~ பவானி பொன்சேகா (Bhavani Fonseka) கார்னகி சர்வதேச அமைதிக்கான அறக்கட்டளை (Carnegie Endowment for International Peace)
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியும் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றிபெற்றிருந்தார்.
2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் ஆட்சிமுறை நெருக்கடியின் விளைவாக உருவெடுத்த ‘அரகலய’ (போராட்டம்) மக்கள் எழுச்சியில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் இறங்கி அரசியல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கோரினர். இந்த மக்கள் எழுச்சி, 2024ஆம் ஆண்டில் அரசியல் மாற்றத்திற்கான வலுவான தேர்தல் ஆதரவை உருவாக்கியது.
அந்தக் காலகட்டத்தில், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகள், அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்திற்கான மக்களின் கோரிக்கைகளுடன் பெருமளவில் ஒத்துப்போயின. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அந்தக் கட்சி உறுதியளித்த பல சீர்திருத்தங்கள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள், வர்க்கம், இனம், மதம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்களை ஒன்றிணைத்தன. அதிக பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்ற தீவிரமான விருப்பமே இந்த ஒற்றுமைக்குக் காரணமாக அமைந்தது.
இடதுசாரிச் சிந்தனைகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி, பல்வேறு துறைகளில் விரிவான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், மக்களுக்கு நியாயமான நிபந்தனைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) உடன்படிக்கையை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துதல், நீதித்துறையில் நிலவும் தாமதங்களைக் குறைப்பதற்காக அரச வழக்குத் தொடுநர் பணிப்பாளர் (Director of Public Prosecutions – DPP) பதவியை உருவாக்குதல், ஊழல் வழக்குகளில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல், குறிப்பாக 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல் உள்ளிட்ட சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் ஆகியவை அவற்றில் முக்கியமானவையாக இருந்தன.
இந்த வாக்குறுதிகள் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கின.
2024 செப்டம்பரில் திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதே ஆண்டு நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், 225 ஆசனங்களில் 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது. இதன்மூலம் இலங்கையின் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பெற்றுக்கொண்டது.
குறிப்பிடத்தக்க வகையில், இனமோதல்களால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல மாவட்டங்கள் உட்பட, நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி தேர்தல் வெற்றியைப் பெற்றது.
இது இனச் சிறுபான்மை வாக்காளர்களிடையே அந்தக் கட்சி பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக அமைந்தது.
இந்தப் பாரிய மக்கள் ஆணை, பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் உட்பட பிரதான அரசியல் கட்சிகள் மீதான பரவலான அதிருப்தியையும், இலங்கையின் பாரம்பரிய அரசியல் உயரடுக்கினருடன் தொடர்புடைய ஆட்சிமுறையை மக்கள் நிராகரித்ததையும் பிரதிபலித்தது.
ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகள் கலவையான பெறுபேறுகளையே வெளிப்படுத்துகின்றன.
ஊழல் தொடர்பான முக்கியமான கைது நடவடிக்கைகளும் வழக்குத் தொடர்தல்களும், கடந்த காலத் தவறுகளுக்காக அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளையும் ஏனைய செல்வாக்குமிக்க நபர்களையும் பொறுப்புக்கூறச் செய்வதன் மூலம், நீண்டகாலமாக நிலவிவரும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோன்று, வறுமையில் வாழும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் சில நிவாரணங்களை வழங்கியுள்ளது. எனினும், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை சார்ந்த அவசரநிலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீடித்த தீர்வுகளையும் அவசர உதவிகளையும் வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
மிக முக்கியமாக, 2024ஆம் ஆண்டு வாக்குறுதியளிக்கப்பட்ட விரிவான அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய தூணாக இருந்தபோதிலும், அதற்குப் பதிலாக அரசாங்கம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக வரையறுக்கப்பட்ட சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திருத்தத்தின் மூலம் உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தம் விமர்சகர்களிடையே கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சட்டங்களை உருவாக்கும்போது வெளிப்படைத்தன்மைக்கும் பொதுமக்களுடனான கலந்தாலோசனைக்கும் அரசாங்கம் உரிய மதிப்பளிக்கவில்லை என்பதையும், தேர்தலில் உறுதியளித்த விரிவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, தனது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ற சீர்திருத்தங்களை மட்டும் தெரிவுசெய்து முன்னெடுக்கின்றது என்பதையும் இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
அத்துடன், அரசாங்கம் தனக்குக் கிடைத்த தேர்தல் ஆணையைத் தவறாகப் பயன்படுத்துகின்றதா என்ற கேள்வியையும் இந்த நடவடிக்கை எழுப்பியுள்ளது.
