மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 9

மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 9

  — என்.செல்வராஜா, நூலகவியலாளர் — 

1622-ஆம் ஆண்டு, ஏப்ரல் 14-ஆம் நாள், அப்போதைய போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கிழக்கிலங்கையின் பாடல்பெற்ற திருத்தலமான கோணேஸ்வரர் கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான் என்பது வரலாறு. கோவிலை இடிப்பதற்கு முன்னர் அக்கோவிலின் வடிவத்தை ஒரு ஓவியரின் மூலம் வரைய வைத்திருந்ததாகவும் வரலாற்றுக் குறிப்பு உள்ளது. அந்த ஓவியம் எங்கே என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்து வந்தது. அது இப்போது பெர்லின் நகர சுவடிச்சாலையில் பாதுகாக்கப்பெற்று வருகின்றதை அறியமுடிகின்றது. பிரித்தானிய நூலகத்தில் கிழக்கிலங்கையில் குறிப்பாக திருக்கோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தோன்றிய பல நூல்கள் பாதுகாப்பாக அழிவிலிருந்து பாதுகாக்கப்பெற்று பேணப்பட்டு வருகின்றன.  

சில காலங்களுக்கு முன்னர் நூல்தேட்டத்துக்கான தேடல் பணிகளுக்காக மலேசியாவுக்குச் சென்றிருந்தபோது கோலாலம்பூரில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஈழத்தமிழ் அறிஞர்கள் பலரால் எழுதப்பட்ட நாவல் நூல்கள் அங்கிருந்ததைப் பார்வையிட்டு நூல்தேட்டத்திலும் பதிவு செய்திருந்தேன். இந்திய ஆய்வியல்துறை நூலகத்திலேயே எனது பெரும்பான்மையான பொழுது தேடலில் கழிந்தது. தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய நிறுவனம் அது. அடிகளாரிடம் உருவெடுத்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கான சிந்தனை அங்கிருந்தே கருக்கொண்டிருக்கவேண்டும். இந்திய ஆய்வியல் துறையின் நூலகத்தின்அப்போதைய நூலகர் திருமதி கோமதி தெய்வீகன் என்னிடம் ‘மலாயா மான்மியம்’ என்ற ஒரு நூலின் மட்டைகட்டி வைத்திருந்த புகைப்படப் பிரதியினை எடுத்துக்காட்டினார். 

‘மலாயா மான்மியம்’ 1937இலும், பின்னர் 1939இலும் இரு பாகங்களில் சிங்கப்பூரிலிருந்து (அவ்வேளையில் சிங்கப்பூர் மலாயாவுடன் இணைந்திருந்தது) சரவணமுத்துப்பிள்ளை முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட ஒரு நூல். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவரான இவர் தான் மலாயாவில் வாழ்ந்த காலத்தில் மலாய் நாடுகள் பலவும், சேய்கூன், கம்போஷா, அங்கோர்வாட், சீயம், யாவா முதலிய நாடு முழுவதும் திரிந்து திரட்டிய குறிப்புக்களையும், மலாய் தொடர்பாக அதுவரை வெளியான சுமார் 16 ஆங்கில நூல்களையும் ஆராய்ந்தும் இத்தொகுப்பினை உருவாக்கியிருந்தார். மலாயாவின் வரலாற்றை முதன் முதலில் தமிழில் எழுதியவர் என்ற பெருமை யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை சரவணமுத்துப்பிள்ளை முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களையே சாரும். ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் மகுடாபிஷேக (Coronation) ஞாபகார்த்தமாக இந்திய இலங்கை மக்களின் சார்பாக ஆசிரியரால் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இதன் மூலப்பிரதியை இலங்கையிலோ இந்தியாவிலோ மலாயாவிலோ என்னால் காணமுடியவில்லை. ஆனால் அதிர்ஸ்டவசமாக பிரித்தானிய நூலகத்தின் சுவடிகள் காப்பகப் பிரிவில் அழகாக மட்டை கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்ததை நேரில் கண்டறிய முடிந்தது. (தகவலுக்காக: பிரித்தானிய நூலகத்தில் என்னால் பார்வையிடப்பட்ட இந்நூலின் பதிவிலக்கம் 14171 df 44). 

இவ்வாறாக எமது பிரதேசத்துக்குரிய சுவடிகளும், அரிய ஆவணங்களும் உலகெங்கும் பல்வேறு நூலகங்களில் அவர்களின் சுவடிகள் காப்பகப் பிரிவுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதை அறியவரும்போது, எமது மண்ணின் மக்களுக்கு அவற்றைக் காணும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் வகையில் ஒர் செயல்திட்டம் இல்லாமல் போயிற்றே என்று கலங்கியதுண்டு.  

தேசிய அறிவேடுகளைச் சேகரித்துப் பாதுகாப்பதோடு இத்தகைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நூலகங்கள் தம் நாட்டு மக்களின் வாழ்வையும், சுபீட்சத்தையும் வளப்படுத்தக்கூடிய ஏனைய நாட்டவரின் பல்துறைப்பட்ட அறிவாக்கங்களையும் சேகரித்துக் கொள்ளவேண்டிய கடப்பாடுடையனவாக இருந்துள்ளன. எனினும், பிறநாட்டு அறிவேடுகளைச் சேகரிப்பதென்பது எந்தளவு எளிதில் சாத்தியமாகுமென்பது கேள்விக்குரியதொன்றாகும்.  

பிராந்திய தேசிய நூலகமாக மட்டக்களப்பு பொது நூலகம் 

1958ம் ஆண்டில் வியன்னாவில் நடைபெற்ற ஐரோப்பிய தேசிய நூலகங்கள் பற்றிய கருத்தரங்கில் பின்வரும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. 

‘ஒரு நாட்டுடன் நேரடியான தொடர்பற்ற வெளியீடுகளைப் பொறுத்த மட்டில் சாத்தியமான ஒரே வழி நூலகங்களின் நூலீட்டலை தேசிய மட்டத்தில் ஒருமுகப்படுத்தலேயாகும். தேசிய நூலகங்களும் இம்முறையையே விரும்புகின்றன.’ 

இதன்மூலம் ஒரு தேசிய நூலகம் தனது நாட்டிற்குத் தேவையான பிறநாட்டு அறிவேடுகளைச் சேகரிக்க வேண்டிய பொறுப்பினை ஏற்கவேண்டுமென்ற கருத்து வலியுறுத்திக் கூறப்பட்டது. இந்த வகையிலும் கூட தேசிய நூலகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மிகவும் பெறுமதி வாய்ந்ததென்று கூறப்பட்டது. தேசிய நூலகத்தின் சர்வதேச மட்டத்திலான நூல் பரிமாற்றத்தையே இக்கூற்று வலியுறுத்துகின்றது.  

எமது நாட்டில் தேசிய நூலகம் பற்றிய சிந்தனை 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வலுவடைந்துள்ளது. கொழும்பு மாநகரசபை நகராதிபதியின் 1951ம் ஆண்டிற்கான நிர்வாக அறிக்கையில், கொழும்பு பொது நூலகத்தின் பிரதம நூலகர் டி.ஸி.ஜீ.அபயவிக்ரம நாட்டின் அபிவிருத்திக்குத் தேசிய நூலகத்தின் அவசியத்தையும் அந்நூலகம் ஆற்றக்கூடிய பணிகளையும் நன்கு விளக்கியுள்ளார். இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களின் மீதான விசாரணைக்குழு (1955) தனது அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளது. 

‘நாம் எய்த விழையும் முன்னேற்றத்திற்கான வழி, ஒரு தேசிய நூலக சேவையின் தோற்றமும் வளர்ச்சியுமாகும். இதன் சாராம்சம் என்னவெனில் எந்தவொரு சிறிய உள்ளூராட்சி மன்றத்தில் வதியும் வாசகராயினும் தான் படிக்கவிரும்பும் ஒரு நூல் தமது உள்ளூர் நூலகத்தில் கிடைக்காவிடின் அந்நூலைக் கூட்டுறவு முறையின் மூலம் தேசிய நூலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடியதாயிருக்க வேண்டும். இங்கிலாந்தில் இந்த முறை தற்போது நடைமுறையிலிருந்து வருகின்றது’. 

இதனைத் தொடர்ந்து 1958ம் ஆண்டில், கொழும்பு பொது நூலகத்தின் மீதான திரு. பி.கந்தையா அவர்களின் அறிக்கையில் ஒரு தேசிய நூலகத்தின் அவசியத்தைப் பின்வருமாறு அவர் வற்புறுத்தியிருந்தார்.  

‘ஒரு தேசிய நூலகத்தை அமைப்பது எமது கலாசார அபிவிருத்தியில் முதன்மையான இடத்தைப் பெறவேண்டியதொரு விஷயமாகும். துரதிர்ஷ்டவசமாக இவ்விஷயத்தில் கவனஞ் செலுத்தப்படாமல் மிகுந்த காலம் கடந்துவிட்டது. இத்தகையதொரு நூலகத்தைக் கட்டிச் சேவையினை ஆரம்பிப்பது மேலும் காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டியது அவசியமென்பது எனது உறுதியான கருத்தாகும்.’ 

மேலே நாம் கூறியவற்றிலிருந்து எமது தேசிய நூலகம் பற்றிய முன்னோடியான கருத்துக்களும் அந்நூலகம் எத்தன்மையானதாயிருக்க வேண்டுமென்ற ஆலோசனைகளும் காலத்துக்குக் காலம் இந்நாட்டின் அறிவார்ந்த மக்களின் எண்ணத்தில் இடம்பெற்று வந்துள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாயிருக்கின்றது.  

இக்கருத்துக்களின் திரட்சியாகவும், பெறுபேறாகவும் உருவாகிய இலங்கையின் முதலாவது முக்கிய நூலகச் சட்டமே இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபைச் சட்டமாகும். இச்சட்டம் பாராளுமன்றத்தில் 1970ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி 17ம் இலக்கச் சட்டமாக நிறைவேறியது. இச்சட்டத்தின் ஆக்கத்திற்கு உடனடியாக வழிகோலியது 1969ம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன் ‘யுனெஸ்கோ’ தாபனம் நடத்திய நூலக நிபுணர்களின் மாநாடாகும். இம்மாநாட்டில் ஆசிய நாடுகளில் தேசிய நூலகங்களை அமைப்பதன் மூலம் ஆசிய நாடுகளின் நூலக சேவைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  

இவ்வாறாக இயற்றப்பட்ட நூலகச் சட்டத்தின் பயனாக 1970ம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபை நிறுவப்பட்டது. இந்நிகழ்ச்சி இலங்கையின் நூலக இயக்க வளர்ச்சியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததொரு திருப்பமாகும். தேசிய நூலக சேவைகள் சபையின் முக்கிய பணியாக அமைந்தது இலங்கையிலும் ஒரு ‘தேசிய நூலகம்’ அமைப்பதாகும். அப்பணியை செவ்வனே நிறைவேற்றும் வகையில் புதியதொரு கட்டிடத்தில் 1990 ஏப்ரல் மாதம் 27 ம் திகதி வைபவரீதியாக தேசிய நூலகம் திறந்துவைக்கப்பட்டது. 

பின்னாளில் இலங்கையின் அரசியல் காரணிகளால் தேசிய நூலகத்தின் சேவைகள், வட-கிழக்கு தவிர்ந்த பிற பிரதேசங்களுக்கானது என்பது எழுதாச் சட்டமாகிவிட்டது. தேசிய நூலகத்தின் பல நல்ல திட்டங்கள், எழுத்தாளர்களுக்கான ஆதரவு நிதி வழங்கல்கள் என்பன இலங்கையின் அனைத்துப் பிரஜைகளையும் நேர்வழியில் சென்றடைவதில்லை. குறிப்பாக வட-கிழக்கில் வாழும் தமிழருக்கு அதன் சேவைத்திட்டங்கள் கருத்தரங்குகளுடன் நின்றுவிடுகின்றன. காரணம் தமிழ் ஆங்கிலம் சிங்களம் என மும்மொழிகளிலும் பிரிந்து வாழும் பிரதேசங்களை சிங்கள மொழி மூலம் மாத்திரம் ஒன்றிணைப்பது எவ்வகையிலும் சாத்தியமானதொன்றன்று.  

இந்நிலையில் மாற்று வழியாக இடைக்காலத்தில்  பிராந்திய தேசிய நூலகங்கள் பற்றிய சிந்தனை வலுப்பெற்று, ஒன்பது மாகாணங்களிலும் பிராந்திய தேசிய நூலகங்களை உருவாக்கி தேசிய நூலகத்தின் பணிகளை அவர்களிடையே பகிர்வது என்று ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஊவா மாகாணத்தில் பதுளை நூலகத்தையும், மத்திய மாகாணத்தில் கண்டி நூலகத்தையும், வட மாகாணத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும் பிராந்திய தேசிய நூலகங்களாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்திட்டம் முளையிலேயே வாடிவிட்டமை எமது துர்அதிர்ஷ்டமாகும். 

எமது பிராந்திய தேசிய நூலகங்களின் பணிகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றிப் பேராதனைப் பல்கலைக்கழகத்து முன்னைநாள் பிரதம நூலகரும், இந்நாட்டின் தலைசிறந்த நூலகருமாகிய திரு. இயன் குணத்திலக்க அவர்கள் கூறியுள்ளனவற்றைச் சற்று நினைவுகூர விரும்புகின்றேன். 

‘நூலக சேவைகள் என்ற கட்டுக்கோப்புக்குள் அமைவதாகத் தேசிய நூலகம் ஆற்ற வேண்டிய பணிகளாவன: 

1. கல்வித்துறையிலும் ஆராய்ச்சித் துறையிலும் பயன்படக்கூடியனவாகிய இலங்கையின் வரலாறு, நாகரீகம் ஆகியன பற்றிய தேசிய அறிவேடுகளோடு, வெளிநாடுகளில் எழுதப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட அத்தகைய நூல்களையும், கையெழுத்துப் பிரதிகளையும் பிற சாதனங்களையும் மற்றும் வேறு நூல்களையும், நூலக சாதனங்களையும் சேகரித்துப் பாதுகாத்து ஒழுங்குபடுத்தி உபயோகத்திற்கு உதவுவது. 

2. சட்டவாக்கம், நிறைவேற்றதிகாரம், நீதி பரிபாலனம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான அரசாங்கப் பிரிவுகளுக்கும், மற்றும் பொதுக் கூட்டுறவுத் தாபனங்களுக்கும், நிறுவனங்களுக்கும், ஏனைய அமைப்புகளுக்கும் தேசிய உசாத்துணை நூலகமாகப் பணியாற்றுவது. இச்சேவையின் பிரதான நோக்கம் இறுதி நிலையில் நாடி வருவோருக்குப் பூரணத்துவம் வாய்ந்ததோர் உசாத்துணை நூலகமாக இயங்குவதாகும். 

3. நாட்டிலுள்ள ஏனைய நூலகங்களுக்கும், தரவுத் திட்டங்களுக்கும் உதவும் முகமாகத் திறமையானதோர் மத்திய நூல் இரவல் வழங்கும் நூலகமாகவும் பிரதியாக்க சேவையாகவும் இயங்குதல். 

4. இலங்கைத் தேசிய நூலகத்தின் மற்றுமொரு முக்கியமான பணி எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதாகும். இந்நாட்டின் விவசாயம், ஆலைத்தொழில், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இயங்கிவரும் விஷேச நூலகங்களின் ஆவணங்களை ஒருமுகப்படுத்தி அவற்றுக்கான உதவிகளை வழங்குவதும் நாட்டின் அபிவிருத்திக்கான சிறப்புப் பணியாகும்.’ 

கிழக்கிலங்கையின் பிராந்திய நூலக சேவையின் பிரதிநிதியாக இருந்து மட்டக்களப்பு பொது நூலகம் பின்வரும் பணிகளை பொறுப்புடன் ஆற்றக்கூடியதாக இருக்கவேண்டும்.   

1. பிராந்திய தேசிய நூலகத்திற்கான பிரதான நூற்சேகரிப்பு 

2. சட்ட வைப்பிற்கான வெளியீடுகளின் சேகரிப்பு. கிழக்கிலங்கையில் வெளிவரும் நூல்களில் ஆறு பிரதிகளையாவது கொள்வனவு செய்து நூலகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் பயன்படுத்துதல். (1885ம் ஆண்டு இயற்றப்பட்ட அச்சிடுவோர் வெளியீட்டாளர் சட்டத்தின் 1976ம் ஆண்டுத் திருத்தத்திற்கேற்ப நாட்டில் வெளியிடப்படும் ஒவ்வொரு அறிவேட்டினதும் பிரதியொன்று தேசிய நூலகத்தின் வைப்பிலிடப்பட வேண்டும். ஆனால் தமிழ்ப்பிரதேசங்களிலிருந்து தேசிய நூலகத்துக்கு இவை ஒழுங்காக அனுப்பிவைக்கப்படுவதில்லை. மேலும், ஈழத்தவரின் கணிசமான நூல் வெளியீடுகள் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த நாடகளிலும் அச்சிட்டு வெளியிடப்படுவதால், தேசிய நூலகத்தின் புவியியல் வரம்புக்குள் இந்நூல்கள் அகப்படுவதுமில்லை). 

3. இலங்கையின் நாட்டார் இலக்கியச் சேகரிப்பு. (இத்திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமியக் கவிதைகளின் கையெழுத்துப் பிரதிகள், நாடோடிக் கலாச்சாரம் பற்றிய, நாட்டார் இலக்கியம் பற்றிய அச்சிட்ட சாதனங்கள், ஏட்டுச் சுவடிகள், பதிவு நாடாக்கள், ஒலித்தட்டுக்கள், நுண்பொருட்கள், நிழற்படங்கள், ஆகியவற்றின் சேகரிப்பு அடங்கும்). 

4. யுனெஸ்கோ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் வெளியீடுகளின் சேகரிப்பு. (இலங்கைத் தேசிய நூலகத்தின் யுனெஸ்கோ பகுதி இந்நாட்டின் தலையாய சர்வதேச நிறுவனங்களினதும் நூல் வைப்பகமாகத் திகழ்கின்றது. இங்கு யுனெஸ்கோ வெளியீடுகளும் பிற சர்வதேசத் தாபனங்களின் வெளியீடுகளும் சேகரிக்கப்படுகின்றன. அவர்களுடன் தொடர்புகொண்டு தொடர்ச்சியாக மட்டக்களப்பு பொது நூலகத்திற்கும் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்). 

5. மத்திய வங்கி அறிக்கைகள், அரசாங்க வெளியீடுகள், நூலகவியல் சார்ந்த வெளியீடுகள், புதின ஏடுகள் ஆகியனவும் சேகரிக்கப்பட்டு சிறப்புச் சேகரங்களாகப் பேண வழிவகைகள் செய்யப்படவேண்டும்.  

6. இலங்கைத் தேசிய நூற்பட்டியலானது 1974ம் ஆண்டிலிருந்து தேசியச் சுவடிகள் திணைக்களத்தினால் நூலக சேவைகள் சபையின் பொறுப்பில் விடப்பட்டது. தற்போது இப்பட்டியல் மாதாந்த வெளியீடாக மும்மொழிகளிலும் தேசிய நூலகத்தினால் வெளியிடப்படுகின்றது. இது தமக்குக் கிடைக்கும் சட்ட வைப்பு நூற்சேர்க்கையின் அடியாகத் தயாரிக்கப்படுகின்றது. நாமும் கிழக்கிலங்கையின் சிறப்புச் சேகரிப்பின் அடிப்படையில், இலங்கையிலும், இலங்கைக்கு வெளியேயும் வெளியிடப்படும் எம்மவரின் நூல்களைப் பெற்று அதன் அடிப்படையில் ஒர நூல்விபரப்பட்டியலை உருவாக்கமுடியும்.  

7. இலங்கைப் பருவ வெளியீடுகளின் சுட்டிகளையும், மத்திய நூற்பட்டியலையும் தயாரிக்கும் வேலையையும் ஒருங்கே தேசிய நூலகம் மேற்கொண்டுள்ளது. 1962ம் ஆண்டிலிருந்து 1973ம் ஆண்டு வரையிலான நூற்பட்டியல் தேசியச் சுவடிச்சாலையினால் வெளியிடப்பட்டது. பின்னாளில் வெளியிடப்பட்டதாகத் தகவல் இல்லை. நாம் கிழக்கிலங்கையில் வெளிவந்து நின்றுபோன சஞ்சிகைகளைச் சேகரிப்பதுடன் அவற்றுக்கான சுட்டியை தயாரிப்பதுடன், சமகாலத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் சஞ்சிகைளையும் உள்ளீர்த்து சஞ்சிகைகளுக்கான பட்டியல் தொகுப்பினையும் அவற்றிற்கான சுட்டிகளையும் தயாரித்த வைத்திருந்தால், ஆய்வாளர்களைக் கவரும் வாய்ப்பு ஏற்படும்.  

(தொடரும்)