— எம்.எல்.எம். மன்சூர் —
அமெரிக்காவின் ‘Time’ சஞ்சிகை அதன் 1954 மே 3 ஆம் திகதி இதழில் ‘Ambassadors with Bulldozers’ என்ற தலைப்பில் ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. சிவில் பொறியியல் கட்டுமானப் பணிகளில் 1912 தொடக்கம் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த Morrisons – Knudson International என்ற அமெரிக்க கம்பெனியின் தலைவர் Harry Morrison இன் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து ‘ஆறுகளை மறித்தவர் – மலைகளை நகர்த்தியவர்’ என்ற வாசகங்கள் அதன் கீழ் பொறிக்கப்பட்டிருந்தன.
அவருடைய கம்பெனி 1949 – 1951 காலப் பிரிவில் பட்டிப்பளை ஆற்றை மறித்து, இரண்டு மலைகளை இணைக்கும் விதத்தில் உருவாக்கிய கல்லோயா அணைக்கட்டும், 35 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய நீர்த் தேக்கமான சேனாநாயக்க சமுத்திரமும் இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விவசாய – பொறியியல் துறை சாதனைகள்.
1957 டிசம்பர் மாதம் கிழக்கில் இடம்பெற்ற பெரு மழையின் போது கல்லோயா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்க முடியும் என்ற விதத்தில் ஒரு பாரிய அச்சம் நிலவியது. அச்சந்தர்ப்பத்தில் கல்லோயா அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் சபை நிலைமையின் தீவிரத்தை விளக்கி, அக்கம்பெனிக்கு ஓர் அவசரத் தந்தியை அனுப்பி வைத்தது.
‘Galboard’ என்ற தந்தி முகவரிக்கு உடனடியாக கிடைத்த பதில் இது:
“அணைக்கட்டின் இருபுறங்களும் இணைக்கப்பட்டிருக்கும் மலைக் குன்றுகளின் வலிமையை பரீட்சித்துப் பார்க்கவும்” (Check the strength of the two rocks to which the dam is connected to).
தம்மால் நிர்மாணிக்கப்பட்ட அணைக்கட்டின் வலிமை குறித்து Morrisons – Knudson கம்பெனி வழங்கிய மறைமுகமான உத்தரவாதம் அது.
1949 இல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு, கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர இலங்கையின் முதலாவது மிகப் பெரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான “கல்லோயா திட்டம்” இவ்வாண்டில் அதன் 75 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூருகிறது.
நிதி அமைச்சின் செயலாளராக இருந்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிவில் சேவை அதிகாரியான Huxham என்பவர் 1949 – 1952 காலப் பிரிவில் கல்லோயா அபிவிருத்திச் சபையின் (GODB) தலைவராக இருந்து வந்தார். ஆனால், அத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட வேகத்திற்கும், அதனுடன் சம்பந்தப்பட்டிருந்த பாரிய சவால்களுக்கும் அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. அந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து பிரதமர் டி எஸ் சேனாநாயக்க (அப்பொழுது காணிகள் ஆணையாளராக பணிபுரிந்து வந்த) கே கனசுந்தரத்தை தனிப்பட்ட முறையில் அழைத்து ‘நீங்கள் கட்டாயமாக இப்பணியை பொறுப்பேற்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்வதன் மூலம் தனது அரச சேவை ஓய்வூதியத்தை இழக்க வேண்டி நேரிடும் என்பதனை நன்கு அறிந்திருந்த போதிலும், பிரதமரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் கனகசுந்தரம் அப் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அது பிரதமர் டி எஸ் சேனாநாயக்கவின் அரசியல் தலைமையின் கீழும், கனகசுந்தரம் என்ற தமிழ் சிவில் சேவை அதிகாரியின் நிறைவேற்றுத் தலைமையின் கீழும் முன்னெடுக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான முயற்சி. சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் மலே ஆகிய இனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமின்றி, பெருந்தொகையான வெளிநாட்டு சிவில் பொறியியலாளர்கள், அணைக்கட்டு வல்லுனர்கள், வனவளம் தொடர்பான நிபுணர்கள், கட்டடக் கலைஞர்கள், இயந்திரப் பொறியியலாளர்கள் ஆகிய பன்முகத் திறன்களை கொண்டிருந்த ஓர் அணியின் கூட்டு உழைப்பு அது.