இது ராஜபக்ச ஆட்சிக்காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது. அப்போது மக்களின் ஆதரவும் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான ஆணையும், எதேச்சாதிகார ஆட்சி, தவறான பொருளாதார முகாமைத்துவம், கட்டுப்பாடற்ற ஊழல் மற்றும் தீவிர இனத் தேசியவாதம் ஆகியவற்றை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டன.
இன்று அரசாங்கத்தின் கொள்கை வகுப்பை வழிநடத்தும் அடிப்படைக் கோட்பாடுகள் என்ன என்பது தெளிவாக இல்லை.
நிறுவனச் சீர்திருத்தங்கள், ஜனநாயகப் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் அதிகாரக் குவிப்பைக் குறைத்தல் ஆகியவற்றில் அரசாங்கத்தின் உண்மையான அர்ப்பணிப்பு குறித்த கேள்விகள் இதனால் எழுகின்றன.
இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தச் சீர்திருத்தங்களின் நிலைமையையும் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அரசியல் செயற்றிட்டத்தையும் மீளாய்வு செய்வது, இலங்கையில் அர்த்தமுள்ள அரசியல் மாற்றத்திற்கான தற்போதைய நிலைமையையும் எதிர்கால வாய்ப்புகளையும் மதிப்பிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
நெருக்கடியிலிருந்து சீர்திருத்த வாக்குறுதிகள் வரை..
2024ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் திருப்புமுனை, போருக்குப் பிந்தைய கொந்தளிப்பான காலகட்டத்தினதும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியினதும் பின்னணியில் உருவானது.
ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக நீடித்த இனப்போர், 2009 மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்காக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பின்னர் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டவருமான கோட்டாபய ராஜபக்சவும், தேசிய வீரர்களாகப் போற்றப்பட்டனர்.
பொருளாதார அபிவிருத்தியும் செழிப்பும் ஏற்பட்டுள்ளதாகப் பொதுவெளியில் பிரசாரம் செய்யப்பட்டபோதிலும், ராஜபக்ச ஆட்சிக்காலம் சுயாதீன நிறுவனங்களைப் பலவீனப்படுத்திய எதேச்சாதிகார நடைமுறைகளால் அடையாளப்படுத்தப்பட்டது.
இதன் உச்சகட்டமாக அப்போதைய பிரதம நீதியரசர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
அதே காலப்பகுதியில் இனத் தேசியவாதமும் தீவிரமடைந்தது.
தீவிர பௌத்த சித்தாந்தங்களும் சிங்களப் பெரும்பான்மைவாதமும் ஊக்குவிக்கப்பட்டன. இதனால் சிறுபான்மைச் சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டதுடன், சமூகங்களுக்கிடையில் புதிய பிளவுகளும் உருவாகின.
ஒரே அரசியல் குடும்பத்திற்குள் அதிகாரம் குவிக்கப்பட்டமை, சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் செல்வாக்கு அதிகரிக்கப்பட்டமை, சுயாதீன நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்பட்டமை, அரசியல் ஆதரவைத் திரட்டுவதற்கு தேசியவாதக் கதையாடல்கள் பயன்படுத்தப்பட்டமை, அரசியல் ஆதரவாளர்களுக்குச் சலுகைகள் வழங்கும் வலையமைப்புகள் விரிவடைந்தமை ஆகியவை வெளிப்பார்வைக்கு வலிமையானதாகத் தோன்றிய ஓர் ஆட்சிமுறையை உருவாக்கின.
