“முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில் செய்த எச்சரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. தன்னை ஒரு ‘கெரில்லா’ என்று வர்ணித்த அவர் தன்னந் தனியானாக சாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் வாழ்வாதாரத்தை இழந்தால் வேறு பலரையும் கொலை செய்துவிட்டுத் தானும் உயிரை மாய்ப்பதற்கு ‘தற்கொலைத் தாக்குதலை’ நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாரோ தெரியவில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான சட்டமூலத்தை அவரது முன்னாள் தோழர்களின் அரசாங்கம் ஜனவரி 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததை தொடர்ந்து, அது குறித்து அரசியல் அரங்கில் ஒரு விவாதம் மூண்டிருக்கும் வேளையில், குணதிலக உயிருடன் இல்லை.”
