— அழகு குணசீலன் —
இலங்கையின் ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தனது ஆட்சிக்காலத்தின் இரண்டாவது வரவு -செலவு திட்டத்தை நவம்பர் 7 ம்திகதி பாராளுமன்றத்தில் முன்மொழியவுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், பொருளாதாரம் சற்று ஸ்த்திரமான நிலையில், ஆனால் அரசியல் ஸ்த்திரத்தன்மையை இழந்திருந்த நிலையில் ஜனாதிபதி பதவியை ஏற்றவர் அநுரகுமார திசாநாயக்க. அவர் பதவியேற்கும் போது சட்டம் ஒழுங்கு நிலைகுலைந்திருந்தது. குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தன. ஊழலும், இலஞ்சமும் அரசாங்கத்தில் ஆழவேரூன்றி இருந்தன. போதைவஸ்து கடத்தல்- வியாபாரம் – பாவனை அதிகரித்த ஒரு நாடாக இலங்கைத்தீவு இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.எம்.எப். பொருளாதார அணுகுமுறையை கடுமையாக விமர்சனம் செய்த அநுர அதற்கான மாற்றுத்திட்டம் தங்களிடம் உண்டு என்று கூறினார். ஆனால் ரணில் விட்ட இடத்திலேயே அவரும் தொட்டிருக்கிறார்.
2025 வரவு -செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரு விடயங்களை கோடிட்டு காட்டியிருந்தார்.
1. “இந்த நாட்டில் இனி இனமோதல்கள் இருக்காது. மதம், இனம், அல்லது பாலினம் இனிமேல் பிரிவினைக்கான காரணிகளாக இருக்காது”.
2. “ஊழல்கள் நிறைந்த நிர்வாகம், தோல்வியுற்ற பொருளாதார திட்டங்கள், பொறுப்பற்ற தலைமைத்துவம் என்பன இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம். இந்த வரவு – செலவுத்திட்டம் நாட்டை மீட்டுத்தரும்”.
இப்போது ஜனாதிபதியின் இந்த கூற்றுக்களை மதிப்பாய்வு செய்யும் காலம். கடந்த ஒரு வருட ஆட்சியில் என்.பி.பி. அரசாங்கத்தின் சாதனைகளை நோக்கவேண்டிய தருணம்.
ஜனாதிபதியின் முதலாவது கருத்தை இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு இன்றி மதிப்பீடு செய்யமுடியாது. அதேவேளை இந்த அரசாங்க காலத்தில் இனம், மதம், பாலினம் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடுகள் முற்றாக இடம்பெறவில்லை என்பதை பதிவு செய்வதற்கான ஆதாரங்களும் இல்லை. வேண்டுமானால் பெரும்பான்மை அரசியல்வாதிகளின் இனவாத அணுகுமுறைகள் சற்று குறைந்துள்ளன எனலாம்.
குறிப்பாக காணி அபகரிப்பு- விகாரைகள் அமைத்தல், அபிவிருத்தியின் பேரிலான மக்கள் விருப்பிற்கு மாறான முயற்சிகள் மன்னார் காற்றாலை திட்டம், திருகோணமலை முத்துநகர் விவசாயிகளின் பிரச்சினைகள், எல்லைக் கிராமங்களில் விவசாய – கால்நடை வளர்ப்பு பொருளாதார நடவடிக்கைகளில் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இவற்றிற்கு பின்னால் இனவாதம், மதவாதம் ஒழிந்து இருக்கிறது. இதை அநுர அரசாங்கம் அறிந்துள்ள போதும் இவற்றிற்கு எதிராக- பௌத்த அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்குகிறது.
ஊழல் ஒழிப்பு, போதைவஸ்து ஒழிப்பு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், நீதிமன்றங்களின் சுயாதீன செயற்பாடுகள் என்பனவற்றில் அரசாங்கம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. நீண்ட கால யுத்தம், நிலைகுலைந்திருந்த சட்டவாட்சி, பொருளாதார நெருக்கடி என்பன இந்த மோசமான நிலைக்கு பங்களிப்பு செய்திருக்கின்றன. அன்று ஜனாதிபதி குறிப்பிட்டதுபோல் தோல்வியுற்ற பொருளாதார திட்டங்கள், மற்றும் தவறான பொருளாதார முகாமைத்துவம், பொறுப்பற்ற தலைமைத்துவம் என்பனவும் பொருளாதார நெருக்கடிக்கு மேலும் வலுச்சேர்த்தன என்பதை மறுப்பதற்கில்லை.
