வெள்ளை நிற மல்லிகையோ (பூக்களை பறிக்காதீர்கள்)

வெள்ளை நிற மல்லிகையோ (பூக்களை பறிக்காதீர்கள்)

  — சு.சிவரெத்தினம் — 

இசைக் கலைஞன் 

அறிஞன் 

பக்தன்  

மூன்றுமாகி நின்ற அவன் வாய் 

வெள்ளை நிற மல்லிகையோ

வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு  

வாய்த்த மலரெதுவோ

வெள்ளை நிறப் பூவுமல்ல  

வேறெந்த மலருமல்ல  

உள்ளக் கமலமடி 

உத்தமனார் வேண்டுவது‘ 

என சுருதி பிசகாமல் 

தாளம் தப்பாமல் 

இனிதாகப் பாட 

கை 

பூக்களை ஆய்கிறது   

பூ தலையென்றால்  

அதன் கழுத்து காம்புதானே

கழுத்தைக் கிள்ளித்தான் 

பூக்கள் ஆயப்பட்டன. 

ஆய்ந்தமாட்டு நகத்துக்குத் தெரியுமா 

பூவின் வேதனை

வேதனையைக் காட்டாது  

மரணித்துக் கொண்டே 

சிரிக்கிறது பூ. 

பக்தனின் வாய் ஓயவில்லை 

மீண்டும் மீண்டும் பாடுகிறது 

வெள்ளை நிற மல்லிகையோ

வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு  

வாய்த்த மலரெதுவோ

வெள்ளைநிறப் பூவுமல்ல  

வேறெந்த மலருமல்ல  

உள்ளக் கமலமடி 

உத்தமனார் வேண்டுவது