— அழகு குணசீலன் —
” வேடன் விரித்த வலையில் சிக்கிய புறாக்கள் கூட்டாக வலையை தூக்கிக்கொண்டு பறந்து, எலியின் உதவியுடன் வலையின் பிடியில் இருந்து தப்பிக்கொண்டன “. இந்த பூகோள அரசியல் வலையில் சிக்காது பாதுகாக்கும் சக்தி என்.பி.பி. அரசாங்கத்திற்கு இருக்கின்றதா…..? ஆட்சிக்கு வந்து இந்த ஒரு ஆண்டு காலத்தில் தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை உள்நாட்டில் காணமுடியவில்லை என்பதையே பூகோள அரசியல் தலையீடுகள் காட்டுகின்றன. மறுபக்கத்தில் அரசாங்கத்திற்குள் ஜே.வி.பி- என்.பி.பி – பங்காளி குழுவாதம் அதிகரித்திருக்கிறது. அதனை பூகோள அரசியல் சக்திகள் பயன்படுத்துகின்றனவா? என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது”.
இலங்கையில் உள்நாட்டு அரசியலில் ஜே.வி.பி- என்.பி.பி. அரசாங்கம், தான் வாக்குறுதியளித்த “முறைமை மாற்றத்தை” செய்யாவிட்டாலும் அநுர அரசாங்கம் ஒருவருடத்தை எட்டுகின்ற இந்த காலப்பகுதியில் சில விடயங்களை செய்ய துணிந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. முக்கியமாக கல்விச்சீர்திருத்த முன்மொழிவு, ஊழல்-இலஞ்ச ஒழிப்பு செயற்பாடுகள், நிர்வாக சீர்திருத்தம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் நீக்கம் என்பனவற்றுடன் தேர்தல் காலத்தில் ஜே.வி.பி.யினால் விமர்சிக்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக்கொள்கை, அதனூடாக ஐ.எம்.எப். அனுசரணை என்பனவும் தொடர்கின்றன. பொருளாதார அபிவிருத்தி சார் உறுதி இன்னும் இல்லை என்றாலும், சற்று புள்ளிவிபர ரீதியிலான பொருளாதார வளர்ச்சி வெளிப்படுகிறது.
ஆனால் மாகாணசபை தேர்தல், அதிகாரபரவலாக்கம், இனப்பிரச்சினைக்கான தீர்வு, பயங்கரவாத தடைச்சட்டநீக்கம், ஈஸ்டர் படுகொலை விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணிவிடுவிப்பு எல்லாம் இன்னும் கிடப்பிலேயே கிடக்கின்றன. சரியாக நோக்கினால் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை இழுத்தடித்து, அரசாங்கம் தென்னிலங்கையை திருப்திப்படுத்தும் தனது அரசியலை முன்னெடுக்கிறது. ஆனால் தென்னிலங்கையையும் திருப்திப்படுத்த முடியவில்லை என்பதை அங்கு நாளுக்கு நாள் தொடரும் போராட்டங்கள் பேசுகின்றன.
இதனால் இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால அரசியல், பொருளாதார முடிவுகளும், செயற்பாடுகளும் அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தை சர்வதேச, பிராந்திய பூகோள அரசியல் வலையில் மாட்டி விடுமா…? என்ற கேள்வியையும், அச்சத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்துகிறது.
1. ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அமெரிக்க தூதுவர் ரணிலின் வீடு தேடிச்சென்று விக்கிரமசிங்க சிங்கவை சந்தித்தார். அரசாங்கத்தின் பிரதம அமைச்சர் ஹருணி அமர சூரிய வைத்தியசாலைக்கு சென்று ரணிலை பார்த்தாரா? இல்லயா? என்ற சந்தேகம் எதிர்கட்சிகளை விடவும் அரசாங்கத்திற்கு அதிகமாக இருக்கிறது.
2. பிரதமர் ஹருணி அமரசூரிய கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவரை நேர்கண்ட ஊடகவியலாளர் இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் முகவரா? என்ற சந்தேகம் அரசாங்கத்திற்குள் வலுத்துள்ளது. இந்த சந்தேகம் ஹருணியையும் துரத்துகிறது.
