தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிகள்

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிகள்

 — கலாநிதி சு.சிவரெத்தினம் —

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற தலைமைத்துவப் பிரச்சினை என்பது அதனது அரசியல் வங்குரோத்துத் தனத்தால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டும். அது தோற்றம் பெற்ற காலந்தொடக்கம் தமிழரசுக் கட்சியானது ஒரு எதிர்ப்பரசியலை நடத்திவந்திருக்கிறதே தவிர புரட்சிகரமான எழுச்சி அரசியலை நடாத்தவில்லை. 

எதிர்ப்பரசியலுக்கும் புரட்சிகரமான எழுச்சி அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்பது முதலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

எதிர்ப்பரசியல் என்பது ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளுக்கெதிராக எதிர்ப்பை மட்டுமே வெளிப்படுத்துகின்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும். உதாரணமாக அரச கரும மொழியாக சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தவுடன் அதற்கு எதிராக சத்தியாக்கிரகம் இருத்தல், பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தலா அதற்கெதிராக கல்வியமைச்சரின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டங்களைச் செய்தல், சிங்களக் குடியேற்றத் திட்டங்களா அதற்கெதிராக வெற்றுக் கோசம் இட்டு போராட்டங்களை நடாத்துதல் என்கின்ற அரசியல் நடவடிக்கைகளாகும். இந்த எதிர்ப்பரசியலுக்கு தேவையானதெல்லாம் மக்களை இனம், மொழி, மதம் என்ற அடையாளங்களை மட்டும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவற்றை அரசியல் மூலதனமாக்குவதுதான். இந்த அடையாளங்கள் மக்களை உடனடியாக ஒன்றுதிரட்டவும் அவர்களை உணர்ச்சியூட்டி கொதிநிலைக்குள்ளாக்கி செயல்நடவடிக்கைகளுக்குத் தூண்டுவதற்கும் மிகவும் துணையாகின்றது. பண்டைய பெருமைமிகு வீரக் கதைகளையும் உணர்ச்சியூட்டக் கூடிய பேச்சாற்றலும் எதிர்காலம் குறித்தான அதீத கற்பனைகளையும் உருவாக்கக் கூடிய கெட்டித்தனம் படைத்த எவரும் இவ்வகையான அரசியலை மேற்கொள்ளலாம். 

தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் எல்லாம் அன்றிலிருந்து இன்றுவரை இந்த பேச்சரசியலில் மக்களை ஒன்றுதிரட்டி பலிக்கடாவாக்கி எதிர்ப்பரசியலை நடாத்தியவைதான் என்பதை அதன் வரலாற்றையும் அரசியல் நடவடிக்கைகளையும் நோக்குகின்றபோது விளங்கிக் கொள்ளமுடியும். மற்றும்படி பொதுமக்களிடத்தில் அரசியல் தத்துவார்த்த அறிவொளிவூட்டலை மேற்கொண்டு அதனூடாக பொது மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான எந்தவிதமான செயற்பாடுகளையும் செய்ததில்லை. அவர்களுடைய அரசியல் கூட்டங்கள் தேர்தல்காலங்களில் இடம்பெறும் உணர்ச்சியரசியலேயாகும். இது பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கின்ற அரசியலாகும். இதன் தலைவர்களுக்கு அரசியல் தத்துவமும் அதன் நடைமுறைகளும் என்பது ‘தமிழர்களின் சுயநிர்ணய உரிமை’ எனும் வாய்பாட்டைத் தவிர வேறெதுவும் இல்லை. இந்த இலட்சணத்தில் மக்களுக்கு அரசியல் தத்துவத்தினையும் அதன் நடைமுறையினையும் எவ்வாறு கொண்டு செல்லமுடியும். இந்தப் போக்கு தமிழரசுக்கட்சிக்கு உரியதொன்று மட்டுமல்ல தமிழ் காங்கிரஸ் உட்பட தமிழரசுக் கட்சியின் கர்ப்பப்பையிலிருந்து உருவான தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று பெயர் சுடப்பெற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானதாகும்.  

