“அப்பா…..!                 நுஃமான் மாமா முஸ்லிமா..?”       (வெளிச்சம்: 077)

“அப்பா…..! நுஃமான் மாமா முஸ்லிமா..?” (வெளிச்சம்: 077)

— அழகு குணசீலன் —

பேராசிரியர் சி. மௌனகுரு எழுதியுள்ள  “இப்படியும் ஒரு காலம் இருந்தது” என்ற  நூல் படிக்கக்கிடைத்தது  தமிழ், முஸ்லிம் உறவு தொடர்பாக 1949 முதல் 1999 வரையான  தன்னோடு தொடர்புபட்ட சம்பவங்களின் தொகுப்பாக 15 சம்பவங்களை அவரது பாணியில் சித்தரிக்கிறார் அவர்.  அவர் உள்வாங்கி கொண்ட அன்றைய சமூகச்சூழலை, அந்த அனுபவங்களை, அவை அவரோடு தொடர்பான தனிப்பட்ட நிகழ்வுகள் என்றாலும்  அவற்றை இன்றைய தலைமுறைக்கு கடத்துகிறார். அதில் இடம்பெறும் சம்பவங்களை – ஆசிரியர் கதைகள் என்று இலக்கமிட்டுள்ளார்.

அன்றொரு நாள் தனது 6 வயது மகன் சித்தார்த்தன் அவரிடம் கேட்ட ஒரு கேள்வியே இங்கு இப்பதிவின் தலைப்பாக இடம்பெறுகிறது. ஆசிரியருக்கு 6 வயதாக இருக்கும் போது அவருக்கும் காத்தான்குடியை சேர்ந்த பாய் காக்காவுக்குமான உறவு ஆரம்பிக்கிறது. அதேபோல் மகன் சித்தார்த்தன் அதே 6 வயதில் “அப்பா, நுஃமான் மாமா முஸ்லிமா?” என்ற கேள்வியை அவரிடம் கேட்கிறான். இது ஒரு தற்செயல் நிகழ்வா? இத்தனைக்கும் சித்தார்த்தன் கொழும்பில் பிறந்தபோது தாய் சித்திரலேகா, தகப்பன் மௌனகுருவை தவிர சித்தார்த்தனை தொட்ட அடுத்த நபர் பேராசிரியர் நுஃமான் என்றும் பேராசிரியரின் கதையொன்று கூறுகிறது.

“இப்படியும் ஒரு காலம் இருந்தது”, என்ற நூலின் வெளியீடு கொழும்பில் நடைபெற்றது. கனடாவிலும் அதன் அறிமுகம் ‘தடயத்தார்’ நிகழ்வாக இடம்பெற்றுள்ளது.  எங்கள் எல்லோருக்கும் அறிமுகமான ஈழத்து- புகலிட எழுத்தாளர் அக்கா ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அரங்கம் மின்னிதழில் குறித்த நூலின் முழுமையான அறிமுகம் ஒன்றையும் ஏற்கனவே எழுதியுள்ளார். இந்த நிலையில் இந்த நூல் பேசுகின்ற தமிழ் -முஸ்லிம் உறவின் சில அடிப்படை அம்சங்கள் பற்றி மட்டும் வெளிச்சம் பேச விளைகிறது.

கனடா அறிமுகவிழாவில்,  சமூகச்செயற்பாட்டாளராக அறிமுகப்படுத்தப்படும்  சக்கரவர்த்தி தான் நிகழ்வில் கருத்துரைக்க அரைமனதோடு உடன்பட்டதை மிகவும் அலுப்பு -சலிப்பாக ஆனால் வெளிப்படையாக பேசுகிறார். எடுத்த எடுப்பிலேயே இந்த நூலை “இறந்தகாலம்” என்கிறார் அவர். பேராசிரியர் மௌனகுரு இதில் சொல்லியுள்ள முதலாவது  சம்பவத்திற்கு வயது 75.  கடைசிச்சம்பவத்திற்கு வயது 26.  ஆக, சம்பவங்கள்  அரை நூற்றாண்டு  கால இடைவெளியில் இடம்பெற்றவை.

அந்த வகையில் சக்கரவர்த்தியின் “இறந்தகாலம்” என்ற கருத்தை மறுப்பதற்கில்லை என்பதுடன், அவரின் சலிப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. “இறந்த காலம்” என்ற வார்த்தையை சக்கரவர்த்தி இன்னொரு சந்தர்ப்பத்தில் “கடந்தகாலம்” என்று குறிப்பிட்டாலும்  இரு வார்த்தை பிரயோகங்களும்  தமிழில் ஒரே கருத்தில் பயன்படுத்தப்பட்டாலும்  “இறந்தகாலம்” என்பது அவரது அலுப்பு -சலிப்பு தொனியில் செத்த பாம்பை இன்னும் ஏன்? திரும்ப திரும்ப அடிப்பான் என்ற உடல் மொழியாகவும் வெளிப்படுகிறது என்றே கொள்ள வேண்டும்.  இறந்தகாலத்திற்கான கனதி கடந்த காலத்தைவிடவும் சக்கரவர்த்தியின் தொனியில் கதிக்கிறது. 

அதாவது தமிழ் – முஸ்லிம் உறவுக்கு இறந்தகாலத்தைக்காட்டி மீள உயிரூட்டுவதில் பெரும் நம்பிக்கையீனம் சக்கரவர்த்தியிடம் வெளிப்படுகிறது. அவர் தமிழ் – முஸ்லிம் வன்முறையில் பாதிக்கப்பட்ட அம்பாறை -மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கிராமம் ஒன்றைச்சேர்ந்தவர். இந்த உறவையும், பகைமையையும் பேராசிரியர் மௌனகுருவைவிடவும் அனுபவித்தவர் எனலாம். இறுதியில் இந்த நிலைக்கு யார் காரணம் என்று கேள்வி எழுப்பும் அவரின் குரல் கிளம்புகிறது…… “நாங்கள் தான்” என்று விழுங்கிக் கொள்கிறார்.

பேராசிரியர் மௌனகுருவுக்கு மட்டும் அல்ல சக்கரவர்த்தி, மற்றும் இப்பத்தியாளர்…. போன்ற பலரும் சிறுவயதில் ‘முட்டாசி ‘ காக்காவில் தொடங்கி, ஊரூராய்  வியாபாரத்திற்கு வந்த  காத்தான்குடி பாய்க்காக்கா, ஒல்லிக்குளத்து உடுப்புக்காக்கா,  மற்றும் காத்தான்குடி கொச்சிக்காயன், கூப்பன் அரிசிவாங்கும்  காசிம்பாவா,  உள்ளிட்ட மாடு வாங்குகிற காக்கா முதல் ஐஸ்பழ காக்கா வரை  பழகியவர்கள். வயல் வாடி, சேனை, கடை ,பாடசாலை- பல்கலைக்கழக நண்பர்கள், தொழில் நண்பர்கள் …. என்ற வகையில் தான் இந்த தமிழ் – முஸ்லிம்  உறவு விரிவடைகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த வகையில் பேராசிரியர் மௌனகுரு தமிழ் – முஸ்லிம் தனிநபர்களுக்கு  இடையிலானதும், மிஞ்சிப்போனால் அரிதான சந்தர்ப்பங்களில் குடும்பங்களுக்கு இடையிலானதுமான உறவை “இப்படியும் ஒரு காலம் இருந்தது” என்று எல்லா இனத்து பேரப்பிள்ளைகளுக்கும் சொல்ல முற்பட்டுள்ளார்.

காத்தான்குடி பள்ளி வாசல் தாக்குதலில் தனது வாப்பாவை இழந்தவர் ஷெரிப்தீன் அலாவி. அவுஸ்திரேலியாவில் வாழும் அவர் இப்பத்தியாளரின் மாணவர். மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் கற்றவர். அவர் அடிக்கடி ஒரு தமிழரை நினைகூருவார். அவர் யார் தெரியுமா? தங்கள் குடும்ப சலவைத்தொழிலாளி. அதே போன்று அவர் நினைவு கூரும் இன்னொரு தமிழ் உறவு அன்றைய மத்திய கல்லூரி அதிபரும், பின்னாளில் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பிரிஸ்காசிநாதர். அலாவி காசிநாதரை “வாப்பா”அந்தஸ்த்தில் வைத்து ஆராதிக்கிறார். 

