தமிழ் சமூகத்தின் சுயமோக – சுய இன்ப அரசியலும் ஆய்வுகளும்

தமிழ் சமூகத்தின் சுயமோக – சுய இன்ப அரசியலும் ஆய்வுகளும்

 — கருணாகரன் — 

“தமிழர்கள் அரசியலை எப்படிப் பார்க்கிறார்கள்?” என்று ஒரு அதிரடிக் கேள்வியைத் தூக்கிப் போட்டார் நண்பர் ஒருவர். 

1980களில் விடுதலை இயக்கமொன்றில் தீவிரமாகச் செயற்பட்டவர். அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் இப்பொழுது பிச்சையும் வேண்டாம் நாயும் வேண்டாம் என்ற கணக்கில் அரசியலை விட்டொதுங்கி, விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். 

“விவசாயத்தில் லாபமோ நட்டமோ என்பதற்கு அப்பால், ஒரு நிறைவுண்டு. குறைந்த பட்சம் நாலு மனிசருக்குச் சாப்பாடு போடக் கூடிய மாதிரியாவது இருக்கு. நாமும் நம்முடைய உழைப்பிலிருந்தும் உற்பத்தியிலிருந்தும் சாப்பிட முடிகிறது” என்கிறார் அவர். 

நண்பர், கடந்த இருபது ஆண்டுகளாகப் பத்திரிகைகளைப் படிப்பதைக் கூட நிறுத்தி விட்டார். தமிழ் இணையங்களைப் பார்ப்பதே இல்லை. காரணம் என்ன என்று கேட்டபோது, “எதையாவது புதிதாக அறியக் கூடியதாக இருந்தால்தானே அவற்றைப் படிக்க வேணும்? ஏதாவது புதிய அசைவுகள், புதிய மாற்றங்கள் நிகழாத – நிகழமுடியாத இந்த அரசியலை எதற்காகக் கவனிக்க வேணும்? ஒரு புதுமையும் இல்லாத பழைய – பழகிய சங்கதிகளை திரும்பத்திரும்பப் படிப்பதால் என்ன பயன்? அதைப் பாடமாக்கிக் கொண்டிருப்பதால் என்ன லாபம்? வாழ்க்கைக்கு உதவாதே” என்று சொல்கிறார். 

“அதெப்படி இப்படி எல்லாவற்றையும் ஒரேயடியாகத் தூக்கியெறிய முடியும்? இப்படி ஒட்டுமொத்தமாக எல்லவற்றையும் எல்லாத்தரப்பையும் நிராகரிப்பது பொருத்தமாக இல்லையே. இதில் ஒரு வகையான அதிகாரத்தனமல்லவா உள்ளது. மற்றது உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் இந்த நிராகரிப்பைச் செய்யத் தூண்டுகின்றன. இது ஒரு வகையான உளச் சோர்வின் வெளிப்பாடு. நம்பிக்கையீனத்தினால் உருவாகிய உளச்சோர்வு. இதை வைத்துக் கொண்டு பெருந்திரள் மக்களுடைய நம்பிக்கைகளையும் தெரிவுகளையும் நீங்கள் புறக்கணிக்கவோ நிராகரிக்கவோ முடியாதல்லவா. அந்த உரிமை உங்களுக்கில்லையே?” என்று கேட்டேன். 

சிரித்தார். 

“நான் எதையும் ஒரேயடியாகத் தூக்கியெறியவில்லை. அந்தளவுக்கு முட்டாள் அல்ல. வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், நமக்கு முன்னே உள்ள உண்மைகளின்படிதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். உங்களிடம் கேட்கிறேன், 

“நம்பிக்கையீனம் எப்படி ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது யார்?” என்று பதில் கேள்வி கேட்டார். 

