— அழகு குணசீலன் —
உள்ளூராட்சி தேர்தல் மற்றும், ஆட்சியமைப்புக் காலங்களில் தமிழ்த்தேசிய அரசியலில் “தியாகி”(?), “துரோகி”(?) வார்த்தைகள் அடுக்கடுக்காக அள்ளி வீசப்பட்ட அளவுக்கு முன் எப்போதும் செறிவாக இருக்கவில்லை. இதன் உச்சக்கட்டமாக தமிழரசுக்கட்சியின் பதில் தலைவரும், முன்னாள் தமிழ்த்தேசிய விரோதியுமான சி.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாணம் சிறிதர் தியேட்டரில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்திற்கு சென்று, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க உதவுங்கள் என்று டக்ளஸின் காலில் வீழ்ந்தார். பூவும், தண்ணியும் கொண்டு கால்களைக்கழுவி இதுவரை டக்ளஸுக்கு சூட்டப்பட்டிருந்த “துரோகி” பட்டத்தை மீளப்பெற்று டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமிழரசு சார்பில் “வெற்றிலை” வைத்தார் .
இந்த இடத்தில் “பத்து பாவங்கள்” குறித்து பேசவேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலக தமிழ்த்தேசியகூட்டமைப்பு, தமிழ்த்தேசிய அரசியலுக்கு செய்த பத்து பாவங்களை பட்டியலிட்டிருந்தார். இந்த பாவங்கள் அனைத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கைநழுவவிட்ட இனப்பிரச்சினை தீர்வுக்கான வாய்ப்புக்களையும், வசதிகளையும், மற்றும் பூகோள அரசியல் பூச்சியத்தனத்தையுமே தயான் தமிழ்மக்களுக்கு தமிழ்த்தேசிய அரசியல் செய்த பாவங்கள் என்று குறிப்பிடுகிறார்.
இந்த வகையில் யார் துரோகிகள்? மக்களுக்கு பாவம் செய்ததரப்பா? புண்ணியம் செய்த தரப்பா? என்ற கேள்வி எழுகிறது.
2009 க்கு பின்னர் தமிழ்த்தேசிய அரசியலில் பெய்த மழைக்கு முளைத்த காளான்களும், பிறந்த மாரிகால தவளைகளும் துரோகி(?) டக்ளஸிடம் ஆதரவு கோரமுடியுமா? அதுவும் சிறிதர் தியேட்டருக்கு சென்று என்றும், சிவஞானம் பதவி விலகவேண்டும் என்றும் ஒப்பாரி வைத்தார்கள். பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் படாத பாடுபட்டு அவரது பாணியில் உரத்த குரலில் வேதம்பாடி சிவஞானத்தை நியாயப்படுத்தினார். இப்போது கதிரையை பிடித்தவுடன் மாரிகால தவளைகளுக்கு தொண்டை அடைத்துவிட்டது. இப்ப என்னவென்றால் சுமந்திரனின் தந்திரோபாயமாம். தமிழரசுக்கட்சியின் தில்லுமுல்லுகள் குறித்து எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒருவர் அல்ல இருவருக்கு மேல் இருந்தாலும் தகும். அதனால்தான் இரு “பதில்” பதவிகளை தமிழரசு கொண்டுள்ளது போலும். இத்தனைக்கும் தமிழ்த்தேசிய தீவிர பக்தர்கள் டக்ளஸின் “துரோகி” பட்டத்தையே சுமந்திரனுக்கும் சூட்டி பல ஆண்டுகள் ஆகிறது. ஆக, டக்ளஸ் சமன் (=) சுமந்திரன் = சிவஞானம். இங்கு இனம் இனத்தை சேர்ந்திருக்கிறதா? அல்லது தயான் சொன்ன பாவம் செய்தவர்களும், சொல்லாத புண்ணியம் செய்தவர்களும் சேர்ந்திருக்கிறார்களா?
