‘BOTTLE NECK’ எங்கே உள்ளது?(சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-42)

‘BOTTLE NECK’ எங்கே உள்ளது?(சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-42)

(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)

       — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —

அழகு குணசீலன் அரங்கம் மின்னிதழில் எழுதிவரும் ‘வெளிச்சம்’ அரசியல் பத்தித் தொடரின் 66 ஆவது அங்கம் (வெளிச்சம் 066-July 5,2025) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரில் 2018 இல் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட அரசியல் பிரிவுக்கும், கடந்த உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் ரி எம் வி பி யின் தலைவர் பிள்ளையான், கருணா அம்மான், வியாழேந்திரன் ஆகியோருடன் இணைந்து அமைக்கப்பட்ட படகுச் சின்னத்தைக் கொண்ட கிழக்குத் தமிழர் கூட்டமைப்புக்குமான முரண்பாட்டைப் பேச முனைந்துள்ளது. 

 அரங்கம் மின்னிதழில் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆகிய நான் எழுதிவரும் ‘சொல்லித்தான் ஆகவேண்டும்’ பத்தித் தொடரின் 41ஆவது அங்கத்தில் சொல் 41 ஜூன் 26, 2025) ‘மக்கள் நலன் சார்ந்த தூய்மையான அரசியலே மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செல்நெறி’ என்ற கூற்றினை வைத்துக்கொண்டு ‘வெளிச்சம்’ தூய்மைக்கு விளக்கம் தந்திருக்கிறது.

 சொல்-41 இல் குறிப்பிடப்பட்ட ‘தூய்மை’யை ஒரு விவாதப் பொருளாக்க இப் பத்தி (சொல்லித்தான் ஆகவேண்டும்) விரும்பவில்லை.

 ஆனாலும், மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கடந்த காலத்தில் கோட்பாட்டு அரசியலில் எவ்வாறு நெகிழ்ந்து  கொடுத்துச் செயற்பாட்டு அரசியலை முன்னெடுத்தது என்பது பற்றிச் சற்று விளக்கமாகவும் விவரமாகவும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையை வெளிச்சம்-066 ஏற்படுத்தியுள்ளது. 

 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்னர் மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக ரி எம் வி பி யையும் இணைத்துக் கொள்வதற்குப் பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்திருந்த பிள்ளையான், பின்னர் அதனை நிறைவேற்றாது இழுத்தடித்தார். 

 தான் சிறையிலிருந்து வெளிவந்த பின்பு மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவித்து (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இணைந்து கொள்வதாகவும் இந்தத் தேர்தலில் மட்டும் (2020) (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது கட்சியுடன் இணைந்து படகுச் சின்னத்தில் போட்டியிடும்படியும் திகாமடுல்ல (அம்பாறை) மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபையின் கப்பல் சின்னத்தில் தமது கட்சி இணைந்து போட்டியிடுமென்றும் வாக்குறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நம்பி (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடாமல் (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பாக இரு வேட்பாளர்களை (வாணிதாசன் மற்றும் வெள்ளிமலை) படகுச் சின்னத்தில் போட்டியிட வைத்தோம். ஆனால் அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் கப்பல் சின்னத்தில் போட்டியிடுவதற்கான தமது கட்சியின் வேட்பாளர்களை அவர் தரவில்லை. தனது வாக்குறுதியை அப்போதே மீறியிருந்தார். 

 2020 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமது கட்சிக்கு வாக்குச் சேகரிப்பதற்காக (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பைப் பயன்படுத்திய பிள்ளையான் தேர்தல் முடிந்த பின்பு – அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு (மூத்த ) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பைப் புறக்கணித்து நடந்ததுமில்லாமல் தான் முன்பு அளித்த வாக்குறுதியையும் மீறினார். கிழக்கின் தனித்துவம் -கிழக்கின் அபிவிருத்தி-கிழக்கின் அரசியல் ஐக்கியம் குறித்த எந்த பேச்சு வார்த்தைக்கும் எம்மை அழைக்கவேயில்லை. 2020 ஆம் ஆண்டுத் தேர்தலுடன் எமக்கிடையே இருந்த தொடர்பு துண்டித்துப்போனது. 

 இந்த இடத்தில் அழுக்கு யாரிடம் உள்ளது? மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிடம் கோட்பாட்டுத்தூய்மையை நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை இருந்ததா இல்லையா? 

 மற்றது திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டம் குறித்த விடயமாகும். (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகா சபையின் கப்பல் சின்னத்தில் போட்டியிட தாமாகவே முன்வந்த கருணா தேர்தல் காலத்தில் (மூத்த) கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் ஆலோசனைகளையும்-கட்டுப்பாடுகளையும்-வழிகாட்டல்களையும் முற்றாகப் புறக்கணித்தார். அவரது தோல்விக்கு இதுவே காரணம். மட்டுமல்லாமல் (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு பிள்ளையானுடன் மேற்கொண்டிருந்த வாய் மொழியிலான புரிந்துணர்வுக்கு முரணாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை எதிர்த்துத் ‘தையல் மெஷின்’ சின்னத்தில் (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது சுயேச்சைக் குழுவொன்றைப் போட்டிக்கு நிறுத்தினார். இதன் காரணமாக கருணா அமமானுடன் கொள்கை ரீதியாக முரண்படவும் ஏற்பட்டது.

 (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை ஆதரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கருணா அம்மான் (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு அச்சடித்த தேர்தல் துண்டுப் பிரசுரங்களில் சுமார் 6000 பிரதிகளை அவை மட்டக்களப்பு மாவட்டத்தில் படகுச் சின்னத்தை ஆதரிக்கிறது (அவை இருவரையும் அதாவது அம்பாறை மாவட்டத்தில் கருணா அம்மானையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானையும் ஆதரித்து அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது) என்பதற்காகப் பலவந்தமாகத் தனது ஆட்களைக் கொண்டு எடுப்பித்துத் தீயிட்டுக் கொளுத்திவித்தார். தேர்தல் காலமாதலால் அம்பாறை மாவட்டத்தில் அப்போது கருணா அம்மானின் வெற்றியை மக்கள் நலன்களுக்காக வேண்டிநின்ற (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு இதனைப் பெரிதுபடுத்தாது சகித்துக் கொண்டது.

 இந்த இடத்தில் அழுக்கு யாரிடம் உள்ளது? (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிடம் கோட்பாட்டுத் தூய்மையை நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை இருந்ததா இல்லையா? 

 இனி வியாழேந்திரன் விடயத்திற்கு வருவோம்.

 (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபையில் இணைந்து செயல்பட முன்வந்தது அவரது தமிழர் முற்போக்குக் கழகம். அதன் அடிப்படையில் 2023 நடைபெறவிருந்த (அத்தேர்தல் பின்னர் நடைபெறவில்லை) உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் கப்பல் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 10 உள்ளூராட்சி சபைகளிலும் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளிலும் தமிழர் முற்போக்குக் கழகச் சார்பு வேட்பாளர்கள் அகில இலங்கை தமிழர் மகாசபையில் போட்டிக்கு நிறுத்தப்பட்டனர். அந்தத் தேர்தல் பின்னர் நடைபெறவில்லையென்பது வேறு விடயம். 

 ஆனால், இப்போது அண்மையில் நடந்த உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்புடன் எந்தவிதமான கலந்துரையாடலுமின்றி-மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி இளைய படகு கிழக்குத் தமிழர் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு இணைந்து போட்டியிட்டுமுள்ளது.

 இந்த இடத்தில் அழுக்கு யாரிடம் உள்ளது? (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிடம் கோட்பாட்டுத் தூய்மையை நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை இருந்ததா?-இல்லையா?

 இந்த மூன்று பேருடனும் முழுமையான உடன்பாடுகள் இல்லாத போதிலும் மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு இணைந்து செயல்பட்டது அரசியல் யதார்த்தமாகாதா?

 மேலும், அழகு குணசீலன் தனது வெளிச்சம் அரசியல் பத்தியில் (வெளிச்சம் 066) “கொழும்பு அரசாங்கங்களோடு கைகுலுக்காத ஏதாவது தமிழ் கட்சி, தமிழ் இயக்கங்கள், அவர்களின் தலைமைகள் இருக்கிறார்களா?”என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இந்த விடயத்தில் எவரும்’தூய்மை’யாக இல்லை என்பதே அழகு குணசீலனின் கேள்வியில் தொக்கிநிற்கும் விடயமாகும்.

 எதிரியுடன் கைகுலுக்குவது ஓர் ‘உபாயம்’ ஆகும். அதில் மூத்த கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்குத் தெளிவான பார்வையும் அணுகு முறையுமுண்டு. ஆனால் அந்த உபாயம் மக்களுடைய நலனின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்போது மட்டுமே அது தூய்மையாகும். அதனை விடுத்து அத்தகைய உபாயம் தனிநபர் நலன்களுக்காகவும்-கட்சி நலன்களுக்காகவும் மட்டுமே மேற்கொள்ளப்படுமாயின் அது ‘அழுக்கு’ த்தான். இந்த அழுக்குத்தான் மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு இளைய (படகு) கிழக்குத் தமிழர் கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவதிலுள்ள ‘BOTTLE NECK’ ஆகும்.

நிறைவாக தூய்மையான அரசியல் என மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு அர்த்தப்படுத்தியது கோட்பாட்டுத் தூய்மையைவிடவும் உண்மையான-நேர்மையான-வெளிப்படைத்தன்மையான முழுக்க முழுக்க மக்களின் நலன் சார்ந்த செயற்பாட்டு அரசியலைத்தான் என்பதை இப்பத்தி ‘வெளிச்சத்’ திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.”