அரசியல் அமைப்பு சபை அங்கீகரித்தது.
ஆனால் ஆறு மாதத்திற்கு பின்னர்|மீண்டும் தற்காலிக நீடிப்பு வழங்க அரசியல் அமைப்பு சபை மறுத்து விட்டது.
எல்.எஸ்.பி ஜெயரத்ன: .இதை அடுத்து ஜனாதிபதி L.S.P. ஜெயரத்தன என்பவரை சிபார்சு செய்தார். அதுவும் தற்காலிக நியமனம் என்பதை சுட்டிக்காட்டி அரசியல் அமைப்பு சபை நிராகரித்தது.
ஓ.கே. ராஜசிங்க: அந்த இடத்தில் ஜனாதிபதியும், அரசியல் அமைப்பு சபையும் வந்து நிற்கின்ற போது ஜனாதிபதி அடுத்த சிபார்சை செய்துள்ளார். அவர்தான் இராணுவ கணக்காய்வுபிரிவு அதிகாரியான
O.K. ராஜசிங்க. இந்த சிபாரிசும் அரசியல் அமைப்பு சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு சபையின் இது தொடர்பான கூட்டம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்றபோது பிரதமர் ஹருணி அமரசூரிய ஜனாதிபதியின் சிபார்சை முன்மொழிந்தார். முன்மொழிவுக்கு ஆதரவாக பிரதமர் ஹருணி, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, என்.பி.பி எம்.பி . எம். ஆதம்பாவா, தமிழரசுக்கட்சி எம்.பி. சி.சிறிதரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.
சிறிதரன் இதை மறுத்து கூறியதாக வெளிவந்த அனைத்து மழுப்பல்களும் தமிழ்தேசிய வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. இப்போது ‘வெள்ளாப்பு ‘ தெரிகிறது. கொழும்பு தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பலவும் சிறிதரன் ஓ.கே. ராஜசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்ததாக செய்திகளை வெளியிட்டுள்ளன.
தமிழ்த்தேசிய அரசியல் சிறிதரனின் ஆதரவை தமிழ்த்தேசிய அரசியல் இராணுவ எதிர்ப்பாக காட்ட முயற்சித்தாலும், இங்கு முக்கியமானது துறைசார் தகுதியும், நடுநிலையும், வெளிப்படைத்தன்மையும் அற்ற வகையில், பொது நிர்வாக, நிதி கட்டமைப்புக்களை படிப்படியாக இராணுவமயமாக்கலுக்குள் சுருக்குவதற்கு எதிராக தென்னிலங்கையில் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இங்கு மறு தரப்புக்களால் முன்வைக்கப்படுகின்ற முக்கியமான குற்றச்சாட்டு அநுர அரசாங்கத்தின் இராணுவமயப்படுத்தலுக்கு எதிரானதாக உள்ளது.
பொதுநிதியை கண்காணிக்கும் பொறுப்பு வாய்ந்த இந்தப்பதவி வெளிப்படைத்தன்மை, செயற்றிறன், மூப்பு, நேர்மை, நிரூபிக்கப்பட்ட சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்று அரசியல் அமைப்பு சபையின் முடிவுக்கு வலுச்சேர்த்திருக்கின்றன பல்வேறு துறைசார் சிவில் அமைப்புக்கள்.
ஜனாதிபதியின் சிபார்சை எதிர்கட்சிதலைவர் சஜீத் பிரேமதாச, அவரது கட்சி எம்.பி. அஜித்.பி.பெரேரா, மற்றும் சிவில்சமூகப்பிரதிநிதிகள் மூவரும் சேர்ந்து நிராகரித்துள்ளனர். இதனால் 5:4 என்ற விகிதத்தில் ஜனாதிபதியின் சிபாரிசு, பிரதமரின் முன்மொழிவு அரசியல் அமைப்பு சபையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது இன்றைய இயற்கை அனர்த்த, அதிகரித்த பொதுநிதிப் பயன்பாட்டுச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அரசாங்கத்தின் இந்த அரசியல் விளையாட்டை சிவில் சமூக அமைப்புகள் கண்டித்தும், கணக்காய்வாளர் நாயகம் ஒருவரின் நிரந்தர நியமனத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதற்குரிய தகைமைகள் குறித்தும் கேள்வி எழுப்பி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல் சிறிலங்கா (TISL) மற்றும் சிவில் அமைப்புக்களின் (CSOs) கூட்டு அறிக்கை இந்த அரசியல் அவலத்தின் குறைபாட்டை தெளிவுபடுத்துவதாக உள்ளது. நிரந்தரமான கணக்காய்வாளர் நாயகம் ஒருவரின் நியமனம் காலந்தாழ்த்தப்படுவது ஏற்படுத்தக்கூடிய பாதகமான சமூக, பொருளாதார, அரசியல் விளைவுகள் குறித்தும் அந்த அறிக்கை எச்சரிக்கை செய்யத் தவறவில்லை.
