— அழகு குணசீலன் —
2026 ம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இலங்கையின் வீழ்ந்துபோன பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்துவதற்கான பட்ஜட் இது என்று அரசாங்க தரப்பு கூறுகிறது. இந்த பட்ஜட்டில் எதுவும் இல்லை என்றும், சர்வதேச நாணயநிதியினால் எழுதப்பட்ட பட்ஜட் அறிக்கையை ஜனாதிபதி வாசிக்கிறார் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்த இருதரப்பு கருத்துக்களும் வழமையான ஆளும் – எதிர் தரப்புகளின் கருத்துக்கள்தான்.
பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த, இன்னும் அந்த ஆபத்தில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் உள்ள இலங்கையின் வரவு – செலவுத்திட்டம் என்ற அனுதாப நோக்கிற்கு அப்பால், இது ஒன்றும் பரபரப்பான இடதுசாரி பட்ஜட்டும் அல்ல. அதற்கு இன்னொரு என்.எம்.பெரேரா இந்த நாட்டில் இனியும் பிறக்கப்போவதும் இல்லை. அப்படித்தான் பிறந்தாலும் , இன்றைய பூகோள அரசியல் – பொருளாதாரத்தில் அன்றைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரான இடதுசாரி அரசியல் இலங்கைக்கு இன்று சாத்தியமா….? இந்த கேள்வியுடனேயே இடதுசாரி அணியான என்.பி.பி. வரவுசெலவுத்திட்டத்தை மதிப்பிட முடியும்.
ஜனாதிபதி நவம்பர் 7ம் திகதி வரவு -செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் ஒக்டோபர் 7ம் திகதி உலகவங்கி இலங்கையின் இன்றைய பொருளாதார போக்கு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை கூறுவது என்ன..?
” SRILANKA’S RECENT ECONOMIC PERFORMANCE HAS BEEN STRONG, BUT THE RECOVERY REMAINS INCOMPLET.”
” WITH GROWTH STILL BELOW PRE- CRISIS LEVELS AND POVERTY SIGNIFICANTLY ELEVATED.”
” STRENGTHENING THE RECOVERY WILL REQUIRE CONTINUED MACRO ECONOMIC STABILITY, URGENT STRUCTURAL REFORMS, AND MORE EFFICENT, BETTER -TARGETED PUBLIC SPENDING…..”.
இந்த வாசகங்களை மேற்குலக ஆளுகையில் உள்ள ஒரு சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கியின் கருத்து என்று இலங்கை விலகி ஓடமுடியுமா? அப்படித்தான் விலகி ஓடுவது என்றால் அதற்கான மாற்று இடதுசாரி பொருளாதார வரைபடம் எம்மிடம் இருக்கிறதா? இந்த இரு வினாக்களுக்கும் “இல்லை” என்று நாம் பதிலளித்தால் உலக வங்கியின் இந்த அறிக்கையை கிடப்பில் போடமுடியாது. இந்த அறிக்கையின் எதிர்வு கூறலையும், எதிர்பார்ப்பையும் கவனத்தில் கொண்டதாகவே ஜனாதிபதியின் உரை அமைந்துள்ளது.
இரண்டாம் உலகப்போரின் பின்னர் 1945 ஆம் ஆண்டின் பிரட்டன் வூட் ஒப்பந்தத்தின் இரட்டை பிரசவமே உலகவங்கியும், சர்வதேச நாணயநிதியமும். இவற்றின் பிறப்பு மேற்குலக பொருளாதார கொள்கையையும், இலக்கையும் அடிப்படையாகக்கொண்டவை. இந்த அடிப்படையில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி மீட்பில் களத்தில் நிற்கின்ற சர்வதேச நாணய நிதியம் -ஐ.எம்.எப் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான ஓடுபாதையை நிர்ணயிக்கிறது. அதில் பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இலங்கை அரசாங்கத்திற்கு இங்கு விருப்பத்தேர்வு வரையறுக்கப்பட்டது. எந்த ஆட்சி இலங்கையில் ஏற்பட்டிருந்தாலும் இந்த பாதையில் தான் பயணிக்க வேண்டிய நிலை. தேர்தல் மேடைகளில் எவ்வளவுதான் என்.பி.பி.- ஜே.வி.பி. ரணில் விக்ரமசிங்கவை வறுத்தெடுத்திருந்தாலும் இதைத்தவிர வேறு வழியில்லை.
