— எம். அரவிந்தன் —
நீண்டநாட்களுக்கு பிறகு கடந்த நூற்றாண்டின் கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வொன்று தலைநகர் கொழும்பில் அண்மையில் இடம்பெற்றது.
இலங்கையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவர் என்று வர்ணிக்கப்பட்ட காலஞ்சென்ற நாகலிங்கம் சண்முகதாசனின் (சண்) 105 வது பிறந்த தினத்தை (2025 ஜூலை 3) முன்னிட்டு அவரின் பெயரில் இயங்கும் மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் ஜூலை 6 மாலை கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நினைவுப் பேருரையையும் நூல் வெளியீட்டையும் ஏற்பாடு செய்திருந்தது.
பேராசிரியர் சி. மௌனகுரு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாரிசில் வாழும் எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன் நூல் அறிமுக உரை நிகழ்த்த மூத்த கம்யூனிஸ்ட் இயக்க செயற்பாட்டாளர் எம்.ஏ.சி. இக்பால் ‘சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள்’ என்ற நூலை வெளியிட்டு வைத்தார். நூலின்

பிரதிகளை கொழும்பு தமிழ்ச் சங்கத்துக்கு அன்பளிப்பாக அதன் தலைவி சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திராவிடம் கையளித்து நூல் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் ‘கொந்தளிப்பான சர்வதேச நிலைவரமும் இலங்கைக்கான மார்க்கமும்’ என்ற சமகாலத்துக்கு கச்சிதமான பொருத்தப்பாட்டைக் கொண்ட தொனிப் பொருளில் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.
தற்போது ஜனதா விமுக்தி பெரமுன( ஜே.வி.பி. ) தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களை தவிர மற்றும்படி இடதுசாரி இயக்க நிகழ்வுகளில் பெருமளவில் மக்கள் கலந்துகொள்வதில்லை. குறைந்த எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் கூட, அவர்களில் அதிகப் பெரும்பாலானவர்கள் ஐம்பது, அறுபது, எழுபது வயதுகளைக் கடந்தவர்களாகவே இருப்பார்கள்.
இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று அந்த நிகழ்வுகளில் எவரையாவது காணமுடியும் என்றால், அவர்கள் பெரும்பாலும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். அரசியல் ஆர்வம் கொண்ட சில இளைஞர் யுவதிகள் அல்லது அரசியல் விஞ்ஞான மாணவர்கள் சிலவேளைகளில் கலந்து கொள்வதுண்டு.
ஆனால், அன்றைய சண் நினைவு நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் பலருக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஓரளவுக்கு இளைஞர்களையும் காணக்கூடியதாக இருந்தது. கொழும்பில் இருந்து வெளியாகும் முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தமிழன் ஆகிவற்றின் பிரதம ஆசிரியர்கள் உட்பட பல பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் வழமையாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் தவறாமல் கலந்து கொள்வார்கள். ஆனால், சண் நினைவு நிகழ்வில் அந்த ‘வழமையான’ கூடடத்தினரை காணவில்லை. ஆனால், வேறு புதியவர்கள் பலர் கலந்துகொணடனர். அகிலன் கதிர்காமரின் உரையை சபையோர் இறுதிவரை கேட்டுக் கொண்டிருந்தனர். அவரது உரையின் தொனிப்பொருள் அதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் இருக்கலாம்.
அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தைச் சேர்ந்தவர்களுக்கு மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் நிச்சயமாக பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த நூற்றாண்டில் கணிசமான காலப்பகுதியில் இலங்கையின் முக்கியமான இடதுசாரி இயக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சண்ணைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் (இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றை ஒரளவுக்கேனும் தெரிந்து கொண்டவர்களை தவிர) அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சண் 1993 பெப்ரவரி 8 தனது 74 வது வயதில் ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்ஹாமில் காலமானர். சண் மறைந்து 32 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவரின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வில் பெருந்திரளானவர்கள் பங்கேற்றது குறித்து அதற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் மௌனகுரு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி தெரிவித்ததை காணக்கூடியதாக இருந்தது.
சண்ணின் பிறந்த நூற்றாண்டு நினைவை முன்னிட்டு 2020 ஜூலையில் அரசியல் ஆய்வாளர்கள், இராஜதந்திரிகள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு பத்திரிகைகளில் ஏற்கெனவே வெளியாகியிருந்தன. அந்த கட்டுரைகளின் இரு மொழிகளிலுமான தொகுப்பு ‘சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள்’ (Sanmugathasan Centenary Reflections) என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது.
சண் நூற்றாண்டை முன்னிட்டு அரசியல் ஆய்வாளரும் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜெயதிலக 2020 ஜூலை 5 ‘சண்டே ஐலண்ட் ‘ பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். தயானின் தந்தையாரான பிரபலமான ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர் மேர்வின் டி சில்வாவின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவருக்கு சிறுபராயத்தில் இருந்தே சண் பரிச்சயமானவராக இருந்தார்.