மேலும் அவர் சொன்னார், “நாற்பது வருசமாக ஒரே செய்தியைத்தானே தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சுதந்திரன் பத்திரிகையில் வந்த செய்திக்கும் இப்பொழுதுள்ள பத்திரிகைகளில் வருகிற செய்திகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கு? சுந்தரலிங்கம், நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றவர்கள் சொன்னதைத்தானே இப்பவும் சம்மந்தனும் மாவை சேனாதிராஜாவும் சிறிதரனும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உலகம் எவ்வளவு மாறி விட்டது. சர்வதேசப் பரப்பில் புதிய அணுகுமுறைகள், மாற்று நிலைப்பாடுகள், தந்திரோபாயம் என்று எவ்வளவு பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இங்க இருபது வருசமாக ஒரே கட்டுரையைத்தானே பெரும்பாலான தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் எண்டு சொல்லுகிற ஆட்கள் எழுதிக் கொண்டிருக்கினம்! யாராவது இந்தப் பிரச்சினைக்கு இவ்வாறு தீர்வுகளைக் காண முடியும் என்று ஏதாவது புதிய ஐடியாக்களை முன்வைத்திருக்கிறார்களா? ஆக மிஞ்சிப் போனால், இந்தியத் தூதருடன் சந்திப்பு, டில்லிக்குப் பயணம், பிரித்தானியத்தூதரிடம் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி எடுத்துரைப்பு, அமெரிக்கப் பிரதிநிதி நிலைமையைக் கேட்டறிந்தார்… வருகின்ற செய்திகளுக்குப் பின்னால் இழுபட்ட கற்பனைகளை எழுதிக் குவிக்கிறார்கள். இவர்கள் தாங்கள் எழுதிய அத்தனை கட்டுரைகளையும் தாங்களே ஒருதடவை திரும்பப் படித்துப் பார்த்தால் உண்மையில் வெட்கப்படுவார்கள். மனச்சாட்சியிருந்தால் இந்தத் துக்கத்தினால் இனி மேலாவது இந்த வெங்காய வேலை வேண்டாம் என்று பேசாமல் ஒதுங்கிக் கொள்ளுவார்கள். அல்லது தங்களைத்திருத்திக் கொள்ளுவார்கள். உங்களிடம் கேட்கிறேன், இந்த மாதிரிச் செய்திகளாலும் இந்த ஆய்வுகளாலும் கிடைத்த பயன் என்ன? எத்தனை சந்திப்புகள்… கைலுக்குதல்கள்….எத்தனை எவ்வளவு எடுத்துரைப்புகள்…. என்ன விதமான மன்றாட்டங்கள்… இவ்வளவும் நடந்தும் கிடைத்தது என்ன? இப்ப சுமந்திரன் குழு அமெரிக்காவில் இடியப்பம் அவிக்கிறது என்று புழுகமடைகிறார்கள் கொஞ்சப்பேர். ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்கா விரும்புகிறது. அது அமெரிக்காவுக்குத் தேவை. இந்த மாதிரி முன்பும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதோடு நிற்கிற மேற்குலகத்துக்கும் தேவைகள் வந்தன. அதை முன்னுக்கு நின்று வலு கச்சிதமாகச் செய்து குடுக்கிற வேலையைத்தானே நம்முடைய தலைவர்கள் செய்து கொடுக்கிறார்கள். அப்படி விழுந்தடித்து அவர்களின் வேலையைச் செய்து கொடுத்தாலும் நம்முடைய ஒரு சிறு பிரச்சினையைக் கூட அவர்கள் செய்து தருவதில்லை. ஆகக் குறைந்தது, அரைகுறையாக இருக்கிற 13 ஆவது திருத்தத்தைக் கூட முறையாக அமுல்படுத்துவதற்கு இவை சிறுவிரலால் கூட இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. இனியும் இவை அப்படி அழுத்தம் கொடுக்கப்போவதுமில்லை. எந்த அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து விடப் போவதுமில்லை. ஆனால், நாங்கள் அடுத்த வீட்டுச் சாப்பாடு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பேமானித்தனமான நம்பிக்கையோடு எத்தனை நாளைக்குத்தான் –எவ்வளவு காலத்துக்குத்தான் பட்டினி கிடப்பது?….” என்று நண்பர் பொரிந்து தள்ளினார். 

“பல ஆண்டுகளாகப் பத்திரிகைளைப் படிக்காமல், அரசியல் பிரதேசங்களில் ஊடாடாமல் எப்படி உங்களால் இப்படி ஒரு மதிப்பீட்டுக்கு வரமுடியும்? இது தவறல்லவா?” என்றேன். 

“நான் எழுப்பிய கேள்விகளுக்கு முதலில் பதிலைச் சொல்லுங்கள். இதை நீங்கள் மறுத்துரைப்பதாக இருந்தால் அதை – அந்த நியாயங்களைப் பகிரங்கமாக முன்வையுங்கள். விவாதிப்போம்”என்றார். 

கூடவே, “ஏன் நீங்கள் கூட ஒரு தடவை தமிழர்களின் அரசியலும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களின் ஆய்வுகளும் சுயமோக – சுய இன்ப அரசியல், ஆய்வுகள் என்று விமர்சித்திருந்தீர்களே. கற்பனைக் குதிரைகள் ஓடுவதுமில்லை. களைப்பதுமில்லை என்றும் எங்கோ நீங்கள் சொன்னதாக நினைவு…”என்று என்னைச் சுட்டிக் கூறினார். 

“அது என்னுடைய பார்வையும் அவதானிப்புமாகும். நான் தொடர்ந்தும் தமிழ் அரசியல், ஊடகப் பரப்பில் ஊடாடிக் கொண்டிருக்கிறேன். அதனால் அதைப் பற்றிய விமர்சனத்தை முன்வைத்தேன். ஆனால், நீங்கள் இதற்கு அப்பால் விலகி நிற்கிறீர்களே!” என்றேன். 

