— செங்கதிரோன் —
23.04.2022 அன்றிரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மோகனதாஸ் மரணித்த செய்தியை மறுநாள் காலை மதன் எனக்குத் தொலைபேசியில் தெரிவித்த போது ஒருகணம் ‘கடவுளே!’ என்ற வார்த்தை வெளிப்பாட்டோடு அதிர்ச்சியடைந்தேன். என் வாழ்நாளில் மனதில் வலியை ஏற்படுத்திய மரணங்களில் மோகனதாஸின் மரணமுமொன்று.
ஊடகவியலாளர் அமரர் பாக்கியராஜா மோகனதாஸின் மறைவு குறித்து ‘ஆளுமையும் செயல்திறனும் மிக்க ஒரு துடிப்பான ஊடகவியலாளனை ஈழம் இன்று இழந்து நிற்கிறது’ என்ற தலைப்பிட்டு, அன்னாரது நண்பன் ச.பா.மதன் (காந்தள் அச்சகம். புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு.) வெளியிட்ட அஞ்சலிக் கையேட்டிலுள்ள’ இன்று ஊடக மற்றும் இலக்கிய நண்பர்கள் அனைவரினதும் மனங்களிலும் பேச்சுக்களிலும் பகிரப்படும் இவன் செய்தி, பொய்யாய் போகாதா என்று இன்னமும் என் மனம் ஏங்கித் தவிக்கின்றது’ என்ற மதனின் வாசகங்கள் உண்மையில் மோகனதாஸைக் தெரிந்த –அறிந்த எல்லோரினதும் ஏக்கமாகத்தான் பொருந்தி நிற்கின்றன. அந்த அளவுக்கு அவனோடு ஊடாடிய அனைவரினதும் மனதில் இடம்பிடித்திருந்தான்.
கலை இலக்கியப் பரப்பில் ‘துறையூர் தாசன்’ என்ற புனைப்பெயரில் உலாவரத் தொடங்கியிருந்தாலும் அதிகமான கட்டுரைகளைப் பாக்கியராஜா மோகனதாஸ் என்ற தன் முழுப்பெயரிலேயே தீட்டியிருந்தான். பாக்கியராஜா மோகனதாஸ் என்ற பெயரிலேயே பல கலை இலக்கிய ஆளுமைகளை நேர்காணல் செய்து அவர்களை வெளிக்கொணர்ந்திருந்தான். அரசியல் பிரமுகர்களையும் சமூக சேவையாளர்களையும் அரச உயரதிகாரிகளையும்கூட அவன் நேர்காணல் செய்திருந்தான். சுமார் முந்நூறு பேர்களை அவன் நேர்காணல் செய்திருந்தான். இது ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனை. அவனுடைய நேர்காணலில் புலமைத்துவமும் தேடலும் ஆழமான சமூக அக்கறையும் வெளிப்பட்டன. சிரேஸ்ட ஊடகவியலாளர் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் வெறுமனே நுனிப்புல் மேய்பவர்களாக இருப்பதை நான் அனுபவரீதியாகக் கண்டிருக்கின்றேன். ஆனால், மோகனதாஸ் இவர்களிடமிருந்து வேறுபட்டவன். அவன் ஒரு பட்டதாரி ஆசிரியன். அசுர வாசகன். நாடகக்கலைஞன். இலக்கியவாதி. எழுத்தாளன். விமர்சகன்.
கலை இலக்கிய நிகழ்வுகள் எங்கு நிகழ்ந்தாலும் அங்கு நிற்பான். எனக்கு அவன் அறிமுகமானதே சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு கண்ணகி கலை இலக்கிய விழாவில்தான். அன்றிலிருந்து உடன் பிறவாச் சகோதரனாக என்னோடு ஊடாடினான். அவன் மறைவினால் என் உள்ளம் அழுகிறது.
சிரேஸ்ட ஊடகவியளாளர் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரைக் கண்டிருக்கின்றேன், நிகழ்வொன்றில் தன்னைத் தவிர வேறு ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டால் முகம் சுழிப்பர். சில வேளைகளில் ஏற்பாட்டாளர்களுடன் கோபித்துக்கொண்டு வெளியேறியும் விடுவார்கள். ஏற்பாட்டாளர்கள் தங்களைக் ‘கனம்’ பண்ணவில்லையென்று அதற்காகப் பழியும் தீர்த்துக்கொள்வார்கள். சில ஊடகவியலாளர்களிடம் ஒரு வகையான ஊடகத்திமிரும் உண்டு. ஆனால், மோகனதாஸ் இவற்றையெல்லாம் கடந்து எல்லோருடனும் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொண்டவன். குறுகிய காலத்துக்குள்ளேயே எல்லோராலும் நேசிக்கப்படுகின்ற, விரும்பப்படுகின்ற, மதிக்கப்படுகின்ற, தேடப்படுகின்ற இளம் ஊடகவியலாளனாக உயர்ந்தான்.
‘தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர்
எச்சத்தால் காணப்படும்‘
என்ற குறளுக்கமைய இளம் வயதிலே அவன் மரணத்தைத் தழுவிய போதிலும் அவனது மறைவு குறித்து ஊடகங்களில் வெளிவந்த இரங்கல் செய்திகளும் குறிப்புகளும் அவனது ஆளுமையை – ஆற்றலை – பணியைப் பறைசாற்றுகின்றன.
என்னுடன் பல அரசியல் நேர்காணல்களைச் செய்து பத்திரிகைகளில் (தினக்குரல், தினகரன், வீரகேசரி, தமிழன்) பதிவு செய்திருக்கிறான். என் நினைவில் நீங்காது நிலைத்து நிற்பது, அவன் என்னைக் கண்ட இலக்கிய நேர்காணல்தான். தினக்குரல் 05 மே 2019 வார வெளியீட்டில் இந்நேர்காணல் வெளியாகியிருந்தது.
தான் கண்ட கலை இலக்கிய நேர்காணல்களைத் தொகுத்து எழுபத்தியாறு படைப்பாளிகளுடனான நேர்காணல்களை உள்ளடக்கி திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் ‘நீங்களும் எழுதலாம்’ சிற்றிதழ் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் ‘படைப்பாக்க ஆளுமைகள்’ எனும் தலைப்பில் 05.03.2022 அன்று நூலாக வெளியிட்டிருந்தான். அந்நூலை வெளியிடுவதற்காக அவன் ஓடிய ஓட்டங்களையும் பட்ட பாடுகளையும் நான் அறிவேன். எப்போதும் அவன் பேரை இந்நூல் சொல்லும். இந்நூலில் என்னுடனான நேர்காணலும் உள்ளடக்கப்பட்டிருந்ததை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
ஊடகவியலாளர்களுக்கோர் உதாரணமாக அவன் திகழ்ந்தான்- வாழ்ந்தான். உண்மையிது; வெறும் புகழ்ச்சியில்லை.