புலிகளும் எலிகளும் 

புலிகளும் எலிகளும் 

 — கருணாகரன் —

ஈழத் தமிழர்களின் “விடுதலைக்கான அரசியல்” இப்பொழுது  வெறுமனே “தேர்தலுக்கான அரசியலாக” ச் சுருங்கி விட்டது. 

அப்படிச் சுருங்கியதன் விளைவுகளே இப்போது நடக்கும் தடுமாற்றங்களும் குத்துக் கரணங்களுமாகும். 

தேர்தலுக்கான அரசியல் என்பது தனியே தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாகக் கொண்டதாகத் தமிழ்த் தரப்பினரால் ஆக்கப்பட்டு விட்டது. இதை தமிழ் ஊடகவியலாளர்களும் அரசியற் பத்தியாளர்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரித்துச் செயற்படுகிறது. சரியாகச் சொன்னால், இந்தத் தரப்புகளும் தேர்தல் அரசியலில்தான் தங்களுடைய அடையாளங்களையும் இருப்பையும் பேணிக் கொள்கின்றன. (இதைப்பற்றி அடுத்த கட்டுரையொன்றில் விரிவாகப் பார்க்கலாம்). 

தேர்தல் அரசியலையே தமது வழிமுறையாகவும் வாழ்முறையாகவும் கொண்ட தரப்புகள் இதில் ஈடுபடுவது வேறு. விடுதலைக்கான அரசியலில் ஈடுபட்ட, இரத்தம் சிந்திய போராட்ட வழிமுறையில் வந்தவர்கள் ஈடுபடுவது வேறு. 

முதலாவது தரப்பினர் காலாகாலமாகத் தமிழ் வாக்காளர்களைக் கவரும் தந்திரோபயங்களில் கைதேர்ந்தவர்கள். அதற்கேற்றவாறு அவர்கள் அவ்வப்போது எடுபடக் கூடிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளைச் செய்வார்கள். பிரகடனங்களை விடுப்பார்கள்.  பிறகு அந்தப் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் தாமே மறந்தும் மீறியும் செயற்படுவார்கள். 

1977 இல் “தமிழீழத்தில்தான் அடுத்த தேர்தல்” என்று தொடங்கிய வீரப்பிரகடனம் இப்பொழுது “சர்வதேச சமூகத்துக்கு தமிழ் மக்களின் அபிலாஷையை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்”, “தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்”என்பது வரையில் வந்துள்ளது. “இதற்காகத்தான் 2024 செப்ரெம்பரில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும்”  என்று இப்பொழுது சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு என்ன சொல்வார்களோ!

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 1977 இல் “தமிழீழத்தில்தான் அடுத்த தேர்தல்” என்றவர்கள், இப்பொழுது எங்கே தேர்தலில் ஈடுபடுகிறார்கள்? என்பதை. இதையிட்டெல்லாம் இவர்கள் வெட்கப்படுவதேயில்லை. இப்போதுள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களும் இதையெல்லாம் கேள்வி கேட்பதில்லை. 

1977 இல் அடுத்த தேர்தல் தமிழீழத்தில்தான் என்ற தமிழரசியற் தலைவர்கள், 1981 இல் அதை மறந்து விட்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிடத் துணிந்தனர்.  இந்த ஏமாற்றை உணர்ந்த அன்றைய இளைஞர்கள் அப்போதைய தமிழரசியற் தலைவர்களை எதிர்த்தனர். அதற்குப் பிறகு நடந்த ஆயுதப்போராட்டத்தில் தமிழரசியற் தலைவர்களின் இடம் இல்லாமற்போனது. அல்லது மங்கலாக இருந்தது.

ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு எழுச்சியடைந்த மிதவாதத் தமிழரசியற் தலைமை மறுபடியும் தேர்தலுக்கான அரசியலில் மையங்கொண்டது. அதற்காகத் தனது பழைய பாணியிலான மக்களை ஏமாற்றும் அரசியற் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செய்யத் தொடங்கியது. 

2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சில பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செய்தது. 

1.      சர்வதேச ரீதியிலான போர்க்குற்ற விசாரணை.

2.       காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்குத்  தீர்வு.

3.      அரசியற் கைதிகளை விடுவித்தல்.

4.      படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களை மீட்டெடுப்பது.

5.      இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படுதல்.

6.      இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு.

7.      பொருளாதார ரீதியாக எம்மை நாமே கட்டியெழுப்புதல்

8.      நாமொரு தேசமாக எழுதல்

இப்படிப் பல. 