ஆனால், அதன் உள்ளே ஆழமான கட்டமைப்புப் பலவீனங்கள் காணப்பட்டன.
இரண்டு ராஜபக்ச ஜனாதிபதி ஆட்சிகளும் இறுதியில் நெருக்கடிகளிலேயே முடிவடைந்தன.
2005 முதல் 2015 வரையான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் இறுதிக்காலம், ஊழல் மற்றும் அரசியல் ஆதரவாளர்களுக்குச் சலுகைகள் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டிருந்தது.
2019 முதல் 2022 வரையான கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி, பொருளாதாரத்தைத் தவறாக முகாமைத்துவம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கும் மக்கள் எழுச்சிக்கும் மத்தியில் அவர் பதவி விலகியதுடன் முடிவடைந்தது.
இருவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் அதிகாரக் குவிப்பை மேலும் வலுப்படுத்தினர்.
அத்துடன், வன்முறையும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரமும் புதிய மட்டங்களை எட்டின. இதன் விளைவாக இலங்கையின் ஆட்சிமுறையிலும் ஜனநாயகத்திலும் ஆழமான பிளவுகள் உருவாகின.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஜனநாயகம் பின்னடைவைச் சந்தித்திருந்தபோதிலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் ஜனநாயகச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகியிருந்தன.
2015ஆம் ஆண்டு ‘யஹபாலனய’ எனப்படும் நல்லாட்சி அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டமை, ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஜனநாயகப் பின்னடைவைச் சரிசெய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியது.
அந்த அரசாங்கம் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அறிமுகப்படுத்தியது.
இதன்மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு சில கட்டுப்பாடுகளும் அதிகாரச் சமநிலைகளும் ஏற்படுத்தப்பட்டன.
அத்துடன், தகவல் அறியும் உரிமை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் இணைக்கப்பட்டது. இது அதிக பொறுப்புக்கூறலுக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் வழிவகுத்தது.
மேலும், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது.
இந்தத் தீர்மானம் இலங்கையில் நிலைமாறுகால நீதிக்கான கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தியதுடன், கடந்தகால மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஏற்றுக்கொண்டது.
காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகிய இரண்டு பொறிமுறைகள் உருவாக்கப்பட்டிருந்தபோதிலும், இலங்கையில் இடம்பெற்ற பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களும் போரின்போதும் போருக்குப் பின்னரான உடனடிக் காலப்பகுதியிலும் இடம்பெற்ற ஏனைய மீறல்களும் இன்னமும் தீர்க்கப்படவில்லை.
வடக்கிலுள்ள செம்மணி மனிதப் புதைகுழியில் அண்மையில் 582 எலும்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டமையும், நாடு முழுவதும் பல மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டமையும், இலங்கையின் கொடூரமான கடந்தகாலத்தையும் பொறுப்புக்கூறல் செயன்முறையொன்றின் அவசியத்தையும் நினைவூட்டுகின்றன.
போர் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இலங்கையில் உண்மையான நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை.
ராஜபக்ச அரசாங்கங்கள் இரண்டினதும் மக்கள் கவர்ச்சி அரசியல் பேச்சுகளும் நடவடிக்கைகளும், அரசியல் அமைப்பில் ஊழல், உறவினர்களுக்குச் சலுகை வழங்குதல் மற்றும் அரச நிறுவனங்களைத் தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை ஆழமாக வேரூன்றச் செய்தன.
இரண்டாவது ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்ட பல தவறான பொருளாதார முடிவுகள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.
இதனால் இலங்கையர்கள் எதிர்கொண்ட சமூக, பொருளாதாரத் துன்பங்கள் அரகலய மக்கள் போராட்டத்தைத் தூண்டின.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், அவரது ஜனாதிபதிப் பதவிக்காலத்தின் எஞ்சிய பகுதியை நிறைவு செய்வதற்கும், சுதந்திரத்திற்குப் பின்னர் நாடு எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கும் நாடாளுமன்றம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தது.
2023ஆம் ஆண்டு இலங்கை தனது பதினேழாவது சர்வதேச நாணய நிதியத் திட்டத்தில் இணைந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடுமையான நிதி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களுடன் சிக்கன நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
விக்கிரமசிங்க அரசாங்கமும் அதன் கொள்கைகளும் மக்களிடையே செல்வாக்கிழந்தமை, ஊழலைக் கட்டுப்படுத்துவதில் அந்த அரசாங்கம் தோல்வியடைந்தமை ஆகியவை தேசிய மக்கள் சக்திக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை உருவாக்கின.
புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், ஊழலை ஒழித்தல், பொறுப்புக்கூறலையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்துதல் ஆகிய வாக்குறுதிகளின் மூலம் தேசிய மக்கள் சக்தி மக்களின் ஆதரவைப் பெற்றது.
போருக்குப் பிந்தைய மனித உரிமைகள் தொடர்பான சீர்திருத்தங்களையும் அந்தக் கட்சி உறுதியளித்தது.
பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையை ஒழிப்பதற்கான சட்ட மாற்றங்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்தல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் ஆகியவையும் அந்த வாக்குறுதிகளில் அடங்கியிருந்தன.
திசாநாயக்கவின் தனிப்பட்ட அரசியல் கவர்ச்சியால் மேலும் வலுப்பெற்ற இந்த வாக்குறுதிகள், இலங்கை இறுதியாக தனது வன்முறையும் எதேச்சாதிகாரமும் நிறைந்த கடந்தகாலத்திலிருந்து விடுபட்டு, ஜனநாயக மாற்றத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கக்கூடும் என்ற நம்பிக்கையை உருவாக்கின.
தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து ஆட்சியின் யதார்த்தம் வரை..
ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் தனது விரிவான சீர்திருத்த வாக்குறுதிகளைத் தெரிவுசெய்யப்பட்ட முறையிலேயே நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஊழல் வழக்குகளின் விசாரணைகளிலும் குற்றவியல் நடவடிக்கைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் விளைவாக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பதவி வகித்த ஏனையவர்களும் அதிகமான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, போர்க்காலத்தில் MiG-27 போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்–எயார்பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 100 மில்லியன் இலங்கை ரூபாய் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டமை உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள், தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை எதிர்கொள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கான சான்றுகளாகக் கருதப்படுகின்றன.
எனினும், போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இன்னமும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.
அதேவேளை, நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளில் உரிய சட்ட நடைமுறைகளும் நியாயமான விசாரணைக்கான பாதுகாப்புகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், ஏனைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் காட்டும் தெரிவுசெய்யப்பட்ட அணுகுமுறை கவலையளிக்கின்றது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தபோதிலும், அதற்கான செயன்முறையை ஆரம்பிப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
அதற்குப் பதிலாக அரசாங்கம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியது.
இந்தத் திருத்தத்தின் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.
அத்துடன், பிரதம நீதியரசர் 67 வயதை அடையும்போது அல்லது அந்தப் பதவியில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் — இவற்றில் எது முதலில் நிகழ்கின்றதோ அப்போது — ஓய்வுபெற வேண்டும் என்ற நிபந்தனையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அனுபவமிக்க நீதிபதிகளைத் தொடர்ந்து சேவையில் வைத்திருப்பதற்கும், நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குமான செயற்றிறன் மேம்பாட்டு நடவடிக்கையாக இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் விளக்கியுள்ளது.
ஆனால், இந்தத் திருத்தம் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டமை பல கேள்விகளை எழுப்பியது.
இந்தத் திருத்தத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
திருத்தத்தை எதிர்த்தவர்கள், தற்போதைய பிரதம நீதியரசரே இந்த மாற்றத்தின் மூலம் முதலில் நன்மையடையக்கூடியவர் என்பதால், அவர் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலக வேண்டும் என்று வாதிட்டனர்.
மேலும், 17 நீதிபதிகளைக் கொண்ட முழுமையான நீதியரசர் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.
ஆனால், இந்த இரண்டு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன.
அதற்குப் பதிலாக பிரதம நீதியரசரும் மேலும் நான்கு நீதிபதிகளும் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரு (Steven Thiru), உயர்நீதிமன்ற விசாரணைகளை அவதானித்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், நீதிமன்ற நடைமுறைகளின் நியாயத்தன்மை தொடர்பான பல கவலைகளை அவர் எழுப்பியிருந்தார்.
வாய்மொழியாகப் பதிலளிக்கும் உரிமை மறுக்கப்பட்டமை, நீதியரசர் அமர்வின் அமைப்பு மற்றும் பிரதம நீதியரசர் வழக்கிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை ஆகியவை அவற்றில் அடங்கியிருந்தன.
இந்த நடைமுறை சார்ந்த சர்ச்சைகளும், எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் இதேபோன்ற அரசியலமைப்புத் திருத்தத்தைப் பயன்படுத்தி நீதித்துறையின் அமைப்பிலும் செயற்பாட்டிலும் செல்வாக்குச் செலுத்தக்கூடும் என்ற முன்னுதாரணமும், 2024ஆம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி முன்வைத்த கொள்கைகளுக்கு நேர்மாறானவையாக உள்ளன.
எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி இந்தத் திருத்தத்தை நிறைவேற்றியது.
தேசிய மக்கள் சக்தி, தனது இரண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தில் அரச நிர்வாகத்தின் சிக்கல்களைப் புரிந்துகொள்வதில் கடினமான அனுபவங்களைக் கடந்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள், காலநிலை நெருக்கடி மற்றும் உலகளாவிய மோதல்கள் ஆகியவை உள்நாட்டில் பல சிக்கலான சவால்களை உருவாக்கியுள்ளன.
உதாரணமாக, 2025 நவம்பரில் இலங்கையின் பல பகுதிகளை டிட்வா சூறாவளி (Cyclone Ditwah) கடுமையாகப் பாதித்தது.
இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். நாடு முழுவதும் பல பில்லியன் டொலர் பெறுமதியான சேதங்கள் ஏற்பட்டன.
சூறாவளி ஏற்பட்டு ஏறத்தாழ ஓராண்டு கடந்துள்ள நிலையிலும், மீள்கட்டுமானப் பணிகள் பல இடங்களில் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன.
பாதிக்கப்பட்ட சில சமூகங்கள் இன்னமும் இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளன. அவர்களுக்கு அடிப்படைச் சேவைகளோ காணி மற்றும் குடியிருப்பு உரிமைகளுக்கான பாதுகாப்போ கிடைக்கவில்லை.
அண்மையில் ஏற்பட்ட எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கங்களும் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளில் துன்பங்களை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் பேரினப் பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதனால் சிக்கன நடவடிக்கைகள் குடும்பக் கடன்சுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் உணவு, மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
செயற்றிறனையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதாக வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தபோதிலும், கடந்த ஆண்டில் மட்டும் இலங்கை மத்திய வங்கி இணையவழித் திருட்டுச் சம்பவமொன்றில் பல மில்லியன் டொலர்களை இழந்ததுடன், கேள்விக்குரிய ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளையும் எதிர்கொண்டது.
தவிர்க்கக்கூடிய கொள்கைத் தவறுகளால் முக்கியமான கல்விச் சீர்திருத்தங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நீண்டகாலத் திட்டமிடலும் தெளிவான தகவல் தொடர்பாடலும் இல்லாமை, பல்வேறு பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் ஒரே நேரத்தில் கையாள்வதற்குத் தேவையான நுணுக்கமான புரிதல், திட்டமிடல் மற்றும் திறன்களை அரசாங்கம் இன்னமும் முழுமையாகப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியங்களை ஒழித்தல், முன்னாள் அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை மீளப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற மக்கள் கவர்ச்சி சீர்திருத்தங்களைத் தவிர, விரிவான கட்டமைப்பு மற்றும் சட்டச் சீர்திருத்தங்களுக்கான தனது திட்டத்தை அரசாங்கம் இன்னமும் வெளிப்படுத்தவில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல், சமூகப் பொருளாதாரச் சவால்களை நிர்வகித்தல் போன்ற கடினமான கேள்விகள் தீர்க்கப்படாதவரை, கடந்தகால நெருக்கடிகளுக்குக் காரணமான அரசியல் கட்டமைப்புகள் மாற்றமின்றியே தொடரும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக வழங்கப்பட்ட வாக்குறுதி, அதற்குப் பதிலாக அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (Protection of the State from Terrorism Act – PSTA) வரைவை அறிமுகப்படுத்துவதில் முடிந்துள்ளது.