இதேபோன்று இன்னொரு மாணவன் லண்டனில் வாழும் முனீர்மொகமட்.  அன்றைய பதட்ட சூழலில் காத்தான்குடி -ஆரையம்பதி எல்லை வீதியில் தமிழ் – முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்து காவல் பணியில் இருந்தார்கள். அப்போது தங்களுக்கு சாமத்துக்கு சாமம்  தேனீரும், கொழுக்கட்டையும் தயாரித்து தந்த அந்த தமிழ் “மாமியை”  இனிப்பாக இன்றும் நினைத்துக்கொள்கிறார். காத்தான்குடி பள்ளிவாசல் புலிகாளால் கடித்து குதறப்பட்ட  அந்த இரவும் இவர்கள் காவலில் இருந்தார்கள். அப்போதுதான்  வாங்கு ஒலியையும் மீறி வேட்டுச்சத்தங்கள் கேட்டதாக  முழுக்கதையையும்  முனீர் சொல்வார். இப்படி மௌனகுரு என்ற இளைஞனுக்கு மட்டும் அல்ல பல தமிழ் -முஸ்லிம் இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பேச நிறைய கதைகள் உள்ளன.

அரங்கம் ஆசிரியர் பூபாலரெட்ணம் சீவகன் சில ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பில் இருந்து வெளியிட்ட வாரப்பத்திரிகையில் இந்த கதைகள் பேராசிரியர் மௌனகுருவினால் தொடராக எழுதப்பட்டவை. அந்த கதைகளை  பதிப்பித்து இருக்கிறார் பௌசர். பௌசர் நிலத்திலும், புலத்திலும் புத்தக கண்காட்சிகள், புத்தகத் திருவிழாக்கள், புத்தக சந்தைகளை நடாத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மீண்டும் கனடா பக்கம் திரும்பினால் ….., கனடா நிகழ்வில் உரையாற்றிய  மற்றொரு சமூகச் செயற்பாட்டாளர் அஸ்மின். அவர் தனது உரையில்  புலிகளின் காலத்திலும், தற்போதும் தமிழ் – முஸ்லிம் உறவு எப்படி அமைகிறது என்பதை சமகால நிகழ்வுகளோடும், தனது சொந்த அனுபவங்களோடும் தொடர்பு படுத்துகிறார். ‘சோனி ‘ என்ற ஒற்றை வார்த்தை ஒருவரின் மனதை  எவ்வளவு புண்படுத்தும்  என்பது அதை அனுபவித்த அவருக்குத்தான் தெரியும். .காளிகோயிலை இடித்து சந்தை கட்டிய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முதல், மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம்கள் சார்பாக பேசியதற்காக அவருக்கு சமூக ஊடகங்களில்  ‘தொப்பி’ அணிவிக்கப்பட்டது வரை  இரு சமூகங்களுக்கும் இடையிலான  அரசியல் இடைவெளியை தனது உரையில் காட்சிப்படுத்துகிறார்.

 எல்லாவற்றிற்கும் மேலாக  கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவை பேராசிரியர் மௌனகுரு தனது தனிநபர் உறவின் ஊடாக காட்சிப்படுத்த, சக்கரவர்த்தி இந்த உறவு பாய்ப்பின்னல் போன்று ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது என்றும், அஸ்மின் புட்டும் தேங்காய்ப்பூவுமாய், நகையும் சதையுமாய் இரண்டறக்கலந்த உறவு எனவும் காட்ட முற்படுகின்றனர்.  இது உண்மைக்கு மாறான, அளவுக்கு மீறிய மிகை மதிப்பீடு என்பதை சொல்லாமல் கடந்து செல்ல முடியாது. பேராசிரியர் மௌனகுருவுக்கு கிடைத்த, அவர் சந்தித்த தனிநபர் உறவுக்கான வாய்ப்புக்களையும், வசதிகளையும் தமிழ் – முஸ்லீம் சமூகங்களின் உறவாக காட்ட முடியுமா? என்ற கேள்வி இங்கு முக்கியமானது.  அதேபோன்று இரு தமிழ், முஸ்லிம் தனி நபர்களுக்கு இடையிலான முரண்பாட்டையும் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடாக காட்டமுடியாது. ஆனால் இந்த முரண்பாடுகள் “இப்படியும் ஒரு காலம் இருந்த (து)” போதும் இருந்தவை தான்.