தயானின் கட்டுரையை வாசித்த பிற்பாடுதான் மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளரான மனிக் டி சில்வா (தற்போது சண்டே ஐலண்ட் பிரதம ஆசிரியர்), முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மற்றும் கனடாவில் தற்போது வசிக்கும் அரசியல் ஆய்வாளரும் பொறியியல் நிபுணருமான ராஜன் பிலிப்ஸ் ஆகியோருக்கு சண்ணின் நினைவு வந்தது போலும். அவர்கள் மூவரும் அடுத்தடுத்து சண்ணைப் பற்றி சண்டே ஐலண்ட் பத்திரிகையில் எழுதினார்கள்.
கனடாவில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான டி.பி.எஸ் ஜெயராஜ் ‘தமிழ்த் தீவிரவாதிகளின் ஆயுதப்போராட்டமும் சண்முகதாசனும்’ என்ற தலைப்பில் டெயிலி மிறர் பத்திரிகையில் 2020 ஜூலை 11 ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார். அவர் 1988 பிற்பகுதியில் வட அமெரிக்காவுக்கு புலம்பெயருவதற்கு முன்னர் சண்ணை அவரது கொள்ளுப்பிட்டி ஸ்கொஃபீல்ட் பிளேஸ் இல்லத்தில் அடிக்கடி சந்தித்து பேசிய அனுபவத்தைக் கொண்டவர். அந்த சந்திப்புக்கள் குறித்து ஜெயராஜ் கட்டுரையில் ஓரளவு விரிவாக எழுதியிருக்கிறார்.
நோர்வேயில் வாழும் பேராசிரியர் என். சண்முகரத்தினம் சண்ணின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழில் எழுதிய நீண்ட கட்டுரை 2024 பெப்ரவரி 8 கொழும்பு தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியானது. சண்ணின் நினைவுப் பேருரை நிகழ்வுக்கு தலைமை தாங்கிச் சிறப்பிக்குமாறு மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் பேராசிரியர் மௌனகுருவிடம் கேட்டபோது அதை ஏற்றுக்கொண்ட அவர், சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள் நூலில் சண்ணுடனான தனது அனுபவங்கள் குறித்து விசேடமாக அந்த கம்யூனிஸ்ட் தலைவரின் கலாரசனை குறித்து ஒரு கட்டுரைரை எழுத விரும்புவதாக கூறினார். அதையடுத்து சண்முகரத்தினத்தின் கட்டுரையுடன் சேர்த்து மௌனகுருவின் கட்டுரையும் நூலில் உள்ளடக்கப்பட்டது.
பத்திரிகையாளர் தனபாலசிங்கம் சண் நூற்றாண்டு நினைவாக எழுதி பத்திரிகைகளில் வெளியிட்ட கட்டுரையும் இரு மொழிகளிலும் நூலில் இடம் பெற்றிருக்கிறது. தனபாலசிங்கம் சண்ணுடன் நீண்டகாலம் நெருங்கிப்பழகிய அனுபவத்தைக் கொண்டவர். அவரே மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின் சார்பில் மேற்குறிப்பிட்ட கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்து நூலைத் தொகுத்தார்.
கலாநிதி சரத் அமுனுகம சண்ணுக்கும் ஜே.வி.பி.யின் தாபகத் தலைவரான ரோஹண விஜேவீரவுக்கும் இடையிலான உறவுகள் குறித்து எழுதியிருக்கும் கட்டுரை காலஞ்சென்ற அந்த கிளர்ச்சித் தலைவரின் கட்சி ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பின்புலத்தில் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது. தற்போதைய ஜே.வி.பி தலைவர்களும் உறுப்பினர்களும் தங்களது இயக்கத்தின் வேர்களை ஓரளவுக்கு அறிந்துகொள்வதற்கு கலாநிதி அமுனுகமவின் கட்டுரை உதவியாக இருக்கும்.
பேராசிரியர்கள் சண்முகரத்தினமும் மௌனகுருவும் 1960 களின் முற்பகுதியில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மூண்ட மாபெரும் தத்துவார்த்தப் போராட்டத்தை அடுத்து உலக நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவடைந்ததை போன்று இலங்கையிலும் நிகழ்ந்தபோது சண் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் அணியின் செயற்பாடுகளுடன் (பேராதனை பல்கலைக்கழக மாணவர்களாக) தங்களை இணைத்துக் கொண்டவர்கள். தனபாலசிங்கத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலும் சண்ணின் இறுதிக்காலத்தில் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர். அவர் பத்திரிகையாளராக இருந்த காரணத்தால் அந்த கம்யூனிஸ்ட் தலைவரின் ஆக்கங்கள், அறிக்கைகளை மொழியாக்கம் செய்து தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியிடும் பணியை செய்யக்கூடியதாக இருந்தது.
தனது சுயசரிதையை (Political Memoirs of an Unrepentant Communist) சண் சொல்லச்சொல்ல எழுதிய அரிய அனுபவத்தைக் கொண்ட தனபாலசிங்கம் சண்ணின் அச்சேறாத எழுத்துக்களை கடந்த பல வருடங்களாக நூல்களாக வெளியிட்டு வரும் மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த மூவரையும் தவிர, சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள் நூலில் அடங்கியிருக்கும் மற்றைய கட்டுரைகளை எழுதிய எவருமே கம்யூனிஸ்ட் கட்சியுடன் எந்த வகையிலும் தொடர்பை கொண்டிருந்தவர்கள் அல்லர்.
குறிப்பாக ராஜன் பிலிப்ஸ் கலாநிதிகள் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா தலைமையில் லங்கா சமசமாஜ கட்சி இருந்த காலத்தில் அதன் ஒரு தீவிர செயற்பாட்டாளராக, காலஞ்சென்ற கலாநிதி குமார் டேவிட் போன்றவர்களுடன் சேர்ந்து இயங்கியவர். சமசமாஜ கட்சியின் ரொட்ஸ்கிய வாதத்துக்கு எதிராக சண் நடத்திய கடுமையான தத்துவார்த்த விவாதங்களை அறிந்தவர்கள் சமசமாஜிகளை எந்தளவுக்கு அவர் எதிர்த்தார் என்பதையும் அந்தக் காலப்பகுதியில் சண்ணைப் பற்றி ராஜன் பிலிப்ஸ் எத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டிருந்திருப்பார் என்பதையும் புரிந்து கொள்வார்கள்.
அதனால் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாதவர்கள் சண்ணை வெளியில் இருந்து எவ்வாறு பார்த்தார்கள் என்பதை விளக்கும் கட்டுரைகள் இந்த நூலுக்கு ஒரு பிரத்தியேக பரிமாணத்தைக் கொடுக்கின்றன.
இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றை குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றை கற்கவிரும்பும் அரசியல் மாணவர்களுக்கும் இளைய தலைமுறை ஆய்வாளர்களுக்கும் அந்த இயக்கத்தில் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி மாணவ காலத்தில் இருந்து இறுதி மூச்சு வரை தனனை இணைத்துக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் விமோசனத்துக்காக அரை நூற்றாணாடுக்கும் அதிகமான காலமாக உழைத்த ஒரு தலைவரின் வாழ்வை அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவக்கூடியது சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள் என்ற நூல். சண்ணின் வாழ்வு இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுடன் சமாந்தரமானது.
மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் வெளியிட்ட சில நூல்களின் முன் அட்டையில் சண் சீனப் பெருந்தலைவர் மாவோ சேதுங்கை 60 வருடங்களுக்கு முன்னர் சந்தித்தபோது எடுத்த படம் இடம் பெற்றிருக்கிறது. இந்த புதிய நூலின் அட்டையிலும் கூட அதே படமே காணப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் அதன் பிரதிகளைப் பெற்றுக் கொண்ட சிலர் ‘இந்த நூலை நாம் முன்னர் பெற்றிருக்கிறோம்’ என்று கூறுகிற அளவுக்கு மாவோவுக்கும் சண்ணுக்கும் இடையிலான அந்த வரலாற்று முக்கியத்துவ சந்திப்பின் படம் மார்க்சிய கற்கைளுக்கான சண்முகதாசன் நிலையத்தினரின் நூல்களுடன் ஒன்றிணைந்ததாக இருக்கிறது. அவர்களை பொறுத்தவரை, மாவோவுடனான சண்ணின் சந்திப்பு புனிதமான ‘ஒரு அரசியல் நிகழ்வு.
கலாநிதி தயான் ஜெயதிலக மாவோ — சண் நெருக்கம் குறித்து தனது கட்டுரையில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை மேற்கோள்காட்டி சண் நினைவு நிகழ்வு பற்றிய இந்த பதிவை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும் ;
“மாவோவை நன்கு தெரிந்த தோழர் சண் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சண் மாவோவை சந்தித்து கலந்துரையாடிய ஒரே இலங்கையர் மாத்திரமல்ல, தெற்காசியாவைச் சேர்ந்த சிலரில் ஒருவருமாவார். நக்சலைட்டுக்கள் என்று நன்கு அறிப்பட்ட இந்தியாவின் மாவோவாத இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்– லெனினிஸ்ட்) யின் தலைவரான சாரு மசுந்தார் மாவோவை ஒருபோதும் சந்தித்ததில்லை.
“கலாசாரப் புரட்சியின் உச்சக்கட்டத்தின்போது பெய்ஜிங் தியனென்மென் சதுக்கத்தில் 15 இலட்சம் செங்காவலர்களின் அணிவகுப்பை மாவோ பார்வையிட்டபோது அவருக்கு அருகில் சண் நின்றார். செங்காவலர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கும் அவர் அனுமதிக்கப்பட்டார். இலங்கையின் மாவோவாத இயக்கத்தின் தலைவர் சர்வதேச ரீதியில் மாவோ சேதுங் சிந்தனைக்கு வழங்கிய தத்துவார்த்த பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.”