“விலகி நின்றால் விமர்சனங்களை முன்வைக்கக் கூடாதா? அந்த உரிமையை மறுப்பது யார்? முதலில் நாங்கள் கூறும் கருத்துகளை மறுக்க முடிந்தால் அதற்கான தர்க்கங்களையும் ஆதரங்களையும் முன்வையுங்கள்… அதுதான் செய்ய வேண்டியது. இன்று தமிழர்களுடைய அரசியல் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளது. அதைச்செய்ய மறுத்துக் கொண்டு நிற்பது தவறு மட்டுமல்ல, மேலும் தமிழ்ச்சமூகத்தைப் பலவீனப்படுத்தும். நீங்களே ஒரு சிறிய மதிப்பீட்டைச் செய்துபாருங்கள், நாற்பது ஆண்டுகளுக்கு முதல் தமிழ்ச்சமூகம் இருந்த நிலையையும் இப்போது அது இருக்கிற நிலையையும். புலம்பெயர்ந்திருப்பதால் ஒரு பலம், வளம் இருப்பதாகத் தோற்றம் இருக்கலாம். அதை முழுதாக நான் மறுக்கவில்லை. ஆனால், இங்கே நாட்டில் நம்முடைய நிலை என்ன? சவால்கள் எப்படியானவை? வரவர நெருக்கடி கூடிக்கொண்டிருக்கிறதே…வாழ்வாதாரத்துக்காக கையேந்தி நிற்கும் மக்கள் – குடும்பங்கள் ஆயிரக்கணக்கில்… இந்த நிலை முன்பிருந்ததா? உடல் உறுப்புகளை இழந்தவர்கள், பெற்றோரை இழந்த சிறார்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், காணாமல் போன உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கும் உறவுகள், துணையிழந்த பெண்கள் –மனைவியர்… என்று எவ்வளவு பெரிய இழப்புகளின் மத்தியில் இருக்கிறோம்.. இதை விட ஊரெல்லாம் படை முகாம்கள்… 

ஆனால் நாங்கள் இன்னும் இதுகளைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் மேலும் மேலும் நெருக்கடியைத் தருகிற அரசியலையே – உழுத்துப்போன பழைய சரக்கையே திறமான பொருள் என்று தூக்கி  வைத்துக் கொண்டிருக்கிறோம்…” என்றார் நண்பர். 

இதுவும் ஒரு நியாயம்தான். 

“ஆனால், தமிழ்ப் பெரும்பரப்பு உங்களுடைய இந்த நியாயங்களை கவனத்திற் கொள்ளுமா?” என்று கேட்டேன். 

“அது அதனுடைய தலைவிதியைப் பொறுத்தது. நீங்கள் கணக்கைச் சரியாகச் செய்தால்தான்  சரியான விடை கிடைக்கும். பிழையாகச் செய்தால் பிழையான விடையே கிடைக்கும். 40 வருசத்துக்கு முன்பு மலையக மக்கள் இருந்த நிலையைப் பாருங்கள்.  இன்று அவர்களுடைய வளர்ச்சியைப் பாருங்கள். அவர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இப்போதும் உண்டு. சம்பளப்பிரச்சினை. காணிப்பிரச்சினை. வீடில்லாப் பிரச்சினை. அபிவிருத்திக்குறைபாடுகள் என… ஆனால் அங்கேயிருந்து ஒரு பிள்ளையாவது முன்பைப்போல வீட்டு வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கோ வீட்டுக்கோ யாராவது இப்பொழுது அழைத்து வர முடியுமா? மலையக மக்கள் தனியான அரசியல் சமூகமாக, கல்விச் சமூகமாக, ஊடகம், அரச தொழில்வாய்ப்புகள், சட்டத்துறை, தனியார்துறை எனப் பலவற்றிலும் வளர்ச்சியடைந்துள்ளது. 

வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்ச்சமூகம் கண்ட சிதைவையும் அழிவையும் அது சந்திக்கவில்லை. அதற்கு நெருக்கடிகள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஏனைய தரப்பினரை விட தம்மை அவர்கள் மேலுயர்த்தியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது அல்லவா. ஏன், முஸ்லிம்களிடத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பாருங்கள். அவர்களுக்கும் அரசியல் ரீதியான நெருக்கடிகள் பலதுண்டு. இதிலிருந்தெல்லாம் நாம் கற்றுக் கொள்ள மறுப்பது ஏன்?” என்று சொல்லி முடித்தார் நண்பர். 

நம் இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலை இங்கே உங்கள் முன் வைத்துள்ளேன். இதைக்குறித்து நீங்களும் உரையாடலாம்.