பொலிஸ் அறிக்கைகளின் படி இந்த ஆண்டில் 51 இலட்சம் பேர் பரிசோதனைக்கும், விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். இது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமானது. பிரதி அமைச்சர் உபாலி பன்னியவின் தகவல்களின் படி இலங்கையின் 52 இலட்சம் குடும்பங்களில் 43 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசுவ உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவை அதிர்ச்சி தருகின்ற புள்ளி விவரங்கள். இதன்படி குடும்பத்திற்கு ஒருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட வாக்குவீதத்திற்கு (42%) சமமான குடும்பங்கள் அஸ்வெசும உதவிக்கு விண்ணப்பித்துள்ளன. 2025 ஆகஸ்ட்டில் இலங்கையின் பணவீக்கம் 3.5 வீதமாக இருந்த நிலையில் உணவு வகைகளின் விலையுயர்வு / பணவீக்கம் 2.9 வீதமாக அதிகரித்துள்ளது. இவை இலங்கையின் வறுமை மட்டம் அதிகரித்துள்ளது என்பதையும், கடந்த கால டொலர் வருமான அதிகரிப்பு நன்மைகள் வறியமக்களை சென்றடையவில்லை என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
நிதி அமைச்சின் தகவல்களின் படி 18 அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக பட்டியல் இடப்பட்டுள்ளது. என்.பி.பி.யின் கொள்கையில் இந்த நிறுவனங்கள் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு அரச உடைமையாக மீள் இயக்கம் செய்யப்படவேண்டும். ஆனால் அரசாங்கம் அந்த கொள்கையில் இருந்து விலகி நஷ்டமடையும் நிறுவனங்களை தனியார் மயப்படுத்தலை மேற்கொள்கிறது. இது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாக உள்ளது. இலங்கை மின்சார சபைக்கு நடந்திருப்பது இதுதான். சில வேளைகளில் இந்த பட்டியல் தனியார் மயமாக்கலுக்கான நியாயப்படுத்தல் கருத்துருவாக்கம் ஒன்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான தந்திரோபாயமா? என்ற கேள்விக்கு வழிவகுப்பதாக அமைகிறது. என்.பி.பி.அறிவித்த பொருளாதார வீதிவரைபடமும், அது பயணிக்கும் வீதிவரைபடமும் ஒன்றல்ல என்பதே இந்த அரசாங்கத்தின் மீதான கடுமையான விமர்சனமாகும்.
கடந்த வரவு-செலவுத்திட்டமதிப்பீட்டில் 2025 இல் 5 வீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. மேலும் 2028 கடன் மீளளிப்புக்காக பொருளாதார வளர்ச்சியில் 2.3 வீதத்தை ஆண்டு தோறும் சேமிக்க வேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டது. இன்னொரு வகையில் குறிப்பிட்டால் 5 வீத பொருளாதார வளர்ச்சியை பேணினால் மட்டுமே 2028 முதல் ஆண்டு தோறும் 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் மீளளிப்புக்கு ஒதுக்கக்கூடியதாக இருக்கும். இந்த இலக்கு இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையில் சாத்தியமற்ற ஒன்று. 2025 இல் 3,5 வீத வளர்ச்சியை காட்டும் உள்நாட்டு உற்பத்தி 2026, 2027 இல் 3.1வீதமாகவே இருக்கும் என்று எதிர்வு கூறப்படுகிறது. இது இந்த காலத்தில் மாலைதீவு, வங்காள தேசம், பாகிஸ்தான் என்பனவற்றின் வளர்ச்சி வீதத்தை விடவும் குறைவானது. இந்த நிலையோடு அமெரிக்க வரிவிதிப்பு, நாட்டின் இன்றைய நிலையில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு செலவினங்களின் அதிகரிப்பு, உள்நாட்டு உற்பத்திகளுக்கான செலவு அதிகரிப்பு, மற்றும் சமூகநலம் சார்ந்த சேவைகள், மானியங்கள், வறுமை ஒழிப்பு என்பனவும் சேர்ந்து கொண்டால் ஜனாதிபதி ஐ.நா.வில் ஆற்றிய வறுமையை ஒழித்தல் உரை அதிகம் கற்பனையானது.
இன்றைய நிலையில் இலங்கையின் பொருளாதாரம் உல்லாசப்பிரயாணம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணவருகை, புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணம் என்பனவற்றை பிரதானமாகக் கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக உல்லாசப் பிரயாணத்துறை வருமானத்திற்காக எந்த விலையையும் கொடுக்கவும், சலுகைகளையும் வழங்கவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஒரு வகையில் என்.பி.பி.அரசாங்கத்தின் கொள்கையோடு முரண்பட்ட நிலைப்பாடு எனினும் அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்பதால் அரசாங்கம் தனது கொள்கையையும், ஐ.எம்.எப் நிபந்தனைகளையும் விழுங்கிக்கொள்கிறது.