புட்டும், தேங்காய்ப் பூவும் என்பது தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுக்கொன்று அருகருகே வாழ்கின்றனர் என்ற அர்த்தத்தை கொண்டதே அன்றி புட்டுமாவும், தேங்காய்ப்பூவும் ஒன்றாக இரண்டறகலந்து இருப்பதை குறிக்கவில்லை. குழல் புட்டு அமைப்பில் ஒரு முஸ்லிம் கிராமம், அதையடுத்து ஒரு தமிழ்க்கிராமம், அடுத்து முஸ்லிம் கிராமம்…. என்ற   தமிழ், முஸ்லிம் கிராமங்களின் கிடையான அடுக்கையே அது குறிக்கிறது. தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தங்கள், தங்கள் தனித்துவத்துடன் அருகருகே வாழ்ந்தார்களே அன்றி, இரண்டறக்கலந்து, பின்னிப்பிணைந்து அன்றும், இன்றும், என்றும் வாழவில்லை.  வேண்டுமானால் தங்கள், தங்கள் தனித்துவங்களுடன் சமாதானமாக, ஒருவர் மற்றவரை மரியாதையுடன் அங்கீகரித்து ஆனால் தனித்துவங்களை சிறிய இடைவெளியாகக்கொண்டு ஒட்டாமல் ஓடும்புளியம்பழமுமாக வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம்.

இதுவே ஒருங்கிணைந்த (INTERGRIATED)வாழ்வியல்.

 தனித்தனியாக வாழ்ந்த போதும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சமூக முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்தன. தனிநபர் முரண்பாடுகள் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளாகவும் மாறி, குறுங்காலத்தில் சுமூகநிலையும் தோன்றியது தான். ஆனால் “இப்படியும் ஒரு காலம் இருந்தது” என்று  தனியே தமிழ், முஸ்லிம் தனிநபர் உறவை மட்டும் நாம் பிரித்து பார்க்க முடியாது. அதற்கு பின்னணியில் இருந்த சமூக, பொருளாதார, அரசியல் சூழலையும் சேர்த்து நோக்கவேண்டும். அப்போதுதான் “இப்படியும் ஒரு காலம் இருந்தது” என்பதை மட்டும் அன்றி “அப்படியும் ஒரு காலம் இப்போது இல்லாமல் இருப்பதையும்” புரிந்து கொள்ள முடியும். இன்றைய சமூக,பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் அதனை  அப்படியே மீளுருவாக்கம் செய்யமுடியாது என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும்.

“இப்படியும் ஒரு காலம் இருந்தது” பேசுகின்ற சம்பவங்கள் அன்று நிலவிய சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களால் நிர்ணயிக்கப்பட்டவை. இன்றைய தமிழ், முஸ்லீம் சமூகங்களில் இந்த அடிப்படை முற்றாகவே மாற்றம் அடைந்து விட்டது. நகரமயமாக்கம், அதனூடான சந்தை -பணப்பொருளாதாரம் தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி எல்லா கிராமங்களிலும் உருவாகி உள்ளது. விவசாயி, வியாபாரியாகவும், வியாபாரி முதலாளியாகவும் மாறிவருகின்றனர்.  கல்வியில் விழிப்புணர்வும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டுவருகிறது. எல்லாச் சமூகங்களிலும் தொழிலுக்கு போகும் பெண்கள் அதிகரித்துள்ளனர். எந்த ஒரு சமூகமூம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும் போது அந்த சமூகம் பொருளாதார சுயாதிக்கத்தை பெறுகிறது. இது ஒரு சமூகத்தில் இன்னொரு சமூகம்  பொருளாதார ரீதியில் தங்கியிருக்கின்ற கட்டாயத்தை  இல்லாமல் செய்கிறது. தொடர்புகளும், உறவுகளும் மானிடக்காரணிகளுக்கு அப்பால் பொருளாதார காரணங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதனை சந்தை பொருளாதாரத்தில் இலாபமே தீர்மானிக்கிறது.

மௌனகுரு சேர் பேசுகின்ற உறவை சிதைத்ததில் கட்சி அரசியலுக்கு பெரும் பங்குண்டு. குறிப்பாக 1989 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட ரீதியான விகிதாசாரத்தேர்தல் முறை இதற்கு முக்கிய காரணம். இது இன, மத வாதங்கள் வளர்வதற்கான ஊக்கியாகவே கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. இதுவே பாடசாலைகள், நிர்வாக கட்டமைப்புகள் அனைத்திலும் இன, மத ரீதியான பிரிவினைக்கு வழிவகுக்கிறது. 1989 க்கு முன்னர் இருந்த தொகுதி ரீதியான தேர்தல் முறையில் இனம், மதங்களுக்கு அப்பால் கட்சி கொள்கை முக்கியம் பெற்றது. கட்சி சார்ந்து தமிழ் வேட்பாளரை முஸ்லிம்களும், முஸ்லிம் வேட்பாளரை தமிழரும், சிங்கள வேட்பாளரை மூன்று சமூகங்களும் ஆதரிக்கும் நிலை இருந்தது. கிழக்கு மாகாணத்தில் இது வெளிப்படையான பன்மைத்துவ சமூக அரசியலின் குறிகாட்டி.