இந்தச் சட்டவரைவில் பரந்த வரைவிலக்கணங்கள், வரையறுக்கப்பட்ட நீதித்துறை மேற்பார்வையுடன் கூடிய நிர்வாகத் தடுப்புக்காவல் அதிகாரங்கள், அமைப்புகளைத் தடைசெய்வதற்கும் பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், சங்கம் அமைக்கும் சுதந்திரம் மற்றும் நடமாட்டச் சுதந்திரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கப்படும் விரிவான அதிகாரங்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.
இவை தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளன.
குறிப்பாக, எதிர்க்கட்சியில் இருந்தபோது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை எதிர்த்த தேசிய மக்கள் சக்தியின் பல அரசியல்வாதிகள், தற்போது PSTA சட்டவரைவுக்கு ஆதரவளிக்கின்றனர்.
இது அவர்களது நோக்கங்கள் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் தெரிவுசெய்து நிறைவேற்றும் அணுகுமுறை, இலங்கையின் ஆளும் அரசியல் வர்க்கம் கடந்தகால சீர்திருத்த முயற்சிகளிலிருந்து ஏதேனும் பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளதா என்ற தீவிரமான கேள்வியை எழுப்புகின்றது.
அரகலய போராட்டத்தின்போது, ஊழல் கலாசாரம், அரசியல் ஆதரவாளர்களுக்குச் சலுகைகள் வழங்குதல், உறவினர்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சி சிதைக்கப்படுதல் ஆகியவற்றுக்கு எதிராக இலங்கையர்கள் தீவிரமாகக் குரல் கொடுத்தனர்.
அரசியல் அமைப்பின் மீதான தமது அதிருப்தியை அமைதியான வழிகளில் வெளிப்படுத்திய மக்கள், அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொறுப்புக்கூறச் செய்ய முயன்றனர்.
அரகலய போராட்டம் நடைபெற்று நான்கு ஆண்டுகளும், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளும் கடந்துள்ள நிலையில், இலங்கை உண்மையான மாற்றத்தை நோக்கிய உறுதியான பாதையில் பயணிக்கின்றதா அல்லது மீண்டும் ஒரு வரலாற்று வாய்ப்பை இழந்துகொண்டிருக்கின்றதா என்பது தெளிவாக இல்லை.
எதிர்க்கட்சிகள் பிளவுபட்டும் பலவீனமாகவும் காணப்படுகின்றன. அரசாங்கத்திற்கு வலுவான மாற்று அரசியல் சக்தியாக அவற்றால் செயற்பட முடியவில்லை.
ஜனாதிபதி திசாநாயக்கவின் தனிப்பட்ட அரசியல் கவர்ச்சி வாக்காளர்களின் ஈடுபாட்டைத் தொடர்ந்து பேணிவந்தாலும், உண்மையான முற்போக்குச் சீர்திருத்தங்கள் இல்லாமையும், 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுடன் ஒத்துப்போகும் எதிர்காலப் பாதை தெளிவாக இல்லாமையும் இலங்கையர்களுக்கு மேலும் சவால்களை உருவாக்குகின்றன.
