போர் இலக்கியம்: கற்பனைக்கு ஒரு வேலையும் இல்லை

போர் இலக்கியம்: கற்பனைக்கு ஒரு வேலையும் இல்லை

— அகரன் —  

அவர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்றினார்கள். அங்கு எத்தனை பேர் இருந்தார்கள் என்று சுட்டவர்களுக்கு தெரியாது. துப்பாக்கிகள் முழங்கி ஒய்ந்த பின் அங்கு சென்ற முக்கிய பொறுப்பாளரின் கண்கள் கலங்கும்படி ஒர் காட்சி தெரிந்தது. செத்துவிட்டிருந்த ஒரு இளைஞன் கையில் படிக்கப்பட்ட குறையில் ஒரு புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகம் ‘விடியலுக்கு முந்திய மரணங்கள்’! அந்தப்புத்தகம் படித்தவனின் இரத்தத்தால் தோய்ந்திருந்தது. இனத்தின் விடியலைத் தேடிப் புறப்பட்ட ஒரு போராளியின் பயணம் பாதியில் முடிந்திருந்தது. சுட்டவனும் போராளி. செத்தவனும் போராளி.  

மேலே உள்ள வரிகளில் கற்பனை சொட்டும் சிந்தவில்லை. 

******************  

அவன் ஐரோப்பாவுக்கு உயிரோடு சென்று சேர்ந்ததே அதிசயம். அதன் மகிழ்ச்சி காயவில்லை. வேறு பிரச்சினைகள் வந்துவிட்டிருந்தது. வதிவிட அனுமதி கிடைக்கவில்லை. வேலை இல்லை. பசி இருக்கும்தானே? அதைவிட ஊரில் யுத்தம். அங்கு பசியைவிட உயிர்கள் விதம்விதமாக செத்துக்கொண்டிருந்த காலம். 

அப்போதுதான் பிரான்சில் விசா இல்லாமலும் வெளிநாட்டுக்காரர்களின் பிரஞ்சு இராணுவத்துக்கு இணையலாம் என்ற தகவலை பெற்றுக்கொண்டு தென் பகுதியில் இருக்கும் ஓபயின் என்ற அந்த இராணுவ தலைமையகத்துக்கு சென்றான். அங்குதான் பல தமிழர்கள் (பாண்டிச்சேரி) பலகாலமாக அந்த இராணுவத்தில் இருப்பது தெரியவந்தது. அதில் ஒரு குடும்பத்தை சந்தித்தான். அந்த முதியவர் மிடுக்கான தோற்றத்தில் இருந்தார். தமிழ் பேசுவதில் ஆர்வமாக இருந்தார். அவர் ஓய்வுகாலத்தில் வாழ்கிறார். அவர் பேசும்போது, ‘என் தந்தை இரண்டாம் உலக யுத்தத்தில் பிரான்ஸ் நாட்டுக்காக போரிட்டு இறந்தார். அவர் கல்லறைகூட பிரான்சில் உண்டு’ என்றார். 

அதேவேளை ஹிட்லரின் இராணுவத்தில் செண்பகராமன் என்பவர் உயர்ந்த நிலையில் இருந்த தமிழ்நாட்டுக்காரர். ஹிட்லர் காந்தியைப் பற்றி தவறாகப் பேசியபோது அதை முகத்துக்கு நேராக எதிர்த்து ஹிட்லரை மன்னிப்பு கேட்கவைத்தவர். இந்த கசப்புணர்வுகளால் இறுதியில் ஹிட்லரின் படையாட்களால் இரகசிய முறையில் சாவை சந்தித்தவர். கவிஞர் வானம்பாடியால் எழுதப்பட்ட ‘வீரன் செண்பகராமன்’ என்ற நூலில் இவர் பற்றிய அதிக தகவல்களை அறியலாம். 

அடுத்து, இரண்டாம் உலக யுத்தத்தை இந்திய விடுதலைக்கு சாதகமாக்க வேண்டும் என்ற நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். குறிப்பாக பர்மா, மலேசியா, சிங்கப்பூர், ஜகார்த்தா போன்ற இடங்களில் வாழ்ந்த தமிழர்கள் உடல், பொருள், உயிரை நேதாஜி வழிநடத்திய படைக்கு வழங்கினர். நேதாஜிக்கு நெருக்கமான தளபதிகளாகக்கூட இருந்தனர். நேதாஜியின் படை ஜப்பான் படையின் உதவியுடன் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டது. 

அதேநேரம் ஆங்கிலேயர் படையிலும் தமிழர்கள் இருந்தார்கள். குறிப்பாக ‘மெட்ராஸ் ரெயிமென்ற்’ என்ற இன்றைய இந்திய இராணுவத்தில் இருக்கும் படைப்பிரிவு ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டதுதான். 

உலக யுத்தங்களில் கண்காணாத இடங்களில் தமிழர்கள் யார் யாருக்கோ தம் உயிரை கொடுத்திருக்கிறார்கள்.  

ஆனால் இவை பற்றிய பதிவுகளோ தரவுகளோ தமிழர்களிடம் சரியாக இல்லை. அதற்கு தமிழுக்காக சிந்திக்க ஒரு அரசு இங்கு இல்லை. ஏழைகளாக இருக்கும் அறிஞர்களால் எதையும் செய்ய முடியவில்லை. 

இன்று உலகை ஆளும் மொழிகளில் ‘யுத்த இலக்கியம்’ என்ற தனிவகையே இருக்கிறது. இதில் நவீன இலக்கியத்திற்கு ‘டால்ஸ்டாய்’ எழுதிய ‘போரும் வாழ்வும்’ என்ற 500 அதிகமான பாத்திரங்களை கொண்ட பெருநாவல் நெப்போலியன் படையெடுப்பையும் அவனுக்கெதிரான ரஸ்ய சமூகத்தின் போரையும், வாழ்வையும் பேசுகிறது.  

தமிழர்களின் போர்த் தலைவர் ஒருவர் அவர் வாழ்ந்த காலத்தில் வழங்கிய செவ்வி ஒன்றில் ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ என்ற நாவலை தான் விரும்பிப்படித்ததாக சொல்லி இருந்தார். அந்த நாவல் ஒன்றே இரண்டாம் உலக யுத்தம் பற்றி தமிழில் எழுதப்பட்ட நாவலாக இருக்கமுடியும்.  

அண்மையில் அந்த நாவலைப்படித்தபோது திரு ஜெயமோகன் அந்த நாவல் பற்றி ஓர் பின்னுரை எழுதி இருந்தார். அதில் ‘போர் பற்றிய ஈழ இலக்கியங்களே போர் பற்றிய இலக்கியமாக கொள்ளமுடியும்’ என்று எழுதி இருந்தார். அதன் பொருள் தமிழர் தமிழருக்காக படை அமைத்து போரில் ஈடுபட்டது ஈழத்தில் என்பதாக இருக்கலாம்.  

அதன் பின்னர் ஈழத்தில் எழுதப்பட்ட போர் இலக்கியங்களை தேடியபடி இருந்தேன். அப்போதுதான் 1985இல் எழுதப்பட்ட ‘விடிவிற்கு முந்திய மரணங்கள்’ என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அதுவே முதலாவது போர் பற்றிய பதிவாக இருந்தது.  

முல்லைத்தீவு பகுதியில் இருந்த கொக்கிளாய் என்ற கிராமத்தில் இருந்த சிங்கள இராணுவ முகாமை போராளிகள் தாக்கச் செல்கிறார்கள். அவர்கள் அணியில் பதினாறுபேர் இருந்தனர். இறுதியில் தாக்குதல் முடிந்து திரும்பியபோது இரண்டு வீரர்களே எஞ்சினர்.  

