— அழகு குணசீலன் —
காலிமுகத்திடல் அறகலய போராட்டம் தொடர்பாக, அது அமெரிக்க, மேற்குலக சக்திகளின் “ஆட்சி கவிழ்ப்பு” திட்டம் என்று போராட்ட காலத்தில் அரங்கத்தின் “மௌன உடைவுகள்” தொடரில் சில கட்டுரைகள் இப்பத்தியாளரால் எழுதப்பட்டுள்ளன. அதன் பின்னணியிலான ஆதாரங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு பின்னர் வெளிவர தொடங்கி இருப்பதுடன், சில சிங்கள, ஆங்கில தென்னிலங்கை ஊடகங்கள் வெளிச்சம் போடவும் ஆரம்பித்துள்ளன. ஆக, அறகலய “ஒரு அமெரிக்கத் தயாரிப்பு”. மேட் இன் அமெரிக்கா. (AMERIKAVE SADANA LADA).
மரபு ரீதியான இடதுசாரிகள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டவர்கள் அது ஒரு மக்கள் புரட்சி என்றும், அதை ஒரு “காடாக” பார்க்கவேண்டும் என்றும் மார்க்சிய, லெனிச சாயங்களை பூசினர். உலகின் வர்க்கப்போராட்டங்களுடனும் ஒப்பிட்டனர். மௌன உடைவுகள் அதை மறுத்து அறகலய ஒரு புரட்சி அல்ல என்றும் அது வெறும் சீர்த்திருத்தங்களோடு மழுங்கிப்போகின்ற எதிர்ப்புரட்சி என்றும் தொடர்ந்தும் எழுதியது. அந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்க ஆசியையும், ஆதரவையும் பெற்ற ஒரு அணி இயக்குவிக்கப்படுகிறது என்றும் அடித்துச்சொன்னது.
இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு பின்னர் கொழும்பு ஆங்கில ஏடான “த ஐலன்ட் ” தனது ஆகஸ்ட் 27, வெளியீட்டில் SHAMINDRA FERDINANDO வினால் எழுதப்பட்டுள்ள கட்டுரையானது அனைத்து பின்கதவு அரசியலையும் அம்பலப்படுத்துகிறது. இந்த போராட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் யு.என்.பி.க்கும் அநுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பிக்கும் இடையிலான, காலிமுகத்திடல் பின் கதவு காதல் உறவு பற்றியும், அது அமெரிக்காவின் கொழும்பு தூதரகத்தால் எவ்வாறு கச்சிதமாக நகர்த்தப்பட்டது என்பது பற்றியும் பேசுகிறது. இது இருப்பதை அடித்து அழித்து அழித்துவிட்டு, பின்னர் ஆரத்தழுவி கட்டியணைத்து உதவி செய்கின்ற நவ காலனித்துவ சட்டம்பித்தனத்தின் தொடரும் வரலாற்று தொடர்.
27, ஆகஸ்ட், 2025 த ஐலன்ட் வார ஏட்டில் வெளியான சமீந்திர பெர்டினான்டோவின் கட்டுரையின் தலைப்பு இது.
“ UNP -JVP POLITICAL RELATIONSHIP AND WICKREMESINGHE’S ARREST”.
“அமெரிக்கா பின்னணி வகித்த, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்காக இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில், யு.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சர்ச்சைக்குரிய ஒரு தலைமைப் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.”
“விக்கிரமசிங்கவுடன் இது விடயமாக விவகாரத்தை கையாள்பவர்களாக முன்னாள் பாராளுமன்றவாதிகளான ஹரின் பெர்ணான்டோ, பேராசிரியர் அசு மாரசிங்க இருவரும் இணைந்திருந்தார்கள்”
“யு.என்.பி. போராட்டத்திற்கு தேவையான வசதிகளையும், வாய்ப்புக்களையும் , சூழலையும் ஏற்படுத்தியதன் மூலம், என்.பி.பி.யின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவியாக இருந்தது.”