டக்ளஸ் தேவானந்தா தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் மறைக்கப்படமுடியாத ஒரு அரசியல், இராணுவ போராளி – சிந்தனையாளன் – ஜனநாயக நீரோட்டத்தில் கலந்த பாராளுமன்ற அரசியல் வாதி. இதன் அர்த்தம் டக்ளஸ் மற்றும் அவரது ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளை ‘அ’ முதல் ‘ஃ ‘வரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல. மாறாக டக்ளஸின் முடிவுகளுக்கும், செயற்பாடுகளுக்கும் பின்னணியில் கடந்த காலமும், தமிழ்த்தேசிய அரசியல் சூழலும், சூழ்ச்சியும் இருந்துள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் “தீண்டத்தகாதவர்” என்ற வகையில் டக்ளஸை சொல்பவர்கள் பலரையும் டக்ளஸை விடவும் மிகவும் படு மோசமான தமிழ்த்தேசிய விரோதிகளாக பட்டியல் இடமுடியும். அதற்கு இப்பத்தி போதாது.
தனது குடும்ப இடதுசாரி அரசியல் சூழலில் வளர்ந்த டக்ளஸ் ஈ.எல்.ஓ, ஈரோஸ், கெஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், பி.எல் .ஏ. ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி.டி.பி. என 1975 முதல் இது வரை 50 ஆண்டுகளாக தனது அரசியல் பயணத்தை தொடர்கிறார். கடந்த 35 ஆண்டுகால “புலி அரசியல்”, அதற்கு அஞ்சிய அரசியல் அஞ்ஞாத வாசம், இந்திய இராணுவத்துடன் இணைந்த செயற்பாடு, இலங்கை இராணுவத்துடன் இணைந்த செயற்பாடு என்ற ஈழப்போராட்டம் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப்பார்த்தால் புலிகள் உட்பட இன்று தமிழ்த்தேசிய அரசியல் செய்யும் எவருக்கும், எந்த அணிக்கும், கட்சிக்கும் டக்ளஸ் நோக்கி சுட்டு விரலை நீட்ட எந்த அருகதையும் இல்லை. இவர்கள் முதலில் கண்ணாடிக்கு முன் தங்களை நிறுத்துவது நல்லது. தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்திற்கும், ஜனநாயக அரசியலுக்கும் மிகப்பெரிய “துரோகம்” இழைத்து இந்த போராட்டத்தை சிதைத்தவர்கள் புலிகளும், அதற்கு போட்டி போட்டு முட்டுக்கொடுத்த தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளுமே. வெவ்வேறு அரசியல் வியாபார பெயர்களிலும், இலச்சினைகளிலும் இவர்கள் மறைந்து கொண்டாலும் இது வெளிப்படையானது. இவர்கள் புலிகளின் ஆயுத அராஜகத்தை மௌனமாக அங்கீகரித்தவர்கள். இதை இன்றுவரை விமர்சனம் செய்கின்ற ஒரே வடக்கு தலைமையாக டக்ளஸ் இருப்பது புலிகளை விற்றுப்பிழைக்கும் இவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.
அந்த வகையில் இன்று பேசுபொருளாகியுள்ள “தமிழ்த்தேசிய பாவங்கள் ” (துரோகம்), தமிழ்த்தேசிய புண்ணியங்கள் (தியாகம்) என்று திரும்பிப்பார்த்து ஒப்பிடுகையில் யார் இந்த டக்ளஸ்? அவரின் அரசியல் என்ன என்பது புரியும். பொதுவாக புலிகளின் ஆயுத அராஜகத்திற்கு பயந்தே மாற்று இயக்கங்கள் ஏதோ ஒரு வகையில் இந்திய, இலங்கை இராணுவங்களின் உதவியை நாடின. இங்கு அட்டூழியம் செய்த தரப்பை தியாகத்தரப்பாகவும்,. அதற்கு பாதுகாப்பு தேடிய – மாற்று அரசியல் வழிகளை தேடிய தரப்பை துரோகத்தரப்பாகவும் காட்டும் வரலாற்று பொய்மை மூலம் “யாழ்ப்பாண மகாவம்சம்” ஒன்று எழுதப்படுகிறது.
