மாகாணசபைத் தேர்தலும், அநுர-சாணக்கியன்      சந்திப்பும்!           (வெளிச்சம்: 080)

மாகாணசபைத் தேர்தலும், அநுர-சாணக்கியன்  சந்திப்பும்! (வெளிச்சம்: 080)

 — அழகு குணசீலன் —

தமிழரசுக்கட்சியின் கடந்த வார அரசியலுக்கு சிறந்த உதாரணம் ஒரு பாலர் வகுப்பு. அதில் உள்ள இரு மாணவர்கள் சாடியும், மூடியும் போன்று நல்ல நண்பர்கள். அவர்களில் ஒருவர் சுமந்திரன், மற்றவர் சாணக்கியன்.  இதில் சுமந்திரனுக்கு  பிமல்  என்ற இன்னொரு மாணவன் “ஏசி” விட்டான்.  இது தான் பாலர் வகுப்பு களநிலை.

ஏச்சு வாங்கிய சுமந்திரன் ஆசிரியை/ ஆசிரியரிடம் நேரடியாக முறையிடச் செல்லவில்லை. சிலவேளை 42 புள்ளிகளை பெற்று வந்தவர் என்று சொன்ன வெட்கமோ தெரியவில்லை. நண்பர் சாணக்கியனை முறையீட்டாளராக அனுப்பி வைத்தார். தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்வில் இருந்து இப்படியான முறைப்பாடுகள் நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கின்றன. ஒருவரை முன்னுக்கு தள்ளிவிட்டு நேரடியாக சம்பந்தப்பட்டவர் அவருக்கு பின்னால் மறைந்து கொள்கின்ற தமிழரசு அரசியல் இது.

“ரீச்சர், ரீச்சர்/ சேர், சேர்..  பிமல், சுமந்திரனுக்கு இனவாதி என்று பட்டப்பெயர் சொல்லி  ஏசுறார் சேர் என்றார்  ஜனாதிபதியிடம். இங்கு கவனிக்க வேண்டியது என்ன வென்றால்  பிள்ளைகள் தங்களது  பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் இன்னொருவரூடாக அன்றி நேரடியாக  பொறுப்பானவரிடம் முறையிட வேண்டும் என்பதை   பாலர் வகுப்பில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நமது எம்.பி.க்கள்  பாராளுமன்றத்திற்கு  போயும் இதைக்கூட கற்றுக்கொள்ள வில்லை.  அது மட்டும் அல்ல “எங்களை இனவாதிகள்  என்று சொல்லி விட்டு இனப்பிரச்சினை தீர்வுக்கு யாரோடு பேசப்போகிறீர்கள்”  என்றும் ஜனாதிபதியைக் கேட்டாராம்.  மேலும் மாகாணசபை தேர்தல் பற்றியும் பேசியிருக்கிறார்கள். இப்போது தமிழரசு – ஜனாதிபதி சந்திப்புக்கு நாள் கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 75 க்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்றில் தமிழரசுக்கட்சி எத்தனை தடவைகள் தென்னிலங்கை தலைவர்களைப்பார்த்து “இனவாதிகள்” என்று கூறியிருக்கிறது. ஆகக்குறைந்தது ஒரு வருடத்தில் ஆயிரம் தடவைகள் என்றாலும் முக்கால் இலட்சத்தை தேறும். “பயங்கரவாதி” என்று சிங்கள தலைவர்களால் அழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே வேறுவழியின்றி கொழும்பு அரசாங்கங்களோடு பேசவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. புலிகளுக்கு இருந்த ஆயுத, அரசியல் பலம் என்ன?  தமிழரசுக்கட்சியின் பலம் என்ன? இந்த நிலையில் “யாரோடு பேசப்போகிறீர்கள்” என்று கேட்டாராம் என்று தனது அரசியல் சிறுபிள்ளைத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சாணக்கியன்.

அநுர அரசாங்கத்திற்கு மாகாணசபை தேர்தல்களை நடாத்த வேண்டிய அழுத்தம் தென்னிலங்கையிலும், பிராந்திய பூகோள அரசியலிலும், ஐ.நா. சர்வதேசமட்டத்திலும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடாத்தி முடிக்க விரும்பினாலும் வெளியில் கூறமுடியாத ஒரு காரணம் அதை தடுக்கிறது. அதுதான் அநுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி-என்.பி.பி. அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலில் அடைந்த பின்னனைவு. சுமார் ஆறு, ஏழு மாதங்களில் சுமார் இருபத்தைந்து இலட்சம் வாக்குகள் இழப்பு என்பதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்லமுடியாது.  உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் தென்னிலங்கையிலும், வடக்கு, கிழக்கிலும் அரசியல் களநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அரசாங்கத்திற்கு சாதகமாக இல்லை. தென்னிலங்கை வாக்குச்சரிவை நிரப்ப வடக்கு, கிழக்கில் குறிவைத்து அரசாங்கம் செயற்படுகின்ற போதும் சாண் ஏற முழம் சறுக்கும்  பாதகமான சூழலே அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த மட்டிலும் பொதுத்தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் சூழல் போன்று  இன்றைய சூழல் அரசாங்கத்திற்கு சாதகமாக இல்லை. தமிழரசு – முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகளின்  முரண்பாடுகளுக்கும் மத்தியிலான புரிந்துணர்வும் அரசாங்கம் மாகாணசபை தேர்தலை இழுத்தடிக்க ஒரு காரணம். இதற்கு மாறாக அரசாங்கமும், தமிழரசுக்கட்சியும் ரி.எம்.வி.பி. தலைவர் பிள்ளையானை உள்ளே வைத்து மாகாணசபை தேர்தலை நடாத்தினால்  தங்களுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகின்றனர். கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இந்த வெள்ளோட்டம் இரு தரப்புக்கும் சாதகமாகவே அமைந்திருந்தது. அதேவேளை 2019 இல் கற்ற பாடத்தையும் மறக்க முடியவில்லை.