புரட்சிகரமான எழுச்சி அரசியல் என்பது இனம், மொழி, மதம் என்ற அடையாளங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தாது இனம், மொழி, மதம் எனும் அடையாளங்கள் ஆளும் அதிகாரவர்க்கத்தின் இருப்புக்கும் அதன் அதிகாரத்துக்கும் எவ்வாறு தவறாகத் துணைபோகின்றன என்பதைக் கண்டறிந்து, அந்தக் காரணத்துக்கெதிராக மக்களை ஒன்றுதிரட்டி அரசியல் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுத்துவதாகும். இது தத்துவார்த்த அறிவார்ந்த அரசியல் செயற்பாடாகும். இத்தகைய அரசியல் நடவடிக்கைகள் ஒரு இனத்தை இன்னொரு இனத்துக்கெதிராக செயற்படத் தூண்டுவன அல்ல. அவ்வாறு செயற்படத் தூண்டிய அதிகார வர்க்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி அந்த அதிகார வர்க்கத்தை மக்களில் இருந்து அந்நியப்படுத்தி அவர்களின் அதிகாரத்தை மக்கள் கைக்கு மாற்றுகின்ற அறிவார்ந்த அரசியல் செயற்பாடாகும்.

புரட்சிகரமான எழுச்சி அரசியல் வெற்றிக்கு வழிவகுக்க வேண்டுமானால் அது இனம், மொழி, மதம் எனும் அந்தந்த இனக் குழுமங்களின் அடையாளங்களை அங்கீகரித்து அவற்றின் இருப்புக்கும் தொடர்ச்சிக்குமான உறுதியினை வழங்கி உழைக்கும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து அந்த மக்களின் விடிவுக்கான அரசியலை மேற்கொள்வதாகும்.  இந்த அரசியல் நடவடிக்கைக்கு பதவிகளும் அந்தப் பதவிகளால் வருகின்ற சுகபோகங்களும் முக்கியமானதல்ல, மக்கள் அரசியலை திறம்பட யார் முன்னெடுக்கிறார்களோ அவரை அந்தக் கட்சி தலைவராகத் தெரிவு செய்யும். இதற்கு வலுவான மாக்ஸ்சிச அரசியல் தத்துவார்த்த அறிவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பும் முக்கியமானதாகும்.

எதிர்ப்பரசியலில் இருந்து உருவான PLOT, EPRLF போன்ற இயக்கங்கள் புரட்சகரமான எழுச்சி அரசியலை ஆரம்பத்தில் தங்களது கொள்கைத் திட்டமாகக் கொண்டிருந்த போதிலும் குட்டிமுதலாளித்துவ  குணாம்சங்கள் காரணமாக் எதிர்ப்பரசியலை கையாள்கின்ற முதிர்ச்சியின்மையினாலும் உட்கட்சிப் பிரச்சினைகளில் ஜனநாயகத்தன்மை இல்லாதததாலும் அவை அந்தப் பாதையிலிருந்து விலகி எதிர்ப்பரசியலுக்குள் மட்டுமே மூழ்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகின.

தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் அத்திவாரம் எதிர்ப்பரசியலில் மட்டுமே இடப்பட்டதினால் அந்த எதிர்ப்பரசியலே அவர்களுக்கெதிரான ஆயுதமாகவும் மாறியிருப்பதை புலிகள் மற்ற  இயக்கங்களுக்கு எதிராக மேற்கொண்ட அழிவு நடவடிக்கைகளில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும். உணர்ச்சியூட்டப்பட்டு இராணுவ வெறித்தனத்துக்குள் இருப்பவர்கள் கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதிலளியாது ஆயுதங்களால் பதில் அளிப்பார்கள் என்பதற்கு புலிகளை விடச் சிறந்த உதாரணம் கிடையாது. இறுதியில் அந்தப் போக்கே அவர்களின் அழிவுக்கும் வழிவகுத்ததை ஆய்வறிவுப் புத்தியுள்ள எவரும் மறுதலிக்க மாட்டார்கள்.

முப்படைகளையும் வைத்திருந்த பல இராணுவ வெற்றிகளைப் பெற்ற ஓர் இயக்கம் அதன் தலைமை அழிக்கப்பட்டவுடன் வேரும் வேரடி மண்ணுடனும் இல்லாமல் போனதுக்கு புலிகளையே உதாரணம் காட்ட வேண்டியும் உள்ளது.

மேற்கூறப்பெற்ற இவை எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டே தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் தலைமைத்துவப் பிரச்சினைகளையும் அதற்கு தமிழர்கள் ஆற்றுகின்ற எதிர்வினைகளையும் நோக்குதல் வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் அரசியல் மூலதனம் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பன மட்டுமேயாகும். இவை பற்றிய உணர்வுகளை எப்போதும் ஒரு கொதிநிலையில் வைத்துக் கொண்டிருக்கின்ற வரைக்கும் தமிழரசுக் கட்சியின் இருப்புக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. இந்தக் கொதிநிலையை எவ்வாறு வைத்துக் கொள்வது என்பதுதான் தழிழரசுக் கட்சியின் பிரச்சினையாக எப்போதும் இருந்து வந்துள்ளது, அதுதான் இன்றும் இருக்கிறது. 

சிறிதரன் அணியினர் கொதிநிலையை தூண்டி விடும் காரணியாக அதிதீவிர புலி விசுவாசத்தை ஆராத்தியாக எடுக்கின்றார்கள். சுமந்திரன் அணியினர் இந்த விடயத்தில் மென்போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். இதில் முரண்பாடு என்னவென்றால் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் சுமந்திரன் அணியினர் பலம்வாய்ந்தவர்களாகவும் பொதுச்சபையில் பலவீனமானவர்களாகவும் இருக்கிறார்கள். மாறாக சிறிதரன் அணியினர் மத்திய செயற்குழுவில் பலவீனமானவர்களாகவும் பொதுச்சபையில் பலமானவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால்த்தான் மத்திய செயற்குழுவில் சுமந்திரனின் அணியினரின் தீர்மானங்கள் வெற்றிபெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதேபோல் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறிதரன் வெற்றி பெற்றதும் சுமந்திரன் தோல்வியுற்றதும் இதன் காரணத்தினாலேயாகும். இந்த இரு அணிகளையும் வெற்றிகரமாக கையாளக்கூடிய ஆளுமையும் அறிவும் மிக்க தலைவராக மாவை சேனாதிராஜா அவர்கள் இல்லை.

மாவை சேனாதிராஜா அவர்களின் நடத்தைகளை மிகச்சாதாரணமாக அவதானிக்கின்ற எந்தப் புத்தியுள்ள மனிதனும் இவர் நீண்டகாலப் போராட்ட அனுபவம் கொண்ட ஓர் இனத்தின் தலைவராக இருப்பதையிட்டு வெட்கப்படுவானே தவிர பெருமை கொண்டு அவர்தான் எங்கள் தலைவன் எனக் கூற முற்பட மாட்டான். அவ்வாறு கூறுபவன் எவனும் சித்த சுயாதீனமுள்ளவனாக இருக்க முடியாது. தேர்தலில் ஒரு நாளைக்கு ஒருவரை ஆதரித்த நிலையினையும் தாண்டி கட்சியின் தலைவராக தான் இருக்க வேண்டுமா இல்லையா என்பதைக் கூட முடிவு செய்ய முடியாத தலைவரை வைத்துக் கொண்டு இவர்தான் எங்கள் தலைவர். ‘அவர் தலைவராகவே இருப்பார் ஆனால் மத்திய செயற்குழுக் கூட்டங்களையும் பிற கூட்டங்களையும் உபதலைவர் நடாத்துவார்’ என ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கூறுகின்றார் எனில் இவர்களுடைய மூளைக்குள் என்னதான் இருக்கிறது? இவ்வகைப்பட்டவர்களைத்தான் தமிழ் மக்கள் தலைவர்களாகக் கொண்டாட வேண்டுமா?

மேலும் தமிழரசுக் கட்சி ஒன்றும் யாப்பு, நிர்வாக நடைமுறைகள், கட்டுப்பாடுகள் எவையும் இல்லாத ஒன்றில்லை. அவ்வாறான நிலையில் மத்திய செயற்குழுவின் முடிவுகளை மீறி மத்திய செயற்குழு உறுப்பினர்களே செயற்படுவதைப் பார்க்கின்றோம். அரியநேத்திரன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டதிலிருந்து அவருக்கான சிறிதரனுடைய ஆதரவு வரை இதனைப் பார்க்கமுடியும். சட்டம் என்பது எல்லாருக்கும் சமம் என்றால் அரியநேத்திரனை மத்திய குழுவிலிருந்து இடைநிறுத்தியது போன்று கட்சியின் தீர்மானத்தினை மீறி அவரை ஆதரித்தவர்கள் அனைவரின் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கையினை இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன?

கட்சியின் ஜனநாயகம் என்பது கட்சியின் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்படுவதாகும் அந்த முடிவில் உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட அந்த ஜனநாயகத்துக்கு கட்சி உறுப்பினர்கள் மதிப்பளிப்பது ஓர் அடிப்படை ஜனநாயகப் பண்பு நடத்தையாகும். அவ்வாறு அந்த முடிவுடன் உடன்படமுடியவில்லை என்றால் அக்கட்சியிலிருந்து விலகிச் செல்வதற்கான முழுச்சுதந்திரம் ஒவ்வொருக்கும் இருக்கின்ற அரசியல் உரிமையுமாகும். ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது கட்சி ஏகமனதாக முடிவு எடுத்தது என அதன் ஊடகப் பேச்சாளர் அறிவிக்கின்றார். அடுத்த நாள் தலைவர் அவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என அறிவிக்கின்றார். அதே போன்று மத்திய செயற்குழுவிலிருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை உட்கட்சிப் பிரச்சினைகளை ஊடகவியலாளர் மகாநாடுகளைக் கூட்டி அவரவர் அறிக்கைகளை விடுகின்றார்கள். உதாரணத்துக்கு கட்சியின் தலைமை குறித்து சிறிதரன் ஒரு புறம், சிறிநேசன் ஒரு புறம், சாணக்கியன் ஒரு புறம், சிவமோகன் ஒரு புறம் என ஆளுக்காள் அவரவர் கருத்துக்களை பொதுவெளியில் முன்வைப்பதுதான் கட்சியின் ஜனநாயகம் என நினைக்கிறார்கள் போல்த் தெரிகிறது.  

இந்த அடிப்படை ஜனநாயக பண்பு கூட இல்லாதவர்களினால் தமிழ் மக்களை எவ்வாறு சரியான அரசியல் வழித்தடத்தில் வழிப்படுத்த முடியும் எனும் கேள்வி எழுகிறது. ஆனால் இந்தக் கேள்வி எதுவும் தழிழரசுக் கட்சியின் தொண்டர்களுக்கு எழுவதில்லை. அவர்களும் பொதுவெளியில் இரு அணிகளாகப் பிரிந்து நின்று ஆளையாள் குற்றம் சுமத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எண்ணையூற்றி எரியவைப்பவர்களாக புலம்பெயர் தமிழர்களும் சமூகஊடகங்களும் மிகக் காத்திரமாகச் செயற்படுகின்றன.

இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் எதிர்ப்பரசியலால் உணர்வூட்டப்பட்டு அரசியலுக்கு நுழைந்த இவ்வரசியல் தலைவர்கள் அந்த எதிர்ப்பரசியல் போக்கைத்தான் தமது கட்சியின் முரண்பாட்டுக்கும் தீர்வாகக் கருதுகிறார்கள். இதைத்தவிர அவர்களால் வேறு எதைத்தான் தர முடியும் தொண்டர்களுக்கும் அதுதானே தேவையாக இருக்கின்றது.

இந்தத் தொண்டர்கள் எல்லாம் Clean Sri Lanka என்பது போல் Clean Sri Lanka clean தமிழரசுக் கட்சி என்று இவர்கள் அனைவரையும் நிராகரித்து இன்றைய சூழலுக்கேற்ப தமிழ் மக்களுடைய அரசியலை அறிவார்ந்து முன்னெடுக்கவும் தமிழ்மக்களை அறிவார்ந்து சிந்திக்க வைக்கவுமான ஓர் அரசியலை உருவாக்க வேண்டும். அதற்காக வைத்தியர் அர்ச்சுனாவைப் போன்றவர்களை அல்ல என்பதிலும் தமிழ் மக்கள் அறிவுடையவர்களாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *