சமஸ்டி அரசியல்: அடுப்புக்குள் சட்டி..!(மூன்றாவது கண்:VIII)

சமஸ்டி அரசியல்: அடுப்புக்குள் சட்டி..!(மூன்றாவது கண்:VIII)

— அழகு குணசீலன் —

போர்க்கால சமாதான முயற்சிகளின் போது,  “சமஷ்டி யோசனையை ஏற்க தயார் என்று எழுத்தில் தாருங்கள்” என்று நோர்வேயின் சர்வதேச மத்தியஸ்தத்திற்கு தலைமைவகித்த எரிக்சொல்கைம் புலிகளின் பிரதிநிதிகளிடம் கோரினார். அப்போதே சமஷ்டி அடுப்புக்குள் வீழ்ந்த சட்டி கதைதான். இப்போது சர்வதேச அளவில் சுவிஸ் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வுக்கு ஒருமித்த கருத்துருவாக்கம் ஒன்றை ஏற்படுத்துவதில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து களத்தில் இறங்கியிருக்கிறது.

போர் ஓய்ந்து ஒன்றரை தசாப்தங்களை கடந்த நிலையில், தமிழ்தரப்பு கூறுகின்ற மாகாணசபை அடிப்படையையும், ஆரம்பப்புள்ளியையும் தமிழ்த்தேசிய அரசியல் இழந்து கொண்டிருக்கும்  ஆபத்தான சூழலில், சுவிஸ் வெளியுறவு அமைச்சினால்  இந்த  முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அந்த முயற்சியில் ஒரு பகுதியாக சமஷ்டி பற்றி கற்றுக்கொள்ள, கடந்த ஆண்டு இறுதியில் சுவிஸ் வந்த பன்னிரெண்டு பேர் கொண்ட அரசியல் சட்டவாக்க, கொள்கை வகுப்பாளர்களில் மூவர் தமிழ்த்தேசிய தரப்பு எம்.பி.க்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சத்தியலிங்கம், அர்ச்சனா இராமநாதன். 

இந்த நிலையில் சுவிஸ் அரசாங்கம் தொடர்ந்தும் தனது முயற்சியை கைவிடாது கொழும்பில் தொடர விரும்பியுள்ளது. கொழும்பு, மாலைதீவுக்கான சுவிஸ் தூதுவர் யாழ்ப்பாணம் சென்றும் பேசி கொழும்பில் ஒரு கலந்துரையாடலுக்கு தமிழ்த்தேசிய தரப்புக்கு  அழைப்பு விடுத்து, சந்திப்புக்கான திகதி பெப்ரவரி 19, 2026 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.  யார், யார் பங்குவற்றுவது என்ற பட்டியலை  ஒரு தமிழ்த் தேசிய கட்சி முக்கியஸ்தர் தயாரித்து  சுவிஸ் தூதரகத்திற்கு அனுப்பியதாக தெரியவருகிறது. இதன்மூலம் அந்த சந்திப்பை  தமிழ்த்தேசிய “வைக்கோல் பட்டறை நாய் அரசியல்” மீண்டும்  சமஷ்டி சட்டியை அடுப்புக்குள் வீழ்த்திய நிலைக்கு தள்ளியுள்ளது.

 யாழ்ப்பாண பத்திரிகை ஒன்று, கலந்துரையாடலில் கலந்து கொள்பவர்களின் பெயர்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்வு செய்தார் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் பெயர் இல்லை என்றும் கூறப்படுகிறது.   மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணி கொழும்பு சந்திப்புக்கு முதல்  தங்கள் சார்பில் இன்னொரு சந்திப்பை 15 பெப்ரவரியில் தமிழ்த்தேசிய தரப்புக்களுக்கு இடையே நடாத்த திட்டமிட்டுள்ளது. இதில் தமிழரசுக்கட்சி கலந்து கொள்ளாது என்று  பதிலளித்திருக்கிறார் தமிழரசு  “பதில் சிவஞானம்.” இந்த பின்னணியில் விவகாரம் பூதாகாரம் பெற்றதினால் சுவிஸ் தூதரகம்  கலந்துரையாடலை  மாற்றுத்திகதி இன்றி பின்போட்டுள்ளது. 

சுவிஸ் அரசாங்கத்தின் முயற்சிக்கான சூழலை புரிந்து கொள்ளல்.

எடுத்ததற்கெல்லாம் ஐ.நா.வையும், சர்வதேசத்தையும் கூப்பிடும் இவர்கள் இந்த முயற்சி வெறுமனே சுவிஸ் அரசாங்கத்தின் முயற்சியாக இருக்க முடியாது என்பதைக்கைகூட புரிந்து கொள்ளும் பூகோள அரசியல் அறிவைக் கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. உலகில் நடுநிலையான கொள்கையை அரசியல் அமைப்பில் கொண்டுள்ள சுவிஸ் இவ்வாறான விடயங்களை ஒரு பின்னணி இல்லாமல் செய்வதில்லை. இவ்வாறான கடந்த கால இராஜதந்திர அணுகு முறைகளில் சுவிஸ் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சாதிக்கவில்லை தான், என்றாலும் இறுதிவரை சம்பந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சர்வதேச மட்டத்தில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய அரசியலுக்கு மத்தியில் ஒரு பொறுப்பான பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறது.

ஈரான் – அமெரிக்க இராஜதந்திர உறவுகள் ஈரானிய புரட்சிக்கு பின்னர் இருந்து ஈரானின்  சுவிஸ் தூதரகம் ஊடாகவே பேணப்படுகிறது. மத்திய கிழக்கு -பலஸ்தீன விவகாரங்களில் சுவிஸ் காத்திரமான பாத்திரத்தை வகிக்கிறது. சூடான், நேபாளம் சமாதான முயற்சிகளில் சுவிஸின் பங்கு கணிசமானது. கோசோவோ தனிநாடு  பிரகடனத்தின் போது அதை அங்கீகரித்த முதலாவது உலக நாடு சுவிஸ். அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த மிச்சலின் கால்மி- ரே கோசவுக்கு சென்ற விமானத்தில் திரும்பும் போது போரில் பாதிக்கப்பட்ட கோசவோ அகதிளால் விமானத்தை நிரப்பினார். கோசோவோவில் சுவிஸ் சமாதான படையினர் நிலை கொண்டுள்ளனர். 

ஐ.நா.வில் பக்கம் சாரா நடுநிலைத்தன்மை காரணமாக உலகநாடுகளின் ஆதரவை பெற்ற ஒரு நாடு சுவிஸைத் தவிர வேறில்லை. இதனால் சுவிஸ்  அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக பேச முன்வந்திருப்பதை  தமிழ்தேசிய அரசியல் பத்தோடு பதினொன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதன் அர்த்தம் சுவிஸ் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நலன் சார்ந்த தீர்மானங்களோடு ஒரு போதும் ஒத்து ஓடவில்லை என்பதல்ல. அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நிகழ்ச்சி நிரலில் பங்காளியாகவில்லை என்பதும் அல்ல. ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக இன்னும் தடை செய்யாத சுவிஸ் அரசாங்கத்திற்கு இந்த சமாதான முயற்சியில் ஈடுபடுவதற்கான முழுத் தகுதியும் இருக்கிறது.

1. புயல் அனர்த்தங்களுக்கு பின்னரான பாதிப்புக்களை மீள் கட்டுமானம் செய்ய இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவிகளில் தங்கியிருக்கிறது. 

2. அதிகாரப்பகிர்விற்கான மாகாணசபைத்தேர்தலை நடாத்துமாறு ஒரு போதும் இல்லாதவாறு தென்னிலங்கை அரசியல் களநிலை மாறியிருக்கிறது. அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் மாகாணசபை சபைத் தேர்தலை கோருகின்றன.

3. இலங்கையின் சிறுபான்மை தேசிய இனங்கள் சார்பிலும் கட்சிகளும், பொது அமைப்புக்களும் இந்த கோரிக்கையை வலுப்படுத்தி இருப்பதுடன், தொடர்ச்சியான கலந்துரையாடல்களையும் நடாத்தி வருகின்றனர்.

4. எல்லாவற்றிற்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றிய ஜீ.பி.எஸ்.தூதுக்குழு இலங்கையில் நிற்கின்ற காலப்பகுதியில் இந்த சந்திப்பை சுவிஸ் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

5. ரில்வின் சில்வா குழுவினரின் இந்திய விஜய காலத்தில் இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டது.

6. ஐரோப்பிய உல்லாசப்பயணிகளுக்காகவும், முதலீட்டு பாய்ச்சலுக்காகவும் எந்த பிசாசு உடனும் உறவை பேண வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.

7. பிராந்திய,பூகோள அரசியலும்  இந்தியா-சீனா- பசுபிக் நாடுகள் மிக மோசமான மோதலில் இல்லை.

