— அழகு குணசீலன் —
தென்கிழக்காசியாவில் குறிப்பிடத்தக்க கல்வி அபிவிருத்தி உயர் குறிகாட்டியை , இலவசக் கல்வி ஊடாக சாதித்த தேசம் இலங்கை. கன்னங்கரா காலம் முதல் பல்வேறு கல்விச்சீர்திருத்தங்கள் , காலத்தேவை கருதி வெவ்வேறு அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் 1980 களின் இறுதியில் ‘மிஸ்டர் கிளீன் ‘ என்று வர்ணிக்கப்பட்ட அன்றைய இளம் கல்வி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் கல்வி சீர்திருத்த செயற்திட்டத்திற்கு பின்னர் சுமார் 45 ஆண்டுகள் கடந்து, கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹருணி அமரசூரியாவால் -என்.பி.பி. அரசாங்கத்தின் சார்பில் இன்றைய கல்விச் சீர்திருத்தம் முன்வைக்கப்படுகிறது.
உண்மையில் இந்தச் சீர்திருத்த சிந்தனை நல்லாட்சி, மற்றும் கோத்தபாய அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதன் தொடர்ச்சி. இது கல்விச் சீர்திருத்தம் ஒன்றின் தேவை கடந்த இரு தசாப்தங்களுக்கும் முன்னர் உணரப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது என்பதை கூறுகிறது. இதனால் “கல்விச் சீர்திருத்தம் ஒன்று தேவையா…..?” என்ற கேள்வியை அரசியல், சமூக, பொருளாதார தரப்புக்கள் எவையும் எழுப்பவில்லை.
அப்படியானால் இன்றைய கல்விச்சீர்திருத்த முன்மொழிவுகள் படாதபாடு படக்காரணம் என்ன? இது ‘அரசாங்கம்’ என்பதற்கு அப்பால் ‘அரசு’ என்ற அடிப்படையில் அரசாங்க, எதிர்க்கட்சிகளும், கல்விசார் தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்களும், நிறுவனங்களும் ஒன்றிணைந்து தோளில் தூக்கி சுமக்க வேண்டிய பொறுப்பு. ஆனால் இடம்பெறும் நிகழ்வுகள் இதற்கு மாறான ஒரு திசையில் செல்வதை அவதானிக்க முடிகிறது.
கல்விச் சீர்திருத்தம் பற்றிய விடயதானங்களை பேசாது கல்வியமைச்சர் மீது எதிர்க்கட்சியினரும், சிங்கள -பௌத்த அடிப்படை வாதிகளும் , சமூக ஊடகங்களும் அள்ளி வீசுகின்ற அநாகரிகமான தனிநபர் தாக்குதல்கள் அதுவும் ஒரு பெண்ணாக ஹருணி அமரசூரிய எதிர்கொள்ளும் அபாண்டமான பழிகள் எந்த ஒரு நாகரிக சமூகத்தாலும், அரசியலாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால் அதற்காக அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம் தவறுகள் அற்றது என்று சால்வை போடுவதற்கும் இல்லை. சீர்திருத்தங்களுக்கு கல்வி அமைச்சர் பொறுப்பு கூறவேண்டியவர் என்றாலும், முழுமையான கூட்டுப் பொறுப்பு அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவைக்கும் இருக்கிறது. இந்த பொறுப்பை அரசாங்கமும், அமைச்சரவையும் கருத்தில் கொண்டார்களா? என்ற கேள்வியும் தவிர்க்க முடியாததாகிறது.
ஹருணி அமரசூரிய மீதான சேறு பூசல்களுக்கான வழியை படித்தவர்களாலும், கலாநிதிகளாலும் நிரம்பி வழியும் பாராளுமன்றமும், அமைச்சரவையும், ஜனாதிபதியும் வகுத்துக் கொடுத்துள்ளனர் என்றே கொள்ளவேண்டும். இதன் விளைவால் கல்வி அமைச்சர் தனித்து தன் மீது பூசப்படும் சேற்றை கழுவ வேண்டியுள்ளது. ஹருணிக்கு ஆதரவாக கல்விசார் நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகளை விடவும், காத்திரமாக இச்சீர்திருத்தத்தின் முக்கிய பங்காளிகளான அமைச்சரவையும், ஜனாதிபதியும் அவருக்கு கைகொடுக்க தவறிவிட்டனர்.
அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து வந்த துறைசார் சீர்திருத்த குறைபாடுகள், விமர்சனங்களை அரசாங்கம் காது கொடுத்து கேட்காமல் மீண்டும்…. மீண்டும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்ற “பாராளுமன்ற பெரும்பான்மை இறுமாப்பு” ஹருணியை சரியான நேரத்தில் காப்பாற்றுவதற்கு பதிலாக அவர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கும், சேறு பூசல்களுக்கும் காரணமாகிவிட்டது.
அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களில் கண்டு பிடிக்கப்பட்ட தவறுகளை அரசாங்கம் மூடிமறைக்க முயற்சி செய்ததன் மூலம், கொடுக்கப்பட்ட கால இடைவெளியில் கல்வி அமைச்சர் அநாகரிகமான தனிநபர் தாக்குதலை எதிர் கொள்ள வேண்டி இருந்தது.
(*) ஆறாம் வகுப்பு ஆங்கில மொடுயூலில் உள்ள பொருத்தமற்ற இணையத்தள இணைப்பு.
(*) பௌத்த பாடத்தில் பேசுபொருளாகி இருக்கின்ற தவறான தர்ம சக்கரம்.
(*) கல்வி அமைச்சரை சந்தித்த தமிழ்தரப்பு வரலாற்று பாடத்தில் தமிழர் வரலாறு உள்வாங்கப்படவில்லை என்றும், அது உள்வாங்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளமை. சீர்திருத்தத்தில் வரலாறு விருப்பத்தேர்வு பாடமாக பட்டியல் இடப்பட்டுள்ளமை.
(*) துறைசார் தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர் அமைப்புக்களோடு இது தொடர்பான கலந்துரையாடலை அரசாங்கம் தவிர்த்தது.
(*). வெளிப்படைத்தன்மை இன்றியும், அவசர அவசரமாகவும், சிவில் சமூக அமைப்புக்களை புறக்கணித்து இது விடயத்தில் அரசாங்கம் செயற்பட்ட விதம் ஜனநாயகத்திற்கும், சமூக அமைப்புக்களின் கருத்துச்சுதந்திரத்திற்கும் முரணான ஒரு செயலாக கொள்ளப்படுகிறது.
(*) கல்விசார் கட்டமைப்புக்களை விடவும், பாராளுமன்ற எதிர்கட்சி ஜனநாயகத்தைவிடவும், கொழும்பு மைய அரசியலை கடந்த 76 ஆண்டுகள் போன்றே இந்த இடதுசாரி (?) அல்லது சிலர் கூறுவது போன்று இடதுசாரிகளை கொண்ட (?) ஆட்சியிலும் பௌத்த பீடமே தீர்மானங்களை எடுப்பதிலும், அரசாங்கத்திற்கு வழிகாட்டுவதிலும் வாக்களித்த மக்களை விடவும் சக்திவாய்ந்ததாக உள்ளது என்பது இந்த விடயத்திலும் நிருபிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஹருணி அமரசூரிய சில தெரிவுசெய்யப்பட்ட பௌத்த பீட தலைமைகளை சந்தித்தார். சந்திப்பிற்கு பின்னர் அவர் பொது வெளியில் என்ன கூறியிருந்தாலும், பௌத்த தலைவர்கள் தவறுகள் குறித்து திருப்தியடையவில்லை. அவை திருத்தப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இலங்கையின் பாரம்பரிய விழுமியங்கள், மதகலாச்சார, பண்பாட்டு நெறிமுறைகள் பற்றியும், இது விடயத்தில் மேற்குலக கல்விமுறையின் பொருத்தப்பாடு பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டதாக எதிர்க்கட்சிகளுக்கு கசிந்துள்ளது. சீர்திருத்தம் பின் போடப்படும் என்பதால் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவசரம் காட்டவில்லை.
சீர்திருத்தம் பின்போடப்படப் போகிறது என்ற இந்தச் செய்தி பௌத்த பீடங்களோடு நெருக்கமான உறவைப் பேணும் பௌத்த -சிங்கள தேசியவாதி விமல் வீரவன்சவுக்கும் எட்ட அவர் சத்தியாக்கிரக போராட்டத்தை அறிவித்தார். சில மணித்தியாலங்களுக்ககு முன்னர் கல்விச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று சூளுரைத்த அநுரவும் அவரது அரசாங்கமும் அமைச்சரவைக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய மொடுயூலை நடைமுறைப்படுத்துவதை 2027 க்கு பின்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதை அரசாங்கம் எப்பவோ செய்திருந்தால் ஹருணி காப்பாற்றப்பட்டிருப்பார் – கழுவப்பட்டிருப்பார். அரசாங்கம் சிவில் சமூக அமைப்புக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தாகவும் இருந்திருக்கும். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்பது ஜதார்த்த, ஜனநாயக அரசியல் அல்ல. இதனால் தான் சில சமூக அமைப்புகள் கொத்தபாயாவின் ‘சேதன பசளை திட்டத்துடன்’ இதனை ஒப்பிடுகின்றன. அதுவும் மக்களின், விவசாயம் சார் பங்காளிகளின் கோரிக்கைகளை புறம்தள்ளி, மேற்குலக சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வத்தை பூர்த்தி செய்ய, உள்ளூர் களநிலையை கவனத்தில் எடுக்காது அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் போட்ட திட்டவரைபு. இதை அன்று எதிர்கட்சியில் இருந்த ஜே.வி.பி. எப்படி விமர்சித்தது என்பதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அரசாங்கத்தின் நல்ல ஒரு நோக்கம், அது செயற்படுத்தப்படும் விதத்தில் தவறிழைத்து விட்டது. இந்த நாட்டின் முக்கியமான 76 ஆண்டுகால சிறுபான்மை தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண ஏன்? அவசரப் படுகிறீர்கள்? எங்களுக்கு ஐந்தாண்டுகள் உள்ளன என்று கூறுகின்ற அரசாங்கம், இவ்வாறான அவசரக்குடுக்கை தவறுகள் மூலம் இறுதியில் அரசியல் தீர்வையும் பௌத்தபீடங்களின் தலையில் கட்டி விடப்போகிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த நாட்டில் இனி இனவாதத்திற்கு இடமில்லை என்று கூறுகிறார்கள். இந்த வார்த்தைகளில் உள்ள உண்மைத்தன்மை என்ன …? கல்விச் சீர்திருத்த விடயத்தில் கல்வியை விடவும் கட்சி அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது போல் இனப்பிரச்சினைக்கான தீர்விலும் இது இடம்பெறாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
ரணில் விக்கிரமசிங்க காலத்தில் கல்விச் சீர்திருத்தம் குறித்து வெள்ளை அறிக்கை சமர்பிக்கப்பட்டு முழுமையாக சம்பந்தப்பட்ட போது சகல தரப்பாலும் விமர்சனங்கள், ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு , வெளிப்படைத்தன்மையுடன் நீக்கப்பட, திருத்தப்பட, சேர்கப்பட வேண்டிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. அதற்கான கால அவகாசமும் இருந்தது. இதனால் தான் வெள்ளை அறிக்கை அற்ற இந்த அவசர நடவடிக்கையை சீர்திருத்தங்கள் ஓட்டப்பந்தயம் அல்ல மரதன் ஓட்டம் என்று ஊடகங்கள் விமர்சிக்கின்றன.
மேற்கு நாடுகளில் பதினாறு வயதுக்குட்பட்ட மாணவர்களின் சமூக ஊடகப்பயன்பாட்டை தடைசெய்யும் சட்டங்களை நிறைவேற்றி அவர்களை பாதுகாக்கின்றன. அவுஸ்திரேலியாவில் இச் சட்டம் நடைமுறைக்கு வந்து முதல் நாளில் 5,50,000 கணக்குகள் மெட்டாவால் தடுக்கப்பட்டன. முதல் வாரத்தில் இன்டர்கிராம் கணக்குகள் 3,30,639, பேஸ் புக் 1,73,497 கணக்குகள் தடுக்கப்பட்டன. அடுத்த டென்மார்க் இது விடயத்தில் முன் மாதிரியாக செயற்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் விடயம் விவாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் தடை இருக்கிறது. இப்படி இருக்கையில் நாம் எங்கு போய்க்கொண்டிருக்கின்றோம். ?
நியாயமான மற்றும் சமநிலையான வரலாற்று பாடத்திட்டம் என்பது மேலதிக விருப்பத்தேர்வு அல்ல. இலங்கை ஏன் இப்படி இருக்கிறது? என்பதற்கான விமர்சன சிந்தனையை வளர்க்கூடியது. இதனால் வரலாற்றை ஒரு விருப்பப்பாடமாக முக்கியத்துவம் குறைப்பது சமூகத்தை அதன் வேர்களில் இருந்து துண்டிக்க வழிவகுக்கும் என்ற சமூக வரலாற்று கல்வியாளர்களின் வாதம் ஏற்புடையதே.
இதற்கிடையில் ஜனாதிபதி அவசர அவசரமாக கல்விசார் அமைப்புக்களின் சில பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கெனவே குறிப்பிட்ட சீர்திருத்தம் குறித்து கலந்துரையாடல் வேண்டும் என்று கோருகின்ற அமைப்புக்களை தவிர்த்த ஜனாதிபதியின் செயற்பாடு ஒரு பிரித்தாளும் தந்திரோபாய அணுகல் என்று மறுதரப்பால் விமர்சிக்கப்படுகிறது. ஜனாதிபதியை சந்தித்த குழுவில் இருந்தவர்களுள் ஒருவர் அகில இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜலவல பன்சேகர தேரர். சர்ச்சைக்குரிய கல்விச்சீர்திருத்தத்தை ஜனாதிபதிக்கு முன்னால் கடுமையாக விமர்சனம் செய்த அவர் இந்த தவறுகளை செய்தவர்களை கர்மா சும்மா விடாது என்றும், கொழும்பு பேரா வாவியில் தவளைகளாகவும், கண்டி வாவியில் ஆமைகளாகவும் பிறப்பார்கள் என்றும் சாபமிட்டுள்ளார்.
கல்விச் சீர்திருத்த தவறுகளை விமர்சனம் செய்கின்றவர்கள் எல்லோரும், எவரும் கல்விச் சீர்திருத்தம் தேவையற்றது என்று கூறவில்லை. அதன் உள்ளடக்கம் பற்றியே பேசுகிறார்கள். இந்த விமர்சனங்களை புரிந்து கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்பை அரசாங்கமும் எதிர்க்கட்சி கட்சிகளும், கல்விசார் அமைப்புகளும், நிறுவனங்களும் கவனத்தில் கொள்ளவதிலேயே. சீர்திருத்தின் அடைவு
தங்கியிருக்கிறது.
