— செங்கதிரோன் —
அறிமுகம்:
‘கிழக்கின் 100 சிறுகதைகள்’ எனும் பெருந் தொகுப்பு நூலொன்று கிழக்கு மாகாணப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் 812 பக்கங்களில் நூலின் பெறுமதி 1450/= ரூபாவுடன் வெளிவந்துள்ளது. (ISBN: 978-955-4628-78-6)
இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு 20.11.2021 அன்று திருகோணமலையிலும், அறிமுக நிகழ்வுகள் 27.11.2021 அன்று மட்டக்களப்பிலும், 28.11.2021 கல்முனையிலும் (அம்பாரை மாவட்டம்) நடந்தேறியுள்ளன.
கிழக்கு மாகாணப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நவநீதன் அவர்களின் முயற்சியிலும் -வழிகாட்டுதலிலும்-தலைமைத்துவத்தின் கீழும் இம்முயற்சி – சாதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச்சாதனை பாராட்டப்பட வேண்டியதும் இத்தகைய முயற்சிகள் தொடரப்பட வேண்டியவையுமாகும். இந்நூலின் ‘தொகுப்பாளர்’ பொறுப்பை எழுத்தாளர் உமா வரதராஜன் ஏற்றிருக்கிறார்.
இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் இப்பெருந் தொகுப்பு நூலிலுள்ள 100 சிறுகதைகளையும் திறன்நோக்குச் ( நூல் மதிப்பீடு) செய்வதாகும்.
கதைகளுக்குள் நுழையுமுன், முதலில் ‘கிழக்கின் சிறுகதைகள்’ என்றால் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மற்றும் கிழக்கு மாகாணத்துடன் வாழ்வியல் தொடர்புடைய (பாயோடு ஒட்டி வேரோடியவர்கள்) எழுத்தாளர்களின் சிறுகதைகளா?
அல்லது
கிழக்கு மாகாணத்தைக் கதைக்களமாகக் கொண்டு கிழக்கு மாகாண மக்கள் சமூகத்தின் சமூக-பொருளாதார- அரசியல் மற்றும் வாழ்வாதார-வாழ்வியல் பிரச்சனைகளை- (சிலவேளை அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும்கூட) கலைப்பெறுமானத்துடன் வெளிக்கொணர்கின்ற சிறுகதைகளா?
எனது இந்தத் ‘திறன்நோக்கு’ப் பார்வையில் ‘கிழக்கின் சிறுகதைகள்’ என்று அடையாளப்படுத்தும் போது கிழக்கைச் சேர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளாக மட்டுமல்லாமல் அச்சிறுகதைகள் ஏதோ ஒரு வகையில் கிழக்கைக் களமாகக் கொண்டவையாகவும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கொண்டவையாகவும்- கிழக்கு மண்ணின் வாசனை வீசுவதாகவும் இருக்க வேண்டும் என்ற அளவுகோலையே பயன்படுத்தியுள்ளேன்.
‘கிழக்கின் சிறுகதைகள்’ என்ற வார்த்தைப் பிரயோகமும் மகுடமும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுடன் இணைத்து அந்த மண்ணையும் மக்களையும்தானே குறிக்கவேண்டும்.
இனிக் கதைகளுக்குள் செல்லலாம்.
1) எஸ்.டி.சிவநாயகம் (02.07.1921 – 22.04.2000) எழுதிய ‘சோமாவதி’ (சுதந்திரன்- 28.12.1952) பக்கம் 01-08
இலங்கைப் பத்திரிகை உலகில் ‘ஜாம்பவான்’ எனவர்ணிக்கப்பட்ட- அறியப்பட்ட அமரர் எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் எழுதிய சிறுகதை.
1939ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பித்த போது திசாநாயக்கா (பதினெட்டு வயது) திருகோணமலையில் சென்.ஜோசப் கல்லூரியில் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான்.
தந்தை ஆரன்ஸ் சில்வா சீனன் வாடியில் எண்ணெய்த் தாங்கிகளுக்கு வர்ணம் பூசும் பெயிண்டர் ஆக வேலை பார்த்தான். நித்திய குடிகாரன். இதனால் திசாநாயக்க, அவனுடைய எட்டு வயது சகோதரி சோமாவதி, தாய் ஜேன்நோனா மற்றும் தந்தை ஆரன்ஸ்சில்வா ஆகியோர் வசித்த சின்னஞ்சிறு வீட்டில் தரித்திரம் தாண்டவமாடியது. தமையன் திசாநாயக்கவும் தங்கை சோமாவதியும் சகோதர பாசம் மிக்கவர்கள். யுத்தம் ஆரம்பித்து இலங்கையில் படை திரட்டியபோது திசநாயக்க வேலைவாய்ப்புக்காக ஆர் ஏ எஸ் ஸி படைப்பிரிவில் சேருகிறான். தங்கையை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவளைச் சமாதானப்படுத்தி யுத்தக் கப்பலில் வெளியூர் செல்கிறான்.
