துரையப்பா படுகொலையும் தமிழ்த் தேசியப்பரப்பில்     ‘துரோகி’ மொழியாடலும்

துரையப்பா படுகொலையும் தமிழ்த் தேசியப்பரப்பில்  ‘துரோகி’ மொழியாடலும்

— ராகவன்

(விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்)

ல்ஃபிரட் துரையப்பாவின் அரசியல் படுகொலை நிகழ்ந்து 50 வருடங்கள் கடந்தோடிவிட்டன. 27 ஜுலை 1975 அன்று விடுதலைப் புலிகளின் ஏகத்தலைவராகப் பின்நாளில் உருவான எனது  முன்னாள் சகா பிரபாகரன்  மற்றும் மூன்று  நபர்கள் இக்கொலையில் ஈடுபட்டனர்.  நான் இக்கொலையில் நேரடிப்பங்குதாரர் இல்லையெனினும்,  தமிழ்த் தேசியப் பாதையில்     தடைக்கல்லாக விளங்கிய ‘துரோகி’ ஒருவர் கொல்லப்பட்டார் என ஆழ்ந்த மனத்திருப்தியடைந்தேன் என்பதில் ஐயமில்லை.  

இக்கொலையின் பின்பு, பிரபாகரன்  எனது கிராமமான புன்னாலைக்கட்டுவனுக்கு வந்திருந்தார். ஏறத்தாழ ஒரு வருடம் வரைக்கும் எனது பாட்டி வீட்டில்  வைத்து அவரை பாதுகாத்தேன்.  இவ்விடயம் பற்றி ஏற்கனவே ‘ஜப்னா மொனிட்டர்’  நேர்காணல் தொடர்களில் நான் கூறியிருக்கிறேன்.

50 வருடங்கள் கடந்து இச்சம்பவத்தை  மீட்டிப் பார்க்கையில் இக்கொலையானது  அர்த்தமற்றது  மட்டுமல்லாமல் தமிழ்மக்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்கவில்லை  என்பேன்.

அரசியல் படுகொலை – துரையப்பா

——————————-

தமிழ்த் தேசியக் கருத்தாடலில் 1975 -இல் நிகழ்ந்த துரையப்பாவின்  அரசியல் படுகொலை  துரோகி ஒழிப்பாகச்சித்திரிக்கப்படுகிறது.  1970 காலப் பகுதிகளில் தமிழ்த் தேசியக்கருத்தாடலுடன் முரண்பட்டு,  இலங்கை அரசின் உதவியைபெற்றுத் தனது தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகச் செயற்பட்ட துரையப்பாவின் அரசியல் பங்களிப்பானது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான துரோகி என்ற விம்பத்தைக்  கட்டியது. மாற்றுக்கருத்துகளைக் கருத்தாயுதம் கொண்டு எதிர்கொள்வதை விடுத்து ‘துரோகி’ என்ற சித்திரிப்பு மூலம் அரசியல் நகர்வை மேற்கொண்ட ஆபத்தான  போக்கு இது. 

ஆரம்பத்தில், சுயேட்சை வேட்பாளராகப் பாராளுமன்றத்தேர்தலிலும் யாழ்ப்பாண மேயர் தேர்தலிலும் துரையப்பா போட்டியிட்டார். 1960 -இல் யாழ்ப்பாணத் தொகுதிப்பாராளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டு, 1965 வரை பாராளுமன்ற உறுப்பினராகக்   கடமையாற்றினார்.  1970 தேர்தல் மும்முனைப்போட்டியாக இருந்தது.  தமிழ் காங்கிரஸ்வேட்பாளர், தமிழரசுக் கட்சி வேட்பாளர்,  சுயேட்சை வேட்பாளர்துரையப்பா  என  நிகழ்ந்த மும்முனைப்போட்டியில்  தமிழரசுக்கட்சி வேட்பாளர் மார்ட்டின் வெற்றி பெற்றார்.  வெறும் 56 வாக்குகள் வித்தியாசத்தில் துரையப்பா இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். யாழ்ப்பாணத் தொகுதியில் அவருக்கான அரசியல் செல்வாக்கு பலமாகவே இருந்தது.  இதன்பின்பு,  அதே வருடத்தில் யாழ்ப்பாண மேயர் தேர்தலில் துரையப்பா பங்கு பற்றி வெற்றியடைந்தார்.  ஜனநாயக ரீதியாக மக்கள் ஆணை பெற்றுக் கிடைத்த  தேர்தல் வெற்றிகளை,  அரசநிதிகளை பெற்றுத் தனது தொகுதிக்கான முன்னேற்றத்திற்காகத் துரையப்பா பயன்படுத்தினார்.  யாழ் நூலக நிர்மாணம், நவீன சந்தை போன்றவை அவரது வளர்ச்சிப் பணிகளுக்கான   எடுத்துக்காட்டுகள். 

ஆனால், தமிழ்த் தேசியப் பரப்பில் – முக்கியமாக விடுதலைப்புலிகளின் பார்வையில் – துரையப்பா  தமிழ்த்தேசியத்துக்கு ஆபத்தான துரோகி.  எனவே அவரைக் கொன்றது வீரச்செயல். 

எனது நோக்கம் இந்த இரு வேறு கருத்துருவாக்கங்களை விவாதிப்பதல்ல. மாறாக, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ‘துரோகி’ என்ற கருத்துருவாக்கம் வரலாற்று ரீதியாகவும் சொற்சிலம்பத்தூடாகவும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதை அணுகுவதே எனது நோக்கு. 

‘துரோகி’  எனும் பதம்

—————————-

‘துரோகி’ எனும் பதம் தமிழ் அரசியலுக்கு மட்டும் தனித்துவமானதல்ல. மாறாக, துரோகி என்பது பல்வேறு மொழிகளிலும் தொன்று  தொட்டுப் பயன்படுத்தப்படும் பதம்.  துரோகி எனும் பதத்தின் கருத்து நிலையானதல்ல. ஒருகுறிப்பிட்ட சமூக – அரசியல் வரலாற்றுப் பின்னணியில் கட்டமைக்கப்படும் போது, அதன் அர்த்தம்  சூழலுக்கேற் பமாறுபடும் தன்மையைக் கொண்டது.    

சாரிகா திராணகம- ரோபியாஸ் கெலி  ஆகியோர்   எழுதிய ‘Traitors: Suspicion, Intimacy, and the Ethics of State-Building’  எனும் நூலில் அவர்கள் குறிப்பிடுவது:  துரோகி எனும் பதம் விசேடமான வெறுப்புணர்வால் ஈர்க்கப்படுகிறது.  ஏனெனில் துரோகிகள் அந்நியர்களல்ல  மாறாக உள்ளிருக்கும் எதிரிகள். 

விசுவாசத்தின் மீது கட்டப்பட்ட  நெறிகள், மதிப்பீடுகள்  அல்லது அரசியல் பற்றுறுதிகள்  மீறப்படுவது துரோகமாகச் சித்திரிக்கப்படுகிறது.  எனவே, துரோகி எனும் பதமானது அரசாலும் அரசு சாரா  அமைப்புகளாலும் ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில் கட்டப்படும் சமூக அரசியல்  தளத்தில் அர்த்தம் பெறுகிறது.   

தமிழ்த் தேசியக் கருத்தாடலில் துரோகி

————————————

தமிழ்த் தேசியவாதக் கருத்தாடலில் ‘துரோகி’ என்ற சொல்லின் அர்த்தம் பரப்புரைகளில் பழித்துரைத்தலுடன் கட்டப்பட்டு,  அழித்தொழிப்பு  நடவடிக்கைகள் மூலம் செயற்படுத்தப்படுகிறது. பின்பு அது இயல்பாக்கமடைந்து  தமிழ்த் தேசியக்  கருத்தாடலின் அங்கமாகிறது. துரோகிகளுக்குக் கிஞ்சித்தும்  இரக்கம் காட்டப்படமாட்டாது; தாயகத்தின்  தூய்மையைப் பாதுகாக்க அவர்களை அகற்றுதல் அவசியம்; அவர்களின் அழிப்பு சமூகச்சுத்திகரிப்புக்கான முதற்படி; களைகள் நீக்கப்படவேண்டும் என்பதுவே தமிழ்த் தேசியவாதத்தின் தாரக மந்திரம். 

அதிகாரபூர்வமான தமிழ்த் தேசியக் கதையாடலில், அரசுடன் இணக்க அரசியல்  செய்பவர் அல்லது அரச ஆதரவாளர்களாக கருதப்படுபவர்கள் அனைவரும்  துரோகிகளே.  தமிழரின் உரிமைக்கு குந்தகம் விளைவிப்பவர் என்பதே  ‘துரோகி‘ எனும்பதத்தின் வரைவிலக்கணம்.  துரோகிப் பட்டம் சூட்டப்படுபவர் அரசின் ஆதரவாளராகப் படிமப்படுத்தப்படுகிறார்.     

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் தேச அரசு கட்டுமானம் சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகளை மறுத்து ஓரங்ககட்டப்பட்ட  விளைவின் வளர்ச்சிப்போக்கில், தமிழ்த்தேசியக் கருத்தியல் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வேருன்றியது.

1949 -இல் தமிழரசுக் கட்சியின்  தொடக்கமே தமிழ்த்தேசியத்தின் ஊற்றுக்கண் எனினும் தமிழரசுக் கட்சியானது முஸ்லிம் – மலையக மக்களை உள்ளடக்கிய  ‘தமிழ் பேசும்மக்கள்’ எனும்  கருத்துருவைக் கோட்பாடாக முன்வைத்தது. இக்கோட்பாடு  1976 -இல்  வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் எனும் தமிழ் ஈழப் பிரகடனத்துடன் முடிவுக்கு வந்து, இனரீதியான தேசியவாதமாக  மாற்றமடைந்தது.  

தமிழ் ஆயுத அமைப்புகளும் சுயாட்சிக் கழகமும்  தமிழர் தாயகக்கருத்தியலை 1970 -களில் முன்னெடுத்திருப்பினும்,   தமிழர்விடுதலைக் கூட்டணியின்  1976 தமிழீழப் பிரகடனம் ஒருவகையில் ஆயுத அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கான இணக்கப்பாடாகவும், இன்னொருவகையில்  அரசுக்கு விடுக்கப்படும் அரசியல் சவாலாகவும் அமைந்தது. 

ஐக்கிய இலங்கையில் சமஸ்டி என்பதே ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சியின் கோட்பாடாக இருந்தது.   தமிழ் இனம் என்ற தனித்துவமான  இனத்துவ கருதுகோளை விடுத்து  ‘தமிழ் பேசும்மக்கள்’ என்ற கோட்பாட்டையே  தமிழரசுக் கட்சி முன்னெடுத்தது.  1970 வரை துரோகி என்ற சொல்லாடல் தமிழரசுக் கட்சியின் அகராதியில் இருக்கவில்லை என்றே கூறலாம். அரசுடன் பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வு; அந்த கோரிக்கைகள் நிறைவேறாவிடின்  அறப் போராட்டம் என்பதே தமிழரசுக் கட்சியின் தந்திரோபாயம். உதாரணமாக, 1965 -ஆம் ஆண்டு  ஐக்கிய தேசியக்கட்சிக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவைத் தமிழரசுக் கட்சி வழங்கி, மு.திருச்செல்வம் அமைச்சரானார். எனவே,  தமிழ் ஈழத்துக்கு எதிரானவர்கள் அல்லது அரசுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற துரோகி அரசியல் கருத்தாடல் 1970 வரை எழவில்லை எனலாம்.

1970: சொற்சிலம்ப மாற்றமும்  நடவடிக்கைகளும்

——————————-

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக்கட்சி ஆகியவற்றின் கூட்டில் அமைந்த ஐக்கிய முன்னணியானது மே1970  பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.  தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், தமிழ் காங்கிரஸ் மூன்று ஆசனங்களையும் அத்தேர்தலில் கைப்பற்றின.   பிரித்தானியக்காலனித்துவத் தொடர்ச்சியில் இருந்து  முற்றிலும் வெளியேறும் வகையில் குடியரசு  நிறுவுவதற்கான அறிவிப்பும், சுயபொருளாதாரக் கொள்கையும், தேசியமயமாக்கலும் ஐக்கியமுன்னணியின் கொள்கையாகயிருப்பினும், சிங்களப்பெரும்பான்மைவாத அரசியல் தொடர்ந்தது.   தமிழரசுக்கட்சியின்  சமஸ்டி கோரிக்கை நிராகரிக்கப்பட்ட காரணத்தால் அரசியலமைப்புச் சபையில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியது.

இலங்கை அரசானது தமிழரசுக் கட்சியின் ஆறு அம்சக்கோரிக்கைகளை  நிராகரித்ததன் பின்னணியில் 1972 -இல்தமிழர்  ஐக்கியக் கூட்டணி உருவாகியது.  இதனைத் தொடர்ந்து,  குடியரசுக்கு எதிரான பகிஸ்கரிப்பாக செல்வநாயகம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்ததுடன் தனிநாட்டுகோரிக்கைக்கான குரல்கள் எழுந்தன.  தமிழ்த் தேசியவாத இளைஞர்களின் – முக்கியமாக யாழ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களின்- பொறுமையின்மையை  நிவர்த்திக்கவும், சிறுபான்மை இனங்களின் குறைகளை அரசு பொருட்படுத்தாத நிலையை எதிர்க்கவும் மே 1976 -இல்  தமிழர் ஐக்கிய கூட்டணி,  தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியாகப்  பெயர் மாற்றம்பெற்றுத் தனிநாட்டுக் கோரிக்கைத் தீர்மானம் நிறைவேறியது. 

இக்காலப்பகுதியில், 1970 -இல் தரப்படுத்தல் முறையைப் பல்கலைக்கழக அனுமதியில் அரசு நடைமுறைப்படுத்தியதற்கு எதிராகச் சத்தியசீலன் தலைமைமையில் ‘தமிழ் மாணவர் பேரவை’ உருவாக்கப்பட்டது.  தமிழ் மாணவர்கள், சிங்கள மாணவர்களைவிட அதிக புள்ளிகள் பெற வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராக மாணவர் பேரவை கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்தது.  தமிழரசுக் கட்சியும் அதன் பின்னரான தமிழர் ஐக்கிய கூட்டணியும்  இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி இருப்பினும், வன்முறை அரசியலை அவர்கள் ஆரம்பத்தில் வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை.  தரப்படுத்தலுடன் சேர்ந்து மாவட்டரீதியான ஒதுக்கீட்டை அரசு பின்னர் அறிவித்ததால் வன்னி, மட்டக்களப்பு போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் பயன்பெற்றிருப்பினும், யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட தமிழ்த் தேசியர்களால் இது கவனத்தில் எடுக்கப்படவில்லை. 

இக்காலப்பகுதியில்,  கூட்டணியில் நம்பிக்கை இழந்த யாழ்ப்பாண தமிழ்த் தேசியவாத  இளைஞர்கள் வன்முறையை நாடத்தலைப்பட்டு, அரசுடன் சேர்ந்து இயங்கியவர்கள் எனக்கருதப்பட்டவர்களைத் துரோகிகளாக்கி, அவர்களை  இலக்குவைக்கத் தொடங்கினர். 

இந்த மாற்றத்திற்கு முத்திரை பதித்தவர்களில் ஒருவர்  ஆயுத அமைப்புகளின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான சிவகுமாரன்.  அப்போது அமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறி’தமிழர்களும் சிங்களவர்களும் கலாசாரத்தால்  பெரும்பாலும் ஒன்றுபட்டிருக்கின்றனர்’ எனக் கூட்டமொன்றில் பேசியதைக்கேட்டு ஆத்திரமுற்ற சிவகுமாரன்,  ஜுலை 1971 -இல் அவரது காருக்கு வெடிகுண்டு வைத்தார். சந்திரசிறி காருக்குள் இருக்கவில்லை. 

சந்திரசிறி ஒரு சிங்கள அமைச்சர்; அவர் துரோகி என்ற பாதாகைக்குள் அடங்கமாட்டார் எனினும், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் கலாசார இணைப்பு இருக்கின்றது எனும் எந்த ஒரு பரிந்துரையையும் பொறுக்க முடியாத தனித்துவ இனத்துவ அரசியலுக்கான ஆரம்பத்தை இது கட்டியம் கூறுகிறது. இதன் வளர்ச்சிப்போக்கில் துரோகிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் எனும் கருத்தாடல்  இயல்பாக்கம் பெறுகிறது.

துரையப்பாவைக் குறிவைத்தல்

————————————

பெப்ரவரி 1971 -இல் சிவகுமாரனால் துரையப்பா குறிவைக்கப்பட்டார். வேம்படி மகளிர் கல்லூரிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த அவரது காருக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டது. துரையப்பா சற்று தாமதமாக வந்ததால் அவர் அக்கொலை முயற்சியில் இருந்து தப்பினார்.

இக்காலகட்டத்தில் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ட்டின், தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களாகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட அருளம்பலம், தியாகராஜா ஆகியோர்  1972 குடியரசு அரசியல் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கத் தீர்மானித்து அரச சார்பாகினர். இவர்களும் துரோகிப் பட்டம் சூட்டப்பட்டனர். தமிழ் மாணவர்பேரவை தியாகராஜாவை அவரது பம்பலப்பிட்டி வதிவிடத்தில் வைத்துக் கொலை செய்ய முயற்சித்து தோல்வியடைந்தது.   துப்பாக்கிதாரி சுடும்போது, தியாகராஜா தற்காப்பு முறையில் கீழே விழுந்துகொண்டதால் அவர்  மேல் குறிவைக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் சுவரில் பட்டன.

1972  குடியரசு அரசியல் அமைப்பும் அதன் விளைவுகளும் 

————————-

1972 குடியரசு அரசியலமைப்பு சட்டமானது பௌத்த மதத்திற்கு விசேட அந்தஸ்து கொடுத்து, சிங்கள மொழியை அரச மொழியாக(1958 மொழிச் சட்டமானது தமிழ்  மொழியை வடக்கு -கிழக்கில் பயன்படுத்துவது, மற்றும் கல்வி போன்ற விடயங்களை உள்ளடக்கியது. அவை நீக்கப்படவில்லை) அறிவித்து,  1946 அரசியலமைப்பு யாப்பில் இருந்த சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பு சரத்தையும் நீக்கியது. இது இலங்கை அரசியல் தளத்தில் நிகழ்ந்த மாபெரும் அரசியல் மாற்றம். 

பொருளாதாரச் சீர்திருத்தம், தேசியமயமாக்கல் கொள்கை, நிலஉச்சவரம்பு போன்ற முற்போக்கு அம்சங்களை 1972 குடியரசு முன்வைத்திருப்பினும், சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளை முற்றுமுழுதாக நிராகரித்ததன் விளைவு வடக்கில் தமிழ்த் தேசியவாத அலையின்  எழுச்சிக்கும் அணிதிரட்டலுக்கும் காரணமாகியது.

குடியரசு அரசியலமைப்புக்கு எதிராகத் தமிழர்  ஐக்கிய கூட்டணி அடையாள உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்க்கள், கருப்புக் கொடிகாட்டுதல் போன்ற அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. ஆனாலும், அன்று  நிலவிய அரசியல் யதார்த்தம் மிகச்சிக்கலானது. இந்த நிகழ்வுகளை வெறும் தமிழ் – சிங்களத்துருவப்படுத்தல் எனப் பொருள்கொள்ள முடியாது.  உதாரணத்திற்கு, அரசின் பொருளாதாரக் கொள்கையால் யாழ்ப்பாண விவசாயிகள் மிகவும் பயனடைந்தனர். 1974 -இல் அன்றைய பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க யாழ்ப்பாணம் வந்தபோது, அவரை வரவேற்க மக்கள் பெருமளவில்  திரண்டனர்.  1960 -களில் வடக்கில் நிகழ்ந்த சாதி எதிர்ப்பு போராட்டத்தால் அரசியல் விழிப்புணர்வு கொண்ட  ஒடுக்கப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்கள் தமிழ்த் தேசியப் போராட்டத்தைச் சந்தேகக் கண்ணுடனேயே அணுகினர். அவர்கள் மத்தியில் இடதுசாரிகளுக்குச் செல்வாக்கு இருந்தது. 

எனினும், காலனித்துவ உருவாக்கமான ‘இன  அடையாளம்’ பின்காலனித்துவ அரச உருவாக்கத்தில்  முடிவுக்கு கொண்டுவரப்படாமல்,  காலனித்துவ இன அரசியலின் தொடர்ச்சியாகப்  பயணித்ததன் விளைவு சிறுபான்மை – பெரும்பான்மை எனும் கருத்தாடலின் வலிமைக்குக் காரணமாகிஇலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை விளைவித்தது.

தமிழ்த் தேசியக் கருத்தியலின் உள் முரண்பாடுகள்:

———————————

சாதியப் பிளவுகளும், ஆதிக்க சாதி அடக்குமுறையும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் விடை காணா வினாக்கள்.  யாழ்ப்பாணக் குடாநாடு சாதியப் படிமுறையாலும் ஆதிக்க சாதி அடக்குமுறையாலும் புரையோடிப் போன சமூகம்.  அறுபதுகளில் சாதியத்திற்கு எதிரான முக்கியமான தொடர் போராட்டங்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி  முன்னெடுத்தது.  1970 -இல் காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் செல்வநாயகத்துக்கு எதிராகப் போட்டியிட்ட  கம்யூனிஸ்ட் கட்சி (மாஸ்கோ பிரிவு) உறுப்பினர் வி. பொன்னம்பலம் கணிசமான வாக்குகளைப்பெற்றார்.  ஒடுக்கப்பட்ட சாதியினரிடமிருந்தும் கூலித்தொழிலாளர்-களிடமிருந்தும்  அவருக்குப்  பேராதரவு கிடைத்தது.

தமிழரசு கட்சிக்கோ பின்னர் தமிழர் ஐக்கிய  கூட்டணிக்கோ சமூக நீதி அரசியல் பார்வை கிஞ்சித்தும் இருக்கவில்லை;  அறுபதுகளில் எழுந்த சாதியத்திற்கு எதிரான போராட்டங்களில் அவர்கள் பங்குபற்றவில்லை.  ஒருவகையில், வெள்ளாளர்கள் குடாநாட்டில் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் சாதிய எதிர்ப்பு போராட்டம் தமது வாக்கு அரசியலுக்குக் கேடு என அவர்கள் எண்ணினர். மறுபுறம், சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்குப் பாதகம் என்ற பார்வையும் அவர்களுக்கு இருந்தது.  இந்தக் குறுகிய சிந்தனைப்போக்குடன் பிரதேசம் சார்ந்த வேறுபாடுகளும் இருந்தன.  யாழ் மாவட்டத்தில் அவர்களுக்கு அரசியல் செல்வாக்கு கணிசமாக இருந்தபோதும்,  கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மத்தியிலோ, முஸ்லிம் மக்கள் மத்தியிலோ அவர்களது அரசியல் ஆதிக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. கிழக்கு மாகாணத் தமிழர்களும், முஸ்லிம்களும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு ஓரளவு ஆதரவு வழங்கும் நிலைகாணப்பட்டது.  

அமைப்பு ரீதியான பலவீனமும் கருத்தியல் வேற்றுமையும்:

————————————

கூட்டணியின் குறைபாடு சமூக நீதி அரசியல் விழுமியங்களை கொண்டிருக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு ஒரு தெளிந்த  அரசியல் நோக்கும் இருக்கவில்லை.  மக்களை அணி திரட்டித் தொடர்ச்சியான சட்ட மறுப்புப் போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கவில்லை.  கட்சிக் கட்டுமானமும் அவர்களுக்கு இருக்கவில்லை.  தென்னிலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து பரந்துபட்ட ஒரு முன்னணியையும் அவர்கள் கட்டவில்லை.  தமிழ் பேசும் மக்கள் என்ற பதாகையின் கீழ் முஸ்லிம், மலையக மக்களை இணைக்கும் பரந்த அரசியல் அணிகட்டலிலும் அவர்கள் தோல்வி கண்டனர். இதனால், தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்கும் அமைப்பு என்பது பேரளவில்தான் இருந்தது. நடைமுறையில் இருக்கவில்லை. 

கூட்டணியின் இக்குறைபாடுகளின் வெளிப்பாடாவே தீவிரத்தமிழ்த் தேசியவாதச் சிந்தனை முகிழ்த்தது. 1968 -இல், வி. நவரத்தினம்  தமிழரசு க்கட்சியில் இருந்து பிரிந்து சுயாட்சிகழகத்தை நிறுவி, தமிழர் தன்னாட்சி, தமிழர் ஒரு  தனி இனம் என்ற கோசத்தை முதன்மைப்படுத்தினார். முஸ்லிம்கள் தமிழ்பேசியபோதும் அவர்கள் தமிழ் இனமல்ல என்ற இனத்தூய்மை அரசியலை அவர் முன்வைத்தார்.   யூத தேச உருவாக்கம் அவருக்கு ஆதர்சமாக இருந்தது.  ‘எக்சொடஸ்’ என்ற நாவலை அவர் மொழிபெயர்த்து ‘நமக்கொரு நாடு’ என்ற தலைப்பில் சுயாட்சிக் கழக ஏடான ‘விடுதலை’யில்  தொடராக அவர்  வெளியிட்டார்.  இந்தகருத்தியல், ஆயுத இயக்கங்களுக்கான அத்திவாரமாக அமைந்தது.  பிரபாகரனும் வி. நவரத்தினத்தின் கருத்தியலால் உந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பழிசுமத்தும்  அரசியல்

—————————

அமைப்புரீதியான அணி திரட்டல் அரசியலின் பற்றாக்குறையும்,  தீவிரம் கொண்ட தமிழ்த் தேசியவாத இளைஞர்களின் அழுத்தமும் ஒன்று சேர்கையில், தேர்தல் அரசியலை மட்டும் முதன்மையாக வரித்திருந்த கூட்டணிக்கு வேறு அரசியல் தேர்வும் இருக்கவில்லை.  தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தைத்தாம் இழந்துவிடுவோம் என்ற அச்சமானது  தமிழர்களின் ஒற்றுமையின்மைக்கு அடிப்படைக் காரணம் ‘துரோகிகள் தமிழரைப் பிரிக்கிறார்கள்’  எனும்  மலினமான அரசியலை அவர்கள் தேர்ந்தெடுக்க  வழி சமைத்தது. 

அழித்தொழிப்பு  கருத்தியலின்  எழுச்சி

————————————

1970 -களின் ஆரம்பத்தில், தமிழ்த் தேசியவாத இளைஞர்கள்  ‘துரோகி அழித்தொழிப்பு’ எனும்   பேராபத்தான கருத்தியலை முன்னெடுத்தனர். இதுவே தமிழ் அரசியலை தலைகீழாகப் புரட்டிப்போட்ட அரசியல் பார்வையாக மாறியது. இக்கருத்தியலை மறுதலிக்காமல், கூட்டணி பாராமுகமாகச் செயற்பட்டது.  கூட்டணியினர் பொது மேடைகளில் அரச ஆதரவாளர்களை ‘துரோகி’  என முத்திரை குத்தினர், அரச ஆதரவாளர்களை அழித்தொழிப்பதற்கான அரசியல் உத்வேகத்தை இது வழங்கியதுஎனலாம். 

மொழியாடலின் ஒன்றிணைவும் வன்முறையும்  

————————————

துரோகி – அழித்தொழிப்பு என்ற இரு பதங்களும் ஒன்றிணைந்த ஆபத்தான அரசியல் 1970-களிலிருந்து முகிழ்த்தது.  துரோகி – அழித்தொழிப்பு என்ற பதங்களின் ஒன்றிணைவானது  தமிழ்த்தேசியவாத அரசியல் பரப்பின் மொழியாடலாகியது.

கூட்டணியின் மிதவாத அரசியலையும் அவர்களது தீவிரமின்மையையும் கேள்விக்குள்ளாக்கிய தமிழ்த் தேசியத்தால் கட்டுண்ட இளைஞர்கள்  ஆயுத வன்முறையே தீர்வு என முடிவுசெய்தனர்.  துரோகிகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, அது தமிழ் தேசிய போராட்டத்திற்கு அத்தியாவசியமானது எனும் சித்தாந்தம் தமிழ்த் தேசியவாத இளைஞர்களின் மத்தியில் வேரூன்றியது. 

துரோகி ஒழிப்பு பற்றிய கூட்டணியின் மௌனம் அவர்களது அரசியல் இருப்புக்கான தளத்தைக் கொடுத்தது.  தங்களுக்குத் துரோகி ஒழிப்பில் சம்பந்தமில்லை எனக் காட்டிக்கொண்டாலும்,   தீவிரவாத இளைஞர்களின்  துரோகி ஒழிப்புப் படலமும் அது உருவாக்கிய பீதியும்  கூட்டணியினருக்கு அரசியல் ஆதாயத்தை வழங்கியது என்பதில் ஐயமில்லை. 

துரோகி ஒழிப்பின் கலாசார விரிவாக்கம்

———————————-

துரோகி ஒழிப்பு மொழியாடல், கலாசார தளத்தில்  எவ்வாறு நஞ்சை விதைத்தது  என்பதற்கான சான்றுகள்  தமிழ் அரசியல்பரப்பில் சிந்திக்கிடக்கின்றன.  துரோகிக்கு இயற்கை மரணம் இல்லை என்ற சிலாகிப்புகளுடன் சேர்ந்த பல படைப்புகள் உருவாகின.  தமிழ்த் தேசியவாதப் பத்திரிகைகள், பிரசுரங்கள், கவிதைகள் அதற்கு வழி சமைத்தன. இந்தக் கலாச்சார முன்னெடுப்பின் பிதா காசி. ஆனந்தன் என்பது மிகையல்ல. அவரது கவிதைகள் தமிழ்த் தேசிய மொழியாடலில் வகித்தபங்கும், துரோகி அரசியல்   தமிழ் தேசியவாதச் சிந்தனையில் பாய்ச்சிய  மோசமான  கருத்தியலும் அவரது கவிதையொன்றின் சில வரிகள் மூலம் வெளிப்படுகின்றன. அக்கவிதை இது: 

“களை எடுப்போம் வாரீர் தமிழரே

தமிழரைக் காட்டிக்கொடுக்கும் தமிழர்

தலை எடுப்போம் வாரீர்  மீண்டும் நாம்

தலையெடுக்க வேண்டுமாயின் இவரை

முளை தனிலே  கிள்ளி எறிதலே

முதல் வேலை! ஓடிப்புறப்படுங்கள்!

கொலை நெடுவாள் தூக்கி இவர்சிந்தும்

குருதியில் பகைவரை மூழ்கடிப்போம்.

…….

நிறைகருவில் எமைப் பல திங்கள்

சுமந்த தாயெனினும் சரியே இன்னல்

சிறிதளவுமின்றி எமை வளர்த்துச்

சிறப்பீர்ந்த  தந்தை எனினும் சரியே

உறுபகைவர் நட்பில் மகிழ்ந்தெங்கள்

தமிழருக்குலை வைப்பாராயின் ஓடி

வெறியோடவர் உடலம் வீழ்த்துமின்கள்!

அதன்பின் போர் விழாவும் நடத்திவைப்போம்”

எதிரியுடன் நட்பு கொண்டவர்  பெற்றோர் ஆயினும் அவர்கள் களையெடுக்கப்படவேண்டியவர்கள் எனும்  மனித உறவுகளையும் மனிதத்தையும்  மறுக்கும் சிந்தனை மரபின்  கலாசார படிவங்கள் இவை.  களையெடுத்தல்  மனிதர்களை வெறும் பதர்கள்- களைகள் என அஃறிணை ஆக்கி அவை அப்புறப்படுத்த வேண்டியவை எனும் சிந்தனைமுறைக்கான வித்தாக கலாசார தளத்தில்  ‘ துரோகி’ கருத்தியல் உருவாக்கப்பட்டது. 

1974 தமிழாராய்ச்சி மாநாடும் பொலிஸ் வன்முறையும்

——————————-

யாழ்ப்பாணத்தில், ஜனவரி 1974 -இல்  நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் நிகழ்ந்த பொலிஸ் வன்முறை,  தீவிரத் தமிழ்த் தேசியவாதத்தின் எழுச்சிக்கும் ஆயுத வன்முறைக்கான நியாயப்படுத்தலுக்குமான தூபமாக விளங்கியது.  மாநாட்டின் இறுதி நாளன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பொதுக்கூட்டத்தில் பங்குகொள்ளத் திரண்டிருந்தனர்.  பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பொலீஸ் உதவி மா அதிபரின் வாய்மொழி  அனுமதியைப் பெற்றிருந்தனர். எனினும்,  தமிழ்நாட்டில் இருந்து வந்த இரா.ஜனார்த்தனம் மாநாட்டு விருந்தினராக அழைக்கப்படவில்லை. அழையா விருந்தினராக வந்த அவரது பிரசன்னம் சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பினும் பொலிஸ் வன்முறை நியாயப்படுத்த முடியாதது. 

கூட்டம் தொடங்கும்போது பொலிசார்  எவ்வித முன்னறிவுப்புமின்றி, திடீரென்று வாகனங்களில் வந்து  தமக்கு வழிவிடுமாறு கூறிக் கூட்டத்தின் மீது  வன்முறையை ஏவிவிட்டதும்,  அதன் தொடர்ச்சியாக வானில்  சுட்டு எச்சரிக்கை விடுத்ததும், அதன் விளைவாக மின்கம்பி அறுந்துவிழுந்து ஒன்பது பொதுமக்கள் மின்சாரம் தாக்கிக் கொல்லப்பட்டதும் நிகழ்ந்தது.  பொது மக்கள் மேலான  இந்த பொலிஸ் வன்முறை அவசியமற்றதும் மோசமானதுமாகும். இதன் விளைவு,  துரோகிகள் கொல்லப்பட வேண்டும் என்ற சிந்தனைக்கு மேலும் வலுவூட்டியது. 

பழி சுமத்தலும் ஜனநாயக மரபின்  வீழ்ச்சியும்

——————————-

துரையப்பாவிற்கு பொலிஸ் வன்முறையில் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை என்பதில் ஐயமில்லை. அவர் பொலிஸ் வன்முறையை ஆதரிக்கவும் இல்லை. எனினும், தமிழ் தேசியவாத இளைஞர்களும் கூட்டணியினரும் மாநாட்டு வன்முறைக்குக் காரணமானவரென துரையப்பாவைப் பலிக்கடா ஆக்கினர்.  ஜனநாயகரீதியாக மக்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்த துரையப்பாவே பொலிஸ் வன்முறையின் சூத்திரதாரி என்ற திட்டமிட்ட பரப்புரை மேற்கொள்ளப்பட்டதன் பின்னணி அவர் தமிழ்த் தேசிய அரசியலுக்கு முட்டுக்கட்டையாக விளங்கினார் எனும் காரணி மட்டுமே.  கருத்தியல் போராட்டத்தை முன்னெடுக்கத் தவறி ‘துரோகி’ அரசியலைத் தேர்ந்தெடுத்தது ஜனநாயக மரபின் பெரும் வீழ்ச்சி. இதுவே அழித்தொழிப்பைஆயுதமாக்கியது. 

துரையப்பா கொலை:

—————————

தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ந்த  பொலிஸ் வன்முறைக்கு காரணம் துரையப்பா என்ற திட்டமிட்ட பரப்புரையின் விளைவாகவே துரையப்பா  முதன்மைத் துரோகியாகச் சித்தரிக்கப்பட்டு தமிழ் ஆயுத குழுக்களால்   குறிவைக்கப்பட்டார்.  துரையப்பாவுக்குக் குறி வைத்தவர்களில் சிவகுமாரன்  முக்கியமானவர்.  தனது ஆயுதக் குழுவின் நிதித்தேவைக்காக அவர் சில இளைஞர்களுடன் சேர்ந்து கோப்பாய் வங்கியைக் கொள்ளையிட முயன்றார். முயற்சி தோல்வி அடைந்து அவர் தப்பித்து ஓடும் போது, பொலிசாரால் கைது செய்யப்பட்டநிலையில்,  4 ஜூன் 1974 அன்று நஞ்சருந்தி மரணமானார். அவரது மரண – அஞ்சலி நிகழ்வுகளில்   நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.  கூட்டணிப் பிரமுகர்களும் பங்குகொண்டனர். கூட்டணிப் பிரமுகர்களின் பங்குபெற்றலும் அவர்களது உரைகளும்  ‘துரோகி ஒழிப்பு’  ஆயுத அரசியலை நியாயப்படுத்தலுக்கான முக்கிய திருப்புமுனை எனலாம்.  

‘வன்முறை அரசியல் எமது பாதையல்ல; அகிம்சை வழியே எமதுஇலக்கு’ எனக் கூட்டணிப் பிரமுகர்கள் உரையாற்றிய போதும், சிவகுமாரனின் தியாகம் பற்றி விதந்துரைத்தனர்.  சிவகுமாரன் போன்றவர்களின் பாதை வேறுபட்டிருப்பினும் அவர்களது நோக்கம் ஒன்றே – அது மதிக்கப்படவேண்டும் என விளம்பினர்.  இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப்போராட்டத்தை முன்னெனடுத்த பகத்சிங், நேதாஜி ஆகியோரது தியாகம் போன்றதே சிவகுமாரனின் தியாகமும் எனக் கூறினர்.

27 ஜுலை 1975 அன்று, பொன்னாலை வரதராஜப் பெருமாளை தரிசிக்கக் கோயிலுக்கு வந்த துரையப்பாவைக் குறிவைத்துப் பிரபாகரனும் மற்றும் மூன்று இளைஞர்களும் காத்திருந்தனர்.  அங்கு துரையப்பா சுட்டு கொல்லப்பட்டார். துரையப்பா கிறிஸ்தவராக இருப்பினும் வரதராஜப் பெருமாளை வணங்கிவந்தார்.  துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டபோது, தமிழ் ஈழவிடுதலைப் புலிகள் உருவாகியிருக்கவில்லை. புதிய தமிழ் புலிகள் என அவர்கள் தம்மை அழைத்துக் கொண்டனராயினும், அப்படி ஓர் அமைப்பு இருப்பது  மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.  தமிழ்ஈழ விடுலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கம் 5 மே 1976 ஆகும்.

துரையப்பாவின் மரணச்சடங்கில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நிறுவனமயமாக்கப்பட்ட அரசியல் படுகொலை

——————————-

‘துரோகி அழித்தொழிப்பு ‘எனும் கருத்தியலை  விடுதலைப்புலிகள்  மட்டுமே உருவாக்கினர் என்பது தவறு. 1970-களில் எழுந்த இனரீதியான தமிழ்த் தேசியத்தின் பரந்துபட்ட கருத்தியலே இது.  தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின்  மேடைமுழக்கங்கள் துரோகி முத்திரையை வடிவமைத்தன. ஆயுதக்குழுக்கள்  துரோகி அழித்தொழிப்பை நடைமுறைப்படுத்தின. 1981 -இல்,  தமிழீழ மக்கள் விடுதலை கழகம் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் தியாகராஜாவைக் கொலை செய்தது. வடக்கில் சுதந்திரக்கட்சி, மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்கள் பலர் டெலோ போன்ற பல்வேறு ஆயுதக்குழுக்களால் கொல்லப்பட்டனர். 

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடங்கிய காலத்தில் இருந்தே அவர்களுக்கு ஏகப்பிரதிநிதி கொள்கை இருந்தது. மாற்று இயக்கங்களின் உருவாக்கம் ஒற்றுமைக்குக் கேடு என அவர்கள் சிந்தித்தனர்.  புலிகளில் இருந்து பிரிந்து சென்ற ‘தமிழீழ மக்கள்விடுதலைக் கழகம்’ புலிகளின் முதன்மையான குறியாகியது. ஆனாலும், 1986 வரை அவர்கள் மற்றைய அமைப்புகளை அதிகாரபூர்வமாகத் தடை செய்யும் வலுவை பெற்றிருக்கவில்லை. 1986 -இல் டெலோ அமைப்பை அழித்ததன் பின்பு அவர்கள் அனைத்து மாற்று இயக்கங்களையும்  தடை செய்தனர்.  

இதன் பின்பு, புலிகள் தாமே தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் எனப்பிரகடனம் செய்து, புலிகளை விமர்சிப்பவர்கள், மாற்று அமைப்புகளில் இருப்பவர்கள்,  இடதுசாரிகள், புத்திஜீவிகள், கூட்டணி பிரமுகர்கள் அனைவரையும் துரோகி என்ற பட்டியலில் இணைத்தனர்.   புலிகளை விமர்சிப்பவர்கள் அரச ஆதரவாளர்கள் எனவே  ‘துரோகிகள்’  என்ற புதிய வரைவிலக்கணம் புலிகளின் மொழியாகியது. இந்த வளர்ச்சிப்போக்கில் பிரபாகரன் ‘மேதகு’ ஆக்கப்பட்டு, ஏகத் தேசியத் தலைவரானார்.  அவரது கருத்தியலை விமர்சிப்பவர்கள் அழித்தொழிக்கப்படுவது இயல்பாக்கம் அடைந்தது.  

இந்தக்  கருத்தியலின் இன்னொரு வடிவம், படுகொலை செய்யப்பட்டவர்களை அரசின் ஒட்டுக்குழுவாகச் ( PARAMILITARY) சித்திரிப்பது.  ‘தமிழ் நெட்’ என்ற இணைய ஊடகத்தின் ஆசிரியர் சிவராம் (தாரகி) இந்தப் புதியவரைவிலக்கணத்தின் சூத்திரதாரி.  ஒட்டுக்குழுவைப் படுகொலைசெய்யும் நியாயப்படுத்தலை  ‘தமிழ் நெட்’ பரப்பியது.  துரோகி – ஒட்டுக்குழு சமன்பாட்டை முன்வைத்தது தமிழ் நெட்.  ஒருவர்கொல்லப்பட்டு அவருக்கு ஒட்டுக்குழு பட்டம் வழங்கப்படும் போது, அவர்  ‘துரோகி’ என்ற எண்ணக்கரு ஊட்டப்படுகிறது.

நச்சுக்கருத்தியலின் தொடர்ச்சி

மே 2009 இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தால்  இராணுவரீதியாக நிர்மூலமாக்கப்பட்ட பின்,  துரோகி அழித்தொழிப்பு நடை முறையில்  ஸ்தம்பித்தது. ஆனாலும்,  இந்த  ஆயுதக் கலாசார கருத்தியலின் தொடர்ச்சி தமிழ்த் தேசியப் பரப்பின் ஒரு பகுதியினரிடம்  இன்னும் குடிகொண்டு இருக்கிறது.  இன்றும் கூட, விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்கள்  ‘துரோகிகள்’ என அடையாளப்படுத்தப் படுகிறார்கள். உதாரணத்திற்கு, முஸ்லிம்மக்களின் வெளியேற்றத்தைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பு எனக் கூறிய சுமந்திரன்   துரோகி ஆக்கப்பட்டார்.  இவ்வகையில் இந்த நச்சுக் கருத்தியல் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் எவ்வாறு ஊறி இருக்கின்றது என்பதைக் காணலாம்.

வேடிக்கை என்னவெனில், தற்போது -முக்கியமாக புலம் பெயர்தேசங்களில்- விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்   தங்களுக்குள் மோதி, குழுக்களை உருவாக்கி, ஒருவரை ஒருவர் துரோகி என பட்டம் சூட்டுகிறார்கள்.

தமிழர்  விடுதலைக் கூட்டணியின் அதிக விலை கொடுத்தவெற்றி

——————————

துரையப்பாவின் படுகொலைக்கு உத்தரவிட்டது  தமிழர்   கூட்டணித் தலைமை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனினும்,  துரோகி என்ற அரசியல் சொல்லாடல் நச்சு  விதையை இட்ட தார்மீக பொறுப்பு அவர்களுக்கு உண்டு.  கூட்டணியினரின் தொடர்ந்த துரோகிச் சொற்சிலம்பம், துரோகி  அழித்தொழிப்பு என்ற கருத்தியலையும் நடைமுறையையும்  ஆயுத குழுக்கள் தொடர வழி வகுத்தது. பின்நாளில் அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் இந்த  அழிவு அரசியலின் ஆபத்தை உணர்ந்து பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வைப் பெறவேண்டும்  எனும் குறிக்கோளை முன்வைத்த போது, புலிகளின் பார்வையில் அந்த நிலைப்பாடு  துரோகமாக்கப்பட்டது.  அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்ற மிதவாத அரசியல் தலைவர்கள் துரோகிகளாக்கப்பட்டுப்  புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். 

கூட்டணியினரின்  ‘துரோகி’ என்ற கருத்துருவாக்கம்  ஆயுதக்குழுக்களின்  துரோகி அழித்தொழிப்பு என வடிவமெடுத்துப் பின்பு தமது கருத்தியலுக்கு எதிரான எவரும்  துரோகிகளே எனும்புலிகளின் அதியுச்ச துரோகி அரசியலாக பரிணமித்தது.

துரோகி என்ற கருத்துருவாக்க விதைப்பு எவ்வாறு ஒரு மோசமானநச்சுக் கருத்தியலுக்கான  ஆரம்ப புள்ளியாக இருந்தது; பின்னர் அந்த கருத்தியலை  விதைத்தவர்களும்  அதற்கு பலியாகினர் என்பது ஆழமாக நோக்கப்படவேண்டியது.  

அழிவுப்பாதை அரசியலின்  கவிதை

================

துரோகி மொழியாடலின் அழிவு அரசியலையும்  அதன்  மோசமான பக்கங்களையும்  சி. சிவசேகரம் தனது கவிதையொன்றில் துல்லியமாக வெளிக்கொணர்கிறார். அக்கவிதையின் சில வரிகள்: 

துரோகி எனத் தீர்த்து முன்னொரு நாள் சுட்டவெடி

சுட்டவனைச் சுட்டது

சுடக்கண்டவனை சுட்டது

சுடுமாறு ஆணையிட்டவனைச் சுட்டது

குற்றம் சாட்டியவனை வழக்குரைத்தவனை

சாட்சி சொன்னவனைத் தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது

தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது எதிர்த்தவனைச் சுட்டது

சும்மா இருந்தவனையும் சுட்டது

எனது மீள்பார்வை

————————

பார்வையாளனாக இன்றி, கடந்த காலங்களில் இக்கருத்தியலால் கட்டுண்ட ஒருவன் என்ற வகையில் இந்த பகுப்பாய்வை நான்வரைந்துள்ளேன்.  1972 காலப்பகுதிகளில் தமிழ்த் தேசியவாதச்சிந்தனையால் உந்தப்பட்டவன் நான்.  மாணவனாக நான் இருந்த காலப்பகுதிகளில், ‘துரோகி அழித்தொழிப்பு’ என்ற சிந்தனையில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.  1974 காலப்பகுதிகளில் பிரபாகரன் எனக்கு அறிமுகமாகிறார்.  துரையப்பா கொலைக்கு பின்பு பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் எனது பாட்டி வீட்டில் நான் அடைக்கலம் கொடுத்தேன்.  பிரபாகரன் எனது பாட்டி வீட்டில் குறைந்தது ஒருவருடம் தங்கி இருந்தார். பற்குணம் பின்னர்  இயக்கத்தை கைவிட்டுச் செல்ல முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரபாகரனால் கொல்லப்பட்டதும்  நிகழ்ந்தது.  ஆரம்பத்தில் புதியதமிழ் புலிகள் அமைப்பிலும், பின்னர் 1976 -இல் தமிழீழவிடுதலைப்புலிகளுடனும் இணைந்து செயல்பட்டேன். 

ஏப்ரல் 1984 -இல் புலிகளிலிருந்து நான் விலகிய பின்னர் இனத்துவ தேசியவாதச் சிந்தனை மரபின் அழிவுக் கருத்தியலை நான் படிப்படியாகத் தரிசிக்க தொடங்கினேன்.  தமிழ்த்தேசியவாதத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டு பயணித்து, பின்னர் அந்தக்  கருத்தியலை விமர்சனத்திற்குள்ளாக்கிய எனது நீண்டபயணத்தின் சுய பிரதிபலிப்பு இது.  இறுக்கமான கருத்தியல் கட்டுமானத்திலும்  மாற்றங்கள் ஏற்படும் எனும் தாற்பரியத்தைப்புரிந்து,   எமது கடந்தகால வரலாறு சங்கடத்துக்கு உரியதெனினும் அதனை துணிச்சலுடன் வெளிப்படுத்துவது அவசியம்.

மாற்றுப்பாதைக்கான முன்மொழிவு

முடிவாக,  தமிழ்த் தேசியவாதக் கருத்தியலில் ஆழமாக வேரூன்றியுள்ள ஆபத்தான,  நச்சுத்தன்மை கொண்ட ‘துரோகி’ கருத்தியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ‘துரோகி’ என்ற கருத்து இனத்துவத் தேசியவாத உரையாடலிலிருந்து பிரிக்க முடியாத அம்சம். இனத்துவத் தேசியவாதம் காலனியத்துவத்தின் உற்பத்தி.  எனவே காலனித்துவ மனநிலையிலிருந்து நாம் விடுதலை பெறுவது அவசியம். 

‘Neither Settler nor Native’ எனும்  நூலில் மஹ்மூத் மம்தானி“காலனித்துவ அம்சங்களற்ற  அரசியல் சமூகத்தை மீள் கற்பனை செய்வதும், அதன் அடிப்படையில்  கொள்கை வகுத்தலுமே     தலையான பணி” எனச் சுட்டுகிறார்.  அரசியல் சூழலில் உருவாகும் வன்முறையை வெறும்  குற்றமாக  பார்ப்பதை விடுத்து அதன் அரசியலைத்  தரிசித்தல்  அவசியம் என்கிறார். 

எனவே பாரம்பரியத் தாயகம், எல்லைகள், தனித்துவமான கலாசாரம், அடையாளம் போன்ற கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்களை  கைவிட்டு,  ஆதிக்க  அரசியல் மொழியாடலையும் அதன் கருத்தியல் தளத்தையும் கேள்விக்குட்படுத்தும் புதிய அரசியலை  மீள் கற்பனை  செய்தல் அவசியம்.  “தாயகக் கருத்தியல்  கலாச்சார  ஆதிக்கத்துக்கான கருவி.  ஜனநாயகம்  தழைக்க வேண்டுமானால் தேச -அரசுக்கட்டுமானம் தகர்க்கப்பட வேண்டும்” என்கிறார் மம்தானி.  இந்தக்கருத்து  சிங்களத் தேச அரசுக் கட்டுமானத்திற்கும் சாலப்பொருத்தம். 

இவ்வகையில், இனத்துவத்  தேசியவாதக்கட்டமைப்புக்குள் சிந்திப்பதை  தவிர்க்கையில்  ‘துரோகிஅழித்தொழிப்பு’ என்ற  சிந்தனை மறைந்து விடுகிறது.

அல்ஃபிரட் துரையப்பா கொலை செய்யப்பட்டது இனத்துவத்தேசியவாதக்  கண்களால் அல்லாமல் மனிதநேயம், விமர்சனத்திற்கான சகிப்புத் தன்மை,  மாற்றுச் சிந்தனைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் போன்ற விரிந்த கொள்கைகளின் வெளிச்சத்தில் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும். துரோகி அரசியல் என்ற இருண்ட அத்தியாயத்தை நேர்மையாக எதிர்கொள்வதன் மூலமே  பரந்த மனப்பான்மைகொண்ட ஜனநாயகச் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.