“ஆனால் விக்கிரமசிங்க ராஜபக்சசாக்களின் பக்கம் திரும்பிய போது, வெளிநாட்டு பின்னணியைக்கொண்ட இந்த வன்முறைப்போராட்டம், பாராளுமன்றத்தை கைப்பற்றுதல் என்ற என்.பி.பி.யின் இலக்கை முறியடிப்பதாக அமைந்தது. விக்கிரமசிங்கவின் இந்த நிலைப்பாடு போராட்டத்தை பாதி வழியில் பாதித்ததுடன் அறகலயவின் உண்மையான தந்திரோபாய இலக்கு சறுக்குவதற்கும் காரணமானது”
ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய கைதுடன் தொடர்பு படுத்தி த ஐலன்ட் பத்தியாளர் இந்த கட்டுரையை எழுதுவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுவது பொதுவானது. அவர் யு.என்பி – ஜே.வி.பி/ என்.பி.பி. மறைமுக அரசியல் உறவில் ஏற்பட்ட ஒரு பெரும் வெடிப்பாக இதை பார்க்கிறார். அதுவே ரணிலின் திட்டமிட்ட கைதுக்கான அரசியல் பின்னணியாக அமைகிறது. மக்கள் வங்கி நிதி மோசடி, பட்டலந்த விவகாரத்திற்கும் அப்பால் இருதரப்பு உள் உறவை ரணில் ராஜபக்சாக்களுக்கு காட்டிக்கொடுத்தார் என்பதற்கான அரசநிதி துஷ்பிரயோகத்தின் திரைமறைவில் நடாத்தப்படும் அரசியல் பழிவாங்கலா இது?
பச்சை முதலாளித்துவமும், போலி சோஷலிசமும் அல்லது வலதுசாரி பொருள்முதல்வாதமும், இடதுசாரி நிற வேஷமும் அரசியல் திருமணம் செய்யமுடியாது என்பதற்கும், அப்படி சந்தர்ப்பவாதம் இரு முரண்பட்ட சக்திகளை பின்கதவால் இணைத்தாலும் அது இடைநடுவில் முறிந்துவிடும் என்பதற்கும் இந்த யு.என்பி.- ஜே.வி.பி. அரசியல் சிறந்த உதாரணம். இது அமெரிக்க தரகர் தனக்கு விரும்பிய முகவரை அதிகாரத்தில் அமர்த்த எடுத்த முயற்சி. அமெரிக்காவின் நோக்கம் அநுரவை ஆட்சியில் அமர்த்துவதல்ல மாறாக ரணிலை ஆட்சியில் அமர்த்த அநுரவை அறகலய ஊடாகப் பயன்படுத்துவது. ஆனால் ரணிலையும், சஜீத்தையும் இணைக்கும் விடயத்தில் அமெரிக்கா தோற்றுப்போனதன் விளைவே இன்றைய ஜனாதிபதி அநுர. இப்போது அநுரவின் இருப்பை எவ்வளவுகாலத்திற்கு நீடிப்பது என்பது அமெரிக்காவின் கையில் உள்ளது.ரணில் கைதுக்கு பின்னரான எதிர்க்கட்சிகளின் இணைவும் ஒரு அமெரிக்க தயாரிப்புத்தான். இந்த நெருக்குதலில் இருந்து தப்ப சீனாவையும், இந்தியாவையும் தூரத்து உறவாக அணுக வேண்டிய கட்டாயம் அநுர அரசிற்கு ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களின் இனப்படுகொலையை கண்டு கொள்ளாத இலங்கை அரசு தலைவர் அநுரகுமார திசாநாயக்க, உக்ரைன் ஜலன்ஸிக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவிக்கிறார் என்றால் அநுர யாரைத் திருப்திப்படுத்துகிறார்? இரண்டு போருக்குப்பின்னாலும் உள்ள இரு வல்லரசுகளில் யாருக்கு பின்னால் நிற்கிறார்? 193 ஐ.நா.உறுப்பு நாடுகளில் 147 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீன தேசத்தின் தலைவருக்கு ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள தடைவிதித்துள்ளது அமெரிக்கா. பொருளாதார வங்குரோத்தில் இருந்து காப்பாற்றிய இந்தியாவும், சீனாவும் பாலஸ்தீன மக்களின் பக்கம் நிற்கின்றன. தேசிய இனங்களின் சமத்துவம் பேசும் ஜனாதிபதி அமெரிக்காவின் பக்கம் சாய்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இதுவரையான யு.என்.பி.- ஜே.வி.பி. உறவில் இனியும் ஒட்டுப்போட முடியாத பிளவை ஏற்படுத்தியுள்ளது. 1965 இல் உருவாக்கப்பட்ட ஜே.வி.பி.க்கும், 2019 இல் உருவாக்கப்பட்ட என்.பி.பி.க்கும் ஏக காலத்தில் தலைவராக இருக்கிறார் அநுரகுமார திசாநாயக்க. இந்த என்.பி.பி. கூட்டணி 159 உறுப்பிர்களை நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கும் போது, 1946 இல் உருவாக்கப்பட்ட யு.என்.பி. ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எந்த ஒரு ஒற்றை உறுப்பினரையும் நாடாளுமன்றத்தில் கொண்டில்லை.
யு.என்பி – ஜே.வி.பி. நினைத்துப்பார்க்க முடியாத பின்கதவு உறவு அறகலய காலத்தில் ஏற்பட்டதல்ல. 2009 யுத்த முடிவுக்கு பின்னர் 2010 பொதுத்தேர்தலில் ஏற்பட்டது. ராஜபக்சாக்களுக்கு எதிரான இந்தக் கூட்டில் களங்கப்படுத்தப்பட்ட அரசியல் ஊடாக தமிழரசுக்கட்சியின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து கொண்டது. இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை தமிழ்பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தது என்பதும், புலிகளையும், மக்களையும் அழித்த படைத்தளபதியை வெட்கமின்றி ஆதரித்தது என்பதும் வரலாறு.
கொழும்பு அமெரிக்க தூதரகத்தினால் வசதிகள் வழங்கப்பட்ட இந்த கூட்டணி திட்டத்தில் யு.என்.பி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜே.வி.பி.தலைவர் சோமவன்ச அமரசிங்க, ரி.என்.ஏ. தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோர் ஓரணியில் கொண்டுவரப்பட்டனர். ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர் வெற்றித்தளபதி சரத் பொன்சேகா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இங்கு கவனிக்க வேண்டியது முள்ளிவாய்க்காலை முடித்து வைத்த அமெரிக்கா, அந்த போரின் இனப்படுகொலை தளபதியை ஜனாதிபதியாக்க திட்டம் தீட்டுகிறது. அந்த திட்டத்தில், முள்ளிவாய்க்கால் அழிவுகளை இனப்படுகொலை என்று கூவுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணைந்து கொண்டு சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களை கோருகிறது. இந்த பின் கதவு உறவையும், அரசியலையும் புரியாத அப்பாவிமக்கள் வடக்கு கிழக்கில் அமெரிக்க கொடியை உயரப்பிடித்து அமெரிக்காவிடம் நீதி கோருகிறார்கள். இதற்கு சில தமிழ்த்தேசிய பக்தர்களும், பத்தி எழுத்தாளர்களும் இட்டுள்ள பெயர் “தேசமாக திரள்தல்” , “மக்கள் திரட்சி”. இந்த பத்தியாளர்கள் தான் சிறிதர் தியேட்டரில் அடைக்கலம் புகுந்து தப்பிப்பிழைத்துக்கொண்டு டக்ளஸ் தேவானந்தாவை இனப்படுகொலையின் பங்காளி என்று கூறுகிறார்கள்.
சரத் பொன்சேகாவை ஜனாதிபதி பொது வேட்பாளராக்குவதில் அமெரிக்க தூதூவர் PATRICIA BUTENIS முக்கிய பாத்திரத்தை வகித்தார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் அவரால் பொன்சேகா ஆதரவு அணிக்கு கொண்டு வர முடிந்தது. தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான ஜே.வி.பி.யின் கடுமையான பிரச்சாரங்களின் மூலமும், சிறுபான்மை மக்களின் வாக்குகளின் மூலமும் சரத்பொன்சேகா வெற்றி பெறுவார் என்று இந்த அமெரிக்க ஆதரவு அணி திடமாக நம்பியது. ஆரம்பத்தில் சம்பந்தருக்கு தலையை சுற்றிய இந்த விவகாரத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு “பேயை விடவும் பிசாசு பரவாயில்லை”என்று தமிழ்த்தேசியத்தை அமெரிக்காவுக்கு உயில் எழுதிக்கொடுத்தது.
2010 நாடாளுமன்ற தேர்தலில், UNP, JVP, TNA, SLMC, CWC கூட்டணியை தோற்கடித்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான UPFA 144 இருக்கைகளை நாடாளுமன்றத்தில் பெற்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வெறும் ஆறு இருக்கைகளே குறைவாக இருந்தன.இந்தத் தோல்வி ரணில் விக்ரமசிங்கவுக்கு JVP கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆர்வத்தை வழங்கவில்லை. தேர்தலை தொடர்ந்து 2010 பெப்ரவரியில் சரத்பொன்சேகா கைதுசெய்யப்பட்டார். சரத்பொன்சேகாவின் பாராளுமன்ற குழுவில் ஏழு உறுப்பினர்களில் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட நால்வர் அடங்குவர். அதற்கு முந்திய நாடாளுமன்ற தேர்தலில் 39 உறுப்பினர்களை பெற்றிருந்த ஜே.வி.பி.க்கு இது பலத்த அடியாக அமைந்தது.
