புதுவரவும் -புது நகர்வும்..! தமிழ்த்தேசிய அரசியலில் ஜனநாயகப் போராளிகள்..!! (மௌன உடைவுகள் – 20)

புதுவரவும் -புது நகர்வும்..! தமிழ்த்தேசிய அரசியலில் ஜனநாயகப் போராளிகள்..!! (மௌன உடைவுகள் – 20)

~~~ அழகு குணசீலன் ~~~


சமகால தேர்தல்களத்தில் – தமிழ்த்தேசிய அரசியல் சந்தையில் ஜனநாயகப் போராளிகள் கட்சிகளமிறங்கி இருக்கிறது. இந்தப் பெயர் தமிழ் மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று அல்ல. அவர்கள் ஏந்தி வருகின்ற குத்துவிளக்கு சின்னமும் பழக்கப்பட்ட தல்ல. எனினும் “போராளிகள்” என்றவார்த்தைக்கு ,அதற்கே உரிய முழுமையான அர்த்தத்தை புலிகள் நடைமுறையில் கொண்டிருக்கவில்லை என்றாலும் தமிழர் அரசியலில் அது நன்கு பரீட்சையமானது என்று கொள்ளலாம்.

எந்த “தும்புத்தடியை” வேட்பாளராக நிறுத்தினாலும் தமிழ்த்தேசியம் – தமிழரசுதான் வெல்லும் என்ற கதைகளின் காலமல்ல இது. மக்கள் வேட்பாளர்களை மதிப்பிடவும், புதிய தேர்தல் சின்னங்களுக்கு வாக்களிக்கவும் கற்றுக்கொண்டுள்ளனர். எனவே கட்சியும், சின்னமும் அல்ல வேட்பாளர்களின் சுயதகுதியும், அரசியல் நேர்மையும் , செயற்திறனும், நடைமுறைச் சாத்தியமான, ஜகார்த்த நோக்கிலான கொள்கையும் முக்கியம். கடந்த பல தேர்தல்களில் தமிழ் மக்கள் இதை நிரூபித்திருக்கிறார்கள்.

நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற தேர்தல் “வட்டார வேலிக்குள்”, “பிரதேச வேலிக்குள்” சுருக்கப்பட்டுள்ளது. இங்கு வட்டார மக்களின் கவனம் தனிநபர், குடும்ப உறவு, சமூக உறவு, குறிப்பிட்ட நபரின் கடந்தகால வரலாறு, செயற்பாடுகள் போன்றவையே முதன்மைப்படுத்தப்படும். பாராளுமன்ற தேர்தல் போன்று கட்சியும், கொள்கையும் மக்களின் தேர்வில் முதன்மைப்படுத்தப்பட மாட்டாது. இது சகலதரப்புக்கும் உள்ள பொதுநிலை. இதன் அர்த்தம் கட்சியும், கொள்கையும் முற்று முழுதாக கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பதல்ல. அது செலுத்தும் செல்வாக்கு வரையறுக்கப்பட்டது. இந்த சூழலில் ஜனநாயகப் போராளிகளின் புதுப்பிரவேசம் அமைகிறது.

 ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து “விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவை” மீள் கட்டுமானம் செய்திருக்கிறார்கள். இந்த அரசியல் பிரிவே வடக்கு கிழக்கில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயற்பாட்டிற்கு பின்னணியில் உள்ளது. ஐரோப்பிய இந்திய தூதரகங்களுடன் பரஸ்பர உறவைப் பேணும் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு கடந்த கால  தவறுகளை சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி செயற்படுகிறதா…? அல்லது பிராந்தியமும், சர்வதேசமும் அறிந்த அவர்களின் அதே வழமையான பூகோள அரசியல் கண்துடைப்பா…? என்பதை காலம்தான் காட்டவேண்டும்.

இந்தியாவுடன் புனரமைக்கப்பட்டுள்ள இந்த “புது உறவு” இவர்கள் கூட்டங்களை-சந்திப்புக்களை இந்திய தலைநகரில் நடாத்துவதற்கும் வாய்ப்பளித்துள்ளது. மறுபக்கத்தில் தமிழ்நாட்டின் தமிழீழ ஆதரவாளர்கள், நட்புறவாளர்களைத் தவிர்த்து தனித்து ஓடுவதற்கு வசதியாக உள்ளது. அறக்கட்டளையின் ஊடாக  இந்திய தேசிய கட்சிகளுடனான உறவும் வலுப்பெறுகிறது.

ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் செயற்பாடு ஒரு காலத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் தாங்கள் தான் என்று வீதிச் சண்டையில் ஈடுபட்ட அமைப்புக்களை ஊமையாக்கியுள்ளது. இல்லையேல்  இன்றைய ரணிலின் இனப்பிரச்சினை தீர்வுக்கான அறிவிப்புக்கு இவர்களை ஏற்றி எத்தனை விமானங்கள் லண்டனுக்கும், கொழும்புக்கும் இடையேபறந்திருக்கும்.

 இந்த இடத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்வை ஒட்டுமொத்த தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஜனநாயகத்திற்கு முரணானது என்று நிராகரித்த நிலையில் ஜனநாயகத்தை பெயரில் கொண்டுள்ள முன்னாள் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஒன்றே ரணிலை வாயார வாழ்த்தியது. இந்த அரசியல் நகர்வின் முதுகும் பக்கம் சொல்வது என்ன…?

  இந்த புலம்பெயர்ந்த அமைப்புக்களின் அதே பரிதாபகரமான நிலையே நாடுகடந்ந தமிழீழ அரசாங்கத்தினதுமாகும். இன்று அவர்கள் வெறும் கடிதத்தலைப்புக்குள் சுருங்கிவிட்டார்கள். இரா.சம்பந்தர் ஆயுட்கால கூட்டமைப்பு தலைவராக இருப்பது போன்று இவர்களும் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பதவியில் இருக்கிறார்கள். இதுவரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைத் தெரிவு செய்ய மூன்று தேர்தல்கள் நடாத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பெயர் தமிழீழம் -நாடுகடந்த ஜனநாயகம். …..? அதுவும்  ஜனநாயகத்திற்காக உலகெங்கும் போர்செய்யும் அமெரிக்காவில்   நாடுகடந்த அரசாங்கம்  இயங்குகிறது ?

2020 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் ஓரளவுக்கு மக்கள் தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராசாவை தோற்கடித்ததிலும், எம்.ஏ.சுமந்திரன் ஒரு இலட்சம் விருப்ப வாக்குகளைப் பெறுவேன் என்று கண்ட கனவை ஐம்பதினாயிரமாக்கியதிலும் ஜனநாயகப் போராளிகளின் பங்கு முக்கியமானது. 

கிழக்கில் சம்பந்தர் மயிரிழையில் தப்பிப்பிழைத்தார். இரா.சாணக்கியனின் வெற்றியின் பின்னால் ஜனநாயகப் போராளிகள் இருந்தார்கள். மட்டக்களப்பின் மூத்த போராளி ஒருவர் தமிழரசுக்கு சாணக்கியனை அறிமுகம் செய்தது மட்டுமன்றி வெற்றிக்கும் உழைத்தார். இவர்கள் அரசாங்க ஓய்வூதிய கால அரசியல்வாதிகளை நிராகரித்ததன் மூலம் மட்டக்களப்பு முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வெற்றிக்கு சேதாரம் விளைவித்தார்கள்.

இன்றைய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா, ஊடகவியலாளர் வித்தியாதரன், மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்களின் கருத்துக்கள் புதிதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியையும் உள்ளடக்கிய குத்துவிளக்கு புதிய கூட்டணிக்கு சாதகமாக அமைகின்றன. ஒற்றை பனையான தமிழரசுக்கு சவாலாக உள்ளது.

விடுதலைப்புலிகள் எந்த போராளிகள் அமைப்புக்களை அதாவது ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப். என்பனவற்றை துரோகிகள், ஒட்டுக் குழுக்கள், முகமூடிகள், சமூகவிரோதிகள், கொலைகாரர்கள், கொள்ளையர்கள் என்று அந்த அமைப்புக்களின் தலைமைகளை அழித்து தடைசெய்தார்களோ அந்தக் கட்சிக்காரர்கள் அமைத்த கூடாரத்தில் ஜனநாயகப் போராளிகளுக்கு இடம்கிடைத்திருக்கிறது. இப்போது புலிகள் அன்று சொன்னதை சுமந்திரனும், சாணக்கியனும் இவர்களைப்பார்த்துச் இன்று சொல்கிறார்கள். தமிழ்த்தேசிய பிணக்குழிகள் தோண்டப்படுகின்றன. அழுகிய பிணத்தில்  – ஊத்தையில் – ஓநாய்கள் சண்டை.

வடக்கு கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு மிகப்பெரிய சவால்காத்திருக்கிறது. விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் அணிகளை விடவும் புதிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் இருந்து கடுமையான எதிர்ப்பையும்,சேதாரத்தையும் தமிழரசு சந்திக்க வேண்டிஉள்ளது.  இது யாழ். குடாநாட்டை விடவும் வன்னியில் அதிகமானதாக இருக்கும். தமிழரசுக்காரர் மிகவும் நிட்சயமற்ற நிலையில் மிகப் பலவீனமாக உள்ளனர். சொந்தக் கட்சிக்கார்களே. சுயாட்சிக் குழுவாக களமிறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பின்னர் கூட்டுச் சேர்வோம்  …!  தேர்தலுக்குப் பின்னர் கூட்டுச் சேர்வோம்…! , என்று தமிழரசார் மந்திரம் சொல்கிறார்கள். குத்துவிளக்கு புதிய கூட்டணி மீண்டும் இணைவதற்கானவாய்ப்பே இல்லை என்று அடித்துச்சொல்கிறது.   அப்படி ஏதும் நடந்தால் சுமந்திரன் இல்லாத கூட்டணியாக அது அமையுமாம். தமிழரசின் “பொறிமுறை – தொழில்நுட்ப” தேர்தல் சுத்துமாத்து ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. இப்போதுதான் மாவைக்கு “வெளிச்சிருக்கிறது”. விசாரணை என்ற கண்துடைப்பில் உண்மைக்கு கரி பூசும் முயற்சி. கரி, கறுப்பு, தார்.. இவை பற்றி தமிழரசைத்தவிர வேறு யாருக்கு அதிகம் தெரியும்..?

 தமிழரசு கிழக்கில் இரு பெரும் அலைககளைத் தாண்டவேண்டிய நிலையில் உள்ளது. ஒன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், மற்றையது ஜனநாயக தமிழ்த்தேசிய குத்துவிளக்கு கூட்டணி. கிழக்கில் தமிழரசு இளைஞர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். காரணம் ஜனநாயகப் போராளிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்ய அவர்கள் விரும்பவில்லை. சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் பின்னால் சென்று கிணற்றில் வீழ்ந்த கதையாக இதை அவர்கள் பார்க்கிறார்கள். இதனாலேயே தோண்டி எடுக்கப்பட்ட சவப்பெட்டியை திறந்து வைத்துக்கொண்டு கூறிவிற்கிறார் சாணக்கியன். கடந்த தேர்தல்களின் போதெல்லாம் இந்தப் “புதையல்” தெரியாமலா தோளோடு தோள் சேர்த்து நின்றார்கள்? மக்கள் கேட்கிறார்கள்.

வடக்கு கிழக்கின் இன்றைய தேர்தல் சூழலை இன்னொரு வகையில் பார்த்தால் போராளிகள் கட்சிகளுக்கும், மரபுவழி தமிழ்த்தேசிய கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாக இதைக் காணமுடியும். ஜனநாயக தமிழ்த்தேசிய குத்துவிளக்கு கூட்டணி மட்டுமன்றி, இணக்க அரசியல் கொள்கை கொண்ட  ஈ.பி.டி.பி. ரி.வி.எம்.வி.பி. என்பனவும் போராளிகள் கட்சிகளே. இவர்கள் அனைவரும் மரபு ரீதியான தமிழ் காங்கிரஸ், தமிழரசு , அதே குட்டையில் ஊறிய விக்கி அணியையும், அவர்களின் கருத்தியலையும் எதிர்த்தே நிற்கின்றார்கள். 

குத்துவிளக்கு கூட்டணியின் பிறப்பு தமிழ்த்தேசிய அரசியலில் இருந்த பனிப்பாறையைத் தகர்த்திருக்கிறது. பாதை திறக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தமிழரசுக்கு எதிரான மாற்று அணிக்கு வழி வகுத்திருக்கிறது. 

இன்னொரு வகையில் புலிகள்   தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தங்களின் அரசியல் ஏகபோகமாக காட்ட எடுத்த எத்தனிப்பு   படிப்படியாக சிதைந்து  இன்று தமிழரசை தனிமைப்படுத்தியுள்ளது. அரசியலில் ஜனநாயக, பன்மைத்துவத்தை உயிர்ப்பித்திருக்கிறது. இந்த ஜனநாயகக்காற்றை மற்றையவர்களுக்கு மறுத்த முன்னாள் புலிகளும் இப்போது சுவாசிக்கிறார்கள்.

ஆயிரம் பூக்கள் மலரட்டுமே…! 

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கட்டுமே….!!