“பொதுமக்களின் நம்பிக்கை நிதி பொறுப்பு கூறல், மற்றும் வலுவான மேற்பார்வை ஆகியவை அரசியல் அமைப்பு ரீதியாக மட்டும் அல்லாமல் அவசரமாகவும் தேவைப்படும் ஒரு தருணத்தில் இந்த தாமதம் ஏற்படுகிறது…..”.
” நிரந்தரமான கணக்காய்வாளர் நாயகம் இல்லாமல் இலங்கையின் இன்றைய இயற்கை அனர்த்த சூழலில் பொதுப்பொறுப்புக்கூறல், பேரிடர் தொடர்பான நிதிகளின் சரியான நிதி மேலாண்மை, விநியோகம், மற்றும் கண்காணிப்பு மீதான நம்பிக்கையை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்துகிறது……”.
” நிதி ஆண்டின் இறுதிக்காலத்தில் இது மிகவும் முக்கியமானது. வெளிப்படைத்தன்மை, மற்றும் பரந்த அரசியல் செயற்றிறன் தன்மையையும், நிர்வாகத்தேவையையும் வேண்டி நிற்கிறது….”.
அரசியல், இராணுவ மயமாக்கத்திற்கு எதிரான இந்த செயற்பாட்டை அரசியல் அமைப்பு சபை தடுத்து நிறுத்தி மக்களின் நம்பிக்கையை பெறவேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய நிலையில் அதுவே அரசியல் அமைப்பு சபையின் முக்கிய பணியாக அமைய முடியும்.
“இது நிர்வாக குறைபாடு, பொருளாதார பலவீனம், நிதிக் கட்டுப்பாடு, பேரிடர் பாதிப்பு காலத்தில், பலவீனமான, சமரசம் செய்யப்பட்ட தீர்வை ஆதரிக்க முடியாது….” என்பதன் மூலம் சிவில் சமூக அமைப்புகள் தேசத்தின் தேவை கருதி அரசியல் மயமாக்கத்தை, இராணுவ முன்னுரிமையை நிராகரித்து அரசியல் அமைப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை நியாயப்படுத்துவதை வெளிப்படுத்துகிறது.
PNF எனப்படும் (PROFESSIONALS NATIONAL FRONT) நிபுணர்களின் தேசிய முன்னணி மிக நீண்ட குற்றச்சாட்டு பட்டியலை அநுர அரசாங்கத்திற்கு எதிராக முன்வைத்துள்ளதுடன், கட்சி அரசியல் உள்நோக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கை:
*. கணக்காய்வு துறையின் அரசியல் அமைப்பு சுதந்திரத்தை குறை மதிப்பீடு செய்கிறது.
*. தாமதப்படுத்தல் தற்செயலானது அல்ல. மாறாக நிறுவனத்தை நிர்வாகக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான கணக்கிடப்பட்ட அரசியல் உத்தியின் ஒரு பகுதி.
*. இராணுவம் கட்டளைக்கு பணிந்து இயங்குவது. அதற்கு பழக்கப்பட்ட ஒருவரை நியமிக்க முயற்சிப்பது வளைந்து கொடுக்கும் ஒருவரை அரசாங்கம் தேடுவதைக் குறிக்கிறது.
*. தலைமைக்கணக்காளர் பதவி பொதுநிதி அனுபவம், பொது நியதிச்சட்டம் குறித்த ஆழமான அறிவு, சுயாதீனமாக பாராளுமன்றத்திற்கு கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் துணிச்சல் -தற்துணிவு .. போன்ற வற்றை வேண்டி நிற்கிறது.
*. இந்த நிலையில் அந்த வெற்றிடத்திற்கு இராணுவ அதிகாரியை நியமிப்பது சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, பொறுப்பு கூறலுக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தும்.
*. தற்போதுள்ள அரசியல் அமைப்பு கவுன்சிலின் காலம் 2026 ஜனவரி 18ம்திகதி முடிவடைகிறது. அரசாங்கத்திற்கு இந்த காலம் கடத்தல் திட்டமிட்டு தனக்கு இணக்கமான பிரதிநிதிகளை உள்வாங்குவதற்கான யுக்தி.
அரசியல் சூழ்ச்சிகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து வெற்றிடமாகவுள்ள கணக்காய்வாளர் நாயகத்தின் பதவியை நிரந்தரமாக நிரப்ப பொதுநிதி நிர்வாகத்தில் நிருபிக்கப்பட்ட நிபுணத்துவம், பொருத்தமான தகுதி, சேவை மூப்பு போன்றவற்றைக்கொண்ட சுயாதீன நிபுணர் ஒருவரை நியமிக்குமாறு PNF ஜனாதிபதியை கோருகிறது.
தற்போது வருட இறுதி- விடுமுறைக்காலம். ஜனவரி 18,2026 க்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன. புத்தாண்டின் புதிய அரசியல் அமைப்பு சபையில் எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் சாதிக்குமா? அல்லது சாதிக்கப்போவது அரசாங்கமா…? புதிய சபையில் துறைசார் நிபுணத்துவம் அற்ற சி.சிறிதரன் போன்ற போடுகாய்களுக்கு இடமளிக்கக் கூடாது.