ஆனால் இவை எதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்வந்த 15 ஆண்டுகளிலும் நிறைவேற்றவில்லை. இவற்றைப் பற்றிப் பாராளுமன்றத்திலும் மாகாணசபை, உள்ளுராட்சி சபைகளிலும் பேசியதோடு சரி. மட்டுமல்ல, மாகாணசபை, பிரதேச சபைகளின் மூலம் செய்யக் கூடிய, செயற்படுத்த வேண்டிய பணிகளைக் கூடச் செய்யாமல், அங்கெல்லாம் இந்தப் பிரகடனங்களைத் தீர்மானமாக்கி நிறைவேற்றுவதையே தொழிலாகக் கொண்டது. 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும்தான். 

போதாக்குறைக்கு “சில பிரகடனங்களைப் பற்றிப் பேசுவதற்காக ஜெனீவாவுக்குச் செல்கிறோம்” என்று வருடாவருடம் படையெடுத்துப் போகிறார்கள். அப்படியே உலகம் சுற்றுகிறார்கள். அப்படியே தங்களை நன்றாக வளர்த்துக் கொள்கின்றனர்.

ஆனால் போராட்டத்தில் இணைந்து நின்று, அளப்பரிய தியாகங்களைச் செய்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலையோ மிகப் பரிதாபமானதாக இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதை மேலுயர்த்திக் கொள்வதற்கோ அல்லது பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்புதற்கோ யாருமே முன்வரவில்லை. எங்கும் எவரும் மக்களோடு நின்ற எத்தகைய களப்பணிகளையும் ஆற்றவில்லை. அதற்கு இன்னும் தயாராகவும் இல்லை.

இதைப் பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கிறார் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான எம்.ஏ. சுமந்திரன். இது தொடர்பாக அவர் 11.05.2024 இல் விடுத்துள்ள அறிக்கையில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அதனுடைய சாராம்சம் இதுதான்,“கடந்த 15 வருட காலத்தில் எங்களுடைய அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக நாம் மேற்கொண்ட அணுகுமுறைகள்  வெற்றியளித்துள்ளனவா என்ற கேள்வியின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வது அவசியம் எனக் கருதுகிறேன்” என்று.

ஆனால், இன்று தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் இயங்குகின்ற பத்துக்கு மேற்பட்ட கட்சிகளில் எத்தனை கட்சிகள் இத்தகைய சுயவிசாரணைக்குத் தயாராக உள்ளன? அல்லது அவற்றில் இயங்கும் பல நூற்றுக்கணக்கானே அரசியலாளர்களில் எத்தனை பேர் இப்படித் துணிவோடு தம்மைச் சுயவிசாரணைக்குட்படுத் தயாராக உள்ளனர்?

அரசியற் கட்சிகள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, எதிர்ப்பு அரசியலை அல்லது விடுதலை அரசியலுக்கான தமிழ்த்தேசியவாதக் கருத்தியலை வலியுறுத்துகின்ற அரசியற் பத்தியாளர்கள், ஊடகங்கள், அவ்வப்போது அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், தமிழ்ச்சிவில் அமைப்புகள் என எந்தத் தரப்புமே தம்மைத் திரும்பிப் பார்க்கத் தயாரில்லாத நிலையிற்தான் உள்ளன. 

பதிலாக, தொடர்ந்தும் தமது விருப்பங்களையும் கனவுகளையும் மக்களின் மீது சுமத்துவதிலேயே தீவிரமாக உள்ளன. இதற்கெல்லாம் மக்களே பரிசோதனை எலிகள். இது எவ்வளவு அநீதியானது?  அப்படியான ஒன்றுதான் இப்போது மேற்கொள்ளப்படுகின்ற தமிழ்ப்பொது வேட்பாளர் விடயமும். 

2010 க்குப் பிறகு நடந்த மாகாணசபைகளுக்கான தேர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என ஒவ்வொரு தேர்தலின்போதும் இதேபோன்ற வெற்றுப் பிரகடனங்களுக்கு அலங்காரப் பூச்சுகளைச் செய்து மக்களிடத்திலே உலாவ விடப்படுகிறது. அட, குறைந்த பட்சம், தாம் வலியுறுத்துகின்ற, தாம் பிரகடனப்படுத்தும் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செயற்படுத்துவதற்காவது பாடுபட வேண்டாமா? அந்தப் பொறுப்புணர்வு கூட இவர்களுக்கில்லை. 