சரத்பொன்சேகாவின் கைதை வன்மையாக கண்டித்த ஜே.வி.பி. அதை அரசியல் பழிவாங்கல் என்றும் கூறியது. இன்றைய பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அப்போது சரத்பொன்சேகாவின் சட்டத்தரணியாக ஆஜராகியவர். அப்போது வழமைக்கு மாறாக சரத்பொன்சேகா நீதிமன்ற விடுமுறை நாட்களில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக அரசாங்கத்தை குற்றம் சாட்டி இருந்தார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு அவர் அன்று கூறிய அதேகாரணங்களை எதிர்க்கட்சிகள் இன்று கூறுகின்றனர். ஆனால் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அவற்றை மறுக்கிறார்.
சரத் பொன்சேகாவின் கைதுக்கு பின்னர் ஜனநாயக தேசிய முன்னணி (DNA) சரியாக இயங்காததால் ஜே.வி.பி. மீண்டும் யு.என்.பி.யுடன் உறவுகொண்டது. இந்த நிலையில் ஜே.வி.பி.யின் தேசிய மாநாட்டில் 2014 இல் அநுரகுமார திசாநாயக்க தலைவராக தெரிவு செய்யப்பட்டார். நல்லாட்சி காலத்தில் யு.என்.பி., ஜே.வி.பி. இணைந்தே நிதிக்குற்றவியல் விசாரணைப்பிரிவை நிறுவினர். (FCID : FINANCIAL CRIMES INVESTIGATION DIVISION). ராஜபக்சாக்களின் நிதி மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளுக்காகவே இப்பிரிவு நிறுவப்பட்டது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முரண்பாட்டினால் – மைத்திரி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தநிலையில் எல்லாம் பின்நோக்கி தள்ளப்பட்டது. இப்போது ரணில் உருவாக்கிய சட்டமே ரணிலுக்கு எதிராக பாய்ந்துள்ளது. இப்போதைக்கு ராஜபக்சாக்கள் தப்பிக்கொண்டனர். இத் தப்புதல் தற்காலிகமானதா…..?
2015 இல் இவர்கள் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்தனர். நல்லாட்சி அறிவிக்கப்பட்டது. ராஜபக்சாக்களுக்கு எதிரான இந்த அரசியல், தேர்தல் கூட்டுக்களுக்கு பின்னணியில் கொழும்பு அமெரிக்க தூதரகம் இருந்தது. இது அறகலய வரையும் நீடித்தது. என்.பி.பி. – அமெரிக்க உறவு இந்திய, சீன உறவுகளைவிடவும் நெருக்கமாக திரைமறைவில் நகர்கிறது. இதை இப்பொழுதுதான் அறகலய போராட்டக்குழுவினர் உணர்கின்றனர். முறைமை மாற்றம் மற்றும் இடதுசாரி கோசங்கள் அமெரிக்க ஆதரவு பின்னணியில் சாத்தியம் இல்லை என்பதையே படிப்படியாக என்.பி.பி.அரசாங்கத்திற்கு எதிரான தொழிற்சங்க, மற்றும் சிவில் சமூகங்களின் போராட்டங்கள் வெளிக்காட்டுகின்றன.
ஐ.எம்.எப். நிபந்தனைகள், மனித உரிமைகள், போர்க்குற்ற மீறல்கள், சர்வதேச விசாரணை, பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம், மாகாணசபைத்தேர்தல், அதிகார பரவலாக்கம் …… எல்லாவறையும் விழுங்கி ஏப்பம்விட்டுக்கொண்டு அமெரிக்கா போட்ட பாதையில் பயணிக்கிறது என்.பி.பி.அரசாங்கம். அமெரிக்க பாதை உண்மையில் பை றோட்தான். ஆனால் என்.பி.பி. அதையே தனது அரசியலுக்கான அகன்ற வேகவீதியாக பயணிக்கிறது. அமெரிக்க என்.பி.பி. உறவில் முக்கிய பங்கு வகித்தவர் ஹரிணி அமரசூரிய, அவர் ரணிலை சுகம் விசாரிக்க ஆஸ்பத்திரிக்கு போயிருந்தால் அதன் பின்னணியும் அமெரிக்காதான். அதனால்தான் ஆனை அடிக்கும் முன் தானடித்து சாகிறது ஜே.வி.பி. பிரதமர் தனது அரசியல் கற்பை நிரூபிக்க தீக்குளிக்க வேண்டும் என்று கோருகிறது.
ரணிலின் கைதுக்கு பின்னரான அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்ன? அதை எதிர்கொள்ளும் சக்தி ஜே.வி.பி.க்கு உண்டா?
வெளிச்சம்:76, சமிந்திர பெர்டினான்டோவின் த ஐலன்ட் ஆக்கத்தின் தழுவல்.
நன்றி: த ஐலன்ட்.