இதனால் தான் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது வைக்கின்ற விமர்சனம் பொருளாதார கொள்கை சார்ந்ததாக அன்றி பெரிதும் தேர்தல் கால வாக்குறுதிகள் – வறுத்தெடுப்புகள் தொடர்பாக இருக்கிறது. ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்தை விட்டு தப்பி ஓட முடியாது என்று அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சிகளும் அன்று சொன்னதுதான் இன்னும் இடம்பெறுகிறது. ஐ.எம்.எப். இலங்கை பொருளாதாரத்திற்கு கொடுக்கும் முள்ளந்தண்டு பலம்தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க “நாங்கள் வீழ்ந்து விடுவோம் என்று கனவுகாணாதீர்கள்” என்று எதிர்க்கட்சிகளுக்கு சொன்ன செய்தி. அது மட்டுமல்ல, மீண்டும் தாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்றும் ஜனாதிபதி அடித்து சொல்லியிருக்கிறார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான ஐ.எம்.எப். இன் ஆலோசனை உள்ளடக்கத்தை கவனத்தில் கொண்டால்…., ஒட்டு மொத்தமாக பொருளாதார, வரிக்கொள்கை சீர்திருத்தங்களை ஐ.எம்.எப். நிபந்தனைகளாக முன்மொழிந்துள்ளது.
1. 2025 இல் இருந்து 2.3 வீத பொருளாதார சேமிப்பை சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது.
2. வரிவிதிப்பு நிர்வாக கொள்கையில் மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் ஐ.எம்.எப். வேண்டுகிறது.
3. வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கக்கூடிய சலுகைகளையும், நடைமுறைகளையும் இலங்கை இலகுபடுத்த வேண்டும் என்பதும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கை. குறிப்பாக டிஜிட்டல் மயப்படுத்தல் இதில் முக்கியமான இலகுபடுத்தலாக உள்ளது.
இந்த இலக்குகளில் பார்த்தால் இலங்கை தனது வீழ்ந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப இந்த ஆலோசனைகள் – நிபந்தனைகளை நிராகரிக்க முடியாத பொறியில் வீழ்ந்துள்ளது. அதை ஜனாதிபதியின் வரவு -செலவுத்திட்ட முன்மொழிவுகளும் நிரூபிக்கின்றன.
அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளின் படி மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளுக்காக ஐ.எம்.எப். வீதி வரைபடத்திற்கு சமாந்தரமாக ஒரு வரைபடத்தில் பயணிக்க வேண்டிய நிலையிலும் உள்ளது. பட்ஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, பொதுநிர்வாகம், சம்பள உயர்வுகள், மற்றும் சமூக நலன்சார்ந்த விடயங்கள் இதையே காட்டுகின்றன. யுத்தம் இல்லாத காலத்திலும் மூன்று இலட்சம் படையினரை பராமரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது. நாட்டின் இன்றைய உள்நாட்டு பாதுகாப்பு நிலையில் பாதாள உலக குற்றச்செயல்கள், போதைப்பொருள் பிரச்சினை, இலஞ்சம் ஊழல் மற்றும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு என்பன முக்கியம் பெறுகின்றன. இதனால்தான் பாதுகாப்பு செலவின் பெரும்பகுதி நடைமுறைச்செலவாக உள்ளது. யுத்த தளபாடங்கள், ஆயுதங்களை கொள்வதற்கான மூலதனச் செலவாக அது இல்லை.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் “அரிசி அரசியல்” முக்கியமானது. இது காலத்திற்கு காலம் பல்வேறு வடிவங்களை – போர்வைகளை போர்த்திக்கொண்டு வந்திருக்கிறது. கூப்பன், உணவுமுத்திரை, சமுர்த்தி, அஸ்வெசுவ. அந்த போர்வைகள். இன்றைய “அஸ்வெசுவ” இதன் ஒரு வடிவம். இது அரசாங்கத்தின் சமூக நலன் மேம்பாட்டில், வறுமை ஒழிப்பில், கிளீன் சிறிலங்கா, அழகான நாடு வளமான வாழ்க்கை என்ற கோஷங்களில் முக்கியமானது. இது குறித்து அண்மையில் பொதுநிகழ்வு ஒன்றில் பேசியதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹெந்துன் நெத்தியின் கருத்து வெளிவந்துள்ளது. அவரது கருத்து ஒரு இடதுசாரி அரசியல்வாதியாக கவலையளிப்பதாக அமைகிறது. அஸ்வெவ சமூக நலன்திட்டத்திற்கு அவர் கொடுத்த வியாக்கியானம் இது.
” அஸ்வெவ என்பது அரசாங்கத்திடம் பிச்சை எடுப்பது. இது குறித்து பயனாளிகள் வெட்கப்பட வேண்டும்”. என்று அவர் கூறியுள்ளார். மக்களின் வலிகளை புரிந்தவர்களாக, சமூக வாழ்க்கையை மேம்படுத்துபவர்களாக, வறுமையை ஒழிப்பவர்களாக இடதுசாரி ஆட்சியை நிறுவுவதற்காக எந்த மக்களின் வாக்குகளில் கதிரைகளை நிரப்பினார்களோ, கதிரைகளில் அமர்ந்தபின் வறுமைக்கோட்டிற்கு கீழான மக்களை பார்த்து பிச்சைக்காரர்கள் என்றும், வெட்கப்பட வேண்டும் என்றும் ஒரு இடதுசாரி அமைச்சராக சுனில் ஹெந்துன் நெத்தியால் எப்படி கூறமுடிகிறது. உண்மையில் இங்கு வெட்கப்படவேண்டியவர்கள் யார் மக்களா? அல்லது என்.பி.பி. அரசாங்கமா….? என்.பி.பி. தான் பேசிய/ பேசும் வர்க்க அரசியல் வறுமைக்காக இங்கு வெட்கப்படவேண்டாமா….?
அமைச்சர் நெத்தியின் கருத்து இலங்கையில் சொந்த மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு சர்வதேச நிறுவனங்கள் கொடுக்கின்ற அதிக அழுத்தத்தின் வெளிப்பாடு. ஒரு அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களுக்கு சமூகநலன், மற்றும் மானிய நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கமுடியாது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இது இலங்கை அரசியலில் காலனித்துவ கால பரம்பரைநோய். இதை தீர்ப்பதாக ஒவ்வொரு அரசாங்கங்களும் – என்.பி.பி.உட்பட கூறியே ஆட்சியை பிடித்தன.ஆனால் அதற்கான சுதேசிய சமூக, பொருளாதார, அரசியலுக்கு பொருத்தமான சொந்த திட்டங்கள் இன்றி அரசாங்கம் விதேசிய வழிகாட்டியை பின்பற்றும் நிலையில் வெட்கப்படவேண்டியது மக்களா? அரசாங்கமா?
சமூக நலத்திட்டங்கள் இந்த உலகில் இல்லாத நாடுகளே இல்லை. உலகவங்கியும், சர்வதேச நாணயநிதியமும் தலைமையகங்களை கொண்டுள்ள அமெரிக்கா முதல் நியுசிலாந்து வரை இத்திட்டங்கள் உள்ளன. முதலாளித்துவ தொழிலாளர் விரோத அரசாங்கங்களே தங்களை பாதுகாத்துக்கொள்ள இதை முதலாளித்துவத்தின் ஒரு சமூகநலன் கொள்கையாக நிறம் தீட்டி வர்க்க இடைவெளியை குறைக்க இத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது நெத்தி எந்த சமூகப்பிரஞையும் இன்றி இதை கூறியிருக்கிறார். இப்படியான இடதுசாரிகளிடம்தான் மக்கள் பெரும் நம்பிக்கையுடன் ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்களா? இவ்வாறான கருத்துக்கள் ஜனாதிபதிபதியின் சமூக, பொருளாதார அணுகுமுறைக்கு முற்றிலும் வேறுபட்டவை. “வறுமையை ஒழிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதை நான் அறிவேன்” என்ற அநுரவின் ஐ.நா. உரையை மறுதலிப்பவை.
புள்ளி விவரங்கள் எப்படி இருந்தபோதும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் வரவு -செலவுத்திட்ட காலத்தில் வாகன இறக்குமதி குறித்து வெளியிட்டுள்ள கருத்தும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
“ வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படலாம். இறக்குமதிக்காக அதிக டொலர் வெளியேறுகிறது. இது டொலர் பற்றாக்குறையை ஏற்படுத்துவதுடன் இலங்கை ரூபாவின் பெறுமதியில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்”
இது பட்ஜட் முன்மொழிவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி லைசன்ஸ் இல்லை. ஆனால் வாகனங்கள் வழங்கப்படும் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவர்கள் வாகனங்களை அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கவேண்டும் என்ற கருத்துக்கு மத்திய வங்கியின் பதிலா? என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம். எது எப்படியோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்கள் அவர்களின் சொத்தாக அன்றி அரசசொத்தாக இருக்கும் இந்த யோசனை மிகவும் சிறப்பானது. அதே போன்று பல்வேறு தரப்பினரதும் சம்பள உயர்வுகளும் இன்றைய விலைவாசி உயர்வு, பணவீக்க சூழலில் சற்று ஆறுதலளிக்கக்கூடியது. எனினும் உற்பத்தி அதிகரிக்காத நிலையில் இது மீண்டும் பணவீக்க சுழற்சிக்கு வழிவகுக்கும்.
அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க பாரிய முதலீட்டு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சிறிய, சிறிய சில திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சமூக நலன் சார்ந்த நடைமுறைச்செலவுகளை அதிகம் செய்து கொண்டு சமகாலத்தில் பாரிய முதலீடுகளை அரசாங்கம் செய்யமுடியாத நிலையில் உள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீடுகளை அது கோருகிறது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்ட எதிர்க்கட்சிகளின் “கனவை” மட்டும் அல்ல “வீழ்ந்து விடவும் மாட்டோம்” என்ற கூற்றையும் காலமே தீர்மானிக்கும்.