உண்மையில் இவர்கள் தாங்கள் எழுதிய ஒவ்வொரு வரிகளையும் ஒவ்வொரு பத்திகளையும் திரும்ப எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு கட்சியும் கடந்த காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் மக்களின் முன்னே வைத்த பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் அமர்ந்திருந்து வாசித்துப் பார்க்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் வெறும் வரிகளும் வெறும் வார்த்தைகளும் இல்லை. அவை மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள். சத்திய வார்த்தைகள். ஆகவே வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுவதும் சத்திய வார்த்தைகளை மீறிச் செல்வதும் மிகப் பெரிய தவறு. துரோகம். 

அப்படித்தான் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும், மாணவர்களாகிய தங்களுடைய வரையறை என்ன? பொறுப்பென்ன? செயற்பாட்டுப் பரப்பென்ன? என்பதை அறிவது நல்லது. (இதைக் குறித்தும் அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்). 

தொகுத்துச் சொன்னால், முதலில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு உண்மையாக இருங்கள். போராடிய மக்களுக்கும் தியாயகங்களைச் செய்த மக்களுக்கும் விசுவாசமாயிருங்கள். அவர்களுக்கு மேலும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் அபிலாஷைகளுக்கு நீங்கள்தான் முதலில் முன்னின்று உழைப்பவர்களாக இருக்க வேண்டும். அந்த உழைப்பே பிறருக்கு வழியைக்காட்டுவதாக இருக்க வேண்டும். அதன் பிறகே மக்கள் உங்களைப் பின்தொடர்வர். 

இதற்கு மக்கள் மத்தியில் களப்பணிகள் அவசியமாகும். அரசியலை நடைமுறைப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொள்ள முயற்சிப்பதாகும். நடைமுறைகள் உருவாகும்போதே அரசியல் வெற்றிகளை அடையலாம். 

பதிலாக ஊடக மையங்களில் கூடுவதோ, தங்கள் தங்கள் அலுவலங்களில்  இருந்து கொண்டு அறிக்கை விடுவதோ, நான்குபேர் சேர்ந்து கொண்டு புதுப்புது அமைப்புகளை உருவாக்குவதோ, அப்படி இப்படி என நான்கு, ஆறு அமைப்புகள் இணைந்து கொண்டு அறிக்கைகளைத் தயாரிப்பதோ, தூதுவரங்களுக்குக் காவடி எடுப்பதோ இல்லை. 

தெற்கிலே பொதுஜன பெரமுனவும் ராஜபக்ஸவினரும் இப்படித்தான், தங்களோடு 100 க்கு மேற்பட்ட அமைப்புகள்  இணைந்திருக்கின்றன என்று அரசியல் செய்ய முற்பட்டார்கள். அந்த அரசியலின் பெறுமதியை உலகம் நன்கறியும். அதை வரலாறு பழித்துரைக்கிறது.

விடுதலைக்கான அரசியல் என்பது வேறு. தேர்தலுக்கான அரசியல் என்பது வேறு. இரண்டையும் இணைத்துச் செய்வதும் செயற்படுத்தும் செல்வதும் வேறு. அது அதுக்கென அடிப்படைகளும் வேறுபாடுகளும் உண்டு. இதற்கான அரசியற் கணிதங்களை நாம் அறிய வேண்டும். 

விடுதலை அரசியலுக்கு நாம் யாராக இருக்கிறோம் என்பது, நம்முடைய செயல்களின் மூலமே அடையாளப்படுத்தப்படும். வார்த்தைகளின் மூலமாக அல்ல. இதற்கு அண்மைய செழிப்பான உதாரணம், தமிழ் மக்கள் பேரவையாகும். மிக ஊக்கத்துடன், உற்சாகமாகத் தொடங்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை மூன்று ஆண்டுகளால் காணாமற்போனவைகளின் பட்டியலில் சேர்ந்து கொண்டது. தமிழ் மக்கள் பேரவையின் தோல்வியை மறைப்பதற்காக அதன் உற்பத்தியாளர்கள் வேறு மார்க்கங்களில் முயற்சிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பொதுவேட்பாளர் பற்றிய அறிவிப்புமாகும். 

இப்பொழுது நடந்து கொண்டிருப்பது எலிகள் பல சேர்ந்து வளையெடுக்கும் முயற்சிகள். 

ஆம் புலிகளின் காலம் முடிந்தது. இது செயற்படும் எலிகளின் காலமாகியிருக்கிறது. செயற்படுவோரின் காலம் போயொழிந்தது. செயற்படாதோரின் அரங்கு திறந்திருக்கிறது. 

என்பதால்தான் தாய் மண்ணை விட்டு ஆயிரமாயிரமாய்த் தினமும் வெளியேறிச் செல்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். இந்தச் சீரில்தான் “தேசமாய்த் திரள்வோம்” என்று கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.