ஒன்பது வருடங்களுக்குப் பின் தனது இருபத்தியேழாவது வயதில் 1948 ஆம் ஆண்டு திருகோணமலைக்கு வருகிறான்.
திசாநாயக்கா பட்டாளத்தில் சேர்ந்தபின் அவனின் தந்தை ஆரன்ஸ்சில்வா சீனன் வாடியில் பெயின்ட் ரின்களைத் திருடிவிற்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட செய்தியையும், 1942 ஆம் ஆண்டு ஜப்பானிய விமானங்கள் திருகோணமலையில் குண்டுகளைப் பொழிந்தபோது இடம்பெற்ற இடப்பெயர்வின் போது தாய் ஜேன்நோனா நோயுற்று இறந்ததையும் தங்கை சோமாவதியை யாரோ வீட்டு வேலைக்காரியாக அழைத்துச் சென்றதையும் ஊர்க் கிழவியொருத்தி மூலம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறான்.
தான் பணிபுரியும் யுத்தக் கப்பலில் (எச்.எம்.எஸ்.பர்மிஹாம்) இணைந்து கொள்வதற்காக மீண்டும் கொழும்பு செல்லும் திசாநாயக்க அங்கு தன் பழைய நண்பன் ஒருவனின் (சைமன்) சகவாசத்தால் விபச்சார விடுதியொன்றிற்குச் செல்கிறான். பொடிஹாமி என்ற இளம் பெண்ணுடன் இரவைக் கழிக்கிறான். கொழும்புத் துறைமுகத்தில் அங்கு ஒரு தூணுக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்த கிழவனொருவனுக்கு சிகரெட் மூட்ட நெருப்பும் கொடுக்கிறான்.
கதையின் இறுதிக் கட்டத்தில் தான் விபச்சார விடுதியில் இரவை கழித்த பெண் பொடிஹாமிதான் தன் தங்கை சோமாவதி என்று தெரியவந்தபோது (இரவை அவ்விடுதியில் கழித்தாலும் ஏதோவொரு எண்ணத்தில் பணத்தைக் கொடுத்தானே தவிர அவளைத் தொடவில்லை) அதிர்ச்சியில் மயங்கி பாலத்தின் கீழ் தண்ணீரில் விழுகிறான். சிகரெட் மூட்ட நெருப்புக் கொடுத்த கிழவனே காப்பாற்றுகிறான். இக்கிழவன் தன் தந்தையெனப் பின்பு அறிகிறான்.
இக்கதையின் களம் திருகோணமலையிலிருந்து (கதாசிரியர் திருகோணமலையில் பிறந்தவர்) தொடங்கினாலும் ‘கிழக்கின் சிறுகதை’யென்று இதனை வகைப்படுத்த முடியாது. மேலும் இது அதீத கற்பனைகளுடனான ஒரு சினிமாப் பாணிக் கதை. இரண்டாம் உலகப்போர் பற்றிய ஓர் அறிமுகத் தகவலைத் தருகிறது என்பது மட்டுமே இதன் சமூகப்பயன்பாடு.
புனைவு மொழியும்- காட்சி வர்ணனைகளும் சிலாகிக்கத் தக்கவை. அது எஸ்.டி.எஸ்.சிவநாயகம் அவர்களுக்குக் கைவந்ததே.
“சொப்பன உலகத்தில் மிதக்கும் அற்புத மாளிகையென ஊர்ந்து சென்ற அந்த கப்பலின்……”
“நிர்மலமான ஆகாயத்தில் ஆறாம் பிறைச்சந்திரன் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதைச்சுற்றி ஒருகூடை மல்லிகைப் பூக்களை சிலாவி இறைத்ததுபோல் தாரகைகள் செறிந்து கிடந்தன” என்ற வரிகள் வாசகனை வசீகரிக்கத்தக்கன.
விபச்சார விடுதியில் தான் சந்தித்த பொடிஹாமிதான் தன் தங்கை சோமாவதி என்று திசாநாயக்காவுக்குத் தெரியவரும் கட்டம், (இதுதான் கதையின் ‘கிளைமக்ஸ்’- climax)
“அண்ணா என்று அலறிக்கொண்டு திசாநாயக்காவின் காலில் விழுந்தாள் பொடிஹாமி”
“என்ன நீ என் சோமாவதியா?” என்று கத்தினான் திஸாநாயக்கா.
பூமி சுழன்றது. வானம் சுழன்றது. கடலும் பாலமும் சுழன்றன. அடியற்ற மரம் போல் சாய்ந்தான் திஸாநாயக்கா. மறுகணம் அவன் உடல் தொபுக்கடீர் என்று கடலினுள் உருண்டது என நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதனைக் ‘கிழக்கின் சிறுகதை’ மட்டுமல்லாமல் சிறந்த சிறுகதையாகவும் கொள்ளமுடியாது.