3. 2025. செப்டம்பர். 9 ம் திகதி வெளியான “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி இலங்கை பிரதமர் ஹருணி அமரசூரியாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க டெல்லி பல்கலைக்கழகம் ஒன்று தீர்மானித்து இருப்பதாக கூறியது. ஆனால் அந்த முடிவு பல்கலைக்கழகம் சுயாதீனமாக எடுக்கவில்லை என்றும், இந்திய வெளியுறவு அமைச்சு கடிதம் மூலம் பல்கலைக்கழகத்தை நெருக்கியதாகவும் தெரியவருகிறது. இதற்கு பின்னணியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியும், அதன் மூளையாக செயற்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
4. அநுர ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த ஒரு வருடமாக அதிகாரப்பகிர்வு தொடர்பாக மௌனம் சாதித்து வந்த மோடி அரசாங்கம், ஜெனிவாவில் மாகாணசபை தேர்தலை நடாத்தி அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என்று அரசாங்கத்தை கோரியுள்ளது. மறுபாதி மனித உரிமைகள் விவகாரத்தில் ரஷ்யா இலங்கையில் மனித உரிமைகள் குறித்து கவலைப்பட எதுவும் இல்லை என சீனப் பாணியில் கூறியுள்ளது. இது அமெரிக்க, ஐரோப்பிய நிலைப்பாடுகளுக்கு முரணான கருத்தாகும்.
5. கொழும்பில் நடைபெறவிருந்த இஸ்ரேல் – பாலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு குழுக்கூட்டம் நாள் குறித்த வேகத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அழைப்பு விடுத்த அரசியல்வாதி தவறுதலாக விடுக்கப்பட்ட அழைப்பு என்று கூறுகிறார்.
6. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க இருவரையும் சீனத் தூதுவர் செங் சூயுவான் பூக்கொத்துடன் சென்று
சந்தித்துள்ளார். மகிந்தவுக்கு கொழும்பில் வீடு ஒன்றை வழங்கவும் சீனத்தூதரகம் முன்வந்துள்ளது. அப்படியானால் அநுர அரசாங்கத்தால் குற்றக்கூண்டில் நிறுத்திய/ நிறுத்தப்படவுள்ள (?), ரணிலையும், மகிந்தவையும் சீனா எந்த அந்தஸ்த்தில் வைத்து பார்க்கிறது?
7. தமிழரசு எம்.பி.சாணக்கியன் ஜனாதிபதியை பாராளுமன்றத்தில் தனியாக சந்தித்து பேசியுள்ளார். சாணக்கியன் பேசியிருந்த விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. வெளிவராதவை என்ன? தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியகட்சிகள் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டத்திற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் சறுக்கியது ஏன்? இதற்காக சாணக்கியன் ஜனாதிபதியை தனியாகச்சந்தித்து தடவினாரா? இந்த தடவலுக்கும் ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கும் தொடர்புண்டா? இது இந்திய ஏற்பாடா…..? இன்னும் ஒன்று சட்டத்திற்கு முரணாக சொத்து சேர்த்த சந்தேகப்பட்டியலில் சாணக்கியனும் இருக்கிறார்.
8. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் 700 படையினர் உள்ளடக்கப்பட இருப்பதாகவும், விசேட பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால் இது அரசாங்கத்தின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான விமர்சனந்தை காற்றில் பறக்கவிடுகிறது. இந்த பாதுகாப்பு பலப்படுத்தலுக்கு பின்னணி ஒன்று இருக்காமல் இருக்கமுடியாது.
9. ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் திங்கட்கிழமை என்று நிகழ்ச்சியிடப்பட்டது. ஜனாதிபதி இரவோடிரவாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் போனார். முப்படைகளின் தளபதியான அவரின் விஜயம் குறித்து ஆனையிறவு முகாமுக்கு கூட அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. போகின்ற வழியில் ஒருமணித்தியாலத்திற்கு முன்னர் முகாமுக்கு செய்தி வந்ததாகவும், படையினர் நித்திரையில் தட்டி எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு சொந்த படையினர் மீது இழந்துள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது.
10. அமைச்சர் இராமலிங்கம் ஜனாதிபதி செம்மணி போகலாம் என்றார். ஆனால் சொன்ன இடத்தை விட்டு சொல்லாத இடமான கச்சதீவுக்கு ஜனாதிபதி போனார். இதன் மூலம் ஜனாதிபதி யாரைத்திருப்திப்படுத்த விரும்புகிறார்? தென்னிலங்கை பௌத்த, சிங்கள தீவிர சக்திகளையா? போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்களையா?
இந்த நிகழ்வுகளின் பட்டியல் என்.பி.பி. அரசாங்கத்திற்கு பொருளாதார சவால்களுக்கு அப்பால் உள்ள பூகோள அரசியல் சிக்கல்களையும், உள்நாட்டு அரசியல் சிக்கல்களையும் காட்டுகின்றன.
இவற்றிற்கும் மேலாக அரசாங்கத்திற்குள் இரண்டு அதிகார மையங்கள் இருக்கின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரில்வின் சில்வா அணியே தீர்மானங்களை எடுக்கிறது, அறிவிக்கிறது. இதனால் அமைச்சரவை முடிவுகளுக்கும், பெலியத்தை முடிவுகளுக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகள் வருவதும் அது திருத்தம் செய்யப்படுவதும் இடம்பெறுகிறது. இதை சாணக்கியன் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார். பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் ரில்வின்- பிமல் இரத்நாயக்க அணியே தடை போடுகிறது என்றும், இவர்கள் இது இந்திய மேலாலிக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற ஜே.வி.பி.யின் ஐந்தாவது விரிவுரையை நினைவுபடுத்துவதாகவும் வடக்கு தமிழரசு அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.
அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள ரில்வின் சில்வா – ஹருணி வெடிப்பில், ஹருணியின் பலவீனங்களை அம்பலப்படுத்தி அவரை பதவியில் இருந்து அகற்றும் ‘பைல்’ இன்னும் மூடப்படவில்லை என்பது தெரிகிறது. இந்திய பல்கலைக்கழகம், இந்திய வெளியுறவு அமைச்சின் சிபார்சில் வழங்கவுள்ள கௌரவ கலாநிதிப்பட்டம், கொழும்பு பத்திரிகைக்கு அவரை பேட்டி கண்ட பத்திரிகையாளரின் ‘றோ’ தொடர்பு விசாரணை எல்லாம் பிரதமர் ஹருணி அமரசூரியாவை பலிக்களத்திற்குள் இழுக்கின்ற முயற்சிகளா?
இது விடயமாக “த ஐலன்ட் ‘ பத்திரிகையில் கருத்திட்டுள்ள சம்பத்.என்.எதிரிசூரிய இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“பிரதமர் அலுவலகமும், இலங்கை கல்வி அமைச்சும் துரதிர்ஷ்டவசமாக புத்திசாலித்தனமும், பொது அறிவும் இல்லாத ஆலோசகர்களால் நிரம்பியிருப்பதும், இந்திய மற்றும் பிராந்திய அரசியலின் குறியீட்டு தாக்கங்களை நிச்சயமாக உணராததும் துரதிஷ்டமானது. பிரதமருக்கு நல்ல ஆலோசகர்களோ, அல்லது ஆலோசனைக்கு தகுதியான தனிப்பட்ட நண்பர்களோ கூட இல்லை என்றும், சுயாதீனமாக சிந்திக்க இயலாது என்றும்” குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தை கல்வியாளர்களால் நிரப்புவோம் என்ற என்.பி.பி.க்கு இந்த நிலையா? அல்லது இதற்கு பின்னால் படிப்படியாக ஹருணி பிரதமர் பதவியை இழக்கிறாரா? காலிமுகத்திடலில் வானத்தை பார்த்த ஜனாதிபதியை படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார், பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டியவர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார், பிரபாகரனின் படத்தை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டார்கள், இத்தனைக்கு மத்தியிலும் பிரதமர் ஒருவரை கடுமையாக சாடியுள்ள ஒருவர் எப்படி தனிநபராக இருக்கமுடியும். அவருக்கு பின்னால் ஒரு மறைகரம் இருக்கிறது என்றே கொள்ளவேண்டும்.
பிரதமர் சுதந்திரமாக தனது கருத்தை சொல்லமுடியாத நிலையில் இருக்கிறார். அண்மையில் அரசாங்க தரப்பு பெண் உறுப்பினர் ஒருவரை எதிர்க்கட்சி ஆண் உறுப்பினர் ஒருவர் அவமானப்படுத்தியதாக பாராளுமன்றத்தில் பெண்களுக்காக குரல் கொடுத்த ஹருணி. எதிர்க்கட்சி பெண் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக அரசாங்க ஆண் உறுப்பினர் ஒருவர் அவமானப்படுத்தி பேசிய போதும், சபையில் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். இங்கு அரசாங்க தரப்பு பெண்ணை பெண்ணாகவும், எதிர்தரப்பு பெண்ணை ஆணாகவும் பார்க்கிறாரா அவர்?
ஜே.வி.யை.விடவும் ஹருணியிடம் மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு. அவர் விவகாரங்களை ஒரு கட்சி அரசியல் வாதிக்கு அப்பால் நேர்மையாக கையாள்வார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அதை செய்தால் அவரின் பதவி நாட்கள் விரைவாக எண்ணப்படும். அதற்காக ஜே.வி.பி. அரசியலை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவர் கடந்து சென்று ரில்வின் சில்வா அதிகார மையத்தை திருப்திப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்திய உளவாளியாகவும், அரசியல் நிர்வாக இயலாமையாகவும் அவரை காட்டும் முயற்சி என்.பி.பி.அரசாங்கத்திற்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும். இது ஜே.வி.பி. பலப்படுத்தாது. இந்த இருதரப்பு இடைவெளி வெளிச்சக்திகள் இலகுவாக உள்நுழையவே வழிவகுக்கும். அது இப்போதே ஆரம்பித்து விட்டது.
காலம் பதில் சொல்லும்….!