8. மார்ச் மாதத்தில் மனித உரிமைகளுக்கான கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இதில் இலங்கை புயல் அனர்த்தத்தை  அனுதாபமாக மாற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால் மீள்கட்டுமானமும், அரசியல் தீர்வுக்கான முயற்சிகளும் சமகாலத்தில் முன்னெடுக்க கூடியவை என்ற சர்வதேச நிலைப்பாடு சுவிஸ் வெளியுறவு அமைச்சு மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

தீர்வுக்கும், மாகாணசபை தேர்தலுக்கும் இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கக்கூடிய இந்த சூழலையே சுவிஸ் அரசாங்கம் தேர்வு செய்து செயற்படுகிறது. இதை குழப்பாமல் வாய்ப்பை பயன்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசிய தரப்பினருக்கு நிலத்திலும், புலத்திலும் உண்டு. 

தீர்வுக்கு குறுக்கே உள்ள இடைவெளி.

ஜெனிவா சந்திப்பு உரையாடல்களும், தமிழ் டயஸ்போராவின் கருத்துக்களும், என்.பி.பி / ஜே.வி.பி அரசாங்கத்தின் நிலைப்பாடும் ஜதார்தத்தில் இருந்து வெகுதூரத்தில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

என்.பி.பி. செயலாளர் நிஹால் அபேசிங்கவும், என்.பி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராய்ச்சியும் ஜெனிவாவில் வெளியிட்ட கருத்துக்கள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுக்கு அப்பால் ‘இலங்கையராதல்’ கருத்தியலை முதன்மைப்படுத்துகிறது. அர்த்தமுள்ள முள்ள அதிகாரப்பகிர்வு இன்றி இலங்கையராதல் சாத்தியமில்லை என்பதை மறுதலிக்கிறது. சர்வஜன வாக்கெடுப்பு மூலமான மக்களின் ஒருமித்த கருத்தை வலியுறுத்தும் ஹெட்டியாராச்சி “இலங்கையில் நாம் ஊக்குவிக்க வேண்டியது பன்மொழிச்சமூகத்தில் சகவாழ்வு, மக்கள் ஒவ்வொருவரும் மாற்று மொழிகளை கற்றல்”  என்பதாகும் என்று கூறுகிறார்.

ஜெனிவாவில் கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சியின் எம்.பி.சத்தியலிங்கம்”  சுவிஸ் சமஷ்டி முறையில் நகராட்சி மன்றங்களுக்கு கூட பொலிஸ் அதிகாரங்கள் உண்டு. இலங்கையில் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் இல்லை. வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மத்திய அரசாங்கம் மீளப்பெற முடியும்.  கூட்டாட்சி என்பது பிரிவினை அல்ல, என்பதை சுவிஸில் கண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

இது கஜேந்திரகுமார் ஜெனிவாவில் கூறியது. “சுவிஸ் அதிகாரப் பகிர்வை நாம் மனதில் கொள்கிறோம். ஆனால் கியூபெக் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்ட கனேடிய யோசனையை நாங்கள் பாராட்டுகிறோம்”  இங்கு அவர் எதைச் சொல்கிறார் என்பது இனியும் இரகசியமா…..?  இலங்கைச் சூழலில் அது சாத்தியமா….?

ஒரு காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வரும் போது, அந்த நாடு காலனித்துவம் தொடங்கிய நிலைக்கு மீள வழங்கப்படவேண்டும்.  அரசியல் தீர்வு என்பது 13A, கூட்டாட்சி, ஒற்றையாட்சி ஆகிய கட்டமைப்புக்களுக்குள் சுருக்கப்படக்கூடாது”  இப்படிக்கோருகிறது தமிழ் டயஸ்போரா.

இந்த கருத்துக்கள் ஆளுக்கொரு கருத்துக்களுடன் இருக்கும் தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒரு சாத்தியமான தீர்வை மாகாணசபை முறைமையை அடிப்படையாகக் கொண்டு அடைவதற்கு எவ்வளவுக்கு குறுக்கே நிற்கின்றன என்பதை காட்டுகிறது. இந்த கருத்து இடைவெளியை குறைக்கவே சுவிஸ் அரசின் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்கும்  தமிழ் மேலாண்மை அரசியல் கனவுகள் தடையாகவுள்ளன.

இந்த நிலையில் அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு பற்றி பேசுகிறது. ஒரு பகுதியினர் பாராளுமன்ற பெரும்பான்மையை நம்புகின்றனர். வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கை சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. சுவிஸ் சமூக ஜனநாயகக் கட்சி தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காக இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்காக சர்வதேச விசாரணையை கோருகிறது.‌ நிலத்திலும், புலத்திலும் தங்களைத்தாங்களே தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்ற கற்பனையில் ஈழத்தமிழர்களின் இருப்பை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தமிழர் அரசியல் உளவியல் சாதகமாக அமையப்போவது  யாருக்கு……?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *