— எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் —
(கிழக்கின் பெருந்தலைவர் செ.இராஜதுரை அவர்களின் மறைவை முன்னிட்டு அவரது பெருவாழ்வு பற்றிய பல்வேறு தகவல்களடங்கிய இக்கட்டுரை இன்றைய இளைஞர்களின் அறிதலுக்காக பிரசுரமாகின்றது)
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே எதிர்த்து நின்ற ஒரு புரட்சிகர இளைஞனாக தனது 18 வது வயதிலிருந்தே பொலிசாரால் தேடப்பட்டவர் இராஜதுரை ஆகும்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட ஆறாம் ஜோர்ச் மன்னரின் பிறந்ததின விழா இலங்கையெங்கும் கொண்டாடப் பட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மட்டக்களப்பு நகரில் அவ்விழாவை நடாத்தக்கூடாது என்று திட்டமிட்ட பல பள்ளி மாணவர்களுக்கு தலைமையேற்று மட்- மத்தியகல்லூரியின் உயர்தர மாணவனாக இருந்த இராஜதுரை களமிறங்கினார். நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த கறுப்புக்கொடிகள் வீதிகளை அலங்கரித்தன. யார் இந்த சதிகாரர்கள் என்ற கேள்வியோடு சம்பந்தப்பட்டவர்கள் போலீசாரால் தேடப்படுகின்றார்கள்.
இலங்கையின் சுதந்திரத்திற்கான கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் சுதந்திர உணர்வையும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கலாசாரத்தையும் மட்டக்களப்பு மக்களிடம் பரப்புவதில் இருந்தே இராஜதுரையின் அரசியல் பிரவேசம் தொடங்கி விட்டது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு மட்டுமன்றி தமிழர்களிடையே காணப்பட்ட சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராக தன் இளவயதிலிருந்தே கிளெர்ந்தெழுந்தவர் இராஜதுரை ஆகும். அதன்காரணமாக சாதி வேறுபாடுகள் எமது சமூகத்தை பிடித்தாளும் பெருவியாதி என்ற ஈ.வெ.பெரியாரின் கர்ஜனையை அன்றே மட்டக்களப்பு மண்ணில் பிரதிபலிக்க முன்வந்தவர் இராஜதுரைதான். அவர் ஆரம்பித்த “அறிவே கடவுள்” எனும் பகுத்தறிவு இயக்கம் ஏற்படுத்திய சமூக சீர்திருத்தங்கள் பற்பலவாகும். பல மதுச்சாலைகள் மூடப்படுவதற்கும், கடவுளின் பெயரால் நிகழ்த்தப்பட்ட மிருக பலிகள் நிறுத்தப்படுவதற்கும், தீமிதித்தல் போன்ற சாதனைகள் எல்லாம் தெய்வங்களின் கிருபைகள் அல்ல என்று நிரூபிப்பதற்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மறுக்கப்பட்டிருந்த பல ஆலயங்களின் கதவுகள் திறக்கப்படுவதற்கும் இராஜதுரை ஆரம்பித்த ‘அறிவே கடவுள்’ எனும் பகுத்தறிவு இயக்கம் கடுமையாக போராடியது. அதற்காக அவர் பட்ட துன்பங்களும் எதிர்கொண்ட சவால்களும் அளவு கணக்கற்றவை. கல்லெறி முதற்கொண்டு தீவைப்பு வரை ‘அறிவே கடவுள்’ இயக்கத்தினரின் பிரசன்னங்களின் போதெல்லாம் பல எதிர்ப்புகள் தோன்றின. அவற்றையெல்லாம் அறிவார்ந்த ரீதியில் எதிர்கொள்ளத்தக்க பகுத்தறிவு பிரச்சாரத்தை இலங்கை மண்ணில் பாய்ச்சுவதற்காக இந்தியாவிலிருந்து இராஜதுரை பல பேச்சாளர்களை அழைத்துவந்தார்.
என்.எஷ்.கிருஷ்ணன்போன்ற பகுத்தறிவு கலைஞர்களை அழைத்துவந்து கலைநிகழ்ச்சிகள் மூலமான விழிப்புணர்வுகளையும் டோபிடோ ஜனார்த்தனம், அருப்புக்கொட்டை இராமசாமி போன்றோர்களை அழைத்துவந்து சுயமரியாதைப் பிரச்சாரங்களையும், மட்டக்களப்பில் மட்டும் அல்ல மலையகத்திலும் பரப்புவதில் இராஜதுரை முன்நின்று உழைத்தார். மாமாங்க ஆலயப்பிரவேச முனைப்பின்போது ஏற்பட்ட எதிர்ப்புகளை வெல்ல ஆலய முன்றலை ஒரு யுத்தகளமாக்கி தளபதியாக நின்று களமாடியவர் இராஜதுரையாகும்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ் நாட்டில் உக்கிரம் பெற்றிருந்தபோது இராஜாஜி தலைமையிலான காங்கிரசு ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தவர் அவினாசிலிங்கம் என்பவராவார். அவரது மட்டக்களப்பு வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டி பகிஷ்கரிப்பு போராட்டம் நடாத்தியவர் இந்த இராஜதுரையாகும். மட்டக்களப்பானின் தமிழ் உணர்வை அன்று பிரதிபலித்து இந்தியாவரை இச்செய்தியை கொண்டு செல்ல வழிவகுத்தவர் மட்டக்களப்பு வாலிபர் சங்கத்தலைவராக இருந்த இந்த இராஜதுரைதான்.
தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பொதுவுடைமை தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களை மட்டக்களப்பிற்கும் அழைத்துவந்து கம்யூனிச சித்தாந்த கொள்கைகள் பற்றி உரையாற்றச் செய்தவர் இராஜதுரை. பிராஜாவுரிமை சட்டத்தின் ஊடாக 10 லட்சம் தோட்டத்தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கி தமது அமைச்சு பதவிகளை காப்பாற்றிக்கொள்ள தமிழ் தேசியத் தலைமைகள் தொழிலாளர் விரோத அரசோடு கூடிக்குலாவிக்கொண்டிருந்தபோது லங்கா சமா சமாஜக் கட்சியின் தாபகர்களில் ஒருவரான என்.எம்.பெரேராவை அழைத்து மட்டக்களப்பு மக்களுக்கு தொழிலாளர்களின் உரிமை பற்றியும், சமதர்மக் கொள்கை பற்றியும் உரையாற்றச் செய்தவர் இந்த இராஜதுரைதான். பிராஜவுரிமைச் சட்டத்தின் மூலம் நாடற்றவர்கள் ஆக்கியதன் காரணமாக 1952 ஆம் ஆண்டு தேர்தலில் தமது பாராளுமன்ற பிரதிநிதிகளை இழந்து நின்ற மலையக மக்களுக்காக சத்தியாக்கிரகம் செய்து பிரதமரிடம் மனுக்கொடுக்கச் சென்றனர் இலங்கை இந்திய காங்கிரசுக்காரர்கள். அவ்வேளை தொண்டமான், அசீஸ், இராஜலிங்கம், வெள்ளையன் போன்றோருடன் மட்டக்களப்பில் இருந்து தனியாகச் சென்று சத்தியாக்கிரகத்தில் பங்கெடுக்கும் அளவிற்கு இராஜதுரை கொண்டிருந்த தொழிலாளர் வர்க்கம் மீதான அக்கறை அபரீதமானது.
அரசியல் சமூக செயற்பாட்டு வீரனாக மட்டுமல்ல, கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர் இராஜதுரை. 1948 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் நடாத்திய மாதாந்த பத்திரிகையின் பெயர்’லங்கா முரசு’ என்பதாகும். அதனைத் தொடர்ந்து ‘முழக்கம்’, ‘தமிழகம்’, ‘சாந்தி’, ‘தேன்நாடு’, ‘பூமாலை’, பாடுமீன்,’உதயசூரியன்’ என்கின்ற சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து செயற்பட்டவர். தமது எழுத்துச் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ள ‘இளங்கோ’ அச்சகம் எனும் ஒரு அச்சகத்தினை உருவாக்கி மட்டக்களப்பு மண்ணில் வாசிப்பு பாரம்பரியத்திற்கு வளம் சேர்த்தவர் இராஜதுரையாகும்.
சிறுகதை, கவிதை துறைகளில் மட்டுமல்ல மட்டக்களப்பில் நவீன நாடக முயற்சிகளுக்கான முன்னோடிகளில் ஒருவராகவும் அவர் இருந்தார். கண்ணகி, சங்கிலியன்….. என்று பல மேடை நாடகங்களை இயக்கி அவற்றில் முன்னணிப் பாத்திரங்களை தாமே நடித்ததன் ஊடாக நடிப்புத்துறையிலும் கால் பதித்தவர் இந்த இராஜதுரை. “ராசாத்தி” என்னும் குறுநாவல், “மிஸ் கனகம்” என்கின்ற சிறுகதைத் தொகுப்பு, “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்” என்கின்ற சொற்பொழிவுகளின் தொகுப்பு, “அன்பும் அகிம்சையும்- தேசிய ஒற்றுமைக்கு வழி” என்கின்ற கட்டுரைத் தொகுப்பு என்று பல்வேறு நூல்களை வெளியிட்டவர். அத்தோடு விபுலானந்தரின் மதங்க சூளாமணி என்கின்ற நூலை மறுபதிப்பு செய்தார். இவ்வாறாக அவர் இலக்கியத்துக்காக ஆற்றிய பணிகளை விதந்தோதும் ‘இலங்கை எழுத்தாளர்கள்’ என்கின்ற நூலினை எழுதிய கனக.செந்தில்நாதன் இராஜதுரை பற்றி ‘இராஜதுரை அரசியலுக்கு ஆதாயமானார், இலக்கியத்திற்கு நட்டமானார்’ என்று குறிப்பிடுவார்.
இதுபோன்றதொரு இராஜதுரையின் வரலாற்று பின்னணியின் காலகட் டத்தில்தான், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து அடுத்து என்னசெய்வது என்கின்ற கேள்வியுடன் நின்றார். அவ்வேளையில் மட்டக்களப்பில் தீவிரமாகவும், துடிப்புடனும் இயங்கிக்கொண்டிருந்த இராஜதுரையையை செல்வநாயகம் அணுகினார். பின்னர் தமிழரசுக்கட்சி எனும் புதிய கட்சிக்கான ஆலோசனைகளிலும், கொள்கைத் திட்டங்களை வடிவமைப்பதிலும் செல்வாவுடனேயே இருந்து பங்காற்றினார். கொழும்பில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அங்குரார்ப்பனக் கூட்டத்திற்கு மட்டக்களப்பில் இருந்து கலந்துகொண்ட ஐந்துபேருக்கும் முன்னணியில் இருந்து செயற்பட்டவர் அவர். அவரூடாகவே தமிழரசுக்கட்சி கிழக்கு மாகாணத்தில் தமது முதலாவது காலடியை எடுத்து வைத்தது. சுருங்கச் சொன்னால் தமிழரசுக் கட்சியை மட்டுமல்ல செல்வநாயகத்தை கூட கிழக்கு மாகாணத்துக்கு அறிமுகம் செய்தவர் இராஜதுரையவர்கள்தான்.
1952 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி எதிர்கொண்ட முதலாவது தேர்தல் இடம் பெற்றது. அதற்கான வேட்பாளர்களைத் தேடி மட்டக்களப்பின் மூலை முடுக்கெல்லாம் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பயணித்தார். படித்தவர்கள், பட்டதாரிகள், பணக்காரர்கள், போடிமார்கள் என்று பலரது வீடுவீடாக ஏறி இறங்கிய செல்வநாயகத்துடன் யாரும் முகம்கொடுத்துப் பேசக்கூட தயாராயிருக்கவில்லை. குறுமண்வெளித்துறையில் இருந்து தோணிமூலம் மண்டூர் சென்ற செல்வநாயகத்தை மண்டூர் மண்ணிலேயே கரையிறங்கவிடாமல் திருப்பியனுப்பியவர்கள் படுவான்கரை மக்கள். அந்தளவிற்கு மாகாணபேதம் ஆழமாயிருந்த காலமது. இறுதியில் கல்குடா தொகுதியில் எஸ்.சிவஞானமும், மட்டக்களப்பு தொகுதியில் ஆர்.பி.கதிர்காமரும் இராஜதுரையின் முகத்திற்காக போட்டியிட முன்வந்தனர். ஆனபோதும் கடைசி நேரத்தில் “யாழ்ப்பாணக் கட்சியில் போட்டியிட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என்பதைக் காரணம் காட்டி ஒதுங்கிக்கொண்டார்கள். பட்டிருப்பில் பேருக்குக்கூட யாருமே கிடைக்கவில்லை.
திருகோணமலையில் மட்டும் இராஜவரோதயம் போட்டியிட முன்வந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பில் யாருமே போட்டியிட முடியாத நிலையில் திருகோணமலை மாவட்ட பிரச்சார வேலைகள் இராஜதுரையிடம் ஒப்படைக்கப்பட்டன. திருகோணமலையில் தமிழரசுக்கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டமே கல்லெறி தாங்கமுடியாது கலைந்து போனது. ஆனாலும் இராஜதுரையின் நெஞ்சுரமும் சொல்வீச்சும் திருகோணமலை மக்களை தமிழரசுக்கட்சியை திரும்பிப்பார்க்க வைத்தது. இராஜவரோதயத்தின் வெற்றிக்காக இராஜதுரை சுமார் அறுபது கூட்டங்களை நடத்தி முடித்தார். தமிழரசுக்கட்சி எதிர்கொண்ட முதலாவது தேர்தலில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கூட தோற்றுப்போனார். திருகோணமலையில் இராஜவரோதயம் வென்றார். “உன் தீந்தமிழ் பேச்சாலேதான் நாம் திருமலையை வென்றோம்” என்று எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இராஜதுரையை பாராட்டினார். இவ்வாறாகத்தான் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சியை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுப்பதில் இராஜதுரை ஆற்றிய பங்கு ஒப்பற்றதாய் இருந்தது. 1952 ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலுமாக தலா ஒரு பிரதிநிதியை மட்டும் தமிழரசுக்கட்சி வெல்ல முடிந்தநிலையில் பரந்தளவில் கட்சி தோல்வியையே தழுவியிருந்தது. இவ்வாறானதொரு நிலை இனியொருபோதும் இடம்பெற்றுவிடக்கூடாது என்று பெரும் கவலை கொண்டிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுக்கு கிழக்கின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் இராஜதுரையாகும்.
அடுத்துவந்த 1956 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் தமிழரசுக்கட்சியை போட்டியிட வைப்பதிலும் இராஜதுரை மும்முரமாக உழைத்தார். கல்குடாவில் மாணிக்கவாசகரும், பட்டிருப்பில் இராஜமாணிக்கமும் இராஜதுரையால் தமிழரசுக்கட்சிக்காக உள்வாங்கப்பட்டனர். மட்டக்களப்புத் தொகுதியில் தானே முன்வந்து போட்டியிடத் துணிந்தார்.
பகுத்தறிவு இயக்கம், மட்டக்களப்பு முற்போக்கு வாலிபர் சங்கம், வரியிறுப்பாளர்கள் சங்கம், இலக்கியம், எழுத்துலகம் என்று விரிந்துகிடந்த தனது ஆற்றல்களையும் அனுபவங்களையும் தமிழரசுக்கட்சிக்காக தாரைவார்த்தவர் இராஜதுரையாகும். தமிழரசுக்கட்சியால் வளர்ந்தவர்கள் பலர் உண்டு. இராஜதுரை தமிழரசுக்கட்சியால் வளர்ந்தார் என்பதைவிட இராஜதுரையால்தான் தமிழரசுக்கட்சி வளர்ந்தது என்பதே சாலப்பொருத்தமும் சத்தியமுமாகும்.
1956 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியின் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுக்காசு இழக்கவைத்து அபார வெற்றியீட்டினார் இராஜதுரை. அன்று தொடங்கி ஆறு தேர்தல்களில் தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் வெற்றியீட்டிய தமிழ் தலைவர்கள் இராஜதுரையை தவிர வேறு யாருமிலர்.
மட்டக்களப்பு தொகுதியை இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கும் முயற்சியில் இராஜதுரை இறங்கினார். தேர்தல் ஆணையாளர் தல்கொட பட்டியா முன்னிலையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்காக சாட்சியம் அளித்து மட்டக்களப்பில் இரட்டை அங்கத்துவ தொகுதியின் அவசியம் பற்றி விளக்கிக் கூறினார். அதன்பலனாகவே மட்டக்களப்பு தொகுதியானது இரட்டை அங்கத்துவ தொகுதியாக்கப்பட்டது
1956 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான போது மட்டக்களப்பு நகரின் கூலித்தொழிலாளர்களும், நகரசுத்தித் தொழிலாளர்களும் உரிய வசிப்பிடம் இன்றி அல்லலுற்றதை கண்ணுற்றார். புகையிரத நிலையத்தை அண்டிய அரச காணிகள் அனைத்தையும் காடுவெட்டி குடிசைகள் அமைக்கத் தூண்டினார். அதற்காக அரச அதிகாரிகளால் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார். தொடர்ந்தும் தனது பாராளுமன்றப் பதவியை பயன்படுத்தி பாராளுமன்றில் தொழிலாளர்களின் காணிப்பிரச்சனையை எழுப்பியதின் ஊடாக அன்றைய காணிஅமைச்சர் சி.பி.டி.சில்வாவைக் கொண்டு அவர்களுக்கு காணி உறுதி வழங்கச்செய்தார். அந்த குடியேற்றப் பிரதேசங்கள் தான் இன்று இருதயபுரம் போன்ற பெரும் பிரதேசமாக எழுந்துநிற்கின்றன.
கடல் கடந்த நாடுகளில் நிறுவப்பட்ட முதலாவது காந்திசிலையை மட்டக்களப்பு மாநகரில் இராஜதுரையே திறந்துவைத்தார். 1960 ஆம் ஆண்டுவரை சிறுநகரசபையாக இருந்துவந்த மட்டக்களப்பை பெருநகரமாக மாற்ற இராஜதுரை அவர்கள் பெருமுயற்சி எடுத்தார். மட்டக்களப்பின் புறநகர் பகுதியாக இருந்துவந்த கல்லடி கிராமசபைக்குட்பட்ட கிராமங்களை மட்டக்களப்பு நகருடன் இணைத்து மாநகரசபையாக மாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு முன்னே வெறிச்சோடிக்கிடந்த முற்றவெளி மைதானத்தை புனநிர்மானம் செய்து ஸ்டேடியங்கள் அமைத்து மட்டக்களப்பின் விளையாட்டுத்திறனை தேசிய அளவில் பரிணமிக்கச் செய்த அருட்தந்தை வெபர் அவர்களின் பெயரை அந்த மைதானத்துக்கு சூட்டி மகிழ்ந்தார்.
1961 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் முதற்தடவையாக மே தினக்கூட்டம் ஒன்றை மட்டக்களப்பில் நடத்தி சாதனை படைத்தவர் இராஜதுரை. வைரமுத்து என்கின்ற ஒரு சாதாரண தொழிலாளியை அம்மேதின ஊர்வலத்திற்கு தலைமை ஏற்கச்செய்து தமிழரசுக்கட்சியின் பாரம்பரிய மேட்டுக்குடிப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார். அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் சார்பிலான அந்த மே தினக்கூட்டத்தை கம்யூனிசக் கட்சிக்காக மட்டக்களப்பில் அயராது பாடுபட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணகுட்டியை கௌரவிக்கும் விழாவாக மாற்றினார்.
மட்டக்களப்பு மக்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளையாற்றி தொடர்ச்சியாக பாடுபட்டுவந்த இராஜதுரைக்கு உரிய கௌரவம் கட்சியில் வழங்கப்படவில்லை. தந்தை செல்வா இறந்தபின்னர் தலைமைப் பொறுப்புக்கு தகுதியாக இருந்த இராஜதுரை திட்டமிட்டவகையில் கட்சியால் ஒதுக்கப்படத் தொடங்கினார். கட்சியின் உருவாக்க காலத்தில் இருந்து தந்தை செல்வாவின் வலதுகையாக செயற்பட்டுவந்த இராஜதுரை அவர்கட்கு தந்தையின் மறைவை அடுத்து தலைமைப்பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உரிமை மறுக்கப்பட்டது மட்டுமல்ல அவரை கட்சியில் இருந்து நீக்கிவிடுவதற்கான சதிகள் மெதுமெதுவாக பின்னப்பட்டன.
1977 ஆம் ஆண்டு தேர்தலையொட்டி கட்சியில் அவருக்கு தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு கூட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கட்சிக்காக இராஜதுரையால் வளர்த்தெடுக்கப்பட்ட காத்தமுத்து சிவானந்தன் எனும் இளைஞனுக்கு பதவியாசை ஊட்டி மட்டக்களப்பு தொகுதியில் இராஜதுரையை போட்டியிடாமல் தடுக்கும் முயற்சி அமிர்தலிங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இராஜதுரையை தன் அரசியல் குருவாகவே எண்ணிவளர்ந்த காசி ஆனந்தன் மட்டக்களப்பு தொகுதியில் “நான் களையெடுக்கப்போகின்றேன்” என்று கட்சிப்பத்திரிகையான சுதந்திரனில் அறிக்கை விட்டார். கட்சிக்குள்ளேயே இரண்டு பேரை மட்டக்களப்பு தொகுதியில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு முட்டிமோத வைக்கும் சதி தீட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இராஜதுரை கட்சித்தலைமையை அணுகியபோது அதனை தேர்தல் நியமனக் குழு பார்த்துக்கொள்ளும் என்று அமிர்தலிங்கம் பதிலளித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வேளை வந்தபோது 1952 ஆம் ஆண்டில் இருந்து 1970 ஆம் ஆண்டுவரை கட்சியின் தேர்தல் நியமனக் குழு உறுப்பினராக இருந்து வந்த இராஜதுரை அப்பதவியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைமை ஒருதலைப்பட்சமாக அறிவித்தது. இது இராஜதுரைக்கு விழுந்த முதுலாவது அடியாகும். அதுமட்டுமல்ல தொடர்ச்சியாக ஐந்து தேர்தல்களில் (இருபது ஆண்டுகள்) வெற்றியீட்டிய இராஜதுரையை தேர்தல் நியமனக் குழுவின் முன்னர் நேர்முகப்பரிட்சைக்கு ஆஜராகுமாறு அழைத்து அவமானப்படுத்தினார் அமிர்தலிங்கம். அந்த நேர்முகப்பரிட்சைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் செல்லக்கூடாது என்றும் ஆதரவாளர்கள் இராஜதுரையை வேண்டிக்கொண்டனர். ஆனபோதிலும் கட்சி ஒழுங்கும், கட்சியின் நன்மையையும் கருதி தேர்தல் நியமனக்குழு முன்னர் ஒரு புதுமுக வேட்பாளரைப்போன்று இராஜதுரை ஆஜராகினார். அங்கு மட்டக்களப்பு தொகுதிக்கு புதிய வேட்பாளர்கள் எவரையும் போடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதற்கான காரணங்களை எடுத்துச் சொன்னதோடு இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் ஒரு பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்குரியதாகவே இருந்துவரும் நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் இரண்டு வேட்பாளர்கள் களத்தில் நிற்பதுவும் முஸ்லிம்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை மறுக்கும் செயலாகும் என்றும் விளக்கிக் கூறினார். அவரது எந்த விளக்கங்களும் தேர்தல் நியமனக்குழுவின் தலைமை நீதிபதியாக இருந்த அமிர்தலிங்கத்திடம் எடுபடவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இராஜதுரையையும், தமிழரசுக்கட்சியில் காசி ஆனந்தனையும் நிறுத்த கட்சி முடிவுசெய்தது.
வடக்கு கிழக்கின் அனைத்து தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணமித்து சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியினர் மட்டக்களப்பில் மட்டும் மேலதிகமாக தமிழரசுக்கட்சியை இராஜதுரைக்கு போட்டியாக களமிறக்கினர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் தமிழரசுக்கட்சியின் சின்னமாக இருந்துவந்த வீட்டுச்சின்னம் காசி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டமை, புதிய சின்னத்தில் போட்டியிட நேர்ந்த இராஜதுரையின் ஆதரவாளர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் நெருங்கிய வேளைகளில் இராஜதுரையின் தேர்தல் மேடைகளில் உரையாற்ற எந்தவொரு கட்சி முக்கியஸ்தர்களும் முன்வரவில்லை. ஈழவேந்தன், கோவை மகேசன், மாவை சேனாதிராஜா போன்றோர் மட்டக்களப்பில் களமிறக்கப்பட்ட காசி ஆனந்தனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அவர்களது விசமத்தனமான பேச்சுகளும் கட்சிப்பத்திரிகையான ‘சுதந்திரனில்’ இராஜதுரைக்கு எதிராக வெளிப்படையாகவே எழுதிய பண்பற்ற எழுத்துகளும் அளவற்றன. பட்டிருப்பு தொகுதியிலும் கல்குடா தொகுதியிலும் உதயசூரியனை ஒளிரச் செய்யுங்கள் என்று பேசிய கட்சித் தலைவர்கள் அதே வாயால் மட்டக்களப்பு தொகுதியில் உதயசூரியனை உதிக்காமல் செய்யுங்கள் என்று பேசினர். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரே கட்சிக்குள்ளேயே இராஜதுரைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவமானங்களுக்கும் குத்துவெட்டுகளுக்கும் நிகர்த்த பிறிதொன்று இலங்கை அரசியல் வரலாற்றில் எங்கேனும் நிகழ்ந்ததில்லை.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் இராஜதுரைக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இந்த சதி மட்டக்களப்பு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. வழமைபோலவே அந்தத் தேர்தலிலும் இராஜதுரை அமோக வெற்றியீட்டினார். வெற்றியின் பின்னர் தேர்தலில் நடந்த கழுத்தறுப்புகளை எல்லாம் மறந்துவிட முயன்று கட்சியில் தொடர்ந்து பணியாற்ற அவர் சித்தம் கொண்டேயிருந்தார். அதன் காரணமாகவே பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்த பூ.கணேசலிங்கத்தின் கல்லாறு வீட்டில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு வருமாறு விடப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று அங்கு சமரச முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. செயற்குழுக்கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் கூட்டம் இடம்பெற்ற வீட்டைச்சுற்றி திட்டமிடப்பட்ட வகையில் குவிக்கப்பட்டிருந்த கட்சித் தொண்டர்களால் இராஜதுரை கேவலப்படுத்தப்பட்டார். அன்று மாலை பாட்டாளிபுரத்தில் இடம்பெற்ற கட்சியின் நன்றி நவிலல் பொதுகூட்டத்தில் இராஜதுரைக்கு பேசுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது. தேர்தலில் தோல்வியடைந்த காசி ஆனந்தன் முன்னணி பேச்சாளராக திகழ்ந்தார். மேடையிலே வீற்றிருந்த அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் செய்த சதியே அதுவாகும். தமிழரசுக்கட்சியின் தூணாக இருந்து கட்சியை வளர்த்தெடுத்த இராஜதுரைக்கு மட்டக்களப்பு மண்ணிலேயே பேசும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமை அவமானத்திலும் அவமானமாகும்.
இந்த நேரத்தில்தான் 1978 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தையே அழித்தொழித்த ‘சூறாவளி” வீசியது. வரலாறு காணாத பேரழிவுக்கு இலக்காகி நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துகிடக்க, பதினைந்து அடிகளுக்கு மேல் எழுந்த கடல்கொந்தளிப்பு பல கிராமங்களை தரை மட்டமாக்கிவிட, 14 லட்சம் தென்னைமரங்கள் வீழ்ந்துகிடக்க, வீதிகள் எங்கும் உடைந்து மறிபட்டு சிதிலமடைந்து சீரழிந்த நிலையில் அவ்வழிவுகளை பார்வையிட பிரதமர் ஆர்.பிரேமதாசா மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். மக்கள் முன்னிலையில் மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பும் அவசரமும் மட்டக்களப்பு பாராளுமன்ற பிரதிநிதி எனும் வகையில் இராஜதுரைக்கு இருந்தது. அந்தவகையில் இராஜதுரை பிரதமர் பிரேமதாசாவை சந்தித்து மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்தியம்பினார்.
மட்டக்களப்பின் பரிதாபநிலையை ஆதரவற்றுக்கிடந்த மக்களுக்கான அவசரத் தேவைகளை பிரதமரிடம் எடுத்துக்கூறியது மன்னிக்க முடியாத குற்றம் என்று கட்சியின் மேலிடம் குற்றம் சுமத்தியது. இதற்கான விளக்கம் கோரி உடனடியாக பதிலிறுக்குமாறு கட்சி மேலிடம் இராஜதுரைக்கு நெருக்கடி கொடுத்தது. அந்த வேளையில் யாழ்ப்பாணம் செல்வதோ கட்சியினுடனான சமரச முயற்சிகளில் ஈடுபடுவதற்கோ கால அவகாசம் இருக்கவில்லை. மட்டக்களப்பு மண் அழிந்துகிடக்க உடனடியாக யாழ்ப்பாணம் செல்லமுடியாத நிலை முப்பது நாட்கள் அவகாசம் கேட்டு கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினார் இராஜதுரை. முப்பது வருடங்கள் கட்சி வளர்த்தவனுக்கு தன் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பழி பற்றி சுயவிளக்கம் சொல்ல முப்பது நாட்கள் அவகாசம் மறுக்கப்பட்டது. இன்னிலையில் கட்சித் தலைமையினால் தனக்கு எதிராக இழைக்கப்பட்டு வந்த அலட்சியங்கள், அநீதிகள், உபத்திரவங்கள், உத்தரிப்புகள், கழுத்தறுப்புகள் அனைத்துக்கும் முடிவாக கட்சியை விட்டே விலகிவிடுவதென்ற முடிவுக்கு இராஜதுரை வந்தார்.
தனது அரசியல் லாபத்திற்காக நாளொரு கட்சி தேடி அலைந்தவர் அல்ல இராஜதுரை. யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி அரசியல் மட்டக்களப்பானை எப்படியெல்லாம் அலைகழிக்கும் என்கின்ற பாடங்களை வருடக்கணக்கில் அனுபவித்த பின்னரே தமிழரசுக்கட்சியின் அரசியலை விட்டுத்தொலைக்க அவர் முடிவெடுத்தார். அவரது அந்த முடிவு தர்மத்தின் ஆவேசம் ஆகும்.