நிறைவேறாத அரசியல் மாற்றத்திற்கான நிகழ்ச்சிநிரல்
போருக்குப் பிந்தைய இலங்கையின் எதிர்காலம் இன்னமும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
முக்கியமான மாற்றங்களை நோக்கிய முன்னேற்றம் குறைவாக இருப்பதும், கொள்கை வகுப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலில் காணப்படும் கவலையளிக்கும் அறிகுறிகளும், கடினமானதாக இருந்தாலும் அவசியமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான அரசியல் விருப்பமோ தொலைநோக்குப் பார்வையோ அரசாங்கத்திடம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
குறுகியகால அரசியல் ஆதாயங்களின் மூலம் வாக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அரசியல் தலைமை மக்கள் கவர்ச்சி நடவடிக்கைகளையும் ஊழல் எதிர்ப்புப் பிரசாரத்தின் பெயரில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும் தெரிவுசெய்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் இரண்டு ஆண்டு ஆட்சி, வலுவான மக்கள் ஆணை இருந்தாலும்கூட, முக்கியமான அரசியல் செயற்பாட்டாளர்கள் கடினமான சீர்திருத்தங்களைத் தவிர்த்துவரும் வரை அடிப்படையான கட்டமைப்பு மாற்றம் ஏற்படாது என்பதை வெளிப்படுத்துகின்றது.
எனினும், மாற்றத்திற்கான வாய்ப்பு முற்றாக இழக்கப்படவில்லை.
அரச கட்டமைப்புகளையும் குடிமக்களுக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இடையிலான உறவையும் மறுவரையறை செய்யக்கூடிய புதிய சமூக ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான நீண்டகாலச் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான மக்கள் ஆதரவு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் இன்னமும் உள்ளது.
எதேச்சாதிகார ஆட்சியையும் பல தசாப்தகால வன்முறைகளையும் எதிர்கொண்ட ஒரு நாட்டை மீண்டும் ஜனநாயகமயப்படுத்துவதற்கு, புதிய அரசியலமைப்பும் சுயாதீன நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் கலாசாரமும் அத்தியாவசியமானவையாகும்.
அதேபோன்று, தனிநபர்களைக் கைது செய்வதுடன் நின்றுவிடாமல், ஊழலையும் அரசியல் ஆதரவாளர்களுக்குச் சலுகைகள் வழங்கும் கட்டமைப்பையும் தாங்கிநிற்கும் ஒட்டுமொத்த அமைப்பைத் தகர்க்கக்கூடிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானவை.
உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் வறுமை போன்ற சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளின் தாக்கங்களைச் சமாளிப்பதும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இறுதியாக, கடந்தகால மனித உரிமை மீறல்களின் பாரம்பரியத்தை இலங்கை இன்னமும் சுமந்துகொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, போர்க்கால மீறல்கள் தொடர்பான உண்மையான பொறுப்புக்கூறல் செயன்முறையொன்றை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும்.
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை உள்ளடக்கிய நல்லிணக்க முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்தல் போன்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பல நெருக்கடிகளை எதிர்கொண்டபோதிலும், ஆட்சி மாற்றத்திற்காக அமைதியான முறையில் மக்கள் ஒன்றுதிரண்டதுடன், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் தொடர்ந்து விழிப்புடனும் செயற்பாட்டுடனும் இருக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டில், இவை மிகவும் முக்கியமான நடவடிக்கைகளாகும்.
அடிப்படையில், இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து, உண்மையான மாற்றத்திற்கான நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய முற்போக்குச் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கான இந்த வாய்ப்பை திசாநாயக்க அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சீர்திருத்தங்களின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, கட்சி அரசியலையும் குறுகிய நிகழ்ச்சிநிரல்களையும் தாண்டிய அரசியல் தலைமைத்துவம், பொறுமை மற்றும் தொலைநோக்குப் பார்வை அவசியமாகின்றன.
சீர்திருத்தங்களை நோக்கி துணிச்சலானதும் உறுதியானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்தால் முடியாவிட்டால் அல்லது அதற்கான விருப்பம் இல்லாவிட்டால், இலங்கையில் அர்த்தமுள்ள மாற்றத்திற்கான போராட்டம் இன்னமும் எட்டப்படாத இலக்காகவே தொடரும் என்பதையே அது வெளிப்படுத்தும்.