அத்திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் (அப்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிட்டத்தட்ட 1400 சதுர மைல் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்ததுடன், அப்பிரதேசம் முழுவதும் நேரடியாக கல்லோயா அபிவிருத்திச் சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அந்நிலப்பரப்புக்குரிய அரசாங்க அதிபரின் அதிகாரங்கள் மட்டுமன்றி, இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றுக்குரிய அதிகாரங்களும், கருமங்களும் இச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
அந்த விதத்தில் அச்சபையின் தலைவர் என்ற முறையில் கனகசுந்தரம் அபரிமிதமான அதிகாரங்களைக் கொண்டிருந்தார்.
பாரம்பரியமாக தமிழ் மொழி பேசும் இரு சமூகங்கள் செறிந்து வாழ்ந்து வந்த (அப்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிசனவியல் தொகுப்பை (Demographic Composition) சிதைத்து, கிழக்கை சிங்களமயமாக்கும் பேரினவாத செயல்திட்டத்தின் ஒரு பாகமாகவே பொதுவாக “கல்லோயா திட்டம்” சிறுபான்மை சமூகங்களால் நோக்கப்பட்டு வந்திருக்கின்றது.
1952 இல் ஒரு நாள் கொழும்பு – மட்டக்களப்பு ரெயில் வண்டியில் எஸ் ஜே வி செல்வநாயகம் கே. கனகசுந்தரத்தை தற்செயலாக சந்தித்த பொழுது கூறிய பின்வரும் வார்த்தைகள் அந்தக் கண்ணோட்டத்தின் ஒரு பிரதிபலிப்பாகும்:
“Young man – Do you realize that you are driving a dagger into the hearts of the Tamil people?”
அக்கேள்விக்கு GODB தலைவர் பின்வருமாறு பதிலளித்ததாக கூறப்படுகிறது –
“அப்படி இல்லை……. நான் கேகாலையில் உதவி அரசாங்க அதிபராக பணியாற்றிய காலத்தில் கண்டிய சிங்களவர்களின் கடும் வறுமையையும், காணிப் பிரச்சினையையும் நேரில் பார்த்திருக்கிறேன். கல்லோயாவில் புதிய குடியேற்றங்கள் அமைக்கப்படவிருக்கும் பிரதேசங்கள் மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பிரதேசங்கள். புராதன காணிகள் (Purana Lands) என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் கிராம விஸ்தரிப்புக்கென தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் போதிய நிலப்பரப்புக்கள் இருந்து வருகின்றன.”
கே கனகசுந்தரத்தின் புதல்வரான அஜித் கனகசுந்தரம் “60 ஆண்டுகளுக்குப் பின்னர் கல்லோயா திட்டம் குறித்த ஒரு மீள் பார்வை” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் விரிவான கட்டுரை (சன்டே ஐலன்ட், 2016 செப்டம்பர் 18, 25) பெருமளவுக்கு சர்ச்சைக்குரிய இந்தத் தலைப்பு தொடர்பாக முன்முடிவுகள் எவையுமின்றி, நிதானமான ஒரு பார்வையை முன்வைக்கின்றது –
“அநேகமாக இப்பொழுது எவரும் கல்லோயா திட்டத்தை நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் சுமார் 20 வருட காலம் அது நவீன சுதந்திர இலங்கையின் முகத்தோற்றத்தை வெளியுலகுக்கு பிரதிபலித்து வந்திருக்கிறது. பின்னர் பல நூறு கோடி ரூபாய் செலவில் அமுல் செய்யப்பட்ட மகாவலி திட்டம் போன்ற பிரமாண்டமான திட்டங்கள் கல்லோயா திட்டத்தின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்க செய்தன. ஆனால், ஏனைய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மதிப்பிடப்பட வேண்டிய தர நியமத்துக்கான உரைகல்லாக கல்லோயா திட்டமே இன்னமும் இருந்து வருகின்றது.”
“………. இலட்சிய ரீதியாக காரியங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான உதாரணம் கல்லோயா திட்டம். அது முழுக்க முழுக்க தேசிய நிதி வளங்களை பயன்படுத்தி, உள்நாட்டு நிர்வாகிகளால் நிறைவேற்றப்பட்ட ஒரு திட்டம். காடுகளை துப்புரவு செய்தல், குடியேற்றவாசிகளை குடியமர்த்துதல், புதிய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குதல் என்பன எல்லாமே திட்டமிட்ட அதே விதத்தில் உரிய காலகெடுவுக்குள் துல்லியமாக நிறைவேற்றப்பட்டன. இங்கு முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயம் உபகரணங்களின் கொள்வனவுக்கென பல கோடி ரூபாக்களை செலவிட வேண்டியிருந்த போதிலும் திட்டம் முழுவதிலும் ஊழல், மோசடி, முறைகேடுகள் என்பன குறித்த எத்தகைய குற்றச்சாட்டுக்களும் எழுப்பப்பட்டிருக்கவில்லை என்பதாகும்.”
“………..எனது தந்தை கே கனகசுந்தரம் கல்லோயா அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்த காலத்தில் (1952 – 1957) கொழும்பில் ஒரு வீட்டை கட்டினார். அச்சந்தர்ப்பத்தில் கட்டடப் பொருட்களுக்கான கொள்வனவு கட்டளைகளை அவர் ஒருபோதும் தனது பெயரில் அனுப்பி வைக்கவில்லை. அவ்வாறு செய்தால் வழங்குனர்கள் தனக்கு நியாயமற்ற விலைக் கழிவுகளை பெற்றுத்தர முடியும் என அவர் அஞ்சினார்…….”
“டி எஸ் சேனாநாயக்க சிங்களவர்களுக்கு சார்பானவர்; ஆனால் தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல. சரியாக சொல்வதானால் அவரிடமிருந்தது ஒரு விதமான கொவிகம / வெள்ளாளர் சாதி அபிமானம்” என்கிறார் அஜித் கனகசுந்தரம்.
இக்கட்டுரை வரலாற்றாய்வாளர் மைக்கல் ரொபர்ட்சின் “Thuppahi” இணையதளத்தில் மீள் பிரசுரம் செய்யப்பட்ட பொழுது அதற்கு எதிர்வினையாற்றிய பேராசிரியர்கள் சந்திரா விஜேவர்தன மற்றும் ஜெரால்ட் பீரிஸ் ஆகியோர் முன்வைத்திருந்த பின்னூட்டங்களும் முக்கியமானவை –
“மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறிப்பதற்கென 1948 இல் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளின் போது ஒரு சில வடபுல தமிழ் அரசியல்வாதிகளும், கண்டிய சிங்கள பிரதானிகளுமே முதன்மையாக காய்களை நகர்த்தினார்கள். அச்சட்ட வரைவின் தயாரிப்பில் (அப்போது பாதுகாப்பு மற்றும் வெளி விவகார அமைச்சின் நிரந்தரச் செயலாளராக இருந்து வந்த) கந்தையா வைத்தியநாதன் முக்கியமாக பங்களிப்புச் செய்திருந்தார்.”
“பெருந்தோட்டங்களில் இடதுசாரிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்துவதும், குறிப்பாக லங்கா சமசமாஜ கட்சி மலையகத்தில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றும் ஒரு நிலை தோன்றுவதை தடுத்து நிறுத்துவதுமே அவர்களுடைய அசல் நோக்கமாக இருந்து வந்தது” – சந்திரா விஜேவர்தன.
கல்லோயா திட்டத்தின் 42 குடியேற்ற அலகுகளில் 9 அலகுகள் இடதுகரை கால்வாய் பகுதியில் (தற்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்ததாக கூறிப்பிடும் பேராசிரியர் ஜெரால்ட் பீரிஸ், அப்பிரதேசத்தில் சிங்களவர்களுக்கு காணிகள் எவையும் வழங்கப்படவில்லை எனச் சொல்கிறார்.
கே கே டி சில்வா ” The Galoya Valley Scheme and the People who made it a Reality” (மே 2022) என்ற நீண்ட கட்டுரையில் கல்லோயா திட்டத்தின் சுருக்கமான வரலாற்றை முன்வைப்பதுடன், அதற்குப் பங்களிப்புச் செய்த உள்நாட்டு / வெளிநாட்டு ஆளணியினர் குறித்த தகவல்களை விரிவாக பதிவு செய்கிறார்.
ஜே எஸ். கென்னடி என்பவர் மட்டக்களப்பு நீர்ப்பாசன பொறியியலாளராக இருந்த பொழுது கல்லோயா நீரேந்து பரப்பில் பட்டிப்பளை ஆற்றின் உள்ளார்ந்த அபிவிருத்தி ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதற்கென 1936 இல் ஒரு தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப் போர் காரணமாக இத்திட்டத்தின் அமுலாக்கம் தாமதப்படுத்தப்பட்டது.
நீர்ப்பாசன பணிப்பாளர் பதவியை வகித்த முதலாவது இலங்கையர் (1951) டபிள்யு ரி ஏ அழகரத்தினம். அவர் 1940 களின் தொடக்கத்தில் மட்டக்களப்பு நீர்ப்பாசன பொறியியலாளராக பணியாற்றிய பொழுது காடுகளில் நடந்து சென்று, இங்கினியாகலயில் முகாம் அமைத்து தங்கி நின்று, இது தொடர்பான பூர்வாங்க மதிப்பீட்டாய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.
அது தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தை அரசாங்க சபையில் பிரதிநிதித்துவம் செய்த தமிழ் அரசியல்வாதிகள் பலரும் பட்டிப்பளை ஆற்று வடிநிலத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை குறித்து 1940 கள் நெடுகிலும் தொடர்ந்து குரலெழுப்பி வந்திருக்கிறார்கள். கல்லோயா அபிவிருத்திக்கான விரிவான திட்டங்களும், இங்கினியாகலையில் அமைக்கப்படவிருக்கும் அணைக்கட்டு மற்றும் நீர்த்தேக்கம் என்பன தொடர்பான பொறியியல் வடிவமைப்புக்களும் 1946 லேயே தயாரிக்கப்பட்டிருந்தன.
இந்தப் பின்புலத்திலேயே இத்திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான முக்கியமான ஒரு அரசியல் தீர்மானத்தை பிரதமர் டி எஸ் சேனாநாயக்க 1949 இல் மேற்கொண்டார். அவ்வாண்டில் ஒரு பாரளுமன்ற சட்டத்தின் மூலம் கல்லோயா அபிவிருத்திச் சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், பலர் நம்புவதைப் போல, கல்லோயா திட்டம் டி எஸ் சேனாநாயக்கவின் கற்பனையில் உருவான ஒரு திட்டம் (Brainchild) அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு போதுமான விரிவான தகவல்களை தருகிறது கே கே டி சில்வாவின் கட்டுரை.
1956 ஜூன் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் நான்கு நாட்கள் அம்பாறையிலும், இங்கினியாகலயிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் கல்லோயா திட்டத்தின் தொடக்க கால வரலாற்றில் ஏற்பட்ட ஒரு பெரும் களங்கம். GODB இல் பணியாற்றிய தமிழ் ஊழியர்களை இலக்கு வைத்து இந்த வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. ஜூன் 5-ம் தேதி தமிழரசு கட்சி காலி முகத்திடலில் நடத்திய சத்தியாகிரகத்தின் போது பலர் தாக்கப்பட்டார்கள். அதனையடுத்து மட்டக்களப்பில் பத்தாயிரம் தமிழர்கள் கலந்து கொண்ட ஒரு எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டதுடன், அதன் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்தார்கள். பின்னர் மட்டக்களப்பு, காரைதீவு மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் சிங்களவர்களுக்கு எதிரான (சார்பு ரீதியில் சிறு அளவிலான) ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இச்சம்பவங்கள் குறித்த செய்திகள் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட வதந்திகளாக அம்பாறையை வந்தடைந்த பொழுது 11 ஆம் தேதி அங்கு வன்முறை வெடித்தது. புதிய குடியேற்றவாசிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வன்முறைக் கும்பல் GODB வாகனங்களையும், வெடிபொருட்களையும் பலவந்தமாக கைப்பற்றி நிகழ்த்திய கொடூரங்களின் போது குறைந்தது 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
பெருமளவுக்கு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரின் பங்களிப்புக்களுக்கு ஊடாக நிறைவேற்றப்பட்ட ஒரு திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் அந்த ஊழியர் அணியைச் சேர்ந்த சுமார் 100 பேரை கொலை செய்தார்கள் என்பது வரலாற்றின் பெரும் முரண்நகை.
அம்பாறை வாடி வீட்டில் 85 GODB தமிழ் ஊழியர்கள் தமது குடும்பங்களுடன் தஞ்சம் புகுந்திருந்திருந்தார்கள். அவர்களில் கனகசுந்தரமும், அவரது மனைவியும் இருந்தார்கள். பத்மநாதன் என்ற பொலிஸ் அதிகாரி 5 (சிங்கள) பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த கனகசுந்தரம் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பத்மநாதனுக்கு கட்டளையிட்டார். அதனையடுத்து சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று நபர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்கள். ‘அதன் பின்னர் ஒரு சில நிமிடங்களில் அந்தக் கும்பல் மாயமாக மறைந்தது’ என எழுதுகிறார் அஜித் கனகசுந்தரம்.
1956 வன்முறைச் சம்பவங்கள் கல்லோயா பள்ளத்தாக்கு நெடுகிலும் துளிர் விட்டுக் கொண்டிருந்த புதிய நம்பிக்கைகளை சிதைத்ததாக கூறும் கனகசுந்தரம், கல்லோயா அபிவிருத்திச் சபை ஈட்டிக் கொண்டிருந்த புதிய பொறியியல் திறன்களை பயன்படுத்தி, தமிழ், முஸ்லிம் விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய விதத்தில் புராதன கிராமங்களில் குறைந்த செலவில் ஒரு அணையை நிர்மாணிப்பதற்கென தயாரிக்கப்பட்டிருந்த திட்டங்களும் அதனுடன் இணைந்த கைவிடப்பட்டதாக சொல்கிறார்.
அதன் பின்னர் 1983 நிகழ்த்தப்பட்ட இன அழிப்புச் செயல்களுக்கான ஒத்திகையாகவே கல்லோயா வன்முறை இருந்து வந்தது என்பது அவருடைய கருத்து. 1983 வன்முறையின் மூலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறியவர்களில் அஜித் கனசுந்தரமும் ஒருவர். அப்பொழுது அவர் இலங்கை மத்திய வங்கியில் பணியில் இருந்தார். ஹோகந்தரையில் இருந்த அவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் பரப்பளவிலான கால்நடைப் பண்ணை முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டதுடன், கால்நடைகளும் கொல்லப்பட்டன. அதன் பின்னர் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த அவர் ஒரு சர்வதேச வங்கியில் நீண்ட காலம் உயர் பதவிகளை வகித்து வந்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அஜித் கனகசுந்தரம் “Tale of Two Countries: Sri Lanka and Singapore” (2018) என்ற மிக முக்கியமான நூலின் ஆசிரியர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அப்பொழுது பேராதனை பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்றிய ஸ்டான்லி தம்பையா 33 மாணவர்களை (26 சிங்கள மாணவர்கள், 7 தமிழ் மாணவர்கள்) அழைத்துக்கொண்டு புதிய குடியேற்றவாசிகள் தொடர்பான சமூக – பொருளாதார ஆய்வொன்றை நடத்துவதற்காக இங்கினியாகலைக்கு சென்றிருந்தார். அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த துல்லியமான விவரங்களுடன் கூடிய ஓர் அறிக்கையை அவர் உபவேந்தர் ஐவர் ஜென்னிங்சிடம் சமர்ப்பித்திருந்ததுடன், பல்கலைக்கழகத்தின் பழைய ஆவணக் குவியல்களிலிருந்து அந்த அறிக்கை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
பிற்காலத்தில் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சமூக மானிடவியல் துறை பேராசிரியராக பணியாற்றிய ஸ்டான்லி தம்பையா (1929 – 2014) எழுதிய “Buddhism Betrayed: Religion, Politics and Violence in Sri Lanka” (1992) என்ற நூல் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்த நவீன இலங்கை தொடர்பான மிக முக்கியமான ஒரு வரலாற்று ஆவணம். இன்றைய இலங்கையின் சிறுபான்மை சமூகங்களுக்கும், இடதுசாரிகளுக்கும், அதேபோல மிதவாத அரசியல் தலைவர்களுக்கும் பெரும் சவாலாக எழுச்சியடைந்திருக்கும் ‘Political Buddhism’ என்ற எண்ணக் கருவின் தோற்றத்தையும், அதன் பன்முக பரிமாணங்களையும் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய நூல் அது.
1956 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைகளிலும், அணுகு முறையிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. புதிய அரசாங்கத்தின் காணி, காணி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சராக சி பி டி சில்வா பதவி ஏற்றார். அந்த அமைச்சின் கீழேயே கல்லோயா அபிவிருத்திச் சபை இருந்து வந்தது. கனகசுந்தரமும், சி பி டி சில்வாவும் நெருங்கிய நண்பர்கள். 1935 இல் இலங்கை சிவில் சேவைக்கு போட்டிப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஒன்பது பேரில் புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தில் இருந்தவர் கனகசுந்தரம் (இரண்டாம் இடம் – ஏ எம் ஏ அஸீஸ்; எட்டாவது இடம் – சி பி டி சில்வா ).
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அமைச்சர் சி பி டி சில்வாவின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்தில் காரியங்கள் அரங்கேறின. 1957 இல் கனகசுந்தரம் GODB தலைவர் பதிவியிலிருந்து நீக்கப்படுகிறார். அதன் பின்னணி குறித்த அஜித் கனகசுந்தரத்தின் விளக்கம் –
“பல ஆண்டுகளுக்குப் பின்னர் சி பி டி சில்வா நோய்வாய்ப்பட்டு, சிகிச்சைக்காக இங்கிலாந்து வந்திருந்தார். சிகிச்சை முடிந்து எங்கள் லண்டன் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த பொழுது எனது அப்பாவிடம் இப்படிச் சொன்னார்:
கனகஸ் – என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிலிப் (குணவர்தன) பண்டாவிடம் (பிரதமர்) சொன்னார்: ‘கல்லோயா அபிவிருத்திச் சபை போன்ற உயர் அதிகாரங்களை கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் தமிழர் ஒருவர் தலைவராக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் உடனடியாக நீக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக நான் எனது தொழிற்சங்கங்களை களம் இறக்குவேன்’. மிகவும் பலவீனமான நிலையில் இருந்து வந்த பண்டாரநாயக்க அதற்கு உடன்பட வேண்டியிருந்தது. அதனால் தான் நாங்கள் உங்களை நீக்கினோம்.
ஆனால், அது தொடர்பாக குற்ற உணர்ச்சியில் இருந்த பண்டாரநாயக்க, பிரிட்டனுக்கான இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராக கனகசுந்தரத்தை அனுப்பி வைக்கிறார்.
அஜித் கனசுந்தரத்தை போலவே இன்னும் சிலர் – குறிப்பாக கல்லோயா திட்டத்தில் பணியாற்றிய வெளிநாட்டவர்களின் பிள்ளைகள் – 1950 களில் இங்கினியாகலயில் கழிந்த தமது பிள்ளைப் பருவ நாட்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார்கள். மாதிரிக்காக ஒரு சில நினைவுகள் கீழே –
இரண்டாவது உலகப் போரின் போது அகதியாக இடம்பெயர்ந்த உக்ரேயின் நாட்டைச் சேர்ந்த சிவில் பொறியியலாளர் ரோமன் செகோவட்ஸ்கி 1950 – 1961 காலப் பிரிவில் கல்லோயா திட்டத்தில் பணியாற்றினார். அலுவலக கட்டடங்களையும், ஊழியர் குடியிருப்புக்களையும் வடிவமைத்தவர் அவர்.