1978 இல் இந்த தேசிய விடுதலையில் தன்னை இணைத்துக்கொண்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் லெபனானில் பயிற்சி பெற்ற இந்த டக்ளஸ் ஆறு வயதில் தனது தாயை இழந்தவர். 1985 இல் ஈ.பி.ஆர்.எல்.எப் மக்கள் படை காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலில் தனது உறவினரான சகோதரி ஷோபாவை ஈழப்போராட்டத்திற்கு ஈய்ந்தவர். மதிவதனி (ஷோபா) தான் ஈழப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதல் பெண்போராளி. ஆயுத அதிகார வர்க்கம் வரலாற்றை திரிபுபடுத்தி யாரை? ஈழப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதல் பெண்போராளியாக கொண்டாடுகிறது. இதில் எது பாவம்? எது புண்ணியம்? ஷோபாவுக்கும், மாலதிக்கும் என்ன வேறுபாடு? இருவரும் ஈழவிடுதலைக்காக துவக்கு தூக்கியவர்கள். இல்லையா? மாலதி புலிகளில் வீரச்சாவடைந்த முதல் பெண் போராளியே அன்றி ஈழப்போராட்டத்தில் முதல் வீரச்சாவடைந்த பெண் போராளி அல்ல.
இந்தியாவிலும் டக்ளஸ் இராணுவ பயிற்சி பெற்றிருந்த போதும் இந்திய இராணுவத்துடன் டக்ளஸ் இணங்கிப் போகவில்லை. இன்றுவரை பூகோள அரசியல் பாடத்தில் பூச்சியம் புள்ளி எடுத்த புலிகளின் ஆயுத அரசியலால், முட்டாள்தனமாக ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்கள், இந்திய படையுடன் இரண்டறக்கலந்தவர்கள் எல்லாம் தியாகிகளாக வெள்ளை அடித்துக்கொண்டு உலா வருகிறார்கள். ஆனால் புலிகளின் அந்த முடிவு தவறு என்றும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்றும் அரசியல் செய்யும் டக்ளஸ் துரோகி என்று கூறுகின்றனர். இந்த அரசியல் பிழைத்ததால் தானே அறம் பிழைத்தது, அனைத்துலகம் பார்த்திருக்க நந்திக்கடல் கண்ணீரால் நிரம்பியது. யார் துரோகி? இனப்படுகொலைக்கு மாவிலாற்றில் இருந்து வழிகாட்டி முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்து மக்களை பலிகொடுதவர்களா? அந்த அரசியல் பாதை தவறு என்றும் , மற்றைய இயக்கங்கள், கட்சிகள் போன்று புலிகளுக்கு முதுகு சொறியாது, என்றும், எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்ட டக்ளஸா? இங்கு எது பாவம்? எது புண்ணியம்? கொலைகளும், கொடூரங்களும்தான் “மதம்” காட்டும் வழி என்று சொல்லவா இந்த காவி, வெள்ளை சாமியார்கள் முயல்கிறார்கள்.
ஈழப்போராட்ட வரலாற்றில் ஈரோஸ் போன்று முஸ்லிம்களை ஈழமக்களாக, ஈழவர்களாக பிரகடனம்செய்து தமிழ்குறுந்தேசியவாதம் பேசாத அரசியல்வாதி டக்ளஸ். அது மட்டும் அன்றி வடக்குடன் கிழக்கை இணைப்பதா? இல்லையா? என்பதை எந்த அரசியல் சுத்துமாத்தும் இன்றி கிழக்குமக்களே தீர்மானிக்க வேண்டும் என்று இன்றுவரை கிழக்கு மக்களின் அபிலாஷையை நியயாயமாக ஏற்றுக்கொண்டவர். கிழக்கு தமிழர் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட போது சேர்ந்து பயணிக்க இணங்கியவர். ஒரு பிரதேசத்தில் வாழும் மக்களின் இன, மத, கலாச்சார பன்மைத்துவம் ஜனநாயக அரசியலில் அடிப்படை உரிமை என்பதை அங்கீகரித்தவர். புலிகள் முஸ்லிம்களை வடக்கில் இருந்து விரட்டிய போது மேலேயும், கீழேயும் பொத்திக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் செய்தவர்கள், முஸ்லீம்கள் மீதான புலிகளின் அனைத்து அத்துமீறல்களையும், அடக்குமுறைகள், கொலைகள் குறித்து இன்று வரை “மௌன அரசியல்” செய்து பிழைக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளட், ரெலோ போன்ற அமைப்புகள் கூட இன்று டக்ளஸை துரோகி என்கிறீர்களே உங்கள் கரங்களின் அரசியல் தூய்மையை காட்டுவீர்களா? தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் கூட்டு புக்கை தின்பது மட்டும் புண்ணியவானாக போதாது. அதற்கும் ஒரு அரசியல் அறம் இருக்கிறது.