ஓர் நேரடியான நியாயமான பதிவாக இருந்தாலும் அது ஒர் நாவலுக்குரிய தகுதியோடு எழுதப்பட்டிருந்தது. வீரர்கள் காடுகளுக்குள்ளால் நகரும் முறையும், அதில் பயணிக்கும் ஒவ்வொரு வீரனின் மனமும் காட்டின் குணமும் வலிமையான மொழியால் எழுதப்பட்டிருந்தன.  

அந்த சிங்கள இராணுவ முகாம் அங்கிருந்த தமிழர்களுக்கு எவ்வளவு கொடுமைகளை செய்தது என்பதையும் இராணுவ முகாம் அருகில் இருந்த தமிழ் மக்களின் வீடுகள் மனிதர்களற்று தனித்திருந்த நிலையும் காட்டிய எழுத்து வலியை குழைத்து பதிவாக்கி இருந்தது.  

போராளிகள் வளங்களற்ற நிலையில் பல நாட்கள் பசியோடு பயணித்து வெற்றிகரமாக தாக்குதலை நடாத்திவிட்டு காட்டுக்குள்ளால் மீண்டு வரும் பயணமே சிலுவையின் பாரத்தை காட்டியது. விடிந்ததோ தெரியவில்லை! ஆனால் அந்த உண்மை மேல் எழுதப்பட்ட நாவலில் வீழ்ந்த மனிதர்களின் நினைவுகள் கனமானது.  

இதன் பின்னர் இதை தனது இருபத்தியோரு வயதில் எழுதிய திரு பாலகணேசன் எவ்வளவு எழுத்தாற்றல் உள்ள போராளியாக இருந்திருப்பார்? என்று மனம் கோடுகளை போட ஆரம்பித்தது.  

குணாகவியழகன் நாவல் ஒன்றில் க.வே.பாலகுமாரன் எழுதிய முன்னுரை ஒன்றில் ‘விடியலுக்கு முந்திய மரணங்கள்’ எழுதிய பாலகணேசன் புலம்பெயர் தேசத்தில் வாழ்வதாக குறிப்பிட்டிருந்தார்.  

பின்னர் தேடலில் அவர் இன்று பிரான்சில் வாழ்வதாக அறிய முடிகிறது. தமிழின் முதல் போர் இலக்கியம் விடியலுக்கு முந்திய மரணங்களாகவே இருக்கமுடியும். ஆனால் அதை 1985க்குப் பின்னர் யாரும் மறுபதிப்பு செய்ததாக தெரியவில்லை. அதை எழுதிய பாலகணேசன் பற்றியும் நமக்கு தெரியவில்லை. இதுதான் நம் நிலை.  

போர் இலக்கியங்கள் போரை கொண்டாடுவதற்கானதல்ல. போரின் கொடுமையை அறிவதற்கானது. அறிவான சமூகம் அவற்றை பாதுகாத்து எதிர்காலத்துக்கு கொடுக்கும். 

பிரஞ்சு இராணுவத்தில் இணையச்சென்றவன் யாரெனில் அதிக பசியோடிருந்த நான்தான்.  

அண்மையில் போர்க்கலை பற்றிய DSI (no -150) என்ற பிரஞ்சு சஞ்சிகையில் தமிழ்ப் போராளிகளின் போர் உளவுத்திறன் பற்றி எழுதி இருந்தார்கள். அதில் ஒரு போராளித்தலைவரின் கெட்டித்தனம் புகைப்படங்களோடு புலனாய்வு செய்யப்பட்டு இருந்தது.  

விடியலுக்கு முந்திய மரணங்கள் படித்துக்கொண்டிருந்த அந்த இளைஞன் தன்னால் குருதியில் தோய்ந்ததை பார்த்து கலங்கிய போராளி அவர்தான் என்ற தகவலை அறிந்தபோது, மேலும் என்னால் எழுத முடியவில்லை. ஆம், இதில் கற்பனைக்கு ஒரு வேலையும் இல்லை.