1951 இல் இலங்கையில் பிறந்த அவருடைய மகன் அன்ட்றியாஸ் தொடக்கத்தில் இங்கினியாகல சிங்கள பாடசாலையில் சேர்ந்து படித்தார். பின்னர் கொழும்பு சென்ட் ஜோஸப் கல்லூரியில் அவர் தனது கல்வியை தொடர்ந்தார். 1950 களில் இங்கினியாகலயில் கழிந்த தனது பிள்ளைப் பருவ நாட்களை நினைவு கூரும் அவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் தான் தனது அப்பாவுக்கும், சிங்கள தொழிலாளர்களுக்கும் இடையில் உரைபெயர்ப்பாளராக பணியாற்றியதாக சொல்கிறார்.
இலங்கையிலிருந்து வெளியேறி 55 ஆண்டுகளின் பின்னர் 2016 இல் தனது சகோதரியுடன் இங்கு வந்த அவர் இங்கினியாகலைக்குச் சென்று தனது பிள்ளைப் பருவ நண்பரான ஜே பி லயனல் பிரேமசிரியை சந்தித்தார்.
அமெரிக்கரான Ron Utley இன் (2008) நினைவுப் பகிர்வு இது-
“மொரிசன் – நட்சன் கம்பெனியில் வேலை செய்த எனது அப்பா கல்லோயா அணைக்கட்டை நிர்மாணிக்கும் பணியில் பங்கேற்றார். அப்பொழுது எனக்கு வயது 13. அப்பாவுடனும் , ஏனைய அமெரிக்க கட்டுமானத் தொழிலாளர்களுடனும் 18 மாதங்கள் நான் பிரதான முகாமில் தங்கியிருந்தேன். இந்த ஆண்டு எனக்கு 70 வயது நிறைவடைகின்றது. இங்கினியாகலயிலும், உஹனவிலும் கழித்த அந்த இனிமையான நாட்களையும், எனது வாழ்க்கையின் ஒரு பாகமாக இருந்து வந்த நண்பர்களையும் நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்…….”
கல்லோயா திட்டத்தின் உருவாக்கத்திலும், அமுலாக்கலிலும் இன ரீதியான பாரபட்சம் (Ethnic Bias ) இருந்து வரவில்லை என அஜித் கனகசுந்தரம் மற்றும் கே கே டி சில்வா போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால், மட்டக்களப்பு / அம்பாறை மாவட்டங்களின் குடிசனவியல் தொகுப்பில் அது எடுத்து வந்த மாற்றத்தையடுத்து, கிழக்கில் இன உறவுகளில் தொடர்ந்து பதற்ற நிலைமைகள் நிலவி வருவது அதன் எதிர்மறையான விளைவுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
கரையோர அம்பாறை மாவட்டம் தொடர்பாக முஸ்லிம் சமூகம் சார்பில் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையையடுத்து தென்னிலங்கையில் எழுந்த இனவாத எதிர்ப்பலை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு புதிய நகர சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு இனவாதச் சக்திகள் தெரிவித்த கடும் ஆட்சேபனை என்பன ‘இலங்கை ஒரு பல்லின, பல் சமய ஜனநாயக நாடு’ என்ற விதத்தில் நிலவி வரும் பொதுவான நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட ஒரு பெரும் சவால்.
‘தனி மாவட்டம் தரவும் முடியாது; சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் ஒரு மாவட்டத்திற்கு தமிழ் பேசும் அதிகாரி ஒருவரை அரசாங்க அதிபராக நியமனம் செய்யவும் முடியாது’ என்பதே இத்தரப்பின் நிலைப்பாடு. சிறுபான்மை அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுவது ஒரு விதத்தில் வெறுமனே ஒரு அலங்காரப் பெறுமதியாக (Ornamental Value) மட்டுமே இருந்து வர முடியும். ஒரு குறியீட்டு மதிப்புக்காக கூட அவ்வாறு செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை.
‘எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதிதாக மலரவிருக்கும் இலங்கையில்’ சிறுபான்மை சமூகங்களின் நியாயமான கோரிக்கைகள் – தர்க்க ரீதியில் நியாயப்படுத்தப்படக்கூடிய கோரிக்கைகள் – எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.