இந்த உலகில் பிடல் காஸ்ட்ரோவை அடுத்து கொலை செய்ததற்காக அதிக தடவைகள் இலக்கு வைக்கப்பட்ட ஒருவர் இன்னும் வாழ்கிறார் என்றால் அது டக்ளஸ்தான். அமெரிக்கா பிடலை கொலை செய்ய 13 தடவைகள் முயன்றது. டக்ளஸை கொலை செய்ய புலிகள் 10 தடவைகள் முயன்றார்கள். இவை வெளிப்படையாக தெரியவந்த கொலை முயற்சிகள் மட்டும்.
“காற்று புக முடியாத இடத்திலும் புகுவோம்” என்றவர்களுக்கு தண்ணீர் காட்டிய அரசியல்வாதி டக்ளஸ். நாடுகளின் தலைவர்களையே சரித்த புலிகளுக்கு டக்ளஸ் கைக்கெட்டியும் வாய்க்கு எட்டாமல் இறுதியில் இந்த பழம் புளிக்கும் என்று புலிகள் சலித்துப்போனார்கள். ஆனால் புலிகளின் இவ்வாறான கொலைகளை டக்ளஸ் மிகக் கடுமையாக சாடியவர். ஆனால் துரையப்பா முதல் கிழக்கில் கருணா பிரிந்தபோது இடம்பெற்ற அரசியல் கொலைகளையும் இன்று வரை நியாயப்படுத்தி மனச்சாட்சியை குருடாக்கி அரசியல் செய்யும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கிறார்கள். இவர்கள் கொலைகளை தேர்வு செய்து துரோகி கொலை, தியாகிகொலை என வகைப்படுத்துபவர்கள். இவர்களில் யாருக்கு சொர்க்கம்? யாருக்கு நரகம்? ஒரு தடவை சித்திரபுத்திரனாரை சந்தித்தால் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
தியாகியாக பிரபாகரன் சொர்க்கத்திலும், அமிர்தலிங்கம் துரோகியாக நகரத்திலும் இருந்தால் சுதுமலை அம்மனே! நல்லூர்க்கந்தனே! பரமமண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பிதாவே! கௌதமபுத்தரே! எல்லாம் வல்ல இறைதூதரே! இது என்ன தெய்வ நீதி? நீங்களும் பாவத்தின் பக்கமா….? மதங்களை நேசிக்கும் மக்களை நீங்களும் சேர்ந்தா ஏமாற்றுகிறீர்களா? அப்படியானால் நீங்களும் துரோகிகளா?
இறுதியாக டக்ளஸ்க்கு….!
யாரோடு கூட்டுச்சேருவது என்று ஒரு விபஸ்தை இல்லாமல் இந்த தமிழ்மக்கள் விரோத, தமிழ்த்தேசிய துரோதிகளோடு ஏன் இணங்கிப்போனேனீர்கள். இதுவரை தனித்துவ இணக்க அரசியலை செய்த நீங்கள் சிவஞானத்திற்கு சிறிதர் தியேட்டர் கதவுகளை திறந்து விட்டது உங்களின் மிகப்பிந்திய அரசியல் தந்திரோபாயம் -சாணக்கியம் என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளை மாற்றுக்கருத்து அரசியவையும் மதிக்கும் பெருந்தன்மை. இதன் மூலம் தமிழ்த்தேசிய அரசியலுக்குள் சூழியோடி முத்து எடுத்திருக்கிறீர்கள். ஒரு காலத்தில் துரையப்பாவின் கையாள், தமிழினத்துரோகி என்று கிணற்றடியில் வாழைப்பாத்திக்குள் வைத்து புலிகளால் மரணதண்டனை வழங்கப்பட்டு தப்பிப் பிழைத்த சிவஞானம் புலிகளிடம் உயிர்பிச்சை கேட்டு விசுவாசியானார். அப்படி அரசியல் செய்பவர்களுக்கு உங்கள் உயர்ந்த, கட்சி வேலிகளுக்கு அப்பாலான அரசியல் நேர்மையை காட்டியிருக்கிறீர்கள். தமிழ்ப்பிரதேசங்களின் உள்ளூராட்சி சபைகளில் ஜே.வி.பி.தேடுவதற்கு எதுவும் இல்லை என்பதையும், மாநிலத்தில் சுயாட்சி கொள்கையையும் மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறீர்கள். தமிழரசு உங்கள் பக்கம் வந்ததன்மூலம் உங்கள் அரசியலை ஏற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்கி அங்கீகரித்திருக்கிறது. இதை தாங்கமுடியாமல் அரசியல் செய்ய சிறிதரனும், இராமலிங்கமும் கூட்டுச்சேர்ந்திருக்கிறார்கள். அதுவும் உங்களுக்கு சாதகம்தான். ஒரு வகையில் நீங்கள் பேசும் இணக்க அரசியல் இல்லையா?
பத்து புண்ணியங்களில் ஈ.பி.டி.பி. மாகாணசபையை அங்கீகரித்ததும், அதிகாரப்பகிர்வை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதும் ஒன்று. இந்திய -இலங்கை ஒப்பந்தம் மூலமான இடைக்கால நிர்வாகசபைக்கு தலைவராக புலிகள் இருவரின் பெயர்களை தெரிவு செய்தனர். ஒருவர் தான் தலைவர் என்பது புலிகளுக்கு தெரியாததல்ல இதன் மூலம் தயான் ஜயதிலக சொன்ன பாவம் ஒன்றை அவர்கள் செய்தார்கள். இந்த உடன்படிக்கையை குழப்புவதுதான் அந்த பாவம். சிவஞானம் தனது பெயர்தான் தலைவருக்கு முதலாவதாக இருந்தது என்று சொல்கிறார். புலிகள் பத்மநாதனின் பெயரைத்தான் முதலாவது இருந்தது, எதிர்பார்த்தோம் என்கிறார்கள். இங்கு யார் சொல்வது உண்மை? சிவஞானத்தின் பெயர் முதலாவதாக இருந்தால் இடைக்கால நிர்வாக சபையை புலிகள் குழப்பவேண்டிய தேவை என்ன? எது எப்படியோ ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு மட்டும் அன்றி இந்தியாவுக்கும், புலிகளுக்கும் ஜே.ஆர். சிவஞானத்தைதான் தெரிவு செய்வார் என்பது தெரிந்தே இருந்தது. ஏனெனில் அவரே துரையப்பாகாலம் முதல் கொழும்பின் விசுவாசியாக இருந்தார். ஈழப்போராளிகளுக்கு உதவினார் என்பதற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பத்மநாதனை இடைக்கால நிர்வாகசபை தலைவராக நியமிக்க ஜே.ஆர். ஒன்றும் அரசியல் பாலர் வகுப்பு சிறுபிள்ளை அல்ல. இந்த பாவத்தில் புலிகளோடு சேர்ந்து சிவஞானத்திற்கும் பங்குண்டு.
எது எப்படியோ ஈ.பி.டி.பி. இந்த போலி தமிழ்த்தேசிய தமிழரசுக்கு ஆதரவளிக்காமல் உள்ளூராட்சி சபைகளில் நடுநிலையில் இருந்து ஒரு மாற்று, ஜனநாயக அரசியலுக்கு களம் அமைத்துக்கொடுத்து , இதுவரையான அந்த மாற்றுக்கு வலுவூட்டியிருக்கமுடியும் என்பதே நிலத்திலும், புலத்திலும் உள்ள சிறுபான்மை தேசிய இனங்களின் மாற்று அரசியல் சக்திகளின் கருத்தாக இருக்கிறது.
இன்னும் காலம் கடந்து விடவில்லை. பந்து உங்கள் கரங்களிலே இருக்கிறது அடித்து விளையாடுங்கள். அளவுக்கு மிஞ்சிப்போனால் ஆடுகளத்தை கவிழ்த்து விடுங்கள். ஆடுகளம் எது என்பதை உங்களுக்கு வெளிச்சம் போடத்தேவையில்லை.