மௌனகுரு சேர் நூலுக்கு எழுதியுள்ள நூலாசிரியர் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.” வேற்றுமைகளை பேசுவதைக்குறைத்து ஒற்றுமைகளைப் பேசவேண்டிய காலம் இது….”. இந்த வாசகம் பன்மைத்துவ சமூகக் கட்டமைப்பு வாழ்வியலில்  சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பனவற்றிற்கு முற்றிலும் முரணானது. 

தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் இந்த  “பூசி மெழுகுகின்ற” நிலைப்பாடு தான் தமிழ் – முஸ்லிம் சமூக உறவுக்கு  சத்திராதி. கடந்த காலங்களில் பெரும் தடையாகவும் இருந்துள்ளது.  தமிழ்பேசும் மக்கள், மொழியால் ஒன்று பட்டவர்கள், இன்னும் சொல்லப்போனால் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட தமிழர்கள் என்ற ஒற்றுமையை  தேடிய கோசங்கள் தோற்றுப்போனது என்பதற்கு “இப்படியும் ஒரு காலம் இருந்தது” நூலே சாட்சியாக அமைகிறது.   வேற்றுமைகளை தவிர்த்து ஒற்றுமைகளை மட்டும் பேசுவது என்பது எதிர்விளைவுகளையே (COUNTER PRODUCTIVE) ஏற்படுத்தும்.

பன்மைத்துவ, பலமத கலாச்சார பண்பாட்டு சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வியலில் “கட்டுப்பெட்டி ஆமை” கழுத்தை இழுத்துக்கொள்ளுவது போன்று, பொத்திப்பொத்தி வைக்கும் “கட்டுப்பெட்டி தனத்தை” உடைத்து, இது வேற்றுமைகளைப் பேசவேண்டிய காலம். பன்மைத்துவ சமூகக்கட்டமைப்பில் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் வாழ்வியல் வேற்றுமைகளை அறியாமல், பேசாமல், அங்கீகரிக்காமல் எவ்வாறு ஒற்றுமையாக ஒருங்கிணைந்து (INTEGRATION )வாழமுடியும்?  

முதலாவது பெரும்பான்மை “இலங்கையர்” என்றும், இரண்டாவது பெரும்பான்மை “தமிழ்பேசும் தமிழர்கள்” என்றும் ஒன்றின் மீது மற்றொன்று திணிப்பதன் மூலம் பெரும்பான்மையுடன் கரைந்து போக சிறுபான்மை சமூகம் கட்டாயப்படுத்தப்படுகிறது.  அதாவது சுய சமூக தனித்துவங்களை அடகு வைத்து மாற்று சமூக தனித்துவங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் அல்லது தத்தெடுத்தல்.(ASSIMILATION). இதன் மூலம் சமூகங்களுக்கு இடையே  நல்லிணக்கம், புரிந்துணர்வை ஏற்படுத்த முடியாது.

பேராசிரியர் மௌனகுரு பல சந்தர்ப்பங்களில் தமிழ்மொழிக்கும், கலை இலக்கியத்திற்கும் அவரது பள்ளித் தோழர்களாக, நண்பர்களாக முஸ்லிம் இளைஞர்கள், பெரியவர்கள் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூருகிறார். ஆனால் கவலையான விடயம் என்னவென்றால்  தமிழ் – முஸ்லிம் உறவை கனதியாக்கி அவரது ஆடல் அரங்கம்  இடம்பெறவில்லை. இராவணன் முதல் துட்டகைமுனு, எல்லாளன் வரை அவர் சென்றுவிட்டார். ஆனால் அவர் பேசுகின்ற, நேசிக்கின்ற தமிழ் -முஸ்லீம் உறவுக்கு  இந்த அதிகார, ஆட்சி வெறி வன்முறையாளர்களான மன்னர்கள் சொல்லும் பாடம் என்ன?  