இந்த நிலையில் அமைச்சரவை முடிவுகளை கடந்த வாரம் அறிவித்த அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பதில் மேற்கூறிய பாலர் வகுப்பு அரசியலோடு ஒத்துப்போகிறது.  “மரணிப்பேன் ஆனால் எப்போது என்றுதான் தெரியாது” என்ற பாணியில் உள்ளது அமைச்சரின் பதில். 

அவர் என்ன சொல்கிறார்: “மாகாணசபை சபைத்தேர்தல்களை நடாத்துவோம் ஆனால் எப்போது என்பதுதான் தெரியாது”  இது தான் அவரது பதில். இப்படி போற இடத்திற்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்றமாதிரி ஒரே அரசாங்கத்தின் கூட்டுப்பொறுப்பில் இருக்கின்ற அமைச்சர்களும், ஜனாதிபதியும் ஒருவர் சொல்வதை மற்றவர் திருத்துகிறார்கள் அல்லது மறுக்கிறார்கள்.  ஜெனிவாவில் எல்லைநிர்ணயம் பற்றி பேசுகிறார்கள். கொழும்பில் பழையமுறையிலா? புதிய முறையிலா? என்று கேட்கிறார்கள்.  தேர்தல் திணைக்களம் “நாங்கள் ரெடி ஆனால்…..” என்று இழுக்கிறது.  முன்னாள் தேர்தல் ஆணையாளர் எல்லை நிர்ணயம் பற்றி பேசுவது மூன்று ஆண்டுகளுக்கு மாகாணசபைத்தேர்தல் இல்லை என்பதன் மறுவார்த்தை என்று கூறுகிறார்.  ஜனாதிபதியோ கட்சித்தலைவர்களுடன் பேசி  ஒரு முடிவுக்கு வருவோம் என்று சொல்கிறார். உண்மையில் அரசாங்கம் காற்றுவளம் தனக்கு சாதகமாக வீசும் வரை இழுத்தடிக்கிறது என்றே கொள்ளவேண்டியுள்ளது.

அண்மையில் மாகாணசபை ஆளுநர்களையும், செயலாளர்களையும் சந்தித்த ஜனாதிபதி மாகாணங்களின் நிதிநிலைமை, செயற்திட்டங்கள் பற்றி அறிந்து கொண்டார்.  வருடாந்த வரவு – செலவுத்திட்ட வரைபுக்கு முன்னரான வழமையான சந்திப்பு இது. மக்கள் பிரதிநிதிகளான மாகாண முதலமைச்சர்கள் இருக்க வேண்டிய கதிரைகளில் அரசாங்க ஆதரவு, முகவர்களான ஆளுநர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். ஒரு வகையில் அரசாங்கம்  தான் நியமித்த ஆளுநர்களினூடாக தனது கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துகிறது.  இது கொழும்பு அரசாங்கங்களால் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் அதிகாரபகிர்வுக்கு  எதிரான ஜனநாயக மறுப்பு. உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறும்வரை இலங்கையின் மூன்று படிமுறை அதிகார ஜனநாயக நிர்வாகக்கட்டமைப்புக்களும் மத்திய அரசாங்கத்தின் கீழேயே இருந்தன.

ஜே.வி.பி.யின்  இரண்டாவது எழுச்சி மாகாணசபை சபை எதிர்ப்பு அரசியலில் உருவானது. இப்போதும் மாகாணசபை முறைமை குறித்து ஜே.வி.பி.க்கு திருப்தியில்லை. அதே திருப்தியின்மை சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் உண்டு. ஆனால் காரணங்கள் வேறுபட்டவை. அரசாங்கம் அதிகாரப்பகிர்வை தவிர்த்து தேசிய மத்திய ஆட்சியில் கருத்தாய் உள்ளது. சிறுபான்மை தேசிய இனங்கள் அதிக அதிகாரப்பகிர்வை கோருகின்றன. இது இரு முரண்பட்ட இழுபறி நிலை. ஆனால் அரசாங்கமோ மாகாணசபை முறைமையில் சிறுபான்மையினர் திருப்தியற்று இருப்பதற்கான காரணங்களை ஆராயாது ,ரில்வின் சில்வா பாணியில் அது பிரச்சினைகளை தீர்க்க தவறிவிட்டது என்று காட்ட முயற்சிக்கிறது 

உண்மையில் ஜே.வி.பி. / என்.பி.பி. அரசாங்கத்தின் அதிகாரப்பகிர்வு குறித்த வெளிப்படைத்தன்மையும், நிலைப்பாடும் என்ன? மாகாண சபைகளின் மீளப்பெறப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக மீளளிக்கப்பட்டு அதிகாரப்பகிர்வு முழுமையாக்கப்படுமா…..?  13 வது திருத்தம்  முழுமையாக நடைமுறைக்கு வருமா? அல்லது மாகாணசபை அமைப்பு இல்லாமல் செய்யப்படுமா….?  இதற்கான கொழும்பின் பதிலே வடக்கு, கிழக்கு மக்களின்  எதிர்கால அரசியல் திசையை நிர்ணயிக்கும். மாறாக கொழும்பு, வடக்கு, கிழக்கு அரசியலுக்கு திசைகாட்ட முனைவது வழமையான தோற்றுப்போன அரசியலின் தொடர்ச்சியாகவே அமையும்.