அறுகம்பை சூழல், ஓரினச்சேர்க்கை, மேலும் பாலியல் தொழில், கடற்கரைப்பையன்கள் (BEACH SUNNY BOYS), போதைவஸ்து போன்ற கவர்ச்சிகள் மேற்குலக உல்லாசப்பிரயாணிகளை கவரும் காந்தமாக அமைகின்றன. இது அரசாங்கம் கூறும் “புதிய கலாச்சாரத்திற்கு” முற்றிலும் எதிரானது. ஒருபாலியல் சமத்துவத்திற்கு எதிராக மத அமைப்புக்களோடு போதும் நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் ஆறப்போட்டு விவகாரங்களை கையாளும் தந்திரோபாயத்தை கையாண்டு கிடைக்கின்ற கால இடைவெளியில் எவ்வளவு அதிகமாக டொலர்களை சேமிக்க முடியுமோ அதையே இலக்காகக்கொண்டு செயற்படுகிறது. அண்மையில் இலங்கை வாகன இறக்குமதி மூலம் அதிக வரிவருமானம் அரசாங்கத்திற்கு கிடைத்தது. ஆனால் தனியார் பஸ் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 3000 பஸ்களை தாம் சேவையில் ஈடுபடுத்த முடியாமல் இருப்பதாகவும், இதற்கு அதிகரித்த வாகன இறக்குமதியினால் தனியார் துறையினரின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலை வேலையிழப்புக்கு காரணமாக அமையக்கூடியது.
மறுபக்கத்தில் உல்லாசப்பிரயாணத்துறை இலங்கையின் இயற்கை, சுற்றுச்சூழலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறுகிய காலத்தில் இது வருமானமாக இருப்பினும் நீண்ட காலத்தில் இந்த பாதிப்புக்களை ஈடுசெய்ய அரசாங்கம் பாரிய முதலீட்டை செய்யவேண்டியிருக்கும். ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அளவுக்கு அதிகமான சலுகைகளை டொலருக்காக இலங்கை உல்லாசப்பிரயாணிகளுக்கு வழங்குவதால் மலிவான உல்லாசப்பிரயாண தளமாக இலங்கை உள்ளது. மற்றைய நாடுகள் சுற்றாடல் பாதுகாப்புக்காக உல்லாசப்பயணிகளுக்கு மலிவான சேவைகளை குறைத்து வருகின்றன. போதைப்பொருள் ஒழிப்பில் உள்நாட்டவர்களுக்கு சமாந்தரமாக வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையை அகலத்திறந்துவிடும் இந்த அணுகுமுறையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இன்றைய போதைப்பொருள் நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் அது குறித்து அரசாங்கம் வெளிப்படையாக பேசுவதாக இல்லை.
இந்த நிலையில் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறியின் கருத்து முக்கியமானது.
“தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இன்று செயல்படும் விதத்தில் அவர்களின் பிரபலமான அடித்தளம் கணிசமாக பலவீனம் அடைவதைக்காணலாம். தேசிய மக்கள் சக்தியின் வேகம் குறைக்கப்பட்டு ஜே.வி.பி.யே தற்போது நாட்டை ஆட்சி செய்கிறது. இந்த அரசாங்கத்தை நடாத்துவது உயர் மட்டத் தலைமையே. தேசியமக்கள் சக்தி என்று ஒரு நிர்வாக சபை இருக்கிறது. ஆனால் அது ஏதோ ஒரு வகையில் செயலிழந்து விட்டது. இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பை பாதிக்கும்”. என்கிறார் பேராசிரியர்.
நவகாலனித்துவ பல்தேசிய கம்பனி நிறுவனங்களின் பொருளாதார போட்டிச் செயற்பாட்டில் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை விழுங்கும் இந்த கோட்பாடு “கழுத்தறு போட்டி” என்று அழைக்கப்படும். இது இலங்கையின் இன்றைய அரசியலுக்கும் பொருத்தமானது என்பதையே பேராசிரியர் தேவசிறியின் அவதானிப்பு வெளிப்படுத்துகிறது.
ரணில் விக்ரமசிங்க விட்டுச் சென்ற ஐ.எம்.எப். பொறியை அநுரகுமார தொட்டுள்ளார். அந்த குண்டு எந்த நேரத்தில் வெடிக்கும் (TIME BOMB ) . என்பதுதான் இன்றைய கேள்வி…..! இந்தியா – சீனா – ஐ.எம்.எப், பிராந்திய – சர்வதேச பொறிமுறை உறவு சமநிலை குலையும் போது அநுர அரசுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தும்.