 “கடும்போக்கு” பற்றியும் இந்த நூல் பேசுகிறது. இது எங்கிருந்து இறக்குமதியானது என்பதல்ல பிரச்சினை. இந்த “கடும்போக்கை” அங்கீகரிக்கவும் அல்லது அதில் நெகிழ்ச்சிப்போக்கை கடைப்பிடிக்கவும்  சமூகங்கள் தயார்படுத்தப்படவேண்டும். இது பேராசிரியர் மௌனகுரு, பேராசிரியர் நுஃமான் போன்ற இருதரப்பு மூத்த கல்வியாளர்களின் பணியாகும்.  இவர்கள் இருவரும் வாய்திறக்க வேண்டிய ஒரு காலத்தில் மௌனம் சாதித்தவர்கள். சகல தரப்பு ஆயுத வன்முறைகளையும் கண்களை மூடிக்கொண்டு கடந்து சென்றவர்கள். இவர்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இருதரப்பு உறவை பலப்படுத்த  தேவையான போது, போதுமான பங்களிப்பை வழங்கி சமூகங்களுக்கு முன்னோடிகளாக வழிகாட்டத்தவறியவர்கள். இப்போது வெள்ளம் தலைக்குமேல் வந்த நிலையில்  இன்னும் கடந்த காலம்பற்றியே பேசுகிறோமேயன்றி நிகழ், எதிர்காலங்கள் பற்றி பேசவில்லை.  “இப்படியும் ஒரு காலம் இருந்தது” தான். ஆக ,  அது இப்போது இல்லையே. அதற்கு, இனி செய்யவேண்டியது என்ன? 

இஸ்லாம் எங்கள் வழி , இன்பத்தமிழ் எங்கள் மொழி என்பது எச்.எம்.பி.முகைதீன் , இளங்கீரன் ஆகியோரின் சுலோகங்கள். இதை எவ்வாறு செயல்வடிவம் கொடுப்பது? இஸ்லாம் எங்கள் வழி என்பதை தமிழ்ச்சமூகம் அங்கீகரிக்க நாம் செய்யவேண்டியது என்ன? இன்பத்தமிழ் எங்கள் மொழி என்பதை முஸ்லிம் சமுகம் அங்கீகரிக்க நாம் செய்யவேண்டியது என்ன ? இந்த மொழி, மத விடயங்களில்  அண்மைக்காலங்களில் கடும்போக்கு அடையாளப்படுத்தப்படுகிறது.  இந்த போக்கை இருதரப்பிலும் இலகுபடுத்த செய்யவேண்டியது என்ன? இந்த கேள்விகளுக்கு விடையை  “இப்படியும் ஒரு காலம் இருந்தது”  தெளிவு படுத்தவில்லை என்பது துரதிர்ஷ்டம்.  ஆண்டாரில் (நிலா) ஔவையார் பால் காய்ச்சுகிறார் என்று பேரப்பிள்ளைகளுக்கு பராக்கு காட்டி  இந்த கதைகளை சொல்லி பேரப்பிள்ளைகளுக்கு நிலாச்சோறு ஊட்டப்போகிறோமா…..?

அப்பா….! நுஃமான் மாமா முஸ்லிமா…..?  என்ற கேள்விக்கு வேற்றுமைகளை பேசாது ஒற்றுமையை மட்டும் பேசிய பிள்ளை வளர்ப்பு சூழல் ஏன் காரணமாக இருக்க முடியாது. பிள்ளை வளர்ப்பு கல்வி அரசாங்க பாடசாலைகளினதும், ஆசிரியர்களினதும் ஒரு பகுதி கடமைதான். வீட்டுக்கும் – பாடசாலைக்கும் பாலம் போடவேண்டியது சமூகம். வேற்றுமையை பேசிய ஆசிரியர்  பாடத்திட்டத்தை கூலிக்கு கற்பிக்கும் ஒருவராக நஞ்சூட்டினார் என்றால், ஒற்றுமையை மட்டும் பேசி சொந்த பிள்ளைகளை பெற்றார் வளர்ப்பதும் ஒருவகையில் நஞ்சூட்டல் இல்லையா?  இதன் அர்த்தம் இலங்கையின் கல்விதிட்டத்தை நியாயப்படுத்துவதாகாது.