யாழ் மேட்டுக்குடி அரசியலில் மொத்த வடிவமாகிவிட்ட தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அவர் தன்னை விலக்கிக்கொண்டார். சூறாவழி காரணமாக நிர்கதியாக கிடந்த மட்டக்களப்பு மக்களின் துயர்துடைக்க அரசாங்கத்தில் இணைவதா? அன்றில் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுவதா? என்கின்ற கேள்வியில் சிக்கித் தவித்தார். தமது ஆதரவாளர்களினதும் மட்டக்களப்பு புத்திஜீகளினதும் ஆலோசனையின் பேரில் அரசியலில் இருந்து ஒதுங்குவதில்லை எனும் முடிவுக்கு வந்தார். அரசாங்கத்தில் இணைய முன்வந்தபோது அரசாங்கம் அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்கி கௌரவித்தது. “பிரதேச அபிவிருத்தி, இந்துசமய கலாசார தமிழ்மொழி அமுலாக்கல் அமைச்சு” எனும் புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கி வடக்கு கிழக்கு மக்களின் பல அரசியல் கோரிக்கைகளை தீர்க்க அவருக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. இலங்கையில் முதன் முதலாக இரண்டு மாகாணங்களை விசேடமாக குறிப்பிட்டு அப்பிரதேசத்திற்கான அபிவிருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவந்து பிரதேச அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டது. இதனூடாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு போன்ற அனைத்து துறைகளிலும் வடகிழக்கில் அபிவிருத்தி மேற்கொள்ளுவதற்கான முழு அதிகாரம் அவ்வமைச்சுக்கு வழங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, கொழும்பு பல்கலைக்கழகத்திலும் தமிழ் பேராசிரியராய் இருந்து ஈராயிரம் ஆண்டுகால தமிழ் இசையை மீட்டெடுத்து யாழ் நூல் ஆக்கித்தந்த இசைமுனியாய் வாழ்ந்த தமிழ் இலக்கியப் பேரூலகின் ஒரே முத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் ஒப்பற்ற சாதனைகளை யாழ்மேட்டுக்குடி தமிழ் அறிவுலகம் கண்டுகொள்ள மறுத்து வந்தபோது, இராஜதுரை தமது அமைச்சு அதிகாரத்தை பயன்படுத்தி அன்னாரின் தமிழ் தொண்டு மீது பேருவகை கொண்டு விபுலானந்தருக்கு பெரும் கௌரவம் அளித்தார்.
1982ஆம் ஆண்டு ‘விபுலானந்தா இசைநடனக்கல்லூரி’ என்கின்ற பென்னம்பெரு கலாசார மையத்தினை கல்லடியில் அமைத்து அப்பெருமானாரின் பெயரை நீக்கமற நிலைக்கச்செய்தார். அந்த இசைநடனக் கல்லூரியே இன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனமாக பரிணமித்துள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை அரசைக் கொண்டே விபுலாநந்தரை தேசிய வீரராக அறிவித்து 1979 ஆம் ஆண்டு அப்பெருமகனாருக்கு நினைவு முத்திரை வெளியிடச்செய்தார். மட்டக்களப்பு நகரின் மீன்பாடும் வாவியை அழகுபடுத்தும் பெரும்திட்டத்தை ஆரம்பித்தார். விபுலானந்தருக்குரிய மணிமண்டபத்தை அமைத்தது மட்டுமல்ல, யாழ்ப்பாண மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு நாவலர் மணிமண்டபத்தை அமைத்தது இந்த இராஜதுரையேயாகும்.
இராஜதுரை தமிழ் மொழி அமுலாக்க அமைச்சராக இருந்த காலத்திலேயே இலங்கையில் தமிழ் மொழி அரசகரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசகருமமொழிச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 12 வது சட்டதிருத்தத்தை உருவாக்கியதினூடாக தமிழ் மொழிக்கும் சம அந்தஷ்து வழங்கப்பட்டது என்பதும் பலரும் பேச மறுக்கும் சாதனைகளாகும்.
1990 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற விரும்பிய போதிலும் அவருக்கு மலேசிய நாட்டின் தூதுவர் பணியை வழங்கியது இலங்கையரசு. அதனைப் பொறுப்பேற்ற அவர் 1994ஆம் ஆண்டு வரை அப்பணியை திறம்பட செயற்படுத்திய பின்னரே அரசியல் பொதுவாழ்விலிருந்து தனது 67ஆவது வயதில் ஓய்வு பெற்றார்.
இறுதியாக தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சென்னையில் வாழ்ந்து வந்த பெருந்தலைவர் இராஜதுரையவர்கள் இன்றையதினம் (07/12/2025) காலை வேளையில் தன் பெருவாழ்வை முடித்துக்கொண்டார்.
